திருத்துறையூர் (திருத்தளூர்)

திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்

திருத்துறையூர் ( திருத்தளூர்)

மக்கள் வழக்கில் திருத்தளூர் என வழங்குகிறது.

1. பண்ருட்டியிலிருந்து புறப்பட்டு ஷ சாலையில் துணை மின் நிலையம் உள்ள இடத்தில் வலப்பக்கமாகத் திரும்பிச் சென்று, தேர் முக்கு, உள்ள இடத்தில் இடப்பால் திரும்பி, (பண்ருட்டி - புதுப்பேட்டை வழியாக - அரசூர் செல்லும் சாலையில்) 10 A.e. சென்று மீண்டும் 'கரும்பூர்' சாலையில் திரும்பி 5 A.e. சென்று ஊரையடையலாம்.

2. பண்ருட்டியிலிருந்து பஸ் உள்ளது.

3. இத் தலம் விழுப்புரம் - கடலூர் புகைவண்டிப் பாதையில் உள்ள புகைவண்டி நிலையம்.

சுந்தரர் தவநெறி வேண்டிப்பெற்ற தலம். 'சிவஞானசித்தியார்' என்னும் சாத்திர நூலைப் பாடிய அருணந்தி சிவாசாரியார் (சகலாகம பண்டிதர்) அவதரித்து வாழ்ந்த தலம். இவருடைய சமாதிக்கோயில் உள்ளது. நாரதர், வசிட்டர், அகத்தியர், வீமன், சூரியன் முதலியோர் வழிபட்டபதி. இக் கோயில் பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதி. ஊர் சிறியது.

சுந்தரர் காலத்தில் ஊரில் தென்பால் ஓடிய பெண்ணையாறு, இன்று வடபால் ஓடுகிறது. பழைய பெண்ணையாறு, மலட்டாறு என்னும் பெயரில் தென்பால் உள்ளது.

இறைவன் - சிஷ்ட குருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர்.

இறைவி - சிவலோகநாயகி, பூங்கோதைநாயகி.

தலமரம் - கொன்றை.

தீர்த்தம் - சூரிய தீர்த்தம். கோயிலுக்கு எதிரில் உள்ளது.

சுந்தரர் பாடியது.

இத்தலத்திற்கு வந்த சுந்தரரை, இறைவன் கிழவடிவில் தோன்றி ஆட்கொண்ட இடம் துறையூருக்கு அண்மையில் உள்ள 'கிழப்பாக்கம்' என்பதாகும். அவ்விடத்தில் சிவலிங்கமும் கோயிலும் உள்ளன. இவ்வாறு ஆட்கொண்ட திருமேனியே பசுபதீஸ்வரர் - பூங்கோதை நாயகி எனப்படுகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழும், வண்ணச் சரபம் தண்டபாணிசுவாமிகள் பாடல்களும் இத்தலத்திற்கு உள்ளன.

இங்குள்ள அஷ்டபுஜ பத்திரகாளி சந்நிதி விசேஷமானது. இங்கு சுவாமி மேற்கு நோக்கியும் அம்பாள் வடக்கு நோக்கியும் இருப்பது நினைந்து தொழத்தக்கது. முகப்பு வாயிலைக் கடந்ததும் வலப்பால் அம்பாள் சந்நிதி. அம்பிகை நின்ற திருக்கோலம். எதிரில் கவசமிட்ட கொடிமரம். நந்தி, பலிபீடங்கள்.

ரிஷபாரூடர் தவநெறி தந்த காட்சியும், சுந்தரர் கைகூப்பி, வணங்கும் நிலையும் காணலாம். உள்வாயிலைத் தாண்டி, மண்டபத்தையடைந்தால் நேரே மூலவர் தரிசனம். கம்பீரமான இலிங்கத் திருமேனி. வெள்ளிக் கவசமணிவித்துத் தரிசிக்கும் அழகே அழகு.

உற்சவ திருமேனிகளுள் குதிரைச் சொக்கர், சாட்டை பிடித்த நிலையில் உள்ளது, அழகாகவுள்ளது. நடராசசபை உள்ளது. கருவறை முன் மண்டபத்தில் வலப்பால் நால்வர் சந்நிதி உள்ளது. இம்மண்டபத்தின் தூண் ஒன்றில் - இத்தலத்தற்குச் சுந்தரர் பெண்ணையாற்றை ஓடத்தில் கடந்து வந்ததாகச் சொல்லப்படும் ஐதிகம் சிற்பமாக உள்ளது. வெளிப் பிராகாரத்தில் நவக்கிரகம், பைரவர், சூரியன், இராமர், வீமன் ஆகியோர் வழிபட்ட சிவலிங்கங்கள் சூரியன் சந்நிதிகள் உள்ளன.

