ஸ்ரீ திருப்புடைமருதூர் (புடார்ஜுன) க்ஷேத்திர மாகாத்மியம்

- பி.ஆர்.கண்ணன், நவி மும்பை

காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஶ்ரீசங்கராசாரிய ஸ்வாமிகள் அருளாணைப்படி, ஶ்ரீ தாம்ரபர்ணி புஷ்கர விழா மிகுந்த உற்சாகத்துடன் தாம்ரபர்ணி நதி தீரத்தின் எல்லா தீர்த்தகட்டங்களிலும், க்ஷேத்திரங்களிலும் நிகழும் 2018 அக்டோபர் 12 முதல் 23 வரை, 12 நாட்களுக்குக் கொண்டாடப்பட இருக்கிறது. அதிலும் முக்கியமாக ஶ்ரீநெல்லையப்பர்-காந்திமதி புகழ் க்ஷேத்திரமான திருநெல்வேலியருகிலுள்ள  ஶ்ரீ புடார்ஜுனம் - திருப்புடைமருதூர் புண்ணியஸ்தலத்தில் விஶேஷ விமரிசையாக நடத்த, ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. குரு பகவான் விருச்சிக ராசியில் பிரவேசிக்கும் முதல் 12 நாட்கள் ஶ்ரீதாம்ரபர்ணி நதியில் புஷ்கர காலமாகும்.

திருப்புடைமருதூர் (புடார்ஜுனம்) என்கிற பெரிய சிவ க்ஷேத்திரம், ஶ்ரீவேதவியாஸ பகவான் அருளிய ஶ்ரீ தாம்ரபர்ணி மாகாத்மியம் என்கிற ஸம்ஸ்க்ருதப்  புராணம், மற்றும் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருவிளையாடற்புராணம் என்கிற தமிழ்ப்புராணம் (ஶ்ரீ ம.வே.பசுபதி உரை) முதலிய பலநூல்களில் வெகுவிசேஷமாகப் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது. வியாஸரின் ஸம்ஸ்க்ருத புராணத்தில், சிவபெருமான் இந்கு மருதமரப்பொந்தில் ஸ்வயம்பூ லிங்கமாக பிரகாசித்து, அகஸ்த்ய மகரிஷிக்கு மரப்பொந்திலிருந்து வெளிவந்து, அர்த்தநாரீஸ்வரராக தர்சனம் கொடுத்த பான்மை, அகஸ்த்யர் ஸ்துதி, மற்றும் பல விஷயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஶ்ரீசைலம் மல்லிகார்ஜுனம் வடக்கே உள்ள அர்ஜுன மர (மருத மர) சிவன்; தஞ்சை ஜில்லா திருவிடைமருதூர் (மத்யார்ஜுனம்) இடையிலே உள்ள அர்ஜுன மர சிவன்; திருப்புடைமுதூர் சிவன் பிரகாசிக்கும் அர்ஜுன மரத்தினால், தலைமருது என்று போற்றப்படும் க்ஷேத்திரமாகும். மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்கிற மூன்று விசேஷங்களையும் ஒருங்கே பெற்ற க்ஷேத்திரம்.  தாம்ரபர்ணி நதியின் பெருமைகளை வியாஸ பகவான் பலவாறாக, வெகு விரிவாகப் போற்றியுள்ளார்.
स्मरणात्दर्शनात्ध्यानात्स्नानात्पानादपिध्रुवम्।कर्मविच्छॆदिनीसर्वजन्तूनांमोक्षदायिनी॥
"தாம்ரபர்ணி நதி ஸ்மரித்தாலே, தரிசித்தாலே, ஸ்னானம் செய்தாலே, பானம் செய்தாலே, நிச்சயமாக ஜந்துக்களின் கர்மவினையை அறுத்து மோக்ஷத்தை அளிக்கிறாள்" என்று. மேலும் அகஸ்திய மஹரிஷியின் வாக்கின் மூலம் புடார்ஜுன க்ஷேத்திரத்தில் பிரகாசிக்கும் சிவபெருமானை ஸ்தோத்திரிக்கிறார். मोक्षस्थानंमुमुक्षूणांभोगस्थानंतुभोगिनाम्।उमादेहार्धशंभुंतंपुटार्जुनमुपास्महे॥ "மோக்ஷம் விரும்புவோர்க்கு மோக்ஷத்தையும், போகங்களை விரும்புவோர்க்கு போகங்களையும் அருளுபவரும், உமாதேவிக்கு பாதி சரீரம் அளித்தவருமான ஶ்ரீபரமேஸ்வரனை, புடர்ஜுனேஸ்வரரை உபாஸிக்கிறேன்" என்று.

