Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருவெண்ணெய் நல்லூர்

திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்

திருவெண்ணெய் நல்லூர்

1) விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் அரசூர் சென்று High way s Inspection Bungalow வை அடுத்து வலப்புறமாகச் செல்லும் திருக்கோயிலூர் பாதையில் சென்று திருவெண்ணெய் நல்லூர்ரோடு Rail way Station லெவல் கிராசிங்கைத் தாண்டிச் சென்றால் (5.A.e) ஊரையடையலாம். (ஊருள் இடப்புறமாகச் செல்லும் சாலையில் போய்க் கோயிலையடையலாம்.)

2) பண்ருட்டி - அரசூர் சாலையில் உள்ள தலம்.

3) திருக்கோயிலூரிலிருந்து சித்தலிங்க மடம் வழியாகவும்

4) மடப்பட்டிலிருந்து பெரிய செவலை வழியாகவும் திருவெண்ணெய் நல்லூருக்குப் பேருந்துகள் உள்ளன.

5) விழுப்புரம் - திருவெண்ணெய் நல்லூர் நகரப் பேருந்து உள்ளது.

6) (திருக்கோயிலூர்) கீழையூரிலிருந்து செல்வோர் மடப்பட்டு, கடலூர், பண்ருட்டி செல்லும் பாதையில் (Main Road) ல் சென்று, பண்ருட்டி சாலை வலப்புறமாகப் பிரிய, இடப்பக்கமாகப் பிரியும் உளுந்தூர்ப்பேட்டை சாலையியில் திரும்பி ஊரையடையலாம். கீழையூரிலிருந்து இத்தலம் 18 A.e. தொலைவு.

சுந்தரரின் அருள் வாழ்விற்கு இடமான தலம். வழக்கிட்டு, ஆரூரரை வலிய வந்து ஆட்கொண்ட தலம், நின் 'வருமுறைமனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக' என்ற கேட்டவர்க்கு 'என் இருப்பிடம் இதுவே' என்று இறைவன் காட்டிய திருக்கோயிலை உடைய பதி. 'அடையா நெடுங்கதவும் அஞ்சல் என்ற சொல்லும் உடையான் என்றும், 'தரும தேவதை' என்றும் புகழ்பெற்ற சடையப்ப வள்ளலின் பதி. சைவ சித்தாந்த சாத்திரங்களள் தலையானதாகத் திகழும் சிவஞானபோதம் நூலை அருளிச் செய்த மெய்கண்டார் (மெய்கண்ட தேவர்) வாழ்ந்து உபதேசம் பெற்ற சிறப்புத் தலமும் இதுவே. முதிய வேதியராய் வந்து இறைவன் சுந்தரரைத் தடுத்தாண்ட இடம் - தடுத்தாவூர் என்று வழங்குகிறது. இவ்விடம் திருநாவலூரிலிருந்து, திருவெண்ணெய் நல்லூருக்குப் போகும் வழியில் சிறிய கிராமமாகவுள்ளது.

ஊரின் பெயர் 'திருவெண்ணெய் நல்லூர்'. கோயிலின் பெயர் 'திருவருட்டுறை' என்பதாம். 'வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள் அத்தா' என்னும் சுந்தரர் வாக்கால் இதையறியலாம். சுந்தரரின் முதல் தேவாரம் பிறந்த தலமிஃது. கிராம மக்கள், இவ்வூரில் அம்பாள் வெண்ணெய்யால் கோட்டை கட்டி வீற்றிருப்பதாகக் கூறுகின்றனர்.

இறைவன் - கிருபாபுரீஸ்வரர், வேணுபுரீஸ்வரர், அருட்டுறைநாதர், தடுத்தாட்கொண்டநாதர்.

இறைவி - மங்களாம்பிகை, வேற்கண்ணியம்மை.

தலமரம் - மூங்கில் (இப்போது இல்லை.)

தீர்த்தம் - தண்டதீர்த்தம் (பக்கத்தில் உள்ள குளம்.)

தலவிநாயகர் - பொல்லாப் பிள்ளையார்.

சுந்தரர் பாடல் பெற்ற தலம்.

அருணகிரிநாதரின் திருப்புகழும் உள்ளது.

ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. கோபுரம் கடந்து உள்நுழைந்ததும் சுந்தரர் வழக்கு நடந்த, 'வழக்கு தீர்த்த மண்டபம்' வழக்கு வென்ற அம்பலம் உள்ளது. இம்மண்டபம் கிலமாகியுள்ளது. அடுத்து, செப்புக் கவசமிட்ட கொடிமரம், முன்னர் கொடிமர விநாயகர், பலிபீடம் உள்ளன. நேரே உயரத்தில், மேலே, சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் சந்நிதி உள்ளதையும் காணலாம். (இவ்வுருவத்தில் சுந்தரர் கையில் ஓலையுடன் காட்சியளிக்கிறார்.)

கல்மண்டபத்தில் அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் வரிசையாகவுள்ளன. நேரே சோமாஸ்கந்தர் சந்நிதி. பக்கவாயில் வழியாக உட்சென்றால் மூலவர் சந்நிதி. எதிரில் சாளரம் உள்ளது. மூலவர் அழகான சிவலிங்கத் திருமேனி.

வெளிச் சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்ட தேவர் திருமேனிகளும் உள்ளன.

விசாலமான உட்பரப்பு. விநாயகர். சுப்பிரமணியர் சந்நிதிகள், கஜலட்சுமி சந்நிதி, மறுகோடியில் நவக்கிரக சந்நிதியும், உள்ளன. நவக்கிரகங்கள் உரிய அமைப்பிலும் உரிய வாகனங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளன.

