Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

தஞ்சை இராஜராஜேச்சரம்

திருவிசைப்பா

தஞ்சை இராஜராஜேச்சரம்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரம் கோயில்

தஞ்சாவூர் - மாவட்டத் தலைநகரம்.

சென்னையிலிருந்தும் தமிழகத்தின் பிற பகதிகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சென்னை - இராமேஸ்வரம் இருப்புப் பாதை - மெயின் லைனில் உள்ள சந்திப்பு நிலையம். சோழர்க்குத் தலைநகராக விளங்கிய பதி.

தஞ்சகன் ஆண்ட ஊராதலின் தஞ்சகனூர் என்பது தஞ்சாவூர் என்றாயிற்று என்பதாகும்.

முதலாம் இராஜராஜசோழனால் கட்டப்பட்டதாதலின் இராஜராஜேச்சரம் எனப்பட்டது. தலைசிறந்த சிற்பக்கலையழகு வாய்ந்த அற்புதமான திருக்கோயில். தொல்பொருள் துறையின் பராமரிப்பில் இருந்து வருகின்றது. வழிபாடுகள் முறையாக நடைபெறுகின்றன. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்குச் சொந்தமான திருக்கோயில். கோயில் வழிபாடு நிர்வாகம் அரண்மனை தேவஸ்தானத்தின் மூலம் நடைபெறுகிறது. கோயில் கலைப்பராமரிப்பு தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாள்தோறும் எண்ணற்றோர் வந்து கண்டு மகிழ்கின்றனர். இத்திருக்கோயிலால் தஞ்சை, சுற்றுலாத் துறையில் தனியிடம் வகிக்கிறது.

இக்கோயிலைக் கட்டியவன் முதலாம் இராஜராஜசோழன். இவன் சுந்தரசோழன் என வழங்கும் இரண்டாம் பராந்தக சோழனின் இளையமகன். ஐப்பசிச் சதய நாளில் பிறந்தவன். இயற்பெயர் அருண்மொழித் தேவன். பட்டப்பெயர் இராஜகேசரி. தில்லைவாழ் அந்தணர்களால் இராஜராஜன் என்று பெயர் சூட்டப்பட்டவன். சிவபாதசேகரன், திருநீற்றுச்சோழன் முதலிய வேறு பெயர்களையுடையவன். இம்மன்னன் A.H. 1010 ஆம் ஆண்டில் இக்கோயி¬ க் கட்டி முடித்திருக்கவேண்டும் என்பர் ஆய்வாளர். இவனுடைய காலம் சோழர் வரலாற்றில் வெற்றிக் காலம். மாலத்தீவுகளையும் வென்ற இவனுடைய வெற்றியிலிருந்து இவனுடைய கப்பற்படை வலிமையும் புகழப்படுகிறது.


இறைவன் - பிரஹதீஸ்வரர், பெருவுடையார், இராஜராஜேச்சரமுடையார், தக்ஷிணமேருவிடங்கர்.


இறைவி - பிருகந்நாயகி, பெரியநாயகி.


தீர்த்தம் - சிவகங்கை. இத்திருக்கோயில் வழிபாடு மகுடாகமப்படி நடைபெறுகிறது.


சிவகங்கைத் தீர்த்தத்தில் உள்ள "தளிக்குளம்" வைப்புத் தலமாகும். அப்பர்பெருமான் திருவீழிமழலைத் தாண்டகத்துள்" தஞ்சைத் தளிக்குளத்தார்" என்று பாடுகிறார். சிவகங்கையில் நீர் குறைந்திருக்கும் காலத்தில் சிவலிங்கம், நந்தியைக் காணலாம்.

கருவூர்த்தேவர் இப்பெருமான் மீது (திருவிசைப்பா) பதிகம் பாடியுள்ளார். முதலாம் இராஜஇராஜன் கோயிலைக் கட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்த காலத்து, ஆவுடையாருடன் மூர்த்தியைச் சேர்த்து அஷ்டபந்தன மருந்து சார்த்தியபோது

அம்மருந்து கெட்டியாகாமல் இளகிய நிலையிலேயே இருக்கக்கண்ட மன்னவன் வருத்தமுற்றான். அஃதறிந்த போகமுனிவர் மன்னனுக்குச் செய்தியனுப்ப, அதன்படி கருவூர்த்தேவரைத் தஞ்சைக்கு அழைத்து வந்தான்.