தமிழ் திருவிளையாடல் புராணத்தில் வெகு விவரமாகப்பல கதைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம். இந்த திவ்ய க்ஷேத்திரம் தக்ஷிண காசியாகும். எவ்வாறு காசியை சிவபெருமான் பிரளய காலத்தில்கூட, தன் திரிசூலத்தின் முனையில் தூக்கி நிறுத்திக் காக்கிறாரோ, அவ்வாறே திருப்புடைமருதூரையும் தூக்கி நிறுத்திக் காக்கிறார். எவ்வாறு காசியில் மரிப்பவர்களை பார்வதி தேவி தன் மடியில் கிடத்தி, சிவன் தாரகமந்திரத்தை ஜீவனின் வலது செவியில் உபதேசித்து மோக்ஷம் அளிக்கிறாரோ, அவ்வாறே இங்கும் ஜீவனின் இறுதிக்காலத்தில் சிவ-பார்வதியின் அனுக்கிரகம் ஸித்திக்கிறது. மேலும், தக்ஷிணாமூர்த்தியாக ஸனகாதி நால்வருக்கு ஞானத்தினை சிவன் உபதேசித்த ஸ்தலமாகும் இது. விராட்புருஷனுடைய வலது கண் இந்த க்ஷேத்திரம். தேவேந்திரனே பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற பெருமை உடையது. இங்கு இயற்றும் புண்ணியங்கள் பல மடங்காகப் பெருகும். தானபலன்கள் - கோதானம், தசதானம், அன்னதானம்- எல்லாமே பலபங்குபலனைத் தருபவை. எல்லா காரியங்களுமே சிவபூஜையாகிவிடும். தைப்பூசதினத்தன்று தாம்ரபர்ணி ஸ்னானம் விசேஷம். தேவேந்திரன் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து நிவிருத்தியான தினம் அதுவே. இங்கு நதி உத்தரவாஹினி (வடக்குநோக்கி செல்வது.) மிக விசேஷமானது. மூன்று நதிகள் ஸங்கமம் இங்கு அருகில்தான் - தாம்ரபர்ணி (கங்கை), கடனா (யமுனை), ஸரஸ்வதி (அந்தர்வாஹினி) இவையாவன. வியாஸதீர்த்தம் முதலான ஐந்து தீர்த்தங்கள் இந்கு உள்ளன. பஞ்சமஹாபாதகங்களைப் போக்க வல்லவை. இவ்விடம் மொத்தம் 45 தீர்த்தங்களின் பெயர்கள் புராணத்தில் கிடைக்கின்றன. க்ஷேத்திர பெருமையைக்கூறும் சில ஸ்துதிகளைப் பார்ப்போம்.

சிவன் (புடார்ஜுனேஸ்வரர்- நாறும்பூநாதர்) ஸ்துதி:
பூதிநாயகர் புடைமாமருதீசர் கயிலேசர் புனிதயோகர்
தாதுலாவு நாறும்பூநாதர் மனுவரதர் சம்புவாணர்
வேதகாரணர் சாய்ந்து ஓர் சித்தர்பால் பேசும் இலேபனவினோதர்
ஆதிகோமதி சேர்வுடை மாதுபாகர் எமதகத்து உளாரே.

"விபூதி நாயகர், பருத்த பெரியமருதமரத்தின்கீழ் அமர்ந்தவர், கைலாஸத்தின் ஈஸ்வரர், புனித யோகம் புரிபவர், மகரந்தம் உலாவுகின்ற மணம் வீசும் பூவின் நாதர் (நாறும்பூநாதர் என்ற இப்பெயரே தற்போது வழங்கும் பெயராகும்), ஆதிமனுவுக்கு வரம் அருளியவர், சம்புவாணர், வேதகாரணர், தலையைச்சாய்த்து கருவூர்ச் சித்தரிடம் பேசியவர், சந்தனம் முதலிய மணக்குழம்பு பூசியவர், வினோதங்கள் செய்பவர், ஆதிபராசக்தியாகிய கோமதியைச் சேர்ந்தவர், அம்பிகையை இடப்பாகத்தில் கொண்டவர் - ஆகிய சிவபெருமான் எங்கள் மனத்தில் உள்ளார்."

