Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருக்கோணமலை

திருமுறைத்தலங்கள்

ஈழநாட்டுத்தலம்

திருக்கோணமலை

திருக்கோணேஸ்வரம் கிழக்கு மாநிலத்தில் உள்ளது. திருக்கோணமலை என்னும் பெயரால் பழைய மாவட்டம் நிலவுகிறது. திருக்கோணேஸ்வரத்துக்கு இரயில் மூலம் கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் போகலாம். பேருந்து மூலவமும் போவதற்கு வசதியுண்டு. திருக்கோணமலை இரயில் நிலையத்திலிருந்து திருக்கோயிலுக்கு நடந்து போகலாம். திருக்கோணமலையன்பர்கள் உள்ளன்போது விருந்து கொடுப்பார்கள். பிரதான வீதியில் சிவயோக சமாஜம், இந்து இளைஞர் பேரவை, அப்பால் தொண்டர் சண்முகராசா அவர்களின் திருநெறிக்கழகம் விருந்தினரை விரைந்தேற்கும்.

உலகப்புகழ் பெற்ற திருக்கோணமலை மாவட்டத்தில் அறுபதக்கும் அதிகமான சைவக்கோயில்கள் உள்ளன. இயற்கையாய் அமைந்த பாதுகாப்பான பெரிய துறைமுகம் இங்கே உண்டு. சைவம் கமழும் தமிழ்த் திருநாமங்கள் தாங்கிய பழைய ஊர்களில் இங்கே செந்நெல்லும் கரும்பும் தென்னையும் செழித்து வளருகின்றன. மிகப்பழைய காலத்து, இதிகாச நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றன என்பதற்கு நிரம்பிய ஆதாரங்களோ நிறைய உண்டு. குளக்கோட்டு மன்னன் செய்த தொண்டுகள் பலவற்றின் சுவடுகள் இன்றும் அறியக்கூடியனாவயுள்ளன. கோயில்களை மையமாகக் கொண்டெழுந்த குடியேற்றங்கள் இங்கே உள்ளன. கோவிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோண மாமலை அமர்ந்தோரே எனத் திருஞானசம்பந்த முர்த்தி நாயனார் அற்புதமாகத் திருப்பதிகம் பாடியருளித் தோத்திரஞ் செய்துள்ளார். திருக்கோணேஸ்வரப் பெருமானின் அருளாட்சி நடைபெறும் வகையில் மக்கள் வாழ்கின்றார்கள். எங்கு நோக்கினும் சைவத் தமிழ்ப் பெயர்களே இங்குக் கேட்கின்றன.

இன்றைக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே திருக்கோணேஸ்வரம் தேவாரம் பெற்ற திருத்தலமாக ஒளிவீசியது. சோழ மன்னர்களும் தங்கள் புகழ் நிலவுமாறு இத்திருக்கோயிலில் நற்பணி புரிந்துள்ளார்கள். பாண்டியன் திருக்கோண மலையில் இணைக்கயல் பொறித்துள்ளமை வரலாற்றுப் பெருமையாகும்.

திருக்கோணேஸ்வரம் இலங்கைக்குப் பெருமைதரும் பெற்றியைச் சேக்கிழார் சுவாமிகள் "ஆழிபுடைசூழ்ந்தொலிக்கும் ஈழந்தன்னில் மன்னு திருக்கோணமலை மகிழ்ந்த செங்கண் மழவிடையார்" என்று பாடியருளியுள்ளார்.

இக்கோவிலின் வரலாறு 3287 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகும். இதற்குத் திரிவடம் என்றும் பெயர் உண்டு. திருக்கோணேஸ்வரத் திருக்கோவில் பரிபாலனத்திற்குப் போதியளவு வருவாயுண்டு. இங்கே சுவாமிக்கு விள்க்கேற்றுவதற்குப் போதியளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு வழி வகுத்தவர்கள், தாமரைத்தண்டின் நூலெடுத்துத் திரிசெய்தார். அந்த ஊர் இன்றும் "திரிதாய்" என வழங்குகின்றது.

