Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருக்கேதீச்சரம்

திருமுறைத்தலங்கள்

ஈழநாட்டுத்தலம்

திருக்கேதீச்சரம்

இலங்கை என்னும் ஈழநாட்டிலேயுள்ள இணை யில்லாத ஈஸ்வரங்களுள் திருக்கேதீஸ்வரமும் ஒன்று. முன்னோரு காலத்தில் கேது பூசித்தமையால் இது கேதீஸ்வரம் என்று பெயர் பெற்றது என்பர். "செய்ய கேது தலையற்ற அந்நாள் திருந்து பூசனை செய்து முடிப்போன்" என்பது பழம்பாடல். தொண்டர்கள் நாள்தோறும் துதிசெய அருள்செய் கேதீச்சரமதுதானே என்பது திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம்.

தமிழ்நாட்டார் இராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் வழி வந்து, தலைமன்னாரிலிருந்து இங்கே வரலாம். கொழும்பிலிருந்து மன்னார்வரை புகைவண்டியில் வருவதாயின் திருக்கேதீஸ்வர நிலையத்தில் இறங்கி வரலாம்.

இலங்கையில் வடபாகத்தில் மாந்தை என்னும் மாதோட்ட நகரிலே உள்ளது திருக்கேதீஸ்வரம். பாலாவிக் கரையில் கௌரியம்பாள் சமேதராய் எழுந்தருளியுள்ளார் திருக்கேதீஸ்வரர். தலவிருட்சம் - வன்னிமரம்.

இலங்கையில் வடபாகத்தில் மாந்தை என்னும் மாதோட்ட நகரிலே உள்ளது திருக்கேதீஸ்வரம். பாலாவிக் கரையில் கௌரியம்பாள் சமேதராய் எழுந்தருளியுள்ளார் திருக்கேதீஸ்வரர். தலவிருட்சம் - வன்னிமரம்.

சிதம்பரத்தைப்போல நாற்பது ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இத்தலம்.

மன்னாரையடுத்த மாதோட்டம் முனர்னளில் மிகப் பெரிய துறைமுக நகரமாய் நிலவியது. கிரேக்க, உரோமர், அரேபியர் முதலானோர் கடல்கடந்து வந்து இங்கே வர்த்தகம் செய்தனர். மாதோட்டத்தை மருவினாற்போல அமைந்த வங்காலை என்னும் இடம் வங்கங்கள் நிறைந்து விளங்கியது. "வங்கம்மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில், பங்கஞ்செய்த மடவாளடு பாலாவியின் கரைமேல், தெங்கம் பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே" என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளினார். இப்பதி ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்றது.

பழைய திருக்கேதீஸ்வரம் பொலிவு 16 ம் நூற்றாண்டில் முற்பகுதியிலேயே அக்காலத்து வீசிய புயற்காற்றில் மங்கிவிட்டது. திருக்கேதீஸ்வரத்தின் அழிபாடுகள் பரந்துபட்ட நிலப்பரப்பெங்கும் காணக்கூடியவனாகப் பழைய செங்கட்டிகள், ஓடுகள், அத்திவாரங்கள் எங்கும் கிடக்கின்றன. பாலாவி ஆறு பரந்து பாயும் நிலை தடுக்கப்பட்டுப் பெருங்குளமாகக் குறுகியுள்ளது. அதனையடுத்து பாப்பாமோட்டை, மாளிகைத்திடல், வேட்டையாமுறிப்பு, கோயிற்குளம், பரந்துபட்ட நெல்வயல்கள், தென்னந்தோப்புகள் இன்றும் உள்ளன. அங்கே கிடைத்த மாந்தைக் கல்வெட்டுகள் சோழர் பணிகளைப் பற்றிக் கூறுகின்றன.