அம்பாள் (கோமதியம்மன்) ஸ்துதி:
காவுடைய கரும்குழலும் கருணைபொழிந்து அருள்விழியும் கமலம் மேவும்
பூவுடைய மலர்முகமும் புனைகாதும் துவர் இதழும் பொன்பூண் ஏந்தும்
மாவுடைய கனதனமும் வளைக்கரமும் பட்டுடையும் அழகுவாய்ந்த
ஆவுடையநாயகியார் இருசரணக்கோலமும் எம் அகத்துள் வைப்பாம்.

"நெருக்கமான கரும் கூந்தல், கருணை பொழியும் அருள்விழி, தாமரை மலர்போன்ற திருமுகம், அழகிய காதுகள், காவிநிற உதடுகள், யானையின் மஸ்தகத்தினை ஒத்த, பொன்னணிகள் தவழும், ஸ்தனபாரங்கள், வளைகள் சோபிக்கும் கரங்கள், பட்டாடை ஆகியவை அமையப்பெற்ற அழகுமிகுந்த ’ஆவுடைநாயகி அம்பிகை’யின் இரு திருவடிகளையும் எம் மனத்தில் வைத்துத் தியானிப்போம்."

தாம்ரபர்ணி ஸ்துதி:
இப்பெரும் தீர்த்தம் தன்னை ஆடினோர் இறைஞ்சி  னோர்பின்
இப்பெரும் தீர்த்த மேன்மை உரைத்துளோர் இசைந்து கேட்போர்
இப்பெரும் தீர்த்தம் ஈசற்கு இயற்றுவோர் இயற்றுவிப்போர்
இப்பெரும் தீர்த்தம் கொள்வோர் இறைசிவலோகம் நீங்கார். (8:9)

"இங்குள்ள தாம்ரபர்ணி தீர்த்தத்தில் நீராடினோர், பிரார்த்தித்தவர்கள், தீர்த்த மாகாத்மியத்தைச் சொன்னவர், கேட்டவர், இத்தீர்த்தத்தினால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்பவர்கள், செய்விப்பவர்கள், இத்தீர்த்தத்தைப் பருகுபவர்கள் எல்லோரும் நிரந்தரமாக சிவலோகத்தில் வாழ்வர்."

திருப்புடைமருதூரின் வேறு பெயர்களாவன- சிவநகர், தென்கயிலை, ஜீவன்முக்திபுரம், இந்திரபுரி, தெற்குக்காசி, தாரகேஸ்வரம் முதலாயின. இங்கு
மூன்று மண்டபங்கள் உள்ளன - முக்தி மண்டபம், சபா மண்டபம், தேவ மண்டபம்.  மூன்று மரங்கள்- மருதமரம் (ரிக்வேதம்), மாமரம் (யஜுர்வேதம்), வெண்ணாவல் (ஸாமவேதம்) உள்ளன.

 

ஶ்ரீ நடராஜப் பெருமான் ஐந்து சபைகளில் நடனமாடுவது யாவரும் அறிந்ததே. இங்குள்ள நித்திய ஸபையில் அவர் ஆடும் நடனம் மற்ற ஐந்து சபைகளைக்காட்டிலும் உயர்ந்தது என்று சிவபெருமானே விஷ்ணு, பிரம்மா, மற்றும் தேவர்களுக்குக் கூறி, அவர்களுக்கு இங்கு தன் பிரியமான நடனத்தை தைப்பூச விசேஷ நாளன்று காட்டியருளினார். (சிதம்பர க்ஷேத்திரத்தில் பதஞ்ஜலி, வியாக்ரபாதருக்கு தரிசனம் தந்ததும் தைப்பூச நாளில் தான்).

தேவேந்திரன் ததீசி முனிவரின் முதுகெலும்பினை யாசகமாகப் பெற்று, அதிலிருந்து செய்த வஜ்ராயுதம் கொண்டு, வ்ருத்ராஸுரன் என்ற அதிபயங்கர அஸுரனை வதம் செய்தார். பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொள்ளவே, குருபகவானின் சொற்படி, திருப்புடைமருதூரில் மருதமரத்திலேயே ஒடுங்கி தபஸ் செய்து, தாம்ரபர்ணியில் ஸ்னானம் செய்து, சிவன் அருளாலே தோஷம் நீங்கப் பெற்றார்.

தேவேந்திரனைக் காணாத இந்திராணி, குரு பகவான் சொன்னபடி, லக்ஷ்மி, ஸரஸ்வதியுடன் கூடி திருப்புடைமருதுர் வந்தாள். இங்கு மித்ரயோகி என்பவர் அறிவுரைப்படி, கேதாரகௌரி விரதம், புரட்டாசி சுக்லபக்ஷ அஷ்டமி முதல் கிருஷ்ணபக்ஷ முடிவு வரையிலான 21 நாட்கள் நன்றாக அனுஷ்டித்தாள். சிவன் அனுக்ரகத்தினால் விரத முடிவில் சிவனே இந்திரனை அழைத்து இந்திராணியுடன் சேர்த்து வைத்தார். அவர்கள் சித்திரை விஷு பூஜை இந்த க்ஷேத்திரத்தில் விமரிசையாக நடத்தினார்கள்.