கருவூர்த்தேவர் தஞ்சை வந்து கோயிலுக்குள் சென்று தம்வாயிலுள்ள தாம்பூலத்தை மருந்தாக உமிழ்ந்து கெட்டியாக்கினார் என்பது வரலாறு. கருவூர்த்தேவரின் உருவச்சிலை கோயிலில் உள்ளது.

கோயிலின் முதற்கோபுர வாயிலுக்குக் கேரளாந்தகன் வாயில் என்றும்,

இரண்டாம் கோபுர வாயிலுக்கு இராஜராஜன் வாயில் என்றும், தெற்குக் கோபுர வாயிலுக்கு விக்கிர சோழன் வாயில் என்றும் பெயர்.

பரந்த நிலப்பரப்பில் விசாலமாக, ஓங்கி உயர்ந்துள்ள விமானம் தொலைவிலிருந்து பார்ப்போருக்கும் கலைகாட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறது. சுவாமி விமானம் 216 அடி உயரமுள்ளது - தக்ஷிமேரு எனப்படும்.

மூலமூர்த்தியாகிய (சிவலிங்க) பிரகதீஸ்வரமூர்த்தி மிகப்பெரியது.

நர்மதை தீரத்திலிருந்து கொண்டு வரப்பட்டதென்பர். முன்னால் அமைந்துள்ள மிகப்பெரிய நந்தி ஒரே கல்லில் அமைந்தது. 12 அடி உயரம் - 19 அடி நீளம் சுமார் 8 12 அடி அகலமுடையது. விமானத்தின் மேலிருக்கும் பிரமரந்திரத்தைச் சாரம் கட்டி ஏற்றியிருக்கும் அருமையை நினைத்தால் புல்லரிக்கிறது. சாரம் கட்டிய இடமே சாரப்பள்ளம் எனப்படுகிறது.

சோழ மன்னர்க்குத் திருவாரூர்த் தியாகராஜாவிடத்தில் அளவிறந்த பற்றுண்டு, எனவே அவர்கள் இங்குள்ள சோமாஸ்கந்த மூர்த்தியை தியாகராஜாவாகவே எண்ணி, அதற்குரிய சிறப்புக்களைக் குறைவின்றிச் செய்து போற்றி வழிபட்டனர். இம்மூர்த்தி "தஞ்சை விடங்கர்" தக்ஷிணமேரு விடங்கர்" என்று போற்றப்படுகிறார்.

இக்கோயிலில் உள்ள திருமேனிகளை இராஜராஜனும் அவன் மனைவியர்களும், அவன் குலத்தவர்களும், அதிகாரிகளும் தந்தனர் என்பது கல்வெட்டால் தெரிகிறது.

கோயிலின் முதல் தளத்தின் உட்சுவர்களில் 108 வகை நடன அமைப்புகளின் சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள சிவதாண்டவம், திரிபுராந்தகர், சுப்பிரமணியர், விநாயகர், காளி முதலிய வண்ண ஒவியங்கள் கலைக்கு விருந்தாகும் கவினுடையன.

அம்பாள் கோயிலை எழுப்பியவன் 'கோனேரின்மைகொண்டான்'. எழுந்தருளுவித் மூர்த்தத்திற்கு உலகமுழுதுடைய நாச்சியார் என்று பெயர் சூட்டப்பட்டது. விநாயகர் திருமேனிகளை இராஜராஜன் பிரதிஷ்டை செய்வித்தான். பிராகாரததிலுள்ள சுப்பிரமணியர் கோயில், பிள்ளையார் கோயில் பிற்காலத்தில், சரபோஜி மன்னரால் பழுது பார்க்கப்பட்டு முன் மண்டபங்கள் கட்டப்பட்டன. நடராஜ மண்டபம் மிகவும் பிற்காலத்தியது.

சதய விழா, கார்த்திகை விழா, பெரிய திருவிழா முதலியவை பண்டை நாளில் நடைபெற்றன. பெரிய திருவிழா எனப்படும் பிரம்மோற்சவம் 'ஆட்டைத் திருவிழா' எனப்பட்டது. வைகாசியில் நடைபெற்ற இவ்விழாவில் இராஜராஜ நாடகம் நடிக்கப்பட்டது. இதை நடித்த சாந்திக்கூத்தன் திருமுதுகுன்றனான விஜயராஜேந்திர ஆசாரியனுக்கு இதற்காக 120 கலம் நெல் தரப்பட்டது. சுவாமிக்கு சண்பக மொட்டு