இங்குள்ள பெருமாள் சந்நிதி தரிசிக்கத்தக்கது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை சந்நிதிகள் உள்ளன. இதில் தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் உமா மகேஸ்வரர் சுந்தரருக்குத் தவநெறி தந்த காட்சி விநாயகருடன் கல்லில் சிற்பமாக உள்ளது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் தலமரம் உள்ளது. பக்கத்தில் உள்ளது அகத்தியர் வழிபட்ட இலிங்கம்.

நாடொறும் இருகால பூஜைகளே. வைகாசிப் பெருவிழா, மாசி மகம், பங்குனி உத்திரம், திருவாதிரை, நவராத்திரி, சிவராத்திரி கார்த்திகை தீபம் முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன. தேவகோட்டை மு.ராம.அரு.ந.அருணாசலம் செட்டியார், மாணிக்கம் செட்டியார் ஆகியோரின் உதவியால் 1966ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

கோயிலுக்கு வெளியில் உள்ள அஷ்டபுஜ பத்திரகாளி சந்நிதி மிகவும் விசேஷமான பிரார்த்தனை சந்நிதி. பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெறுகிறது.

தேரடி விநாயகர் மூன்றடி உயரமான மூர்த்தி - பெரிய விநாயகர், பூஜை நடைபெறுகிறது. கோயிலுக்கு நேர் எதிரில் அருணந்தி சிவாசாரியாரின் சமாதிக்கோயில் உள்ளது. இது திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தது. ஆண்டுதோறும் சிவாசாரியாரின் மரபினரே இக்கோயிலில் பூசை செய்யும் குருக்கள் ஆவார்.

சமாதிக்குப் பக்கத்தில் வெளியில் ஒரு சிவலிங்கம் உள்ளது. இவ்வூருக்கு அண்மையில் 'கிழப்பாக்கம்' என்றொரு ஊர் உள்ளது. அங்கும் ஒரு சிவலிங்கம் உள்ளது. சுந்தரரை, இறைவன் முதிய வேதியராகக் காட்ச தந்து அவ்விடத்திலிருந்து அழைத்து வந்தார் என்றும், இங்குச் சிவலிங்கம் உள்ள இடத்தில்தான் தன் காட்சியைத் தந்து அருள் புரிந்ததாகவும், இங்கிருந்து கோயிலைப் பார்த்துச் சுந்தரர் தரிசிக்க, அப்போது இறைவன் கோயில் விமானத்திலிருந்து ரிஷபாரூடராய்க் காட்சி தந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதற்கேற்ப இருந்த கோயில் அமைப்பு பிற்காலத்தில் திருப்பணி செய்தோரால் மாற்றப்பட்டு விட்டதாகவும் சொல்கின்றனர்.

இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள திருமுறைத் தலங்கள், திருநாவலூர் திருவதிகை, திருமாணிகுழி, திருவடுகூர், திருப்பாதிரிப் புலியூர் முதலியன. கல்வெட்டுக்களில் இவ்வூரின் பெயர் "ராஜராஜவளநாட்டுத் திருமுனைப் பாடித் திருத்துறையூர்" என்றும், இறைவன் பெயர் "தவநெறி ஆளுடையார்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"மலையார் அருவித்திரண் மாமணியுந்திக்

குலையாரக் கொணர்ந் தெற்றியர் பெண்ணை வடபால்

கலையாரல்குற்கன்னியராடுந் துறையூர்த்

தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே."

(சுந்தரர்)

"- மல்லார்ந்து

மாசுந்துறையூர் மகிபன் முதல் மூவருஞ்சீர்

பேசுந் துறையூர்ப் பிறை சூடீ."

(அருட்பா)

"கவை கொள்வான் காற்பன்றி மின்னோர்

கரிய வேடன் உருவமெய்தி

அவை புரிந்தாய் தமியனேனுக்கு

அருள்செயாமை அறமதாமோ

குவைய பொன்னும் நெல்லும் நல்கிக்

கோடிப் பாடல் கொண்ட நம்பா

இவையமர்ந்த பங்குளானே

திருத்துறையூர்ச் சிவபிரானே."

-வண்ணச் சரபம் தண்டபாணிசுவாமிகள்

அஞ்சல் முகவரி -

அ.மி. சிஷ்டகுருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர் திருக்கோயில்

திருத்துறையூர் - அஞ்சல் - 607 205

பண்ருட்டி வட்டம் - விழப்புரம் மாவட்டம்.

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவெண்ணெய் நல்லூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  வடுகூர் (திருவாண்டார் கோயில்)
Next