விஷ்ணுவானவர் த்வாரகையிலிருந்து காசி சென்று, சிவயோகியான உபமன்யு முனிவரிடம் சிவதீக்ஷை பெற்று, வடமதுரையில் சிவ உபாஸனை செய்தார். சிவனுடைய நடனத்தைக்காண விரும்பினார். சிவன் தோன்றி, அவரைத் திருப்புடைமருதூர் செல்லுமாறு பணித்தார்.  இங்கு நடனக்காட்சியை அருளி, மேலும் வரப்போகும் கஜேந்திர மோக்ஷம் அருளவும் விஷ்ணுவுக்கு அனுக்ரகித்தார்.

வாமதேவர் பிரம்மாவின் அறிவுரைப்படி, விஷ்ணுவின் ஸாயுஜ்யம் அடைய விரும்பி, திருப்புடைமருதூர் வந்து தபஸ் செய்தார். அப்போது அவர்மேல் புற்று படர்ந்தது. ஒரு கந்தர்வன் புற்றின் மீது ஏறிக் குதித்து ஜலக்கிரீடை செய்யவே, முனிவர் அவனை முதலையாகுமாறு சபித்தார். பின்னர் வாமதேவர் விஷ்ணு ஸாயுஜ்யத்தை அடைந்தார். இந்திரத்யும்னன் என்ற நீதிமானானஅரசன் அகஸ்தியர் வந்தபோது அவரைக் கவனியாமல் விஷ்ணு பூஜையில் ஈடுபட்டான். அகஸ்தியர் அவனை யானையாகுமாறு சபித்தார். கஜேந்திரனான அவன் முதலையினால் நீரில் பிடிக்கப்பட்டு துன்புற்று, ஆதிமூலமே என்று உரக்கக் கத்தினான். விஷ்ணு, சிவனைப் பிரார்த்தித்து, சிவன் அருளால் சக்கிரப் பிரயோகம்  செய்து, முதலை மரித்து, மீண்டும் கந்தர்வனானான். கஜேந்திரன் மோக்ஷம் எய்தினான். சிவன் தோன்றி எல்லோருக்கும் அனுக்ரகம் புரிந்தார். விஷ்ணு பக்கத்தில் கோவில் கொண்டார்.

சக்கிரவர்த்தி பரதனின் பேரன் ஆதிமனு என்பவன் தர்மவானான அரசனாக அயோத்தியில் ஆட்சி புரிந்துவந்தான். அவன் பத்தினி சாரங்கவல்லி. அவர்களுக்கு புத்திரபாக்கியம் இல்லை. காசியில் தபஸ் செய்தார்கள். புடார்ஜுனம் சென்று தரிசனம் செய்யச் சொன்னார் விஸ்வநாதர். அவர்கள் மலயபர்வதம் சென்று, அகஸ்தியரைத் தரிசித்து, சிவ மந்த்ரோபதேசம் பெற்றனர்.  பின்னர் புடார்ஜுனம் வந்து தரிசிக்கையில், சிவலிங்கம், வழிபட்டுக்கொண்டிருந்த மூன்று பெண்களுடன் சேர்ந்து மறைந்துபோகவே, ஆதிமனுவிற்கு துக்கம் மேலிட்டது. ஒரு வேலினை மருதமரத்தின்மீது எறிந்து, வேலின் நுனியின்மீது பாய்ந்து, தன்னை மாய்த்துக்கொள்ள முயற்சித்தான். சிவலிங்கத்திலிருந்து ஒரு கை வந்து தடுத்தது. சிவன் தரிசனம் தந்து, ’மருதமரமே சிவன் என்று அகஸ்தியர் சொன்னாரன்றோ, அதனால் வேல் குத்தி, லிங்கத்தில் ரணமாகி, ரத்தம் வந்தது’ என்று காண்பித்தார். மறுபடியும் சிவவ்ரதம் அனுஷ்டித்து, பின்னர் சிவ தரிசனம் பெற்றான் ஆதிமனு. அவன் விருப்பப்படி ஆலயம் கட்டப் பணித்தார் சிவன்.  சிவன் ஸ்வயம்புவாக அமர்ந்தார். மயன் கோவில் அமைத்தான். அம்பாள் விக்ரகம் பற்றி மனு சிவனைப் பிரார்த்திக்க, சிவன் விஸ்வகர்மாவை கோமதி என்கிற உயரிய மலையிலிருந்து கல் கொண்டுவந்து, விக்ரகம் அமைக்கச் சொன்னார்.  அம்பாளும் நேரில் வந்து அனுக்ரகம் செய்தார். ஆலயம் முடிந்து சிலகாலத்தில் குலகுரு வஸிஷ்டர் வந்து தரிசனம் செய்து, விசேஷ பூஜைகள் செய்தார். சிவன் சந்தனம் முதலான மணக்குழம்பு பூசப்பெற்று, ’லேபன சுந்தரர்’ என்று பெயர் பெற்றார். சிவனாரின் புத்திரபாக்கிய அனுக்ரகத்தினை அடைந்து, சுந்தரமனு என்ற புதல்வனைப்பெற்றான் ஆதிமனு. காலக்கிரமத்தில் முக்தியும் அடைந்தான்.

