திருமணஞ்சேரி ((கீழைத்) திருமணஞ்சேரி)

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

திருமணஞ்சேரி ( (கீழைத்) திருமணஞ்சேரி)

இன்று மக்கள் 'திருமணஞ்சேரி' என்றே வழங்குகின்றனர். மேலைத் திருமணஞ்சேரி என்று ஒன்றிருப்பதால் இதைக் கீழைத் திருமணஞ்சேரி என்றனர். ஆனால் இன்று பலருக்கும் மேலைத் திருமணஞ்சேரி தெரியாததாலும், அது பிரபலமாக இல்லையாதலாலும், இத்தலமே மிகவும் பிரசித்தியாக இருப்பதாலும் மக்கள் இத்தலத்தை 'திருமணஞ்சேரி' என்றே அழைக்கின்றனர்.

(1) மயிலாடுதுறையிலிருந்து திருமணஞ்சேரிக்குக் குத்தாலம் வழியாக நகரப் பேருந்து செல்கிறது.

(2) தனிப்பேருந்தில் வருவோர் குத்தாலம் வந்து, பந்தநல்லூர் செல்லும் சாலையில் சென்று 'அஞ்சார் வார்த்தலை' என்னும் ஊரையடைந்து, வாய்க்கால் பாலம் தாண்டி, வலப்புறமாகத் பிரிந்துசெல்லும் திருமணஞ்சேரி சாலையில் சென்றால் இத்தலத்தையடையலாம். (முதலில் வருவது மேலைத் திருமணஞ்சேரி, (எதிர்கொள்பாடி) அதே சாலையில் மேலும் சிறிது தூரம் சென்றால் திருமணஞ்சேரி (கீழைத் திருமணஞ்சேரி) வருகிறது) . இறைவன் கல்யாணசுந்தரர் வடிவங் கொண்டு கோகிலாம்பிகையைத் திருமணஞ் செய்து கொண்டதால் இத்தலம் திருமணஞ்சேரி ஆயிற்று. இக்கோயில் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தில் இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு 15-9-1986ல் மஹாகும்பாபிஷேகமும் நிறைவேறி, கோயில் வண்ணப் பொலிவுடன் விளங்குகிறது.

திருமணம் தடைப்படுகிறவர்கள் இத்தலத்திற்கு வந்து, கல்யாண சுந்தரருக்கு மாலைசார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் நிச்சயம் திருமணம் கூடப்பெறுவர். அவ்வாறு திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள் மீண்டும் கோயிலுக்கு வந்து சுவாமிக்கு முன்னால் திருமணத்தை நடத்திக் கொள்கிறார்கள். இக்காட்சியை இன்னும் கண்கூடாகக் காணலாம். திருமணநாள்களிலும் வெள்ளிக் கிழமைகளிலும் இங்கு ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன. கல்யாணசுந்தரரை எழுந்தருளச் செய்து அவர் முன்னால் ஒருபுறம் வரிசையாக மாலை சார்த்தி அருச்சை செய்பவர்களையும், மறுபுறம் வரிசையாக திருமணம் நடந்தேறிய தம்பதிகளையும் அமரச்செய்து அருச்சனை செய்வது ¢ கண்கொள்ளாக் காட்சியாகும். கோயிலுக்குள் எப்போதும் கூட்டம்.

இவ்வாறே, ராகு கிரக தோஷத்தால் பீடிக்கப்பட்டு மகப்பேறு வாய்க்காதவர்கள் இங்கு வந்து சப்தசாகர தீர்த்தத்தில் மூழ்கி, கோயிலில் உள்ள ராகு பகவானுக்குப் பாலபிஷேகம் செய்து, பால் பொங்கல் நிவேதனம் செய்து அதைச்சாப்பிட்டால் தோஷம் நீங்கிப் புத்திரபேறு அடைவர் என்பது வரலாறு. இதுவும் இன்று கண்கூடாக நடைபெறுகிறது.

தலவரலாற்றுச் செய்தி வரமாறு- உமையம்மை, இறைவனை நோக்கி, மீண்டும் ஒருமுறை வந்து தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். இறைவனருள் தாமதிக்கவே உமாதேவி அக்குறிப்பறியாது நடந்தார். சினமுற்ற இறைவன் உமையைப் பசுவாகப் பிறக்கக் கட்டளையிட்டார். உமையும், லட்சுமி, சரஸ்வதி, இந்திராணி சூழப்பசுவடிவங்கொண்டு அரசங்காடு முதலிய இடங்களில் உலவிவந்தார். திருமால், பசுக்களை மேய்ப்பவராக உருவங்கொண்டு அவைகளைப் பராமரித்து வந்தார். அம்பிகை (பசுவாகிய) பொழிந்த பாலால் பெருமான் உள்ளம் குளிரப் பெற்றும், குளம்பின் வருடலால் மகிழ்ந்தும், அம்பிகையை, பரதமகரிஷி நடத்திய யாக வேள்விக் குண்டத்தில் தோன்றித் திருமணஞ்சேரியில் மணஞ்செய்து கொண்டார் என்பது தலவரலாறு.