போர்த்துக்கேயர் 1624 ஆண்டில் இத்திருக்கோயிலை பாழ்செய்துள்ளனர். அன்று அருணகிரிநாதர் மனமுருகிக்கண்ட தலத்தாறு கோபுரத்தழகைப் பறங்கியர்களின் தளபதியும் பார்த்துருகியுள்ளான். அவன் தன் படையில் ஓவியம் வல்லானைக் கொண்டு அவற்றின் அழகை ஒரளவு வரைந்து எடுத்துக் கொண்ட பின்பே கோயிலைத் தரைமட்டமாக்க உத்திரவி பிறப்பித்தான். அந்தக் கோபுரத்தழகைக் காட்டும் சித்திரம் இன்றும் விஸ்பன் நகரில் உள்ளது என்பர். திருக்கோயிலிருந்த நிலத்தில் வழிபாடாற்றுவதற்கு ஏதாவது செய்யத் துணிந்தார்கள்.

சுதந்திரம் பெற்றபின் 1950 ஆம் ஆண்டில் ஒர் ஆலயம் அமைக்க முற்பட்டுக் காசியிலிருந்து சிவலிங்கப்பெருமானை எழுந்தருளச் செய்தார்கள்.

அக்காலத்தில் நகரசபையார் கிணறு தோண்ட முயன்றபோது மூன்றடி தோண்டிய வேளையில் அற்புதமோ சிவனருளோ யாதோ என்று கண்டவர்கள் அதிசயிக்கும் வண்ணம் மாதுமையாள் சமேத கோணேசுவரப் பெருமானோடு, சந்திரசேகரர், பார்வதியார், பிள்ளையார், அஸ்திரதேவர் முதலாய தெய்வத்திருவுருவங்கள் வெளிக்கிளம்பின. அவையாவும் அண்மைக் காலத்திலமைக்கப் பெற்ற திருக்கோயிலில் ஆங்காங்கே எழுந்தருளச் செய்யப்பெற்றுள்ளன. இவை யாவும் ஒரளவு நிறைவு பெறவே 1963ம் ஆண்டில் கும்பாபிடேகம் நடைபெற்றது. அன்றுதொட்டு மேலும் பல திருப்பணிகள் நிறைவேறியபின் 1981ம் ஆண்டில் இரண்டாம் கும்பாபிடேகம் நிறைவேரியது. இரண்டாம் கும்பாபிடேகத்தின் அனைவரையும் காந்தம்போல் இழுக்கின்றன. ஐம்பொன்னாலாய அழகு மிக்க மூர்த்தங்கள் இருக்கும் மண்டபம் - தேவ மண்டபம், கண்கொள்ளாக்காட்சி தருவதாகும்.

முன்னொரு காலத்திலேயே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருக்கோணமலையிலே உச்சியிலும் இடையிலும் அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்தன என்பர். இன்றைய ஆலயம் ஆகமவிதிகளுக்கமைய அமைந்துள்ளது. அர்த்தமண்டபம், ஸ்நபன மண்டபம், வசந்தமண்டபம், யாகசாலை, பாகசாலையாகவும் உள்ளது. இராஜகோபுரம் அழகாகவுள்ளது. ஸ்நபனமண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமாள் ஆடல் புரிந்தவண்ணம் எழுந்தருளியுள்ளார். தேவசபை என்னும் அமைவில் வள்ளி தெய்வயானை சமே« சுப்பிரமணியப் பெருமானும், சோமாஸ்கந்த மூர்த்தமும் சந்திரசேகர மூர்த்தமும் உள்ளனர். இவர்கள் எழுந்தருளிகளாக இருக்கிறார்கள். அப்பால் சுற்றுப்பிராகாரங்கள், சூரியன், சந்திரன், நாகதம்பிரான், பைரவர், சண்டேசுவரர் ஆங்காங்கே அமர்ந்திருக்கிறார்கள். கல்லால மரம் தலவிருச்டமாயுள்ளது. பறங்கியர் கெடுபிடியின் பின் ஆங்கிலேயர் காலத்தில் கிடைத்த வழிபாட்டு அனுமதியின்போது நடைபெற்ற மலைபூஜை ஆகாச வெளியில் இன்றும் நடைபெற்று வருகிறது. ஆலயப் பூஜைகளுக்கு முன் ஆகாசப்பூஜை வெளியிடையன்றாய் விளங்குபவர்க்கு அக்ரபூசையாய் நடைபெறுகிறது. நாள்தோறும் ஆறுகாலபூஜை ஆகம விதிகள் தவறாமல் நடைபெறுகின்றன.