ஒருமுறை பிரம்மதேவர் காசியில் சிவதரிசனம் பெற்றார். தாம்ரபர்ணி கங்கையேதான் என்று நிரூபிப்பதற்காக, சிவன் பிரம்மாவிடம் தன் பிரம்மதண்டத்தை காசி கங்கையில் போட்டுவிட்டு, பின்னர் புடார்ஜுனம் சென்று, தாம்ரபர்ணியில் அதனை எடுத்துக்கொள்ளுமாறு பணித்தார். அவ்வாறே பிரம்மனும் செய்து, புடார்ஜுன க்ஷேத்திரத்தில் முக்கூடலில் பிரம்மதண்டத்தைப் பெற்றார். சிவனும் தரிசனம் அளித்து, இத்தீர்த்தம் பிரம்மதண்ட தீர்த்தம் என்று பெயர் பெறும் என்று அனுக்ரகித்தார். முக்கூடல், தாம்ரபர்ணி (கங்கை), கடனா நதி (யமுனை), அந்தர்வாஹினியான ஸரஸ்வதி மூன்றும் சேருமிடம்.

குலடி என்ற பிராம்மண ஸ்திரீ தன் கணவனைக்கொன்று, கள்ளக்காதலனுடன் காட்டுவழியே ஓடுகையில், திருடர்கள் வசமாகி, காதலன் தப்பித்தோடினான். அவளை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. பலகாலம் மிகுந்த கஷ்டப்பட்டு, ஏதோவொரு பூர்வபுண்ணிய விசேஷத்தினால், புடார்ஜுன க்ஷேத்திரம் வந்து, தாம்ரபர்ணியில் ஸ்னானம் செய்து, ஸாக்ஷாத் சிவபெருமானே தரிசனம் அளித்தார். எல்லோருக்கும் கேட்கும்படியாக, குலடியின் பாபம் போய்விட்டதென்றார். அத்தீர்த்தம் பாபவிநாச தீர்த்தம் என்று பெயர் பெறும் என்றும் அருளினார். குலடி விமானத்தில் கைலாஸம் சென்றாள்.

ஹவிர்தானன் என்ற மகததேச அந்தணன் தன் குருவின் ஆணையை நிறைவேற்ற காட்டுக்குச் சென்று, யாகத்திற்கு வேண்டிய யூபஸ்தம்பத்திற்கான உரிய மரத்தினைத் தேடினான். வெகுநேரம் தேடியும் கிடைக்காமல், தளர்ந்து, பசி தாகம் மேலிட்டு, பசு மாமிசம் உண்ணும் புலையர் வாழும் பகுதியில் நுழைந்துவிட்டான். கந்தர்ப்பமானி என்கிற பெண்ணைக்கண்டு, மயக்கமுற்று, பல ஆண்டுகள் அங்கேயே கழித்தான். பின்னர், உடல் கருத்து, நோய் மிகுந்து, பேய் போலாகி ஊர் ஊராகச்சுற்றி, கடைசியில் திருப்புடைமருதூர் வந்து சேர்ந்தான். சிவபெருமான் ஒரு யதி ரூபங்கொண்டு, அவனைத் தடுத்தாட்கொண்டார். சிவன் சொற்படி அங்கேயே தங்கி, தாம்ரபர்ணியில் ஸ்னானமும், ஆலயப்பணிகள், சிவனடியார் பணிகள் ஆகியவற்றில் ஈடுபட்டு காலங்கழித்தான். ஒரு தைப்பூசத்தன்று, நதியில் ஸ்னானம் செய்து, தங்கமயமான தேஜஸ் அடைந்தான். சிவபெருமான் கோமதியம்மனுடன் காட்சி கொடுத்தார். ஹவிர்தானன் சிறந்த வேதம் ஓதும் பிராம்மணனாக மாறி, தன் ஊருக்குச்சென்று, விவாகம் செய்து, பல வருஷங்கள் கழித்து, சிவன் கூறியிருந்தபடி, புடார்ஜுனம் வந்து, கடைசிக்காலத்தில் சிவபெருமான் அவனுடைய வலக்காதில் தாரக மந்திரம் ஓத, உயர்ந்த கதியை அடைந்தான்.

