எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி)

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

எதிர்கொள்பாடி ( மேலைத்திருமணஞ்சேரி)

மக்கள் வழக்கில் மேலைத் திருமணஞ்சேரி என்றாயிற்று. இன்று இப்பெயர் சொல்லிக் கேட்டாலும் பெரும்பாலான சாதாரண மக்களுக்குத் தெரியவில்லை. கீழைக் திருமணஞ்சேரிதான் பிரசித்தமாகவுள்ளது. மக்களுக்கும் தெரிகிறது.

1) குத்தாலத்திலிருந்து பந்தநல்லூர் செல்லும் பேருந்துச் சாலையில் வந்து "அஞ்சார் வார்த்தலை" என்னும் ஊரையடைந்து, வாய்க்கால் பாலம் தாண்டி, (இடப்புறமாகப் பந்தநல்லூர்சாலை செல்ல) நாம் வலப்புறமாகத் திரும்பி, திருமணஞ்சேரி சாலையில் சென்றால் முதலில் வரும் ஊர் மேலைத்திருமணஞ்சேரி ஆகும். இவ்வூருள் நுழைந்ததும் வலப்புறமாகச் சென்றால் இக்கோயிலைத் தரிசிக்கலாம். இதை மேலக் கோயில் என்று கேட்டால்தான் சொல்வார்கள். இத்திருக்கோயில் பலருக்கும் தெரிவதில்லை.

இதே சாலையில் மேலும் சிறிது தூரம் சென்றால் திருமணஞ்சேரி (கீழைத் திருமணஞ்சேரி) உள்ளது.

2) மயிலாடுதுறையிலிருந்து குத்தாலம் வழியாகத் திருமணஞ்சேரிக்கு நகரப் பேருந்து செல்கிறது. கோயில்வரை வாகனங்கள் செல்லும்.

வேள்விக்குடியில் திருமணஞ் செய்துகொண்டு அத்திருமணக்கோலத்துடன் வந்த தன் அடியவனான அரசகுமாரனை அவனடைய அம்மானைப்போல இறைவன் வந்து எதிர்கொண்டழைத்துச் சென்றமையால் இத்தலம் எதிர்கொள்பாடி என்றாயிற்று. (இப்பெயர் பண்டைக் காலத்தில் 'எருதுபாடி' என்று திரிந்து வழங்கியதாகவும் செய்தியன்று தெரிவிக்கிறது) . ஐராவதம் வழிபட்டது.

இறைவன் - ஐராவதேஸ்வரர், மதயானேஸ்வரர்.

இறைவி - சுகந்த குந்தளாம்பிகை, மலர்க்குழல்மாது.

சுந்தரர் பாடல் பெற்றது.

ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் மேற்கு நோக்கியுள்ளது. கொடிமரமில்லை. பழமையான கோயில். வெளிப் பிராகாரத்தில் பைரவர், சனிபகவான், சூரியன், விநாயகர் மூர்த்தங்கள் உள்ளன. முன்மண்டபத்தில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள். வாயில் கடந்தால் இடப்பால் அம்பாள் சந்நிதி. நேரே மூலவர் தரிசனம். பல்லாண்டுகளாகக் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

"மத்த யானையேறி மன்னசூழ வருவீர்காள்

செத்த போதிலாருமில்லை சிந்தையுள் வைம்மின்கள்

வைத்த வுள்ளமாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே

அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே" (சுந்தரர்)

-சூழ்வுற்றோர்

விண்ணெதிர் கொண்டிந்திரன் போன்மேவி நெடுநாள்வாழப்

பண்எதிர்கொள் பாடிப் பரம் பொருளே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. ஐராவதேஸ்வரர் திருக்கோயில்

மேலைத் திருமணஞ்சேரி, திருமணஞ்சேரி அஞ்சல் - 609 813

குத்தாலம் S.O. மயிலாடுதுறை வட்டம்.

நாகப்பட்டினம் மாவட்டம்.


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவேள்விக்குடி
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருமணஞ்சேரி ( (கீழைத்) திருமணஞ்சேரி)
Next