ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்

பிராசீன இந்தியக் கலை: எகிப்து முதல் ஜாவா வரையில் ஹிந்து நாகரிகம்

HH Chandrasekharendra Saraswathi Mahaswamiji

1947-ஆவது வருடம் ஜனவரி மாதத்தில் ஸ்ரீ மடத்தில் நடைபெற்ற அய்யுவய்யர் வேதாந்த பாடசாலையின் வருடாந்தரக் கொண்டாட்டத்தில், நமது புராதனக் கலையின் புனருத்தாரணமும்- தற்கால நெருக்கடியைத் தீர்க்கும் வழியும்- என்னும் விஷயம் பற்றி ஸ்வாமிகள் அரியதோர் சொற்பொழிவாற்றினார்கள். அதன் சுருக்கம் பின்வருமாறு:-
“பண்டைக் காலத்தில் இந்தியக் கலையின் நாகரிகம், மேற்கில் எகிப்து முதல் கிழக்கில் ஜாவா வரையில் பரவி மிகுந்த உன்னத நிலையை அடைந்திருந்தது. அதன் மேன்மையை நாம் இன்று நன்கு உணர்வதன் மூலம், நமது நாடானது மீண்டும் அதற்கேற்ற உயர் நிலையை அடையுமாறு நாம் செய்யக்கூடும். நமது நாட்டுக்கும் அந்நாடுகளுக்கும் இடையே தேசிய ஒற்றுமையை நாம் மீண்டும் வளம் பெறச் செய்யலாம். ஹிந்து கலாசாரங்களின் அறிவானது வெளி நாடுகளில் வேரூன்றியிருக்கிறது. அதன் அடையாளங்களை இன்றும் நாம் அந்நாடுகளில் காணலாம்.
நம் புராதன சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றை, ஜெர்மன் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த நிபுணர்கள் பலர் எடுத்துச் சென்று அந்நாட்டின் தேசீய புஸ்தகசாலைகளுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டனர். அந் நூல்களையெல்லாம் சென்ற மகாயுத்தத்தின் நஷ்ட ஈடாக இந்தியாவுக்குத் திருப்பித் தர வேண்டுமென நமது அரசாங்கத்தார் கோரியிருப்பதைப் பற்றி நாம் மிகவும் பெருமைப்பட வேண்டும். இக்காலத்தில் அரசியல் தான் ஜனங்களின் மனத்தைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. மதத்தைப்பற்றி அதிகமாகக் கவலைப்படுவோரில்லை. அப்படியிருந்தும் சம்ஸ்கிருதத்தின் அருமையை உணர்ந்து நம் பிரதிநிதிகள் ஜெர்மன் நாட்டிடம் அவ்விதம் கோரியிருப்பதானது நமது கலையின் சக்தி மக்களது மனஸில் வேரூன்றி இருப்பதைத் தெளிவாக்குகின்றது. ஜாவா நாட்டின் தலைவரான டாக்டர் சுகர்ணோ (சுகர்ணன்) இந்தியாவின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டு, இந்திய மக்களிடை தமது பரிவைக் காட்டிக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலிருந்து அந்நாட்டிற்குள் பரவிய கலாசார ஞானத்தின் மூலம் இவ்விரு நாடுகளுக்குள் ஏபட்டுள்ள தொடர்பைப் பாராட்டி நம்முடன் உறவு கொண்டாடியிருக்கிறார். இன்றும் ஜாவா நாட்டில் இந்தியச் சின்னங்களை நாம் காண்கிறோம். அங்கு மக்களின் பெயர்கள் ஹிந்துப் பெயர்களுடன் சம்பந்தப்பட்டுள்ளன. நம் தேசத்தின் ஆலங்கள் இன்றைக்கும் அங்குக் காணப்பெறுகின்றன.
புத்தமதம் வேதமதத்தின் ஒரு பிரிவேதான். புத்தரை விஷ்ணு பகவானது அவதாரமெனவே நாம் கொண்டாடுகிறோம். அவர் அஹிம்சையையும் சத்தியத்தையும் விசேஷமாக வற்புறுத்தினார். வேதமும் இவையிரண்டையும் வற்புறுத்துகின்றது. ஆனால் வேதத்தில் கூறப்பட்டுள்ள யாகம் முதலான கர்மாக்களை மட்டும் புத்தர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிகாரி பேதத்தை ஒப்புக் கொள்ளாத வைதிக மதந்தான் புத்த மதம். அந்த மதத்தை இதர நாடுகளில் பரவும்படி நாம் விட்டுவிட்டோம். மிகப் புராதனமான சீன மத  நூல்களில் கெளடபாதரது காரிகை சீன பாஷைகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். சாந்திநிகேதனத்தில் சீன அறிவாளிகளைக்கொண்டு அந்நாட்டுடன் கலைத் தொடர்பைப் புதுபித்துக்கொள்ள ரவீந்திரநாத் டாகுர் முயன்றிருக்கிறார். நமக்கும் சீன மக்களுக்குமுள்ள பொதுவான கலை அறிவைப்பற்றி அந்த நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
எகிப்தின் பண்டைய காலத்திற்கும் புராதன இந்தியாவுக்கும் இணைப்பு இருந்ததென ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். ஸஹாரா பாலைவனத்துக்கு அடுத்துள்ள பல இடங்களுக்கு ராமரது பெயருடன் சமபந்தப்படுத்தப் பெயர்கள் இடப்பட்டுள்ளன. ஸஹாரா பாலைவனமே வற்றிப்போன கடல் இருந்த இடமெனக் கூரப்படுகிறது. ஸாகரம் என்னும் சொல்லே ஸஹாரா என்று மருவுற்றிருத்தல் வேண்டும். இவ்வாறு இந்த இருநாடுகளின் தொடர்புக்கு அங்குச் சில சின்னங்கள் காணப்படுகின்றன.