நாரத பகவான் திருப்புடைமருதூர் பெருமையை தேவேந்திரன் கூறக்கேட்டு, பூலோகம் வந்து, நைமிசாரண்யத்தில் மேலும் கேட்டு, வியாஸ பகவானுடன் திருப்புடைமருதூர் வந்து தீர்த்த ஸ்னானம் செய்து, பரமேஸ்வரனை உபாஸித்தார். பலவிதமான உயர்மணங்கொண்ட மாலைகளைச் சாற்றி அவர் வழிபட, தேவர்கள் ’நாறும்பூநாதர்’ என்ற பெயர் சிவனுக்கு நிலைத்திருக்கும்படி மொழிந்தனர். சிவனே நாரதரை வீணை வாசிக்கச்சொல்லி கேட்டு மகிழ்ந்தார். பின்னர், கௌதம மஹரிஷி ஒரு சமயம் விநாயகரை தரிசிக்காமல் இங்கு சிவன் ஆலயத்தினுள் பிரவேசிக்க முற்பட்டபோது, கந்தர்வர்கள் தடுத்தனர். அதன் பின் விநாயகரே சிவன் சொற்படி ஒரு பிரம்மசாரியாக வந்து, மஹரிஷியை விநாயகரை உபாஸிக்கும்படி செய்து, பின் சிவதரிசனம் கிடைக்கப்பெற்றார். பலகாலம் தங்கி, பூஜை, யோகம் எல்லாம் செய்தார். அவருடைய சிஷ்யன் பாலஸதானந்தன் என்பவன் ஒரு சமயம் பூஜை சாமான்கள் சேகரிக்க வனம் வந்தபோது, பிரபாவதி என்ற பெண்ணிடம் மோஹம் அடைந்து சேர்ந்த காரணத்தினால், கௌதமரின் சாபத்திற்கு இருவரும் ஆளாகி, பேய்களாகித் திரிந்தனர். ஒரு சமயம் அகஸ்தியர் இந்த ஸ்தலத்திற்கு வரவே, அப்போது, சித்திரகேது என்ற யக்ஷகுலப் பெண், அங்கிரஸ முனிவரின் சாபத்தினால் பேயானவள், அகஸ்தியரின் கருணையினால் பழைய நிலை எய்தினாள். அச்சமயம் அகஸ்தியர் கௌதமரிடம் விண்ணப்பித்து, பாலஸதானந்தன், பிரபாவதி இருவருக்கும் அவருடைய அனுக்ரகம் கிடைக்குமாறு செய்தார். தங்கள் பழைய நல்ல நிலையை அடைந்த இருவருக்கும் விவாகமும் நடந்தேறியது.

