Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருப்புன்கூர்

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

திருப்புன்கூர்

திருநாளைப்போவார் (நந்தனார்) வணங்குவதற்காக இறைவன் நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு அருள் செய்த தலம். ஏயர்கோன் கலிக்காமர், சுந்தரருடன் வந்து தரிசித்த தலம். வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 A.e. சென்றால் ஒருபுறம் திருப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்றவளைவும் உள்ளது. அதனுள் - அச்சாலையில் 1 A.e சென்றால் கோயிலை அடையலாம். சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

இறைவன் - சிவலோகநாதர்.

இறைவி - சொக்க நாயகி, சௌந்தர நாயகி.

தலமரம் - புங்கமரம்.

தீர்த்தம் - கணபதி தீர்த்தம். (கோயிலின் பின்புறம் உள்ளது.) (புங்கு + ஊர் = புங்கூர். சம்ஸ்கிருதத்தில் கஞ்சாரண்யம் என்று பெயர்) . பிரமன், இந்திரன், அகத்தியர், சந்திரன், சூரியன், இராசேந்திர சோழன், அக்கினி, பதஞ்சலி, வியாக்ரபாதர், சப்தகன்னியர், முதலியோர் வழிபட்ட தலம். சுந்தரர்பால் கோபங்கொண்ட விறன்மிண்ட நாயனார் (இத்தலத்திற்கு வந்து தங்கியிருந்து) வழிபட்ட சிறப்புடைய தலம். இங்குள்ள தீர்த்தம் விநாயகருடைய துணையால் நந்தனார் வெட்டியதாகும்.

மூவர் பாடல் பெற்ற தலம்.

இத்தலத்திற்குரிய பன்னிருவேலி பெற்ற வரலாறு - தன் நாட்டில் பஞ்சம் நிலவியதால் இராசேந்திரசோழன் எல்லாச்சிவாலயங்களிலும் பூசைகளைச் செய்தான். அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புன்கூர்ச் சிவலோக நாதரை வழிபடின் மழையுண்டாகும் என்றருள, அவ்வாறே மன்னனும் அங்கு வந்து சுவாமியை வழிபட்டான். அப்போது சுந்தரர் அங்கு வந்தார். அரசன் அவரை வணங்கி,சந்நிதியில் பாடி மழை பெய்விக்குமாறு வேண்டினான். சுந்தரரும் மழை பெய்வித்தால் சுவாமிக்குப் பன்னிருவேலி நிலமளிக்குமாறு மன்னனுக்குக் கட்டளையிட்டுவிட்டுப் பாடினார், மழைபெயத்து. எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழைமிகுதியைக் கண்ட மன்னன், அதை நிறுத்தாவிடில் பெருஞ்சேதம் உண்டாகும் என்றெண்ணிச் சுந்தரரைப் பார்த்து நிறுத்துமாறு பாடியருள வேண்ட அவரும் மேலும் பன்னிருவேலி கேட்க, மன்னனும் தர, சுந்தரரும் பாடியருள மழையும் நின்றது.

திருநாளைப்போவாரின் (நந்தனாரின்) ஊரான ஆதனூர் இத்தலத்திற்குப் பக்கத்தில் 5 கி.மீ.ல் உள்ளது. திருப்புன்கூருக்கு வந்து சிவலோக நாதரைத்தரசிக்க முயன்ற நாயனார், தன் குலநிலையை எண்ணி வெளியிலிருந்து பார்க்க, நந்தி மறைத்திருப்பது கண்டு வருந்தினார். இறைவன் இவருடைய உள்ளப் பக்தியை கண்டு மகிழ்ந்து நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு பணித்தார். இன்றும் நந்தி இத்தலத்தில் விலகியிருப்பதைக் காணலாம். இதைக் கோபால கிருஷ்ண பாரதியார் தம் கீர்த்தனையில் பின்வருமாறு சுவை பாடப் பாடியுள்ளார்.

'சிவலோகநாதன் திருச்சந்நிதானம்

மலையாகிய நந்தி மறைத் திடுதிங்கே

பலகாலஞ் செய்த பாழ்வினை குவிந்து

மலையாகி இப்படி மறைத்ததோ என்றார்.'

