ஓமாம்புலியூர்

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

ஓமாம்புலியூர்

சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் பேருந்து வசதியுள்ளது. காட்டுமன்னார்குடியிலிருந்து ஓமாம்புலியூருக்கு பேருந்துச்சாலை நன்குள்ளது. சாலை ஓரத்தில் கோயில். கோயிலிருக்குமிடத்தில் பெயர்ப்பலகை உள்ளது. வியாக்ரபாதர் வழிபட்ட தலம். இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்ததலம். ஓமம் - வேள்வி, வேள்விச்சிறப்புடைய ஊர். இவ்வூர் பிற புலியூர்களிலிருந்து வேறுபாடறியும் பொருட்டு ஓமம் ஆம்புலியூர் = ஓமாம்புலியூர் எனப்பட்டது. ஞானசம்பந்தர் பாடலில் ஓமமாம்புலியூர் என்றே வருகிறது. ஆனால் அப்பர் பாடலில் ஓமாம்புலியூர் என்று மருவி வருகிறது. (இக்கோயில் வடதளி என்றும் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளது.) பிரணவப் பொருளுபதேசம் நடந்த தலமாதலின் ஓம் - ஆம் - புலியூர் - ஓமாம்புலியூர் என்றாயிற்று என்றும் சொல்வர்.

இறைவன் - பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர்.

இறைவி - புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி.

தலமரம் - வதரி. (இலந்தைமரம்)

தீர்த்தம் - கொள்ளிடம், கௌரிதீர்த்தம்.

ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம்.

கிழக்கு நோக்கிய கோயில். ராஜகோபுரம் மூன்று நிலைகளையடையது. எதிரில் கௌரி தீர்த்தம் உள்ளது. கரையில் தனியே ஒரு சிவாலயம். பிராகாரத்தில் ஆறமுகப் பெருமான் சந்நிதி உள்ளது. வலமுடித்து உட்சென்றால் நேரே சுவாமி சந்நிதி. சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் இறைவன் காட்சிதருகின்றார் - சுயம்புமூர்த்தி. சுவாமி சந்நிதியில் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும், மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகச்சிறப்புடையது. குருமூர்த்தத்தலம். உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி (கோயிலுக்குள்ளேயே மூலமூர்த்தியாக) உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சிதருகின்றார். கோஷ்டத்தில் நடராசரின் சிலாரூபம் (வியாக்ர பாதருக்குக் காட்சிதந்த வடிவம்) உள்ளது. ஏனையகோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர் முதலியோர் உளர். அம்பாள் சந்நிதி அழகாகவுள்ளது.

3ஆம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் 'வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேதி மங்கலம்' என்றும், இறைவன் பெயர் 'வடதளி உடையார்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன் விழாத் திட்டத்தில் இத்திருக்கோயிலின் சுவாமி, அம்பாள், ஆறுமகர் விமானங்கள் திருப்பணிகள் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளன. மாசிமகத்தில் பெருவிழா, நவராத்திரி, சிவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள் முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன. நாடொறும் நான்கு கால வழிபாடுகள். பக்கத்தில் உள்ளதலம் திருப்பழமண்ணிப்படிக்கரை.

"சம்பரற்கருளிச் சலந்தரன் வீயத் தழல் உமிழ் சக்கரம் படைத்த எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவிடம் வினவில் அம்பரமாகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும் உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

(சம்பந்தர்)

'அருந்தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்தன்னை

ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்

வருந்துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை

மணவாள நம்பியை என்மருந்து தன்னைப்

பொருந்து புனல்தழுவு அயல் நிலவு துங்கப்

பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும்

திருந்து திரு வடதளியெஞ் செல்வன்றன்னைச்

சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே.' (அப்பர்)

-விண்ணிடை

வாமாம் புலியூர் மலர்ச் சோலை சூழ்ந்திலங்கும்

ஓமாம் புலியூர் வாழ் உத்தமமே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. துயர்தீர்த்தநாதர் திருக்கோயில்

(பிரணவபுரீஸ்வரர் தேவஸ்தானம்)

ஓமாம்புலியூர் - அஞ்சல் - ஆயங்குடி - S.O.

காட்டுமன்னார்குடி வட்டம் - கடலூர் மாவட்டம் - 608 306.






 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is பழமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  பழையாறைவடதளி
Next