ஏல அரிசி இலாமிச்சை முதுலியவை ஊறவைத்த நன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு முன்பு திருப்பதிகம் விண்ணப்பிக்க நாற்பத்தெட்டு பிடாரர்களும், உடுக்கை வாசிக்க ஒருவரும், கொட்டு மத்தளம் முழுக்க ஒருவரும் ஆக 50 பேர்களை இராஜராஜன் நியமித்தான். இவர்களுடைய பெயர்கள் அனைத்தும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன. அப்பெயர்கள். அனைத்தும் அகோரசிவன், ஞானசிவன், தத்புருஷசிவன், பரமசிவன், ருத்ரசிவன், யோக சிவன், சதாசிவன் என்று முடிவதால் இக்கோயிலில் தீட்சை பெற்றோரே திருப்பதிகம் விண்ணப்ப நியமிக்கப்பட்டனர் என்ற செய்தி தெரிகிறது.

கோயிற் பணிகளுக்காகப் பல ஊர்களிலிருந்து கொண்டுவந்து 2 நீளத் தெருக்களில் 400 நடனப் பெண்களைக் குடியமர்த்தினான் இராஜராஜன். இப்பெண்டிர் தளிச்சேரி பெண்டிர் என்றழைக்கப்டலாயினர். இவர்கள் வசித்த தெரு தளிச்சேரி என்று வழங்கியது. இவர்களுக்குப் பட்டங்களும் அளித்துச் சிறப்பு செய்யப்பட்டன. இவர்களுக்கு வீடு கட்டித் தந்து, ஆடல்வல்லான் மரக்காலால் நெல் அளித்து இறைபணிகளுக்கு அமர்த்தியதாகத் தெரிகிறது. இவ்வாறே கானபாடிகள், நட்டுவர், சங்குகாளம் ஊதுவோர், மாலைகள் கட்டித் தருவோர், விளக்கேற்றுவோர், பரிசாரகர்கள், மெய்க்காவலர்கள் முதலியோர்களையும் நியமித்தான். நிலநிவந்தங்கள் பல தந்தான். அம்மன்னன் கோயிலுக்குத் தந்துள்ள ஆபரணங்களின் பெயர்களைப் படித்தாலே பிரமித்துப் போகிறோம் - வியப்பும் பேராச்சரியமும் அடைகிறோம். ஆனால் அவை ஒன்று கூட இன்றில்லாதது - அதை விடமிகப் பெரிய ஆச்சரியமாகும். நினைத்தால் அடையும் மன வேதனைக்கு அளவுமில்லை - மருந்துமில்லை.

தன்னாற் கட்டப்பட்ட கோயிலுக்குத் தேவையென்பது ஏதுமில்லாதபடி - சிறிதும் குறைவில்லாதபடி அனைத்தையும் செய்து வைத்தான் என்பதை எண்ணுகிறபோது அம்மன்னனின் சமயப்பற்று, பரந்த இறைமனம், தெய்வ வழிபாட்டில் இருந்த மட்டற்ற ஈடுபாடு தெரியவருகின்றது. இக்கருத்துக்கு அரண்தரும் செய்தியாகப் பின்வரும் தொடர்கள் விளங்குகின்றன.


"The Raja Rajeswara Temple at Tanjore which has evidently served as a model for a large number of other temples in south India is a stupendous monument of the religious instruct of this instruct of this sogereign"

H. Krishna sasthiri.

கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் ஆடல்வல்லான், தக்ஷிணமேருவிடங்கர் எனவும், பின்னர் இராஜராஜேச்சர முடையார், இராஜராஜேச்சரமுடைய பரமசுவாமி எனவும், ஊர்ப்பெயர் பாண்டிகுலாசனி வளநாட்டி தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. மன்னன் மட்டுமன்றி அவன் குடும்பத்தாரும், அலுவலர்களும் பற்பல நிவந்தங்களைக் கோயிலுக்கு ஏற்படுத்தினர், அவையனைத்தும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன. மற்றும் நாடொறும் கோயிலில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடந்த வாறிருந்ததும், மக்கள் கண்டு மகிழ்ந்ததும், திருப்பதிகம் விண்ணப்பித்தோர் கணக்காயர் மெய்க்காவலர் முதலியோர்

பெயர்களம்கூடக் கல்வெட்டக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

(பாண்டி குசாலனி என்பது இராஜராஜனின் விருதுப்பெயர். இதற்குப் பாண்டியர் குலத்துக்கு இடியைப் போன்றவன் என்று பொருள்.)