கிறிஸ்தவர்களால் பழைய வேதம் எனக் கூறப்படும் பைபிளில் காணப்படும் ஆதம் என்னும் சொல் ஆத்மாவையும், ஈவான் என்னும் சொல் ஜீவன் என்பதையும் குறிப்பிடுகின்றன. அதில் கூறப்படுள்ள ஆப்பிள் என்னும் சொல் பிப்பலம் என்னும் கனியைக் குறிப்பிடுகின்றது. இது ஆசையைக் காட்டுகிறது. ஆதம் என்பது தோஷங்கள் அற்ற பரமாத்ம ஸ்வரூபம்; ஈவான் அல்லது ஜீவன் பாபத்தில் சம்பந்தப்பட்டதாகும். இதுவே பிறப்பு இறப்பு இவைகளுக்குக் காரணம்.
“த்வா ஸீபர்ணா- பிப்பலம்” என்னும் உபநிடத மந்திரம் இவ்விஷயத்தை அறிவுறுத்துகிறது. பழைய பைபிளை யூதர்களும், முஸ்லிம் அராபியர்களும், கிறிஸ்தவர்களும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். அதில் அடங்கியிருக்கும் கதைகளும், உபதேசங்களும் ஹிந்து சாஸ்திரங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளனவெனக் கூறலாம்.
ஆரியன், திராவிடன், ஸெமிட்டிக் என்றெல்லாம் வெவ்வேறு பிரிவுகளாகச் சமூகத்தைப் பிரித்துக் கூறியவர்கள் மேனாட்டு ஆராய்ச்சியாளர்களாவர். அவர்களில், முதன்மையாக இந்தியாவில் குடி ஏறிய மேல்நாட்டு கிறிஸ்தவப் பாதிரிகளே இவ்வித பேதங்களைக் கற்பனை செய்தார்கள். பிளவுக்கான விதைகளை முதலில் விதைத்தவர்களும் கிறிஸ்துவ மிஷனரிகள் தான். அதைக் கொண்டு அவர்கள் நம் தேசத்தினர்மீது தங்களுக்கு ஆதிக்கத்தையும் உறுதிப் படுத்திக்கொண்டனர். அரசியல் வாதிகள் அதைத் தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
எகிப்து முதல் ஜாவா வரையில் இந்திய தேசத்துக்கு ஏற்பட்ட கலைத் தொடர்பைக் கொண்டு இப்பொழுது இந்நாடுகளுக்குள் உறவையும் ஒற்றுமையையும் உண்டு பண்ணிக்கொள்ள வேண்டும். இத்தகைய உண்மைகளை உணர்ந்து நம் நாட்டிலும் பல சமூகத்தினரிடையே சகோதரத் தன்மையையும், நல்லுணர்வையும் ஏற்படுத்த முயலவேண்டும். தெய்வ வழிபாடு பாக்ஷை முதலிய சிறு பேதங்களைக் காரணமாகக் கொண்டு இந்தியாவைப் பல பாகங்களாகப் பிரிக்க முயலக் கூடாது. தவறான சரித்திரங்களை படிப்பதன் மூலம் பொய்யான பிரிவினைகளை ஏற்படுத்தி அரசியல் நோக்கத்துடன் மக்கள் போராட்டத்தை நடத்துவார்களானால், நமது ஆசிய நாடே பிளவுபட்டுச் சிதறுண்டு போகும். மற்றொரு மூன்றாவது கட்சியினருக்கே அது இடம் தருவதாகும்.
ஒரு முஸ்லிம் நாட்டின் பிரதிநிதியான டாக்டர் சுகர்ணோ இத்தேசத்திற்கும், தமது நாட்டிற்கும் பொதுவாகவுள்ள பழைய நாகரிகத்தைப் பற்றி ஆதரவுடன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதுபோல் மேற்கு ஆசிய நாடுகளுடனும் நமது கலைத் தொடர்பைத் திரும்பவும் கண்டு அவர்களுடன் சமரசத்தையும், சகோதரத் தன்மையையும் வளர்த்து, ஆசிய கண்டத்தின் பரிபூர்ண ஒற்றுமைக்கும், உலக சமாதானத்திற்கும் வழி தேட வேண்டும். இதுவே இத்துறையில் சிறந்த வழியென நான் கருதுகிறேன். இந்தத் துறையில் ஆராய்ச்சி நடத்தச் சர்க்காரும், தனிப்பட்டவர்களும் உதவிபுரியவேண்டும்.
சீனர், பாரசீகர், கிரேக்கர் அகிய எல்லா ஜாதியினரைப் பற்றியும் மநு குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் யாவரும் க்ஷத்திரிய அம்சம் பெற்றவர்களென அவர் கூறியிருக்கிறார். நாம் அவர்களுடன் நட்புக் கொண்டாடலாம். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அரசியல் தூதுகோஷ்டிகள் அனுப்புவதை விட, கலைஞர் கோஷ்டிகளை அந்நாடுகளுக்கு அனுப்புவதால் ஒற்றுமையை நாம் நன்கு வளர்க்கலாம். அவர்களிடையே பரஸ்பர நல்லெண்ணத்தையும் ஏற்படுத்திக்கொள்ளலாம். பழைய காலத்தில் நம் முன்னோர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்ததுபோல் நாமும் வாழ்ந்து கலையையும் சாஸ்திரங்களையும் காப்பாற்றுவோமாக”.

~~~~~~~

Click here to read the English translation

Home Page