அக்காலத்தில் திருக்கேதீஸ்வரப் பகுதி கோயில் நகரம் என வழங்கியது. அதனை இராஜஇராஜசேகரன் மகன் இராஜேந்திரன் தன் தந்தை பெயரால் அருள்மொழித்தேவன் வளநாடு என வழங்கினான். இன்று பாப்பாமோட்டை என வழங்குமிம் பிராமணர் குடியேறியிருந்த மேட்டு நிலமாகும். வேட்டையாமுறிப்பு என்பது அக்காலத்தில் கேதீஸ்வரநாதன் வேட்டைத் திருவிழாவுக்கு உலாப் போந்த பகுதியாகும்.

சோழர் காலத்தில் மாதோட்டத்து இராஜராஜபுரம் என வழங்கிய பகுதி. தமிழ்நாட்டுக் குலசேகரப்பட்டினம் போலப் பெருமைவாய்ந்ததாயிருந்தது. சோழரின் பின்வந்த பாண்டியர்களுள் சுந்தரபாண்டியன் இங்கே செய்த திருப்பணிகள் பற்றிய விவரம் சிதம்பரத்துக் கல்வெட்டுக்களில் உள்ளன.

திருக்கேதீஸ்வரத்தைப் பரிபாலித்த சிங்கையாரிய சக்கரவர்த்திகள் தமிழ்நாட்டில் இராமேசுவரத்தயும் பரிபாலித்து வந்தனர். அவர்களின் காசுகளில் சேது என்னும் பெயரும் இடபக்குறியும் இலச்சனையாயிருந்தது.

திருக்கேதீஸ்வரம் உருக்குலைந்தபோதிலும் சில திருவுருவங்கள் பூமிக்குள் புதைக்கப்பெற்றுப் பாதுகாக்கப் பெற்றன. மாதோட்டம் மண்ணோடு மண்ணாய் உருக்குலைந்து கிடந்தது. எங்கும் காடும் மணலும் மேடுகளும் மண்டிக் கிடநத்ன. இருநூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் 1872 ஆம் ஆண்டளவில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் சிந்தையில் அந்த இடைமருதின் ஆனந்தத்தேன் சொரியும் பொந்துபோல இந்த இலங்கையிலும் ஒரு தேன் பொந்து திருக்கேதீஸ்வரம் என்னும் எண்ணம் உதித்தது. அதனை அவர் இலங்கை வாழ் சைவமக்களுக்கு நினைவூட்டினார். தமது காலத்திலேயே திருக்கேதீஸ்வரத்திற்கு அதற்குரிய நாற்பது ஏக்கர் நிலத்திலேயே பழையபடி உருப்பெற்றுச் சாந்நித்தியம் பெறுவதற்கான முயற்சியைச் செய்தார்.

நாவலர் அவர்கள் நவின்றதைக் கேட்ட சைவ மக்கள் இருபது ஆண்டுகளாக முயற்சி செய்து 1893ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் திருக்கேதீஸ்வரத்தைச் சேர்ந்த நாற்பது ஏக்கர் நிலத்தைப் பகிரங்க ஏலத்தில் விலைக்குப் பெற்றுத் திருப்பணி வேலைகள் செய்யத் தொடங்கினார்கள்.

நிலத்தை வாங்குவதற்கு பொதுமக்கள் சார்பில் முன்னின்று பழநியப்ப செட்டியார் அவர்களும், திருப்பணி வேலைகளில் முன்னின்று உழைத்த பசுபதிச் செட்டியார், நீராடியவை. ஆறுமுகம், வைத்தியர் இராமுப்பிள்ளை, இராகவப்பிள்ளை முதலானோரும் குறிப்பிடத்தக்க சைவச் சான்றோர் ஆவர்.

திருப்பணி வேலைகள் தொடங்கிய நாள்களில் காடுவெட்டிப் பூமிதிருத்திய வேளையில் பழைய கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம் பலிபீடம், துவசத்தம்பம் முதலியன அமைந்த இடங்களைக் கண்டனர். தெய்வச் செயலாகத் தொடர்ந்து பழைய சிவலிங்கம், நந்தி, விநாயகர் முதலிய திருவுருவங்கள் கிடைத்தன. அங்கே கிடைத்த மிகப் பெரிய சிவலிங்கமே இன்றைய மகாலிங்கம், அவரை வெளியில் எடுத்தபோது ஒரு சிறு பழுது உண்டாகவே, அவரை வெளியில் பிராகாரத்தில் ஒதுக்கமான இடத்தில் எழுந்தருளச் செய்தனர்.

