Page load depends on your network speed. Thank you for your patience.

Loading...

திருநின்றியூர்

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

திருநின்றியூர்

வைத்தீஸ்வரன்கோயில் - மயிலாடுதுறை சாலையில் இடையில் உள்ள ஊர். மயிலாடுதுறையிலிருந்து 7 A.e. தொலைவு. மக்கள் வழக்கில் திருநின்றியூர் என்றும், கொச்சை வழக்கில் திருநன்றியூர் என்றும் வழங்குகிறது. (திருநின்றவூர் என்பது வேறு. தொண்டை நாட்டில் உள்ளது.)

மன்னன் ஒருவன் கோயிலைக் கட்டும் விருப்புடன் இங்கு வந்து பூமியை இடித்தும் பார்த்தபோது குருதி பீறிட, தோண்டிப் பார்க்கையில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு, கோயிலைக் கட்டினான் என்பது தலவரலாறு. இடித்த இடி, பட்டமையால் இன்றும் சிவலிங்கத்தின் மீது உச்சியில் குழி இருப்பதைக் காணலாம்.

பழைய நாளில் இதுவும் கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாக விளங்கியது. நூறு ஆண்டுகளுக்குமுன் நகரத்தார் திருப்பணி செய்தபோது இதை இப்போதுள்ள அமைப்பில் மாற்றிக் கட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இலக்குமி, பரசுராமர், அகத்தியர் வழிபட்ட தலம். இஃது தருமையாதீனக் கோயில்.

இறைவன் - மகாலட்சுமீசர், லக்ஷ்மிபுரீஸ்வரர்.

இறைவி - லோகநாயகி.

தலமரம் - விளாமரம்.

தீர்த்தம் - இலட்சுமி தீர்த்தம்.

மூவர் பாடல் பெற்றது. பழைய கோயில். ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. விசாலமான உள்இடம். கொடிமரம் இல்லை. பலிபீடம் நந்தியும் கொடிமரத்து விநாயகரும் உளர்.

பிராகாரத்தில் செல்வப் பிள்ளையார் சந்நிதியுள்ளது. பரசுராமர் வழிபட்ட லிங்கமும், சுப்பிரமணியர் நால்வர், மகாலட்சுமி சிலா ரூபங்கள் ஒரே சந்நிதியில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அடுத்து நவக்கிரக சந்நிதியும், பைரவர், சந்திரன் உருவங்கள் ஒரு சந்நிதியில் உள்ளன. வலம்முடித்து, துவார விநாயகரையும் தண்டபாணியையும் வழிபட்டுத் துவாரபாலகர்களைத் தொழுது, உட்சென்றால் நேரே சுவாமி சந்நிதியும் வலப்பால் அம்பாள் சந்நிதியும் உள்ளன.

மூலவர் சுயம்பு. உயர்ந்த பாணம். பட்டுசார்த்தி கம்பீரமாகக் காட்சி தருகிறது. இலிங்கத்தின் உச்சியில் 'குழி' உள்ளது. அம்பாள் சந்நிதி அழகாகவுள்ளது. நாடொறும் இருகால வழிபாடுகளே நடைபெறுகின்றன. ஆடி வெள்ளிக்கிழமைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பெருவிழா நடைபெறவில்லை.

"அச்சம்இலர் பாவம்இலர் கேடும்இலர் அடியார்

நிச்சம்முறு நோயும்இலர் தாமுந்நின்றியூரில்

நச்சம் மிடறுடையார் நறுங்கொன்றை நயந்தாளும்

பச்சம் உடையடிகள் திருப்பாதம் பணிவாரே". (சம்பந்தர்)

"பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்

மறையின் ஓசையும் மங்கி அயலெலாம்

நிறையும் பூம்பொழில்சூழ் திருநின்றியுர்

உறையும் ஈசனை உள்கும்என் உள்ளமே". (அப்பர்)

"திருவும் வண்மையும் திண்டிறலரசுஞ்

சிலந்தியார் செய்த செய்பணிகண்டு

மருவுகோச் செங்கணான் றனக்களித்த

வார்த்தை கேட்டுநுன் மலரடியடைந்தேன்

பெருகு பொன்னிவந்துந்து பன்மணியைப்

பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்

தெருவுந் தெற்றியுமுற்றமும் பற்றித்

திரட்டுந் தென்திரு நின்றியூரானே". (சுந்தரர்)

-கொடைமுடியா

நன்றியூரென்றறிந்த ஞாலமெலாம் வாழ்த்துகின்ற

நின்றியூர் மேவு நிலைமையனே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. மகாலட்சுமீசர் திருக்கோயில்

திருநின்றியூர் - அஞ்சல்

மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம் 609 118.


 
 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்கடைமுடி (கீழையூர், கீழுர்)
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருப்புன்கூர்
Next