மணவூரில் ஸுஷேணன் என்ற பாண்டிய அரசன் ஆட்சி செய்கையில், ம்லேச்ச அரசன் கரஞ்ஜன் வடதுளுவ நாட்டில் ஆண்டுகொண்டு, மக்களை ம்லேச்ச மதத்திற்கு மாற்றுவதில் ஈடுபட்டிருந்தான். உயர்ந்த மணிகளை வியாபாரம் செதுகொண்டிருந்த அவன் மணவூருக்கு தன் பெண் அதிசுந்தரியான காந்தரக்கனி என்பவளையும் அழைத்துக்கொண்டு வந்து ஸுஷேணனை மயக்கினான். மதம் மாறினால் தன் பெண்ணை விவாகம் செய்துகொள்ளலாம் என்றான். ஸுஷேணனும் மயங்கிப்போய் ஒப்புக்கொண்டான். அவனுக்கு எதிராக இருந்த இளவரசன் வீரசேனன், மந்திரி போதேந்திரி இருவரையும் தலைகளை வெட்டுமாறு உக்ரன் என்பவனை அனுப்பினான். இருவரும் அகஸ்தியரிடம் அடைக்கலம் புகவே, அவர் சிவகவசம் உபதேசித்து, புடார்ஜுனம் சென்று சிவனை உபாஸிக்குமாறு அருளினார். திருப்புடைமருதூரில் சிவபெருமானே சித்தராக வந்து, அவர்களை நெருப்பு வாயில் கொண்ட குகையில் தள்ளி, அவரே காவல் காத்தார். உக்ரன் அங்கு சண்டைக்கு வரவே, சிவனருளால் அவன் மஹோதர வியாதியினால் பீடிக்கப்பட்டான். வீரர்களும் இளைத்து தாகம் தாங்காமல் திணறினர். சிவன் விபூதியளித்து, எல்லோரையும் தாம்ரபர்ணியில்  தீர்த்த ஸ்னானம் செய்யச்சொல்லி, குணப்படுத்தினார். ஸுஷேணன் காதிற்கு இச்செய்தி எட்டவே, ஆச்சரியம் தாங்காமல் வெகு கோபத்துடன் நேரில் வந்தான். வந்தவன், காந்தரக்கனி, கரஞ்ஜன் இவர்களுடன் சித்தரிடம் விபூதி பெற்று, தீர்த்த ஸ்னானம் செய்து முற்றிலும் மனம் மாறி, எல்லோரும் சைவ சமயத்திற்குத் திரும்பினர். சித்தர் சிவனேதான் என்று உணர்ந்து வழிபட்டு உருகினர். அத்தீர்த்தம் சைவ தீர்த்தம் என்று பெயர் பெற்றது.

வசுக்களின் ராஜா முசு என்பவன் தேவேந்திரனிடம் யுத்தம் செய்து, யுத்தத்தில் மரணமடைந்தான். அவன் புத்திரன் அலதந்தன் மிகுந்த துயரமும் கோபமும் கொண்டான். புகர் என்ற முனிவர் சொற்படி, அவன் திருப்புடைமருதூரில் தபஸ் செய்தான் சிவனை நோக்கி. இந்திரன் பயமுற்று, பிரம்மாவை அணுக, பிரம்மா தன் மாயையினால் அலதந்தன் வரம் கேட்கும்போது, அவன் நாக்கில் ’பிரம்ம ஞானம்’ என்பதற்குப் பதிலாக, ’பிரமை ஞானம்’ என்று வருமாறு செய்தார். ஆனால், அவனுடைய தபஸினால் சந்தோஷமடைந்த சிவபெருமான் கிருபை செய்து தரிசனம் தந்து ’பரம ஞானம்’ என்று அவன் நாக்கில் வருமாறு செய்து, அவன் ஸத்கதியை அடைந்தான். எல்லாம் நன்றாகவே முடிந்தது.

கருவூர்ச்சித்தர் தாம்ரபர்ணி நதியில் வெள்ளம் பெருகியபோது இந்த க்ஷேத்திரத்தில் அக்கரையிலிருந்துகொண்டு, சிவதரிசனம் எவ்வாறு செய்வதென்றறியாமல் தவித்தார். சிவனருளால் நீரின்மேல் திரும்பிப்பார்க்காமல் நடந்தே வந்து சிவனை தரிசனம் செய்து, கைலாஸமடைந்தார்.

 

நைமிசாரண்யத்தில் ஸூதரிடம் புராணம் கேட்ட முனிவர்கள், வியாஸர், வஸிஷ்டர் முதலானோருடன் சேர்ந்து இந்த ஸ்தலத்திற்கு வந்து, சிவனை ஜ்யோதி வடிவில் தரிசித்தனர். சிவன் முனிவர் வேடத்தில் மருதமரத்தின் அடியில் தாரக மந்திர உபதேசமும் செய்தார். அப்போது ஒரு முனிவரின் மனைவி மரணமடைய, பார்வதி தேவி தன் மடியில் அவளைக்கிடத்தி, சிவன் அவள் காதில் தாரக மந்திரத்தினை ஓத, அவள் விமானத்தில் ஏறி சிவலோகம் சென்றதை முனிவர் எல்லோரும் பார்த்தனர்.

வீரமார்த்தாண்ட பாண்டியன் திருப்புடைமருதூரில் சிவதரிசனம் செய்து, அருகிலுள்ள சோரவனம் என்ற இடத்தில், கருவூர்ச்சித்தருக்காக ’சாய்ந்த’ சிவமூர்த்தியை அங்கு வரவழைத்தான். ராமபிரான் சீதையைப்பிரிந்து சிவனைப் பிரார்த்தித்து சிவனருள் பெற்ற சிறப்பு பொருந்திய ஸ்தலம் இது.

