திருச்சாட்டியக்குடி

திருவிசைப்பா

திருச்சாட்டியக்குடி

சாட்டியக்குடி - சாத்தியக்குடி

தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற தலம்.

மக்கள் வழக்கில் சாட்டியக்குடி, சாத்தியக்குடி என்று வழங்குகிறது.

1) கீழ்வேளுரிலிருந்து (கீவளுரிலிருந்து) கச்சினம் வழியாகத் திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் வழியில் இத்தலமுள்ளது.

2) திருவாரூரிலிருந்து தேவூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் தேவூரை அடுத்துச் சாலையோரத்தில் சாட்டியக்குடி உள்ளது. மெயின்ரோடிலிருந்து சற்றுத் தள்ளி, உள்ளே கோயிலிருக்கிறது. கோயில்வரை பேருந்து செல்லும்.

ஊர் - சாட்டியக்குடி. கோயில் - ஏழிருக்கை. ஆறு ஆதாரங்களுக்கும் மேலாகிய ஏழாவது இடத்தை - துவாதசாந்த இருக்கையை, ஏழிருக்கை என்பர். இந்நினைவைத் தரும் வகையில் கோயிலின் பெயர் அமைந்துள்ளது. இது பற்றியே இத்தலத்திருவிசைப்பா பதிகத்தில் கருவூர்த்தேவர் ஒவ்வொரு பாட்டிலும் "ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே" என்று பாடியுள்ளார்.

சாட்டியம் (ஜாட்டியம்) வெப்ப மிகுதியால் வரும் சுரநோய். வெப்ப நோய்க்குரிய தேவதையாகிய ஜ்வரதேவதை இறைவனை வழிபட்ட தலமாதலின் ஜாட்டியக்குடி (சாட்டியக்குடி) என்று பெயர் வந்தது. (குடீ - ஊர்) வெப்ப நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இன்றும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுக் குணமடைவது வழக்கில் இருந்து வருகிறது. சாட்டிய (சாண்டில்ய) முனிவர் வழிபட்ட தலமென்றும் சொல்லப்படுகிறது. கோயில் பிராகாரத்தில் இம்முனிவரின் சிலாரூப மேனியும் உள்ளது.


கருவூர்த்தேவரின் திருவிசைப்பா பாடல் பெற்றது.


இறைவன் - வேதநாதர், வேதபுரீஸ்வரர், ரிக்வேதநாதர்.


இறைவி - வேதநாயகி.


தீர்த்தம் - வேததீர்த்தம்.


தலமரம் - வன்னி.


மேற்கு நோக்கிய சந்நிதி.

முன் வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பால் வசந்த மண்டபம் உள்ள. நேரே சென்று 3 நிலைகளையுடைய உள்கோபுரத்தை தாண்டினால் நீர்கட்டும் அமைப்பிலுள்ள நந்தியையும் பலி பீடத்தையும் கண்டு தொழலாம்.

அடுத்துள்ள வாயிலைக் கடந்து இடப்பால் பிராகாரத்தில் திரும்பினால் விசுவநாத லிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராஜசபை, நவக்கிரகங்கள், சனிபகவான், பைரவர், சாண்டில்ய முனிவர், கருவூர்த்தேவர், சம்பந்தர், அப்பர், குபேரன், விநாயகர், சூரியன் முதலிய சந்நிதிகளைத் தொழலாம். தலமரம் - வன்னி, பிராகாரத்தைத் தொடர்ந்து வந்தால் விநாயகர் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் காட்சி தரும்.

வலம் முடித்து வாயிலைத் தாண்டி உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம் கிடைக்கிறது.

மூலமூர்த்தி - சிவலிங்கத் திருமேனி. சற்று உயர்ந்த பாணம். சதுர ஆவுடையார் அமைப்பு. உள்மண்டபத்தில் இடப்பால் உற்சவ மூர்த்தங்களுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இம்மூர்த்தங்களுள் சோமாஸ்கந்தர், நடராஜர், விநாயகர், வள்ளி தெய்வயானை, முருகன், பிரதோஷ நாயகர், திரிபுரசம்ஹாரர், சூரியன், உஷா, பிரத்யுஷா, சண்டேஸ்வரர் முதலியவை இடம் பெறுகின்றன.

பிராகாரத்தில் அம்பாள் கோயில் தனிக்கோயிலாக உள்ளது. வேதநாயகி, நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் நெடிய உருவில் அருமையான காட்சி தருகின்றாள். சன்டிகேஸ்வரி மூர்த்தம் வெளியில் இடப்பால் (மண்டபத்தில்) உள்ளது.

இக்கோயில் A.H. 4. ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதென்பர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன.

அண்மையிலுள்ள கீழ்வேளூர், கச்சனர், திருத்துறைப்பூண்டி முதலியவை திருமுறைத்தலங்களாகும்.

மாசிமக உற்சவம் இத்தலத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி விழாவும் சிறப்புடையது. நாள்தோறும் நான்குகால வழிபாடுகள்.


"செம்பொனே பவளக் குன்றமே நின்ற

திரைமுகம் மால்முதற் கூட்டத் (து)

அன்பரா னவர்கள் பருகும் ஆரமுதே

அத்தனே பித்தனே னுடைய

சம்புவே அணுவே தாணுவே சிவனே

சங்கரா சாட்டியக் குடியார்க் (கு)

இன்பனே எங்கும் ஒழிவற நிறைந் (து) ஏழ்

இருக்கையில் இருந்தவா றியம்பே."


"செங்கணா போற்றி திசைமுகா போற்றி

சிவபுர நகருள் வீற் றிருந்த

அங்கணா போற்றி அமரனே போற்றி

அமரர்கள் தலைவனே போற்றி

தங்கள் நான் மறைநூல் சகலமுங் கற்றோர்

சாட்டியக் குடியிருந் தருளும்

எங்கள்நா யகனே போற்றி ஏழ் இருக்கை

இறைவனே போற்றியே போற்றி."


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. வேதபுரீஸ்வரர் திருக்கோயில்

சாட்டியக்குடி - கிள்ளுகுடி அஞ்சல் - 611109

(வழி) தேவூர் - திருவாரூர் வட்டம்.

Previous page in  கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is திருப்பூவணம்
Previous
Next page in கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is  தஞ்சை இராஜராஜேச்சரம்
Next