"வழிமறைத் திருக்குதே - மலைபோல்

ஒருமாடு படுத்திருக்குதே'

பாவிப் பறையனிந்த ஊரில் வந்து மிவன்

பாவந்தீரனோ - உன்தன் - பாதத்தில் சேரேனோ சிவலோகநாதா

'தேரடியில் நின்று தரிசித்தாலும் போதும்

கோவிலுள் வரமாட்டேனே ஐயே

ஓரடிவிலகினால் போதுமிங்கே நின்று

உற்றுப் பார்க்கச்சற்றே விலகாதோமாடு-'

நந்தியை விலகச்சொன்ன கீர்த்தனை வருமாறு-

'சற்றே விலகியிரும் பிள்ளாய் - சந்நிதானம் மறைக்குதாம் - c

நற்றவம் புரியும் நம்மிடம்திரு நாளைப்போவார் வந்திருக்கின்றார்

சாதிமுறைமை பேசுறான் - தன்னை இகழ்ந்து பேசுறான்

கோதிலாக் குணமுடையோன் கோபங்கொண்டால் தாளமாட்டாய்

வேதகுலத்தைப் போற்றுறான் விரும்பி விரும்பி போற்றுறான்

பூதலத்தில் இவனைப்போலே புண்யபருஷன் ஒருவனில்லை

பக்தியில் கரைகண்டவன் பார்த்துப்பார்த்து உண்டவன்

சித்தம் குறையில் நமது செல்வம் முற்றுங்குறையும் - தயவுசெய்து.

நந்தி விலகத்தரிசித்த நாளைப்போவார் கோயிலின் மேற்புறமுள்ள ரிஷபதீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்த எண்ணித் தனக்குத் துணை யாருமில்லாததால் இறைவனை வேண்ட, இறைவன் அவருக்குத் துணையாகுமாறு கணபதியை அனுப்பினார். அவர் துணையால் அத்தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்தினார். அதுவே கணபதிதீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. எனவே இங்குள்ள விநாயகர் 'குளம் வெட்டிய விநாயகர்' என்றழைக்கப்படுகிறார்.

ராஜகோபுரம் புதுப்பொலிவுடன் திருப்பணிகள் செய்யப்பட்டு ஐந்து நிலைகளடன் காட்சியளிக்கிறது. வெளிப்பிராகாரத்தில் குளம் வெட்டிய விநாயகர் சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும் தலமரமும் பிரமலிங்கமும் உள்ளன. உள்சுற்றில் இடப்பால் நந்தனார் திருவுருவம் உள்ளது. வலப்பால் வசந்தமண்டபம். உள்வாயிலின் மேற்புறத்தில் வண்ணச்சுதையில் பஞ்சமூர்த்திகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கவசமிட்ட கொடிமரம். பெரிய நந்தி (நாளைப் போவாருக்காக) சற்று விலகியுள்ளது. துவார விநாயகரை வணங்கி உள்வாயிலைக் கடந்தால் உள்பிராகாரத்தில் இடப்பால் சூரியன், நால்வருடன் கலிக்காமரும் சேர்ந்த சந்நிதி, சுந்தரவிநாயகர் சந்நிதி முதலியவை உள்ளன. அடுத்துள்ள சோமாஸ்கந்தர் - பெரிய திருமேனி இத்தலத்திற்குரிய தனிச்சிறப்பு - தரிசிக்கத்தக்கது. அடுத்து சூரியன் அக்கினி வழிபட்ட லிங்கங்கள். ஆறுமுகர் சந்நிதி, தத்புருஷ், அகோர, வாமதேவ, சத்யோஜாத முகங்களின் பெயரில் அமைந்துள்ள லிங்கபாணங்கள், கஜலட்சுமி முதலிய சந்நிதிகள் உள்ளன. தலப்பதிகங்கள் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. இடப்பால் அம்பாள் சந்நிதி தனியாக, வலம்வரும் அமைப்புடன் உள்ளது. நவக்கிரகம், பைரவர், சந்திரன் சந்நிதிகளைத் தொழுது வலம் முடித்துச சென்றால் நேரே சுவாமிசந்நிதி - மூலவர் சற்று குட்டையான பாணத்துடன் காட்சிதருகின்றார். எதிரில் உள்ள நந்தி, நீர்கட்டும் தொட்டிக்குள் உள்ளது.