ஆண்டுதோறும் பங்குனி உத்திரநாளில் கொடியேறிப் பதினெட்டு நாள் திருவிழா நடைபெறுகிறது. இங்கே நடைபெறும் சிவராத்திரி விழா அருமையானது. சிவராத்திரிக்கு அடுத்த நாள் பெருமாட்டி சமேதராய் நடைபெறும். நகர்வலம் வருகிறார். அயலில் உள்ள ஆலயங்களில் வரவேற்புப்பூஜையும் விழாவில் நடைபெற்ற பின் மூன்றாம் நாள் திருக்கோயிலுக்கு மீளும் விழா நடைபெறுகிறது. மூன்று நாளும் திருக்கோணமலை நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். வீதிகள் தோறும் மக்கள் மனைகள் தோறும் மங்கல விளக்கேற்றி மண்டகப்படி வைத்து மகிழும் காட்சி ப்ணைடய இந்திர விழாவை நினைவுபடுத்தும்.

திருக்கோணேசப் பெருமானின் விழாக்களில் வெளிவாரியாக நடைபெறுவது ஆடி அமாவாசை விழாவாகும். கடலில் தீர்த்தமாடுவதற்குப் பெருமான் எழுந்தருளும்போது நகரிலுள்ள ஆலயங்களின் மூர்த்திகளும் தீர்த்தமாட அங்கே எழுந்தருளுவார்கள். இதுபோலவே 'மகாமகத் தீர்த்த விழாவும் நடைபெறுகிறது. பங்குனி மாத மகோற்சவத்தை அடுத்துவரும் பூங்காவனத் திருவிழாவும் தெப்பத் திருவிழாவும் அலங்காமானவை. தெப்பத்திருவிழாவில் சுவாமி தெப்பமேறிக் கடற்கரையில் காட்சி கொடுத்தல் நகரத்தையே ஒளியூட்டுவதாய் அமைகிறது. அவ்வேளை நகரத்துக்குப் பெருவிருந்தாகக் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மார்கிழ மாதத்துத் திருவெம்பாவை சிறப்பாக நடைபெறுகிறது. அம்பிகை யுற்சவம் ஆடிப்பூர நாளைத் தீர்த்தமாகக் கொண்டு முன் பத்துநாள் உற்சவம் நடைபெறுகிறது. அம்பிகைக்குரிய நவராத்திரி நாட்களில் ஸ்ரீ சக்ரபூஜை வெகுசிறப்பாக நடைபெறுகிறது. இங்ஙனமெல்லாம் நடைபெறும் போது நிரைநிரையாக அடியார்கள் சாதிமதபேதமின்ற வந்து வழிபட, "நினைத்த காரியம் அனுகூலமே தரும்" பெருமானாக அவர் பெருமாட்டியாருடன் இங்கே எழுந்தருளியுள்ளார். ஈழத்திருநாட்டின் பாடல் பெற்ற திருத்தலங்கள் இரண்டுள் இதுவொன்று, மற்றது திருக்கேதீச்சரம்.