பிரகதீஸ்வரகாத்மியம், சமீவன க்ஷேத்ரமான்மியம் முதலிய தலபுராண நூல்கள் (சம்ஸ்க்ருதத்தில்) உள்ளன. கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் 'பெருவுடையார் உலா' பாடியுள்ளார்.

இதன் சிறப்புக்களோடு திகழ்ந்த தஞ்சைப் பெரிய கோயில் காலச்சூழலால் மாறி, செல்வம் அனைத்தையும் இழந்து, இன்று கலையழகு ஒன்றை மட்டுமே கொண்டு காட்சிப் பொருளாக இருந்து வருகின்றது.

இதன் சிறப்பைக்கருதி அரசுச்சார்பில் ஆண்டு தோறும் இராஜராஜனின் சதயத் திருவிழா நடத்தப்படுகிறது. அம்மன்னனின் உருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இராஜராஜனுடைய ஆயிரமாண்டு விழா அப்போதைய பிரதமர் திருமதி. இந்திரகாந்தி அவர்களுடைய வருகையுடன் அரசினரால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

.இக்கோயிலின் பெருமையை உணர்ந்து ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் அவர்கள் இவ்விழாவின்போது இராஜராஜசோழனது உரவச்சிலைக்கு 300 கிராமில் தங்கக்கீரிடம் செய்து 16-9-1984 அன்று அப்போதைய பிரதமர். திருமதி. இந்திராகாந்தி அவர்கள் மூலம் அணிவித்துச் சிறப்பு செய்தார்கள். மேலும் பெரும் பொருள்களைப் பொன்னிலும் வெள்ளியிலும் செய்தளித்துக் கோயிலில் பூஜைகள் சிறப்பாக நடைபெற நிபந்தங்கள் வைத்த அம்மன்னனின் மனநிலை, காலப்போக்கால் மாறுபட்டுப்போக இன்று கோயிலில் பூஜைகள், நடைபெறுவதற்குத் தேவைப்படும் வெள்ளி (பூஜை) ப்பாத்திரங்களை வழங்கியும், பூஜைகள் தடையின்றி நடைபெற நிரந்தர நிதிவைப்புக்கும் - டிரஸ்டுக்கும் ஏற்பாடு செய்தும், அதற்கு முதல் தொகையாகத்தாமே முன் வந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கியும் உள்ளார்கள்.

தவிர இராஜராஜ சோழன் தன் காலத்தில் பொறித்து வைத்துள்ள 80க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் அனைத்தையும் அச்சிட்டு 'சிவபாதசேகரன் கல்வெட்டக்கள்' என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார்கள்.

ஓலைச்சுவடிகளையும் அரும்பெரும் நூல்களையும் காத்து வரும் சரஸ்வதி மகால் நூல் நிலையம் தஞ்சையில் உள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்நகரில்தான் நிறுவப்பட்டுத் தமிழின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் செயற்பட்டு வருகின்றது. இத்தலத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் அவர்களின் அருளாட்சிக்குட்பட்ட ஸ்ரீ பங்காரு காமாக்ஷியம்மன் கோயில் உள்ளது.

அற்புதமான அம்பாள் தரிசனம் - அவசியம் தரிசிக்கவேண்டும்.


திருவிசைப்பா

"பன்னெடுங்காலம் பணிசெய்து பழையோர்

தாம் பலர் ஏம்பலித்து இருக்க

என் நெடுங்கோயில் நெஞ்சுவீற்றிருந்த

எளிமையை என்றும் நான் மறக்கேன்

மின்னெடும் புருவத்து இளமயில் அனையார்

விலங்கல் செய் நாடகசாலை

இன்நடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை

இராஜராஜேச்சரத்தி வர்க்கே"


"சரள மந்தார சண்பக வகுள

சந்தன நந்தன வனத்தின்

இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை

இராஜராஜேச்சரத்தி வரை

அருமருந் தருத்தி அல்லல்தீர் கருவூர்

அறைந்த சொல்மாலை ஈரைந்தின்

பொருள் மருந்துடையோர் சிவ பதம் என்னும்

பொன் நெடுங்குன்றுடை யோரே" (கருவூர்த்தேவர்)

Previous page in  கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is திருச்சாட்டியக்குடி
Previous
Next page in கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is  திருவிடைமருதூர்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it