'பித்தா பிறை சூடீ' பதிகம் ஸ்ரீ காசி மடத்தின் திருப்பணியாகக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர், சண்டேசுவரர் சந்நிதி உள்ளது.

அம்பாள் கோயில் இடப்பால் உள்ளது. நின்ற திருக்கோலம். பள்ளியறை உள்ளது. உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. இத்தலத்திற்கு அண்மையில்தான் மணம் தவிர்ந்த புத்தூர் (மணம்தவிந்தபுத்தூர்) உள்ளது.

நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திருப்பணித் திட்டத்தின் மூலம் இக்கோயிலின் சுவாமி, அம்பாள் விமானங்களும், மக்களின் பேராதரவால் ஏனைய திருப்பணிகளும் செய்யப்பட்டுள்ளன.

அண்மையில் உள்ள தலங்கள் திருமுண்டீச்சுரமும், திருநாவலூரும் ஆகுமூ. பங்குனி உத்திரம், ஆடி சுவாதி முதலிய உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆடி சுவாதி உற்சவத்தில் திருமண உற்சவம், திருமணத்தைத் தடுத்தது, சுந்தரருக்குக் காட்சி கொடுத்தது. முதலிய ஐதிகங்கள் நடைபெறுகின்றன. சுந்தரர் உற்சவத் திருமேனி கண்டு தொழத் தக்கது.

மெய்க்கண்டாரின் சமாதி, வடக்கு வீதியின் கோடியில் உள்ளது. திருவாடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த இம்மடாலயத்தில் (மெய்க்கண்ட தேசிகர் மடத்தில்) ஷ ஆதீனத் தம்பிரான் சுவாமிகள் ஒருவர் இருக்கின்றார். இம்மடத்தின்மூலம் கோயிலில் நாடொறும் காலசந்திக் கட்டளை நடைபெறுகின்றது. கோயிற் பெருவிழாவில் எட்டாந் திருவிழாவன்று திருவாவடுதுறை ஆதீன மடத்தின்மூலம் மண்டகப்படி நடைபெறுகிறது. இதுதவிர ஐப்பசி சுவாதியில் மெய்கண்டார் குருபூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று நூற்றுக்கணக்கானோருக்கு ஆதீனத்தின் மூலம் அன்னதானம் செய்யப்படுகிறது.

சடையப்ப வள்ளலின் இல்லம் வடக்கு வீதியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கல்வெட்டில் இறைவன் பெயர் 'திருவாருட்டுறை ஆள்வார்', 'திருவெண்ணெய்நல்லூர் உடையார்', 'தடுத்தாட்கொண்ட தேவர்' என்றெல்லாம் குறிக்கப்பட்டுள்ளது.

"பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா

எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை

வைத்தாய் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்

அத்தா உனக்கு ஆளாய் இனிஅல்லேன் எனலாமே"

"காரூர் புனல் எய்திக்கரை கல்லித் திரைக்கையால்

பாரூர் புகழ் எய்தித் திகழ் பன்மாமணி யுந்திச்

சீருர் பெண்னைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்

ஆரூரன் எம் பெருமாற்காளல்லேன் எனலாமே".

(சுந்தரர்)

(இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் 'உனக்கு முன்பே ஆளாகிய யான் இப்போது அதனை இல்லையென்று கூறுதல் பொருந்துமோ' என்னும் பொருள்படுமாறு 'அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே' என்று பாடியுள்ளார்) .

மெய்கண்டதேவர் துதி

'பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன் ஞானம்

பரிந்தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக்

கண்ட இருதய கமல முகைகளெல்லாம்

கண் திறப்பக் காசினிமேல் வந்த அருட்கதிரோன்

விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவும்

மெய்கண்ட தேவன்மிகு வைசநாதன்

புண்டரிக மலர்தாழச் சிரத்தே வாழும்

பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம்."

(அருணந்தி சிவாசாரியார்)

பொய்கண் டகன்ற அம்மையப்பர்

புகழ்சேர் மைந்தன் தனைவேண்டிப்

புகலிக் குழந்தை திருமுறையிற்

போற்றிக் கயிறு தனைச் சாற்றிக்

கைகொண் டவர்கள் தொழுதேவெண்

காட்டின் திருப்பாட் டெடுத்துள்ளங்

களித்தே வந்து முக்குளநீர்

கண்டே படிந்தோர் பாலுதித்து

மைகொண் டிலங்கு மணிகண்டன்

வளருங் கயிலைத்திரு நந்தி

மறையா கமத்தைக் குழந்தையெனும்

வடிவாய்த் தமிழ்செய் சுவேதவன

மெய்கண் டவன்வாழ் வெண்ணெய்நல்லூர்

வேலா சிற்றில் சிதையேலே

விளையாட் டோரைந் துடையாய்நீ

விளங்குஞ் சிற்றில் சிதையேலே.

(க்ஷேத்திரக்கோவை பிள்ளைத்தமிழ்)

-"இடையாது

சொல் ஊரன் தன்னைத் தொழும்பு கொளுஞ் சீர்வெண்ª ண்

நல்லூர் அருட்டுறையின் நற்பயனே."

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. கிருபாபுரீஸ்வரர் தேவஸ்தானம்

திருவெண்ணெய்நல்லூர் - அஞ்சல்

திருக்கோயிலூர் வட்டம் - விழுப்புரம் மாவட்டம் - 607 203

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is இடையாறு (   T. எடையார்)
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருத்துறையூர் (திருத்தளூர்)
Next