திருநெல்வெண்ணெய் (நெய்வெணை)

திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்

திருநெல்வெண்ணெய் ( நெய்வெணை)

மக்கள் வழக்கில் 'நெய்வெணை' என்று வழங்குகிறது.

(1) தெ.ஆ.மாவட்டம், உளுந்தூர்ப்பேட்டை பேருந்து நிலையத்தின் பக்கத்தில் செல்லும் திருவெண்ணெய்நல்லூர் சாலையில் இக்கிராமம் உள்ளது. உளுந்தூர்ப்பேட்டை நகரப் பஞ்சாயத்து அலுவலகத்தின் முன்பிருந்து IQ பஸ் ஒன்று செல்லுகிறது. இப்பேருந்து சிறு சிறு கிராமங்கள் வழியாகச் சென்று நெய்வெணை வழியாகத் திருக்கோயிலூரை அடைகிறது. ஒற்றையடிப்பாதை - குறுகலும் வளைவும் கொண்டவை. ஒரே IQ பஸ் இவ்வழியாகச் செல்வதால் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது.

(2) அவர்கள் உளுந்தூர்ப்பேட்டை - திரக்கோயிலூர் (வழி) எலவானாசூர்கோட்டை நெடுஞ்சாலையில் வந்து "எறையூர்" அடைந்து அங்கிருந்து பிரியும் பாதையில் வந்து (வடகுரும்பூர் வழியாக) 4 A.e. தொலைவில் உள்ள நெய்வெணையை அடையலாம். இப்பாதை அகலமானது. பேருந்திற்கு ஏற்றது. இவ்வழியே சிறந்த வழி. இப்பாதை புதியதாகப் போடப்பட்டுள்ளது.

(3) எறையூர் - நெய்வெணை நகரப் பேருந்து (டவுன் பஸ்) செல்கின்றது.

(4) உளுந்தூர்ப் பேட்டையிலிருந்து நேரே சேலம் ரோடில் சென்று குமாரமங்கலம் தாண்டி, வலப்புறமாகப் பிரியும் அங்கனூர் நெய்வெணை சென்றால், நெய்வெணையை அடையலாம். (ஒத்தையடிப் பாதை) சிறிய கிராமம். கோயிலின் பக்கத்தில் குருக்கள் வீடு உள்ளது. ராஜகோபுரமில்லை - முகப்பு வாயில் மட்டுமே. சிறிய கோயில் கோயிலின் முன் நந்தி மட்டுமே உள்ளது. கொடிமரமில்லை. பக்கத்தில் உள்ள மண்டபம் கிலமாகியுள்ளது. சனகாதியோர் நால்வரும் வழிபட்ட தலம். வாயிலைக் கடந்து உட்புகுந்ததும் நேரே மூலவர் சந்நிதி.

இறைவன் - சொர்ணகடேஸ்வரர், வெண்ணெயப்பர், நெல்வெண்ணெய்நாதர்.

இறைவி - பிருஹந்நாயகி, நீலமலர்க்கண்ணி.

தலமரம் - புன்னை (தற்போதில்லை)

தீர்த்தம் - பெண்ணையாறு (கோயிலுக்குள் தீர்த்தக் கிணறு உள்ளது. நீர் நன்குள்ளது)

சம்பந்தர் பாடல் பெற்றது.

பழமையான கோயில். பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியுள்ளது. அடுத்துள்ள வள்ளி தெய்வயானை உடனாகிய ஆறுமுக சுவாமி மயில் வாகனராகக் காட்சி அழகுடையது. இச்சந்நிதி திருப்பணி செய்யப்பட்டுள்ளது. அம்பாள் சந்நிதி தனிக் கோயிலாகப் பக்கத்தில் உள்ளது நின்ற திருக்கோலம். சந்நிதிக்கு வெளியே நேர் எதிரில் மூவர் முதலிகள் - சுந்தரர் நடுவிலும் இருபுறங்களிலும் அப்பரும் ஞானசம்பந்தரும் உள்ளனர். ஞானசம்பந்தர் கையில் தாளமின்றி, கை கூப்பிய நிலையிலும், சுந்தரர், நடன சுந்தரராகவும் காட்சி தருகின்றனர்.

நடராச மண்டபம் பழுதடைந்துள்ளது. உள்ளே மூர்த்தமில்லை. பக்கத்தில் நவக்கிரக சந்நிதி, சூரியன் சந்திரன் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன.

மூலவரைத் தரிசிக்கச் செல்லும் வாயிலின் வெளியே திருமால் சங்குசக்ரதாரியாகத் திருமகளுடன் அழகாகக் காட்சி தருகிறார். துவாரபாலகர் தொழுது உள்வாயில் கடந்து மூலவரைத் தரிசிக்கலாம். வாயிலின் வெளியே சுவரில் தலப்பதிகம் கல்வெட்டிற் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி, சனிப்பெயர்ச்சி, முதலியவை விசேஷம். கார்த்திகை தீபம், மாசிமகம், மார்கழித் திருவாதிரை காலங்களில் சுவாமி புறப்பாடு நிகழ்கிறது. மாதாந்திரக் கட்டளைகள் நடைபெறுகின்றன. பெருவிழா இல்லை. நாடொறும் ஒரு வேளை பூஜை மட்டுமே. அரசின் GF உதவியால் ஓரளவு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. குருக்களின் பெருமுயற்சியால் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதற்குலோத்துங்கன், விக்கிரம சோழன், கோப்பெருஞ்சிங்கன் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் இறைவன் பெயர் "பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்" என்றும், இப்பதி "மிலாடு ஆகிய சனாதன வளநாட்டு குறுக்கை கூற்றத்துக்கு உட்பட்ட ஊர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்குலோத்துங்க சோழனின் 48-ஆவது ஆண்டுக் காலத்திலிருந்த கீழையூர் இராசேந்திர சோழ சேதிராயர் என்பவர் இக்கோயில் நடராசமூர்த்தியை பிரதிஷ்டை செய்தார் என்ற குறிப்பும் உள்ளது. (ஆனால் இன்று கோயிலில் நடராச மூர்த்தமேயில்லை) .

கல்வெட்டில் வரும் இறைவனின் பெயரும், வழக்கில் சம்ஸ்க்ருதத்தில் வழங்கும் பெயரும் ஒன்றாகவுள்ளன. ஆனால் பொற்குடம் கொடுத்த வரலாறு செவிவழிச் செய்தியாகவுங்கூட ஏதும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஊரிலுள்ள ஒரு முதியவர், இக்கோயில் கிணற்றிலிருந்து பொற்குடும் எடுத்ததாக, அவருடைய தாத்தா சொன்னதாக ஒரு செய்தியைச் சொன்னார். விவரம் தெரியவில்லை.

"நல்வெணெய் விழுது பெய்தாடுதிர் நாடொறும்

நெல்வெணெய் மேவியநீ ரே

நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறும்

சொல் வணமிடுவது சொல்லே."

(சம்பந்தர்)

-'அன்றகத்தின்

நல்வெண்ணெய் உண்டொளித்த நாரணன் வந்தேத்துகின்ற

நெல்வெண்ணெய் மேவுசிவ நிட்டையே."

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. சொர்ணகடேஸ்வரர் -

நெல்வெணெயப்பர் திருக்கோயில்

நெய்வெயைகிராமம் - கூவாடு அஞ்சல்

(வழி) எறையூர் - உளுந்தூர்ப்பேட்டை வட்டம்

விழுப்புரம் மாவட்டம் - 607 201

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருமுதுகுன்றம் - விருத்தாசலம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கோவலூர் (திருக்கோயிலூர்)
Next