இவ்வாறாக ஆலயத்துக்கு வேண்டிய அத்தியாவசிய அமைப்புகளைக் கட்டியெழுப்யிதம், சோபகிருது வருடம் ஆனித்திங்கள் வளர்பிறை சதுர்த்தசி 28-6-1903 ஆம் நாளில் மகா கும்பாபிடேகத்ததை ஆகமவிதிப்பிராகாரம் செய்தார்கள். மேலும் தொடர்ந்து திருப்பணி வேலைகளைச் செய்த பின்னர், 1910 ஆம் ஆண்டிலும் ஒரு கும்பாபிடேகம் செய்தார்கள்.

பின்னர் ஆர்வமிக்க கொழும்புவாசிகள் 19 - 10 - 1948 ஆம் நாளில் ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம் ஒன்றைக் கூட்டி முந்திய பழைய அடியார்களோடு சேர்ந்து திருப்பணி வேலைகளில் ஈடுபட்டபோது, குலசேகர பட்டினத்தைச் சேர்ந்த சோமசுந்தரச் செட்டியார் என்னும் வணிகர் தமது சொந்தப் பொறுப்பில் 1952ஆம் ஆண்டில் ஒரு கும்பாபிடேகத்தைச் செய்து நிறைவேற்றினார்கள். அப்பெரிய வணிகனாரே பின்னர்த் துறவு பூண்டு மதுரை திருஞானசம்பந்தர் திருமடத்துக் குருமகா சந்நிதானமாக எழுந்தருளியிருந்தார்.

பின்னர் காடடர்ந்து மிருகங்களின் உறைவிடமாய்ப் போக்குவரத்துப் பாதைகள் வசதிகளற்றுக் கிடந்த இடத்தில் 1903 ஆம் ஆண்டின் பின் ஒரளவுக்கு ஒளிவீசிய வழியில் 1910 ஆம் ஆண்டு கும்பாபிடேகம். பின்னர் 1952 ஆம் ஆண்டில் அருமையாக நடை பெற்ற கும்பபாபிடேகத்தைச் சைவப்பெரியார் புலோலி சிவபாதசுந்தரம் முதலானோர் முன்னின்று செய்தனர். அதுமுதல் ஆலய பரிபாலனம் நாட்டுக்கோட்டைச் செட்டிமாரிடமிருந்து ஈழத்துச் சிவனடியார்களிடம் சேர்ந்தது.

சிவபாதசுந்தரனார் தமது பொறுப்பில் ஆடவல்லானின் அற்புதத் திருவுருவத்தை வார்த்துக் கொடுத்தார். இன்று புதியவர் புதுப்பொலிவுடன்

வந்திருந்தும் பழையவர் அங்கே ஆடிக்கொண்டே இருக்கிறார்.

ஆலய பரிபாலன சபையர் மேலும் புரனமைப்பு செய்வதற்கு ஸ்ரீலஸ்ரீ ஈசான சிவாசாரியார் அவர்களை வரவேற்றனர். இவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் மாணாக்கர். காசிவாசி செந்தில்நாதஐயர் அவர்களின் மாணாக்கர் எழுவருள் ஒருவராவர். இவருடைய மேற்பார்வையில் தமிழ்நாட்டுக் கைத்திற்ன வாய்ந்த ஸ்தபதியர்கள் பணிசெய்து 31-10-60ஆம் நாளிலும், பின்னர் 6-6-71 ஆம் நாளிலும் கும்பாபிடேகங்கள் நடைபெற்றன. அண்மையில் 4-7-76 ஆம் நாள் மிகப்பெரிய கும்பாபிடேகம் நடைபெற்றது.

