திருப்பாதிரிப்புலியூர் (திருப்பாப்புலியூர் - கடலூர்)

திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்

திருப்பாதிரிப்புலியூர் ( திருப்பாப்புலியூர் - கடலூர் )

கடலூரின் ஒரு பகுதி - கடலூர் புது நகர் (கடலூர் N.T.) . கடலூர் பேருந்து நிலையத்திற்கு அண்மையில் திருப்பாதிரிப்புலியூர் புகை வண்டி நிலையம் உள்ளது. கடலூர் மாவட்டத் தலைநகர். சென்னை, விழுப்புரம், பாண்டிச்சேரி, திண்டிவனம், வேலூர் விருத்தாசலம், திருச்சி, தஞ்சை, திருவண்ணாமலை, திருக்கோயிலூர், சிதம்பரம் முதலிய பலவிடங்களிலிருந்தும் இத் தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன. பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில்வே லைனைக் கடந்து சென்றால் மிக அருகாமையில் உள்ள கோயிலை அடையலாம்.

இறைவன் - பாடலேஸ்வரர், தோன்றாத்துணைநாதர், கன்னிவன நாதர், சிவக்கொழுந்தீசர், உத்தாரநாதர், கரையேற்றும்பிரான்.

இறைவி - பிருஹ்ந்நாயகி, பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவநாயகி.

தலமரம் - பாடலம் (பாதிரி) .

தீர்த்தம் - பிரம தீர்த்தம். (கடல்) .

சிவகரதீர்த்தம் (கோயிலுக்கு வெளியில் உள்ளது) . கெடிலநதி. அகத்தியர் உபமன்யுமுனிவர் வியாக்ரபாதர், கங்கை, அக்கினி முதலியோர் வழிபட்டது. இவர்கள் வழிபட்ட சிவலிங்கங்கள் உள. இத்தலத்திற்கு, கடைஞாழல், கன்னிவனம், பாடலவுரம், ஆதிமாநகர், உத்தாரபுரம், பாதிரிப்பதி, புலிசை எனப்பல பெயர்களுண்டு. 'கடை ஞாழலூர்' என்பது மருவி 'கடலூர்' என்றாயிற்று என்பது இலக்கியவாணர் கூறும் செய்தியாகும்.

திருநாவுக்கரசரை - அப்பரை, கல்லிற்பூட்டிக் கடலில் இட்ட போது, "சொற்றுனை வேதியன்" பதிகம் பாடி - 'நமசிவாய - நற்றுணையாக', கல்லே தெப்பமாக, வருணன் தன் கைகளால் தாங்கித் திருப்பாதிரிப்புலியூரின் பக்கத்தே அவரைக் கொண்டுவந்து கரை சேர்த்தான். அவ்விடம் தற்போது 'கரையேவிட்ட குப்பம்' - வண்டிப் பாளையம், என்று வழங்குகிறது (கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து வண்டிப்பாளையத்திற்கு நகரப் பேருந்து செல்கிறது) .

வண்டிப்பாளையத்தில் 'அப்பர்சாமி குளம்' என்று கேட்டால் சொல்வார்கள். அவ்விடத்தில் ஒரு குளமும், கரையில் ஒரு சிறிய நான்குகால் மண்டபமும் சாலையோரத்தில் உள்ளன. (குளத்திற்குப் பக்கத்திலுள்ள ஓடைதான் முன்பு கெடிலத்தின் தொடர்ச்சியாக இருந்திருக்கின்றது) .

கரையேறிய அப்பர் 'ஈன்றாளுமாய் எனத் தொடங்கும் பதிகம் பாடி திரப்பாதிரிப்புலியூர் அரணைப் பணிந்தார். அப் பதிகத்தில் 'அதான்றாத்துணையார் இருந்தனன் தன் அடியோங்களுக்கே', என்று குறிப்பிடுவதால் இப்பெருமான் 'தோன்றாத்துணை நாதர்' என்னும் பெயரும் பெற்றார். சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதரின் திருப்புகழ் உள்ளது. திருக்கோயில் உள்ள iF - பாடலேஸ்வரர் சந்நிதி iF என்றழைக்கப்படுகிறது.