நடராச சபை உள்ளது. இங்குள்ள நடராச வடிவம் கலையழகு வாய்ந்தது. இப்பெருமான் பாதத்தில் தேவர் ஒருவர் அமர்ந்து தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்யத்தை அடித்து இசை எழுப்புகின்றதைத் தரிசிக்கலாம்.

கோஷ்டங்களில் நர்த்தனவிநாயகர், பிட்சாடனர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரமன், துர்க்ககை, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் உள்ளனர்.

சுவாமி சந்நிதிக்கு முன்புள்ள இரு துவாரபாலகர்களுள் தென்புறமுள்ள வடிவம் சற்றுத் தலையைச் சாய்த்து நந்தியை விலகியிருக்குமாறு கட்டளையிடுவது போலக் காட்சிதருவது கண்டு மகிழத்தக்கது. மூலவர் சுயம்பு மூர்த்தி - மண்புற்று. இதன்மீது சார்த்தப்பட்டிருக்கும் குவளைக்குத்தான் நாடொறும் அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதி சோமவாரத்திலும் இரவு அர்த்தசாமப் பூசையின்போது புனுகுசட்டம் சார்த்தப்படுகிறது.

மூவர் திருப்பதிகங்கள் பளிங்குக் கற்களில் பதிக்கப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளன. குளத்துப்படித்துறைகள் புதுப்பிக்கபட்டுள்ளன. திருநாளைப்போலவார் நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தேரடியில் நின்று தரிசித்த நந்தனாருக்கு, அத் தோடியைப் புதுப்பித்துக் கோயில் கட்டப்பட்டுள்ளது.

நாடொறும் நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. கல்வெட்டில் இத்தலத்திறைவன் 'சிவலோகமுடைய நாயனார்' என்று குறிக்கப்படுகின்றார். இத்தலத்தூக கல்வெட்டுக்களில் இறைவனுடைய திருமஞ்சனத்திற்கும், திருப்பள்ளியெழுச்சிக்கும், பூமாலைகள் கட்டிச்சார்த்துதற்கும் நிலம்விடப்பட்ட செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன. இத்தலத்திற்குப் பக்கத்தில் ஏயர்கோனின் அவதாரத் தலமாகிய 'பெருமங்கலம்' உள்ளது. 1974ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கோயிலில் திருப்பணிகள் தொடங்க ஏற்பாடுகள் செய்யவுள்ளன.

'முந்தி நின்ற வினைகள் அவைபோகச்

சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்

அந்தமில்லா அடிகளவர் போலும்

கந்தமல்கு கமழ்புன் சடையாரே'. (சம்பந்தர்)

இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னை

இனிய நினையாதார்க்கு இன்னாதானை

வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்

மாட்டாதார்க்கு எத்திறத்து மாட்டாதானைச்

செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானைத்

திருப்புன்கூர் மேவிய சிவலோகனை

நெல்லால் விளைகழனி நீடுரானை

நீதனேன் என்னே நான் நினையாவாறே". (அப்பர்)

"வையகமுற்று மாமழை துறந்து

வயலில் நீரிலை மாநிலந்தருகோம்

உய்யக் கொள்க மற்றெங்களை யென்ன

ஒளிகொள் வெய்முகிலாய்ப் பரந்தெங்கும்

பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்தும்

பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டருளுஞ்

செய்கை கண்டு நின்திருவடி யடைந்தேன்

செழும் பொழில் திருப்புன்கூர் உளானே." (சுந்தரர்)

"விரும்புன்கூர் அடியென்னுந் தொழும்பர் தமக்கருள் தழைத்து வினைக்கீடாக

கரும்புன்கூர் பவப்பிணிகள் அணுகாமலுத்தமாங் கத்தின்மீது

மருப்புன்கூர் வரைகோலால் புண்ணியத்தை வரைந் திருமை வாழ்வளிப்பத்

திருப்புன்கூரிடை மேவுஞ் சிவலோக நாயகன்தாள் சென்னி சேர்ப்போம்"

(தலபுராணம்)

-ஒன்றிக்

கருப்புன்கூர் உள்ளக் கயவர் நயவாத்

திருப்புன்கூர் மேவுஞ் சிவனே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. சிவலோகநாதர் திருக்கோயில்

திருப்புன்கூர் - அஞ்சல் - சீர்காழி வட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் - 609 112. 
 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருநின்றியூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருநீடுர்
Next