Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

கச்சிநெறிக் காரைக்காடு (திருக்காலிமேடு) - காஞ்சிபுரத்திலுள்ள கோயில்

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

கச்சிநெறிக் காரைக்காடு.

(திருக்காலிமேடு)

காஞ்சிபுரத்திலுள்ள கோயில்

காஞ்சிபுரத்தில் உள்ள பாடல் பெற்ற ஐந்து திருக்கோயில்களுள் இதுவும் ஒன்று. இக்கோயில் ஊருக்குச் சற்றுத் தள்ளி உள்ளது. இப்பகுதி தற்போது 'திருக்காலிமேடு' என்று வழங்கப்படுகிறது. ரயில்வே ரோடில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்திற்கு எதிரில் திருக்காலிமேட்டிற்குச் செல்லும் பாதையில் சென்று இக்கோயிலை அடையலாம். கோயில்வரை கார், வேன், பேருந்து முதலியன செல்லும்.

மக்கள் வழக்கில் இக்கோயில் 'திருக்காலீஸ்வரர் கோயில்' என்று வழங்குகின்றது. ஞானசம்பந்தர் வாக்கில் "கச்சிநெறிக்காரைக் காட்டாரே" என்றே திருப்பெயர் வருகிறது. ஒரு காலத்தில், இப்பகுதியே காஞ்சிக்கு வரும் வழியாக அமைந்திருந்தாலும், இப்பகுதி காரை (முட்) செடிகள் நிரம்பியிருந்தாலும் கச்சிநெறிக், "காரைக்காடு" என்று பெயர் பெற்றது. இந்திரனும், புதனும் வழிபட்ட தலம். அதனால் இப்பகுதிக்கு இந்திரபுரி என்றும் பெயர் வழங்கியது.

சம்பந்தர் பாடல் பெற்றது.

இறைவன் - சத்தியவிரதேஸ்வரர். (இப்பெயரையட்டியே காஞ்சிக்கு 'சத்தியவிரதக்ஷேதத்திரம்' என்ற பெயருண்டாயிற்று) மேற்கு நோக்கிய சந்நிதி. பழைமையான ராஜகோபுரம் - மூன்று நிலைகளை உடையது. எதிரில் நந்தியும் - கவசமிட்ட கொடி மரமும் உள்ளன.

உள்ளே நுழைந்ததும் நேரே மூலவர் சந்நிதி தெரிகின்றது. இடப்புறமாக வலம் வருகிறோம். சந்நிதிகள் ஏதுமில்லை. வலமுடிந்து வாயிலில் நுழையும்போதும் இட்ப்புறமாக உள்ள நவக்கிரக சந்நிதியைக் காணலாம். உள்ளே சென்று உட்பிரகாரத்தை வலமாக வரும்போது முதலில் அம்பலக்கூத்தர், சிவகாமியுடன் ஆனந்தமாகக் காட்சி தருகின்றார். அற்புதமான திருமேனி. அடுத்து நால்வர், இந்திரன், புதன், பைரவர் மூலத்திருமேனிகள் காட்சியளிக்கின்றன. விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள். அடுத்து கஜலட்சமி, நீலகண்ட சிவாசாரியார் மூலத் திருமேனிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர், சண்டேசவரர், சந்திரசேகரர், பிரதோஷ நாயகர், நால்வர் ஆகிய உற்சவத் திருமேனிகள் மிகவும் அழகுடையவை. அவை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரமன், துர்க்கை, ஆகியோர் உள்ளனர்.

துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் திரிசித்து உள்ளே சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம்.

மூலவர் - சுயம்புமூர்த்தி, சற்று உயர்ந்த பாணம் -லேசான செம்மண் நிறத்தில் காட்சியளிக்கிறது. பக்கத்தில் அம்பாள் உற்சவத் திருமேனி வைக்கப்பட்டுள்ளது. சூரியனின் மூலத் திருமேனியும் உள்ளேயே உள்ளது.

இறைவன் - சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர்.

இறைவி - (இத்தலத்திற்குரிய உற்சவ அம்பாளாக) பிரமராம்பி¬

தீர்த்தம் - இந்திர தீர்த்தம்.

இப்பகுதியில் வேப்பமரங்கள் அடர்ந்திருந்தமையால் இத்தீர்த்தம் மக்களால் வேப்பங்குளம் என்றழைக்கப்படுகிறது. இப்பெயரில் உள்ள "பெரிய வேப்பங்களம் எள்பதே பண்டைய இந்திர தீர்த்தமாகும். இது தற்போது பயன்படுத்தப்படவில்லை." "சிறிய வேப்பங்குளம்" என்பதே குடிநீர்க் குளமாகப் பயன்படுகிறது. முப்பதாண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாகச் சொல்லப் படுகிறது. தலமரம் - காரைச் செடி. தற்போது இல்லை.

நித்திய பூஜை இருவேளை மட்டுமே நடைபெறுகின்றது. வெள்ளாழஞ் செட்டியார் மரபைச் சேர்ந்தவர்களே அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டு நிர்வாகஞ் செய்து வருகிறார்கள்.

"அன்றாலின் கீழிருந்து அங்கு அறம் புரிந்த அருளாளர்

குன்றாத வெஞ்சிலையிற்கோளரவ நாண்கொளுவி

ஒன்றாதார் புரமூன்றும் ஓங்கெரியில் வெந்தவிய

நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே."

"புற்றிடைவாள் அரவினொடு புனைகொன்றை மதமத்தம்

எற்றொளியா அலை புனலோடு இளமதியமேந்து சடைப்

பெற்று டையாளரு பாகம் பெண்ணுடையார் கண்ணமரும்

நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே."

(சம்பந்தர்)

"காவதனே கச்சி நெறிக் காரைக்காட் டேய்ந்து வருந்

தேவனே காரைத்திரு நாதா"

(சிவதல நாமக் கலிவெண்பா)

- "மங்காது

மெச்சி நெறிக் கார்வமேவி நின்றோர் சூழ்ந்த திருக்

கச்சிநெறிக் காரைக் காட்டிறையே"

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. கச்சிநெறிக்காரைக்காட்டீஸ்வரர்

திருக்காலீஸ்வரர் திருக்கோயில்

திருக்காலிமேடு - காஞ்சிபுரம் - 631 501.

காஞ்சிபுரம் மாவட்டம்.

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is கச்சி அனேகதங்காவதம் - காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  குரங்கணில்முட்டம்
Next