இன்றைய திருக்கேதீச்சரம் கிழக்கு நோக்கிய எழில்மிகு இராஜகோபுரத்தோடு ஒளி வீசுகின்றது. கோபுரத்தோடு மருவினாற்போல பெரிய மணிமண்டபமும் ஒய்யாரமாயெழுந்து ஒலிபரப்புகிறது. வாசலில் பெரிய நந்தியெம் பெருமான் காவல் புரிகின்றார். அருகில் தெற்கு நோக்கியவாறு மிகப்பெரிய அளவில் சிவசிவ மண்டபம் அமைந்துள்ளது. மண்டபத்தில் முகப்பில் காரியாலயம், நீர்த்தொட்டி முதலியன அமைந்துள்ளன. அங்கே அர்ச்சனைப் பொருள்கள், தேவஸ்தான வெளியீடுகள் பெறுவதற்கான வசதியும் உள்ளன. இன்றைய வெளிப்பிராகாரம் பொன்னாச்சி மரங்களாலும் வேப்ப மரங்களாலும் பொலிவு பெறுகிறது.

கிழக்கு வீதியில் திருஞானசம்பந்தர் மடம், சுந்தரர் மடம், நாட்டுக்கோட்டைச் செட்டிமார் மடம், அம்மா மடம், பசுமடம், பூநகரியார் மடம் முதலியன உள்ளன. தெற்கு வீதியில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பாலாவிப் பெருங்குளம் பரவியுள்ளது. அதற்கு இப்பால் வேப்பஞ்சோலைச் சூழலில் பாண்டியன் தாழ்வுச் சபாரத்தினசுவாமி மடம், சிவராத்திரி மடம், நெசவு மடம், சிற்பிகள் தங்கும் மடம் முதலியன உள்ளன. மேற்குவீதியை அலங்கரிக்கும் மடங்களள் மடாலயத்தோடும், அன்னதான மண்டபத்தோடும் கூடிய குருகுல மடம் முதலியன உள்ளன. வடக்கு வீதியில் நாவர் மடம், விசுவகன்மா மடம், திருக்குறிப்புத் தொண்டர் மடம் முதலியவற்றோடு, சிவமணி எனப்புகழ் பெற்ற தொண்டர் சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களின் குடில், திருக்கேதீஸ்வரப் பெருமானிடம் தம்மை ஒப்படைத்துத் தினமும் திருத்தொண்டு செய்து வருகின்ற செல்வர் முன்னால் பொன்னாவெளி உடையார் ¢ அருளம்பலம் அவர்களின் சிற்றில் முதயிலனவும் உள்ளன. மடங்களை எல்லாம் சுற்றியவாறு உலாவருவதற்கான தேரோடும் பெரும்பிராகாரம் அமையவிருக்கிறது. இன்று அங்கே ஐந்து பெரிய தேர்கள் உருவாகியுள்ளன. இவற்றுள் சிவன் தேர் பெரியதாகும். சுவாமி கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கௌரியம்மன் தெற்கு நோக்கியுள்ளார். சுவாமி வாசலில் இராஜகோபுரத்தின் இருமருங்கிலும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளியில் காவல் காத்தவாறு சிவனை நோக்கியிருப்பவர் பழைய நந்தியெம்பெருமானாவர்.

உத்தரவு பெற்று உள்ளே சென்று உட்பிராகாரத்தை வலஞ்செய்யும்போது, இறைவனை நோக்கியவாறு எழுந்தருளியுள்ள சூரியன் கோயில், களஞ்சிய அறை யாகசாலை உள்ளன. அடுத்து திருஞானசம்பந்தமூர்த்தி, கேது, சந்தானாசாரியர்கள், திருமறைகள், சதுர்வேதங்கள், உற்சவமூர்த்திகளாய நால்வர், சேக்கிழார் சுவாமிகள், அறுபத்துமூவர், சுந்தரர் எழுந்துள்ள கோயில்களைக் கும்பிடலாம். அடுத்து விநாயகப்பெருமான், சோமாஸ்கந்தர், விஷ்ணு, மகாலிங்கம், பஞ்சலிங்கங்கள் ,லட்சுமி முருகன் கோயில்கள் உள்ளன. இந்த வரிசையில் நடுநாயகமாக மிகப் பெரியவராக எழுந்தருளியுள்ள மகாலிங்கப் பெருமானே பழைய திருக்கேதீஸ்வரப் பெருமான். அவரை நிலத்திலிருந்து எடுத்தபோது தற்செயலாக உண்டான ஒரு சிறுபழுது அவரைக் கர்ப்பகிருகத்தில் எழுந்தருளச் செய்வதற்கு தடையாகிவிடவே, பக்தர்கள் அவரை மேற்குப் பிராகாரத்தில் எழுந்தருளச் செய்தனர். இன்றும் சிவராத்திரி வேளையில் பல்லாயிரவர் ஆடிப்பாடிப் பாலாவியில் நீர்முகந்து வந்து தம் கையாலேயே சாமந்தொறும் அபிஷேகம் செய்யும்போது வாயரினல் "சிவாய நம ஓம், சிவாய நம ஓம்" என ஒரே குரலில் உச்சாடனம் செய்தல் உணர்ச்சி மயமானதாகும்.