திருக்கோணசுவரப் பெருமானின் திருக்கோயில் வரலாறு கூறும்போது, அயலிலமைந்த தம்பலகாமத்தைப் பற்றிக் கூறாவிட்டால் வரலாறு பூரணமாகாது. அன்று பரங்கியர் பாழ்படுத்திய பதைத்துரகித் திருக்கோயிலிருந்த திருவுருவங்களை எடுத்துச் சென்று அயலிலுள்ள கிணறுகளிலும் குளங்களிலும் பாதுகாப்புக்காக இட்டார்கள். அவர்கள் ஒரு திருவுருவத்தை அயலூராய தம்பலகாம்ம் என்னும் மருதவளம் நிறைந்த ஊரில் மறைந்து வைத்தார்கள். மிகவும் இரகசியமாக வழிபாடு செய்து வந்தவர்கள் அந்த இடத்தை ஆதிகோணநாயகர் கோயில் என வழங்கி வணங்கினார்கள். அது ஆதிகோணநாயகர் ஆலயமாகவே பழைய கோணேசுவரர் ஆலயத்துக்குச் சொந்தமான மானியங்களிற் பெரும்பகுதி தம்பலகாமத்திற்குச் சேர்ந்தன.

தம்பலகாமத்தருகே பாண்டயன் ஊற்று, திருநகர் முதலிய ஊர்கள் உள்ளன. முன்னர் முதற்பராந்தக சோழனுக்கு அஞ்சிய பாண்டியன் இலங்கையில் பாதுகாப்புக்காகப் புகுந்திருந்த காலத்தில் தம்பலகாமத்தில் திருப்பணிகள் செய்ததாக வரலாறு கூறுகிறது. முன்னர் குளக்கோட்டு மகாராசா குளங்கள் தொட்டு வளஞ்செய்த காலத்தில் கந்தளாய் முதலிய பெரிய குளங்களைக் கட்டி அவற்றின் கரைகளில் விநாயகர், வீரபத்திரர், ஐயனார், காளி, பைரவர், புலத்தியர் முதலாய திருவுருவங்களை அமைத்தார்.

தம்பலகாமத்து இராஜகோபுரம் அழகானது, அமைவானது. வயல்சூழ்ந்த தென்னஞ் சோலைகளுக்கு மேலாகத் திருக்கோபுரக் காட்சி கண்ணையும் கருத்தையும் வெகுவாகக் கவருகிறது. திருக்கோயில் கர்பப்க்கிருகம், அர்த்தமண்டபம், ஸ்நபனமண்டபம், ஸ்தம்பமண்டபம் என்பன யாவும் அமைவாகவுள்ளது. கற்கோயிலாய இதற்குச் சுற்று மதில் உட்பிராகாரத்தைக் காக்கிறது. இங்கே எழுந்தருளியுள்ள ஆதிகோணேசநாயகரோடு உடனுறையும் தேவியார்அம்சகமனாம்பிகை இருவருக்கும் தனியாக அழகிய இருப்பிடம் உண்டு. இன்னும் பரிவாரத் தெய்வங்களாக விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், நவக்கிரகங்கள் உள்ளார்கள். ஆனி உத்தரகாலங்களில் கொடியேறிப் பதினெட்டு நாள்கள் நடைபெறும் திருவிழாக்களின் பொலிவு பெரிது, ஆடிஅமாவாசை நாளில் பெருமான் மாவலிகங்கைப் படுக்கையில் தீர்த்தமாடுஞ் சிறப்பு கண்கொண்ணாக் காட்சியாகும். திருகோணேஸ்வரத்தின் தொல்புகழ் பாடும் தேவாரம், திருப்புகழ் தவிரப் பல புராணங்களும், பிரபந்தங்களும் உள்ள.ன கல்வெட்டுச் செய்திகளும் உண்டு.

சம்பந்தர் பாடல் பெற்றது.


"தாயினும் நல்ல தலைவர் என்றடியார்

தம்மடி போற்றிசைப்பார்கள்

வாயினு மனத்து மருவி நின்றகலா

மாண்பினர் காண் பலவேடர்

நோயிலும் பிணியுந் தொழிலர் பால் நீக்கி

நுழைதரு நூலினர் ஞாலம்

கோயிலுஞ் சுனைங் கடலுடன் சூழ்ந்த

கோணமாமலை யமர்ந்தாரே". (சம்பந்தர்)


"நாட்டும் புகழ் ஈழநாட்டில் பவ இருளை

வாட்டுந் திருக்கோண மாமலையாய்". (அருட்பா)

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is நொடித்தான்மலை
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கேதீச்சரம்
Next