கிழக்கு நோக்கிய கோயில். முன் மண்டபமுள்ளது. பக்கத்தில் உள்ள சிவகரதீர்த்தம் - நல்ல படித்துறைகளுடன் உள்ளது, ராஜ கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாயிலைக் கடந்து உட்சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக்கவசமிட்ட கொடிமரம். முன்னால் நந்தி முதலியவைகளைத் தரிசிக்கலாம். இடப்புறம் திரும்பின் திருக்கோயில் அலுவலகம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை - இரண்டு பாதிரிமரங்கள் - தலமரங்கள் உள்ளன. மரத்தடியில் விநாயகர், நாகப்பிரதிஷ்டை முதலியவை காணலாம். பாதிரி - பூக்கும், ஆனால் காய்க்காது. சித்திரை மாதம் முழுவதும் பாதிரிப்பூ பூத்திருக்குமாம். வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் தொழுது வாயிலைக்கடந்து இடப்புறமாகத் திரும்பினால் உள்சுற்றில் சந்திரனையடுத்து திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தமும் அடுத்து மூலமூர்த்தமும் தனித்தனி சந்நிதிகளாக உள்ளன. அமர்ந்த கோலத்துடன் அப்பர் கைகூப்பி உழவாரத்துடன் காட்சி தருகின்றார். பக்கத்தில் பள்ளியறை. (இக்கோயிலில் பள்ளியறை, சுவாமி கோயிலில் உள்ளது. நாடொறும் அம்பிகையே பள்ளியறைக்கு எழுந்தருளுவது இங்கு நடைபெறும் தனிச்சிறப்பாகும்) .

அறுபத்துமூவர் மூலமூர்த்தங்களும் கடந்த பின்னர் தல விநாயகராகிய 'சொன்னவாறறி விநாயகரை'த் தரிசிக்கலாம் - வலம்புரிமூர்த்தி. இவருக்குக் கன்னி விநாயகர் என்று பெயர். அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவிசெய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார்.

உற்சவத் திருமேனிகளின் சந்நிதி - வியாக்ரபாதர், அகத்தியர், முதலியோர் பூசித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேசர், வள்ளி தெய்வ யானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் - எதிரில் வலப்பால் தலமரமான ஆதிபாதிரிமரம் கவசமிட்டுக் காக்கப்பட்டு வருகின்றது. கஜலட்சுமி சந்நிதியை அடுத்து, துர்க்கை கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம் - அருந்தவநாயகி சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது. உருவமில்லை - பீடம் மட்டுமே காணப்படுகிறது. நடராசசபை - நவக்கிரக சந்நிதி - பைரவர் - சூரியன். உள்வலமுடித்துப் படிகளேறி மூலவர் சந்நிதியை அடையலாம். முன் மண்டபத்தில் சுதைசிற்பங்கள் உள்ளன. துவாரபாலகரைத் தொழுது உட்சென்றால் பாடலேஸ்வரரைத் தரிசிக்கலாம். கவசமணிந்து கண்ணுக்கு ரம்யமாகக் காட்சி தருகின்றார்.

அம்பாள் கோயில் பக்கத்தில் தனியே உள்ளது. கிழக்கு நோக்கியது. முன் மண்டபத்தில் ரிஷபாரூடர், காளிங்கநர்த்தனம், மோகினிநடனம், காமதேனு வழிபாடு, வீணாவாணி, அவிர்சடைப் பெருமான் ,ஆஞ்சநேயர் முதலிய உருவங்கள் கற்றூணில் செதுக்கப்பட்டுள்ளன.

உள்சுற்றில் விநாயகர், ஆறுமுகர் உற்சவ அம்பாள் சந்நிதிகள் உள. அம்பாள் நின்ற திருக்கோலம் - நல்ல அழகு. அம்பாள் சந்நிதியையட்டியே எதிரில் வீதியோரமாகப் பிற்காலப் பிரதிஷ்டையாகிய பிடாரி கோயில் உள்ளது. கோயிலில் எல்லா மாதாந்திர விழாக்களும், நவராத்திரி, சஷ்டி கார்த்திகை சோமவாரங்கள், மாசிமகக் கடலாட்டு முதலிய அமைனத்தும் நடைபெறுகின்றன. வெள்ளித் தேர் உள்ளது. வைகாசியில் பெருவிழாவும், சித்திரையில் வசந்தோற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன. வைகாசியில் பிடாரி உற்சவமும் ஒருவாரகாலம் நடைபெறுகிறது.

