Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருவேட்களம்

திருமுறைத்தலங்கள்

சோழ நாட்டு (வடகரை) த் தலம்

கோயில்

திருவேட்களம்

அண்ணாமலை நகரில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் செல்லும் சாலையில் சென்று, அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்துள் புகுந்து நேரே சென்றால் (பல்கலைக்கழகப் பகுதியைத் தாண்டி) சாலை ஓரத்தில் கோயில் உள்ளது.

அர்ச்சுனனுக்குப் பாசுபதம் தந்தருளிய தலம். ஞானசம்பந்தப்பெருமான் இங்குத் தங்கியிருந்து நாடொறும் சென்ற தில்லைச் சபாநாயகரைத் தரிசித்து வந்தார். நாரதர் வழிபட்ட தலம்.

இறைவன் - பாசுபதேஸ்வரர், பாசுபதநாதர்.

இறைவி - சற்குணாம்பாள், நல்லநாயகி.

தலமரம் - மூங்கில்.

தீர்த்தக்குளம் - கோயிலின் எதிரில் உள்ளது.

சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்றது.

(தில்லைக்கூத்தனை வழிபட்டபின் ஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்து பெருமானை வணங்கினார். பின்னர் இங்கேயே சிலநாள்கள் தங்கியிருந்தார். அப்பர் பெருமான் தில்லையை வணங்கிப் பின்பு வந்து இத்திருக்கோயிலைப் பணிந்து, திருக்கழிப்பாலையையும் தொழுது மீண்டும் தில்லை சென்றடைந்தார்) .

கிழக்கு நோக்கிய திருக்கோயில். கோயிலின் எதிரில் நாகலிங்க மரமும் குளமும் உள்ளன. நன்கு பராமரிக்கப்பட்டு வரும் இத்திருக்கோயில் 'நகரத்தார்க்கு' உரியது.

கோபுரம் தொழுது வாயிலைக்கடந்து உட்சென்றால் பிராகாரத்தில் சித்திவிநாயகர், சோமாஸ்கந்தர் சந்நிதிகள் உள்ளன. நால்வர்களையடுத்துச் சொக்கநாதரும் மீனாட்சியும் காட்சிதர, அடுத்துச் சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. தலமரம் மூங்கில் உளது. பைரவர், நவக்கிரகங்கள் சந்திரன் சூரியன் உள்ளனர்.

வலம் முடித்து முன் மண்டபத்தில் சென்றால் வலப்பால் அம்பாள் சந்நிதி. நின்ற கோலம். நேரே சுவாமி காட்சி தருகின்றார் - சிவலிங்கத் திருமேனி - அர்ச்சுனனுக்கருளிய பாசுபதேஸ்வரர், அழகான தோற்றம்.

சந்நிதி வாயிலின் முன்னால் இருபுறமும் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் தரிசனம். நடராசர் மகுடமணிந்து காட்சி தருவது சிறப்புடையது. இடப்பால் நால்வர் உற்சவத் திருமேனிகளும் தொடர்ந்து உற்சவ மூர்த்தங்களும் வைக்கப்பட்டுள்ளன. இம்மூர்த்தங்களுள் பாசுபதம் ஏந்திய மூர்த்தியும், அருச்சுனன் திருமேனியும் தல வரலாற்றுத் தொடர் புடையவை. இவை இரண்டும் மிகப் பழங்காலத்தில் குளத்திலிருந்து கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.

இத்திருக்கோயிலுக்குத் தொடர்புடைய வகையில் (1) முன் மண்டபத் தூண்களில் இறைவனும் இறைவியும் வேடுவ வடிவத்தில் நாய்களுடன் செல்வது (2) அருச்சுனனுடன் போரிடுவது போன்ற சிற்பங்கள் உள்ளன. இன்னொரு தூணில் அர்ச்சுனன் தவம் செய்வது, கீழே (பன்றி) மூகாசூரன் வந்து அதற்கு இடையூறு செய்வது போன்ற சிற்பமும் உள்ளது. கோஷ்ட மூர்த்திகளாக உச்சி விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, ஆகியோர் உளர். சண்டேசுவரர் சந்நிதி உளது.

கோயிலில் பெருவிழா, வைகாசி விசாகத்தில் ஏகதின உற்சவமாக நடைபெறுகின்றது. அன்று பசுபாதம் அருளிய காட்சியும், பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் இடம் பெறுகின்றன.

நவராத்திரி, சிவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள் முதலியவை நடைபெறுகின்றன. நாடொறும் ஐந்து கால வழிபாடுகள், இக்கோயிலின் பக்கத்திலேயே திருக்கழிப்பாலையும், நெல்வாயிலும் (சிவபுரி) உள்ளன.

"அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணலார்

ஆரழல் அங்கை அமர்ந்திலங்க

மந்த முழவம் இயம்ப மலைமகள்

காண நின்றாடிச்

சந்தம் இலங்கு நகுதலை கங்கை

தண்மதியம் மயலே ததும்ப

வெந்த வெண்ணீறு மெய்பூசும்

வேட்கள நன்னக ராரே"

(சம்பந்தர்)

நன்று நாடொறு (ம்) நம்வினை போயறும்

என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்

சென்றுநீர் திருவேட்களத்து உள்ளுறை

துன்று பொற்சடையானைத் தொழுமினே.

(அப்பர்)

"-மாயமிகும்

வாட்களமுற்றாங்குவிழி மாதர்மய லற்றவர்சூழ்

வேட்களமுற்றோங்கும் விழுப்பொருளே."

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. பாசுபதேஸ்வரர் திருக்கோயில்

திருவேட்களம்

அண்ணாமலைநகர் அஞ்சல் - சிதம்பரம்

சிதம்பரம் வட்டம் கடலூர் மாவட்டம் - 608 002
 
 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is சிதம்பரம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருநெல்வாயில் (சிவபுரி)
Next