Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருநாவலூர்

திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்

திருநாவலூர்

மக்கள் வழக்கில் மட்டும் கொச்சையாகத் 'திருநாமநால்லூர்' என்று வழங்குகின்றது. (அரசு பெயர்ப் பலகைகள் முதலியவையெல்லாம் திருநாவலூர் என்றே உள்ளன.)

1. சென்னை - திருச்சி டிரங்க் ரோடில் விழுப்புரம் தாண்டி உளுந்தூர்ப்பேட்டைக்கு முன்பாக, மடப்பட்டு தாண்டி, மெயின் ரோட்டில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரிந்து எதிரே இடப்பக்கமாகச் செல்லும் பண்ருட்டி சாலையில் 2 A.e. சென்றால் ஊரையடையலாம். சாலையோரத்தில் ஊரின் முதலிலேயே கோயில் உள்ளது.

2. பேருந்தில் செல்வோர் விழுப்புரத்திலிருந்து அரசூர், மடப்பட்டு வழியாக ஊளுந்தூர்ப்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறி கெடிலம் நிறுத்தம் என்று கேட்டு அங்கு இறங்கினால் கடலூர் - பண்ருட்டி செல்லும் பேருந்துகள் வரும். அவற்றில் ஏறி 2.A.e. சென்று ஊரையடைந்து மேற்சொல்லியவாறு கோயிலை அடையலாம். (திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ள இடமே 'கெடிலம் நிறுத்தம்' என்று சொல்லப்படுகிறது. கோயில் உள்ள இடத்தில் நிறுத்தம் உண்டு. பேருந்துகள் நிற்கும்.

சுந்தரர் அவதாரத்தலம். சுக்ரன் வழிபட்ட தலம்.

இறைவன் - பக்தஜனேஸ்வரர், திருநாவலேஸ்வரர்.

இறைவி - மனோன்மணி, சுந்தரநாயகி, சுந்தராம்பிகை

தலமரம் - நாவல்.

தீர்த்தம் - கோமுகி தீர்த்தம்.

சுந்தரர் பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதரின் திருப்புகழும் உள்ளது.

ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் புத்தம் புதிய பொலிவுடன் திகழ்கிறது. ( ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன் விழாத் திருப்பணி) .

கோபுரத்தையடுத்து இடப்பால் உள்ளே சுந்தரர் சந்நிதி உள்ளது. பரவை, சங்கிலியார் சூழ எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி காட்சி தருகிறார். உள் இடம் மிகவும் விசாலமாக உள்ளது. எதிரில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம் முதலியன உள்ளன. கொடிமர விநாயகர். சுந்தர விநாயகராகக் காட்சி தருகிறார். நந்தி சற்றுப் பெரியது. தலப்பதிகக் கல்வெட்டுள்ளது. அடுத்து வாகன மண்டபம் உள்ளது. உள்வாயிலைக் கடந்ததும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நால்வர், இரு மனைவியாருடன் சுந்தரர், நடராசர், சிவகாமி, முருகன், விநாயகர், வள்ளி, தெய்வயானை முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன. நேரே மூலவர் தரிசனம் கிழக்கு நோக்கிய சந்நிதி - சிறிய கருவறை. சிவலிங்கத்தின் பாணம் சற்று உயரமாகவுள்ளது. நடராச சபை உள்ளது. உள்பிராகாரத்தில் நரசிங்க முனையரையர் பூசித்த மிகப்பெரிய சிவலிங்க மூர்த்தம் உள்ளது.

பொல்லாப் பிள்ளையார், சேக்கிழார், நால்வர், அறுபத்துமூவர், வலம்புரிவிநாயகர், சோமாஸ்கந்தர், ஆறுமுகர் முதலிய சந்நிதிகளும், தொடர்ந்து யுகலிங்கங்களும், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. கருவறைச் சுவரில் சண்டேசுரர் வரலாறு சிற்பங்கள் வடிவில் - பால் கறப்பது, தந்தையார் மரத்தின் மீதேறிப் பார்ப்பது, திருமஞ்சனம் செய்வது - தந்தையின் கால்களைத் துணிப்பது - இறைவன் கருணை செய்வது - வடிக்கப்பட்டுள்ளது. நவக்கிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிராக அவன் வழிபட்ட சுக்கிரலிங்கம் உள்ளது. நவக்கிரகங்களில் நடுவில் உள்ள சூரியன் திசைமாறி மூலவரைப்பார்த்தவாறு உள்ளார். பக்கத்தில் பைரவர் திருமேனிகளும் சூரியனும் உள்ளனர்.

தலமரம் 'நாவல்'. வெளிப் பிராகாரத்தில் இரண்டு உள்ளன. அம்பாள் கோயில் தனியே உள்ளது. இதுவும் கிழக்கு நோக்கியது. அழகான முன் மண்டபம் உள்ளது. அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலம்.

கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி உருவம் - ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின்மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் அமைப்பு - கண்டு மகிழத் தக்கது. ஆலயத்துள் வரதராஜப் பெருமாள் சந்நிதி, ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தரும் கோலத்தில் உள்ளது. மூலவர் முன்பு உற்சவ மூர்த்தங்களாகப் பெருமாள், தாயார், இராமர், இலக்குவன் சீதை முதலியன வைக்கப்பட்டுள்ளன.

கோயிலுக்குப் பக்கத்தில் சுந்தரர் மடாலயம் உள்ளது. அழகான முன்மண்டபம். சுந்தரர் கையிற் செண்டுடன் அழகாகக் காட்சி தருகின்றார். இதற்கு எதிர் வீட்டில்தான் கோயில் குருக்கள் வசிக்கின்றார். இங்குள்ள உட்கோயில் தொண்டீச்சரம் எனப்படும். இது முதற்பராந்தகனின் முதல் மகன், இராசாதித்தனால் கட்டுவிக்கப் பெற்றது என்பது கல்வெட்டுச் செய்தி.

"கோவல னான்முகன் வானவர் கோனுங் குற்றவேல் செய்ய

மேவலர் முப்பரந்தீ யெழுவித்தவன்ஓர் அம்பினால்

ஏவலனார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை யாளுங் கொண்ட

நாவலனார்க்கு இடமாவது நந் திருநாவலூரே."

(சுந்தரர்)

-'பன்னரிதாம்

ஆவலூர் எங்களுடை யாரூர னாரூராம்

நாவலூர் ஞானியருண் ஞாபகமே.'

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. பக்தஜனேஸ்வரர் திருக்கோயில்

திருநாவலூர் - அஞ்சல் - 607 204

உளுந்தூர்ப்பேட்டை வட்டம் விழுப்புரம் மாவட்டம்.


 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருஅதிகை (திருவதிகை)
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருமுதுகுன்றம் - விருத்தாசலம்
Next