தேரழுந்தூரில் பசுவாகிப்பிறக்க அம்பாளுக்குச் சாபம் தரப்பட்டதாகவும், அசுவதக் காட்டில் பசுஉரு ஏற்று அம்பிகை உலவி வந்ததாகவும், கோமலில் திருமால், மேய்ப்போனாக வந்து பசுக்களைப் பாதுகாத்து வந்ததாகவும், திருக்கோழம்பத்தில் குளம்பின் வருடலை ஏற்றதாகவும்,திருவாவடுதுறையில் பசுவுக்கு முக்தி கொடுக்கப் பட்டதாகவும், குத்தாலத்தில் பரதமகரிஷி நடத்திய யாகத்தீயில் உமையம்மை தோன்றியதாகவும், திருவேள்விக் குடியில் கல்யாண நீராடலைக் கொண்டு கங்கணதாரணம் கொண்டதாகவும், குறுமுலைப் பாலையில் பாலிகைஸ்தாபனம் செய்ததாகவும், எதிர்கொள்பாடியில் இறைவன் எதிர்கொள்ளப்பட்டதாகவும், திருமணஞ்சேரியில் உமையம்மையை இறைவன் திருமணஞ் செய்துகொண்டதாகவும் சொல்லப்படுகின்றது. மன்மதன், ஆமை வழிபட்ட தலம்.

இறைவன் - உத்வாகநாதசுவாமி, அருள்வள்ளல்நாதசுவாமி, கல்யாண சுந்தரேஸ்வரர்.

இறைவி - கோகிலாம்பாள்.

தீர்த்தம் - சப்த சாகர தீர்த்தம் (இறைவனின் திருமணத்திற்கு

மாலைகளாக மாறி வந்த சப்த சாகரங்களும் (ஏழு கடல்களும்) இங்கேயே தங்கித் தீர்த்தமானதாகச் சொல்லப்படுகிறது) - கோயிலின் பக்கத்தில் உள்ளது.

சம்பந்தரும் அப்பரும் பாடப்பெற்றது.

ராஜகோபுரம் பண்டைக் காலத்தில் மல்லப்ப நாய்க்கரால் கட்டப்பட்டதென்பர். இன்று ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உட்புகுந்தால் கொடிமரம் நந்தி பலிபீடங்கள். அடுத்துள்ள முன் மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. மிகச்சிறிய திருமேனி - சுகாசனத்தில் அமர்ந்த திருக்கோலம். நேரே மூலவர் தரிசனம்.

உள்பிராகாரத்தில் நால்வர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, காலபைரவர், சனீஸ்வரன் சந்நிதிகள். கோஷ்டத்தில் பிட்சாடனர், பாலகணபதி, நடராசர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, ராகு, துர்க்கை, கங்காவிசர்ஜனர் மூர்த்தங்கள் உள்ளன.

காரண ஆகமப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. நாடொறும் ஐந்து கால வழிபாடுகள். சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் சுவாமிக்குக் கல்யாண உற்சவம் மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

"மொழியானை முன்னொரு நான்மறை ஆறங்கம்

பழியாமைப் பண்ணிசையான் பகர்வானை

வழியானை வானவர் ஏத்து மணஞ்சேரி

இழியாமை ஏத்தவல்லார்க் (கு) எய்தும் இன்பமே." (சம்பந்தர்)

"துன்னுவார் குழலாள் உமையா ளடும்

பின்னுவார்சடை மேற்பிறை வைத்தவர்

மன்னுவார் மணஞ்சேரி மருந்தினை

உன்னுவார் வினையாயின் ஓயுமே." (அப்பர்)

-நண்ணு

வணஞ் சேரிறைவன் மகிழ்ந்து வணங்கும்

மணஞ்சேரி நீங்கா மகிழ்வே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. அருள்வள்ளல்நாத சுவாமி திருக்கோயில்

திருமணஞ்சேரி - அஞ்சல் - 609 813

குத்தாலம் S.O. மயிலாடுதுறை வட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம்.


 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி)
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்றுக்கை (கொருக்கை)
Next