இனி உட்பிராகாரத்தில் வடபாலமைந்த கோயில்களில் சுப்பிரமணியர், தேவசபை, சரபமூர்த்தி, நடராஜப் பெருமான் எழுந்தள்ளார்கள். அடுத்து மேற்கு நோக்கியவாறு யாகசாலை, காலபைரவர் கோயில், சனீஸ்வரன், சந்திரன் ஆகியோர் கோயில்கள் உள்ளன. கோபுரததின் கீழ் இருபாலும் அதிகார நந்திகள் எழுந்தருளியுள்ளார்கள். கொடிமரம் கம்பீரமானது நிருத்தமண்டபம் என அமைந்த இடத்தில் நவக்கிரகங்கள் உள்ளன.

கௌரியம்பாள் தெற்கு நோக்கி அழகாக எழுந்தருளியுள்ளார். கௌரியம்பாளின் திருப்பணி வேலைகளைச் செய்வதற்கு மலேசியவாசிகளான சைவத்தமிழபிமானிகள் துணிந்துள்ளார்கள். இன்றை திருக்கேதீஸ்வரப் பொலிவுக்குத் தமிழ்நாட்டு ஆலயங்கள், ஆதீனங்கள், உபசரிப்பு வரப்பிரசாதமாய் வந்து வாய்த்தவையாகும். இன்னும் யாழ்ப்பாணத்துப் பெரியவரான விசுவப்பா அவர்கள் வேண்டியபோதெல்லாம் இலட்சக்கணக்காக அள்ளிக் கொடுத்தள்ளார். திருக்கோயிலில் சரியைத் தொண்டு செய்பவர்களுள் பொண்ணாவெளி உடையார் அருளம்பலம். மன்னார் உதவி அரசாங்க அதிபர் ஆறுமுகம், ஆசிரியர் பண்டிதர் கனகசபை முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். திருக்கேதீஸ்வரநாதன் மீதும் பக்தர்கள் பல பிரபந்தங்கள் பாடியுள்ளார்கள். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் மருகர் வித்துவ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளை திருக்கேதீஸ்வரத் தேவாரத் திருப்பதிகங்களுக்கு உரை எழுதியுள்ளார்.


பண்டு நால்வருக்கு அறம் உரைத்தருளிப் பல்லுல கினில் உயிர் வாழ்க்கை

கண்ட நாதனார் கடலிங்கை தொழக்காதலித் துறை கோயில்

வண்டு பண்செயுமாமலர்ப் பொழின் மஞ்சை நடமிடு மாதோட்டம்

தொண்டர் நாடொறும் துதிசெய அருள் செய் கேதீச் சரமதுதானே

(சம்பந்தர்)


அங்கத்துறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி

வங்கம் மலிகின்ற கடன் மாதோட்ட நன்னகரில்

பங்கஞ்செய்த மடவாளடு பாலாவியின் கரைமேல்

தெங்கம் பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே" (சுந்தரர்)


"-வேட்டுலகின்

மூதிச் சரமென்று முன்னோர் வணங்கு திருக்

கேதீச் சரத்திற் கிளர்கின்றோய்". (அருட்பா)Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்கோணமலை
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருஇடைவாய்
Next