ஆத்திவன ஈஸ்வரர்: குபேரபுத்திரன் மணிக்ரீவன் சித்ரலேகாவுடன் விவாகம் நிச்சயமாகி, லீலாவதி என்ற பெண் காம மிகுதியால் சாபமிட, மணிக்ரீவனும் அவளுக்கு பதில் சாபமிட, மூவரும் பேயாகி, பிறகு ஆத்திவன ஈஸ்வரர் அருளாலே பழைய நல்ல நிலையினை அடைந்தனர். மணிக்ரீவனுக்கும், இரு பெண்களுக்கும் விவாகம் நடந்தது.
பாண்டிய ராஜா சோழனுடன் செய்த யுத்தத்தில் சிவபெருமானே போர்வீரனாக வந்து போராடி, பாண்டியன் வெற்றியடைந்தான். முடிகொண்ட பாண்டியன் என்று பெயர் பெற்றான்.

திருப்பூவன ஈஸ்வரர்: காஞ்சிபுர ராஜா ஒரு வைசியப்பெண்மீது காமம் கொள்ள, அது ஐந்து பேர் மரணத்தில் முடிந்தது. புடர்ஜுனம் வந்து சிவனருளாலே ஐவரும் புனருஜ்ஜீவனம் அடைந்தனர்.  திருப்பூவனம் என்ற ஸ்தலத்தில் சக்திநகரம் அமைத்து வழிபட்டான்.

அரியநாயகர்: ஸமுத்திர மந்தனத்தின்போது வெளியான ஹாலாஹல விஷத்தை பரமேஸ்வரன் பருகி தேவர்களைக்காத்தும், காங்கை தாங்காமல் பிரம்மா, விஷ்ணு முதலான தேவர்கள் துயருற்றனர். சிவன் ஆக்ஞையினால் இந்கு வந்து அரியநாயகர் அருளாலே துன்பம் நீங்கினர். கண்டகர்ணன் என்ற வைஷ்ணவன் சிவத்வேஷி. வைகுண்டத்திலிருந்து விஷ்ணுவினால் அவன் வெளியேற்றப்பட்டான். இங்கு வந்து சிவன் பிரம்மா, விஷ்ணுவுடன் சேர்ந்து மூன்று மூர்த்திகளும் ஒன்றாகக் காட்சியளித்தார். கண்டகர்ணனுக்கு முக்தி கிடைத்தது. மூன்றீஸ்வர க்ஷேத்திரமும் இங்கு அருகாமையிலேயே இருக்கிறது.

ஶ்ரீபுடார்ஜுன க்ஷேத்திரத்தின் மஹிமை சொல்லிலடங்காதது. புராணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள கதைகளோ ஏராளம். சாபநிவ்ருத்தி, எதிரேபார்க்காத விசேஷ அனுக்ரகம் அடைந்த தேவர்கள், மனிதர்கள், பசுபக்ஷிகள் எண்ணிறந்தவை. பல தீர்த்தகட்டங்கள் இந்த க்ஷேத்திரத்தினை அலங்கரிக்கின்றன.
ஸ்ரீமத்பாகவதத்தில், வரப்போகும் கல்கி அவதாரம் தாம்ரபர்ணி நதி தீரத்திலுல்ள க்ஷேத்ரத்தில்தான் நிகழப்போவதாக சொல்லப்பட்டிருக்கிறது. நமது காஞ்சி சங்கர பீடத்தின் ஆரம்பகுருவாக  ஆதிசங்கரராலே தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஶ்ரீஸர்வக்ஞாத்மக இந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தாம்ரபர்ணி நதிதீர பிரம்மதேசம் என்கிற ஸ்தலத்தில் தோன்றியவரே. ஏழு வயது சிறுவனாக வந்து, ஸர்வக்ஞபீடம் ஏற இருந்த ஆதிசங்கரிடம் மூன்று நாட்கள் வாதம் செய்த சிறுவனுடைய வித்வத்தையும், தியாகபுத்தியையும் கண்ட ஆதிசங்கரர் வியந்து அவரை உடனேயே பீடாதிபதியாக்கினார்.

வரும் புஷ்கரத்தில் ஸங்கல்ப ஸ்னானம், ஜபம், பூஜை, தீர்த்த ஸ்ராத்தம், பலவகை தானங்கள், சிவ-விஷ்ணு-தேவி தரிசனம், உபாஸனை எல்லாம் நன்றாகச்செய்து பெரும்பயன் அடைவோமாக. தேவதைகளின் அருள், ஆசாரியாளின் அனுக்ரகம் ஒருங்கே பெறுவோமாக.


For more information, visit http://tamraparnipushkaram.info