Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

(திருப்புக்கொளியூர்) அவிநாசி

திருமுறைத்தலங்கள்

கொங்கு நாட்டுத் தலம்

(திருப்புக்கொளியூர்) அவிநாசி

மக்கள் வழக்கில் அவிநாசி என்று வழங்கப்படுகிறது. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் முதலிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம்.

கோவையிலிருந்து 40 A.e. திருப்பூரிலிருந்து 14 A.e. திருமுருகன்பூண்டியிலிருந்து 5 A.e. தொலைவில் கோவை - ஈரோடு நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது. பழையபதியாகிய புக்கொளியூர் நத்தம் தற்போது அழிந்து வெட்ட வெளியாகவுள்ளது. பிற்காலத்தில் தோன்றிய புதிய நகரமே, தற்போதுள்ள அவிநாசியாகும். அவிநாசி - விநாசம் இல்லாதது. ஊர்ப்பெயர் - புக்கொளியூர், இறைவன் - அவிநாசி. இறைவன் பெயரே இன்று ஊர்பபெயராயிற்று.


இறைவன் - அவிநாசி லிங்கேஸ்வரர், அவிநாசி ஈஸ்வரர், அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்.


இறைவி - கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி.


தலமரம் - பாதிரி (ஆதியில் மாமரம்) மிகப்பெரிய நந்தி.


சுந்தரர் பாடல் பெற்ற தலம்.

இக்கோயில் முதலில் உள்ள வழிகாட்டி விநாயகரைத் தரிசித்து, பிறகு தவத்திலிருக்கும் (பாதிரி மரத்து) அம்பாளைத் தரிசித்து, பிறகு தான் சுவாமியைத் தரிசிக்க செல்லவேண்டும். கோயிலின் முன் உள்ள கல்லால் ஆன (துவஜ) தீபஸ் தீபஸ்தம்பதின் கீழ் தனியே சுந்தரர் உருவம், முதலை பிள்ளையை வெளிப்படுத்தும் சிற்பம் முதலியவை கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. உள் பிராகாரத்தில் துர்க்கை சந்நிதி தனியே உள்ளது. அடுத்து உற்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளும், சுப்பிரமணியர், காலபைரவர் சந்நிதிகளும் உள்ளன. அவிநாசி முருகன் சந்நிதி சிறப்புடையது. அதுபோலவே காலபைரவர் சந்நிதியும். (இச்சந்நிதி உள் பிராகாரத்தில் இருப்பது இங்கு மட்டும் தான்) இவருக்கு வடைமாலை அணிவிப்பது விசேஷமான பிரார்த்தனையாம். நடராஜர் சந்நிதி உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு A.e. தூரத்தில் முதலையுண்ட பாலனை மீட்ட ஏரியும், கரையில் சுந்தரர் சந்நிதியும் உள்ளன.

அம்பாள் சந்நிதியில் சுவரில் தேள் உருவம் உள்ளது. இப்பகுதியில் தேள் கடித்தால், அவர்கள் இங்கு வந்து வலம் வந்தால் விஷம் இறங்கி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. விசேஷ காலங்களில் சுற்றுப்புறக் கிராம மக்கள் இங்கு வந்து தீர்த்தம் எடுத்துச் செல்கிறார்கள். இவ்வூர்த் தேர் சிறப்புடையது. கோயிலுள்ள காசிக்கிணறும், நாககன்னிகைத் தீர்த்தமும் ஐராவதத் திர்த்தமும் உள்ளன.

திருவாசகத்தில் ஆனந்தமாலையில் "அரிய பொருளே அவிநாசியப்பாண்டி வெள்ளமே" என்று பாடுகிறார். அப்பரும் திருத்தாண்டகத்தில் 'அவிநாசி கண்டாய்' எனப் பாடுகிறார்.

அருணகிரிநாதர் "அவிநாசிப் பெருமாளே", "புக்கொளியூருடையார் புகழ் தம்பிரானே" என்று பலவிடங்களில் பாடியுள்ளார்.

இத்தலத்துத் தலபுராணம் இளையான்கவிராயரால் இயற்றப்பட்டது - கிடைக்கிறது. மற்றும் கருணாம்பிகைசதகம், கரணாம்பிகை யமக அந்தாதி, கருணாம்பிகை பிள்ளைத்தமிழும் உள்ளன. 1695ல் வாழ்ந்த சிக்கதேவராய உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் சுற்றுப்புற மண்டபச் சுவர்களிலும் , சந்நிதித்தூண்களிலும் உள்ளன.

இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள சேவூரும் மொக்கணீசுரரும் வைப்புத்தலங்கள். புதிதாக ஏழுநிலை ராஜகோபுரம் கட்டப் பட்டு வருகின்றது. இக்கோயிலின் மிகப்பெரிய தேர் அண்மையில் தீவிபத்தில் எரிந்து போய்விட்டது. இக்குறையை ஈடு செய்யும் வகையில் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் கௌமார சுவாமிகள் மடாலயம் தவத்திரு. சுந்தர சுவாமிகள் அவர்களின் தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுச் செய்யப்பட்டுள்ளது.


"எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே

உற்றாய் என்றுன்னையே உள்குகின்றேன் உணர்ந்துள்ளத்தால்

புற்றாடரவா புக்கொளியூர் அவிநாசியே

பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே".


"உரைப்பாருரையுகந்துள்க வல்லார் தங்கள் உச்சியாய்

அரைக்காடரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்

புரைக்காடு சோலைப்புக் கொளியூர் அவிநாசியே

கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே"


"மந்தி கடுவனுக்கு எண்பழம் நாடி மலைப்புறம்

சந்திகள் தோறும் சலபுட்பமிட்டு வழிபடப்

புந்தியுறையாய் புக்கொளியூர் அவிநாசியே

நந்நியுனை வேண்டிக்கொள்வேன் நரகம் புகாமையே". (சுந்தரர்)


திருப்புகழ்

இறவாமற் பிறவாமல் - எனையாள் சற்குருவாகிப்

பிறவாகித் திரமான - பெருவாழ்வைத் தருவாயே

குறமாதைப் புணர்வோனே - குகனே சொற்குமரேசா

அறநாலைப் புகல்வோனே - அவிநாசிப் பெருமாளே.


ஆன்று நிறைந்தோர்க்கு அருள் அளிக்கும் புக்கொளியூர்த்

தோன்றம் அவிநாசிச் சுயம்புவே" (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. அவிநாசி லிங்கேஸ்வரர்சுவாமி திருக்கோயில்

அவிநாசி - அஞ்சல் - 641 654.

அவிநாசி வட்டம் - கோவை மாவட்டம்.

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருநெல்வேலி
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருமுருகன்பூண்டி
Next