அப்பர் சதயவிழா சித்திரை சதயத்தில் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. வெள்ளிரிஷபத்தில் வீதியுலா, திருவையாறு கயிலைக் காட்சி, திருப்புகலூர் ஐக்கிய ஐதிகம் முதலியவை நடைபறுகின்றன. அ.மி. பாடலேஸ்வரர் ஒரு நாள் வண்டிப்பாளையத்திற்கும் (சித்திரை, அனுஷம்) எழுந்தருளுகிறார். அன்று அப்பர்சாமி குளத்தில் தெப்பவிழா நடைபெறுகிறது. வண்டிப்பாளையத்தில் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள ஊத்துகர்ட்டு அம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள தோப்பில் தான் திருக்கோயிலூராதீன சுவாமிகளின் அதிஷ்டானம் உள்ளது. இதை "சாமியார் தோட்டம்" என்று அழைக்கிறார்கள்.

திருவாடுதுறை ஆதீனம், இலக்கணம் சிதம்பர முனிவர் இத்தலத்திற்கு "ஸ்ரீ பாடலேஸ்வரர் தலபுராணம்" பாடியுள்ளார். கலம்பக நூலொன்றும் இத்தலத்திற்குள்ளது. அன்பர்கள் பலர் பாடியுள்ள பாடல்களின் தொகுப்பாக 'திருப்பாதிரிப்புலியூர்த் தோத்திரக்கொத்து' நூலும் அச்சிடப்பட்டுள்ளது. 8-2-1973ல் சந்நிதிவீதியில் ஸ்ரீமத் ஞானியார் சுவாமிகள் மடாலயம் உள்ளது.

A.H. 7 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகிய இக்கோயிலில் கிடைத்துள்ள கல்வெட்டுக்களிலிருந்து, பராந்தக சோழன், முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன் ஆகியோரும் அவர்களைத் தொடர்ந்து பல்லவர்களும் பாண்டியர்களும் திருப்பணிகள் செய்தும்நன்கொடைகள் தந்தும் இக் கோயிலைப் பராமரித்து வந்துள்ளனர் என்பது தெரிகிறது.

"போதினானும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம்

போதினாலே வழிபாடு செய்யப் புலியூர் தனுள்

ஆதிநாலும் அவலம் இல்லாத அடிகள் மறை

ஓதிநாளும் இடும் பிச்சை ஏற்றுண்டுணப் பாலதே".

(சம்பந்தர்)

"கருவாய்க் கிடந்து உன்கழலே நினையுங் கருத்துடையேன்

உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனதருளால்

திருவாய் பொலியச் சிவாய நம என்று நீறணிந்தேன்

தருவாய் சிவகதி c பாதிரிப் புலியூர் அரனே."

(அப்பர்)

"பூமேவு பாதிரி விண்படர்ந்தகன்ற மணிக்கோயில் பொலியமேவி

மாமேவு மால் அயனும் மூவிலை வேல் அம்மானும் வணங்கி ஏத்தத்

தாம்மேவு தொழில் ஐந்தும் பரைஇயற்ற அனைத்துயிரும் தழைப்பவைகும்

காமேவு புகழ்ப் புலிசைப் பாடலேச் சுரன் பதத்தைக் கருதி வாழ்வோம்".

(தலபுராணம்)

"உறையேறு சைவநெறி வளர்ந்தேறச் சமணர் எலாம் உட்கிமாழ்கிப்

புரையேறக் கண்டவர்கள் ஆனந்தக்களிப்பேறப் புகழ் நா வேந்தை

கரையேற விட்டபிரான் ஒருபாகம் வளர்கருணைப் பிராட்டியான

தரையேறு புகழ் புலிசைப் பெரிய நாயகி சரணம் தலைமேற் கொள்வோம்."

(தலபுராணம்)

-'மாணுற்ற

பூப்பாதிரிக் கொன்றை புன்னை முதற்சூழ்ந்திலங்கும்

ஏர்ப்பாதிரிப் புலியூர் ஏந்தலே.'

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. பாடலேஸ்வரர் திருக்கோயில்

திருப்பாதிரிப் புலியூர் - அஞ்சல்

கடலூர். 2. - 607 002.


 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருமாணிகுழி
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருமுண்டீச்சரம்
Next