Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருநெல்வேலி

திருமுறைத்தலங்கள்

பாண்டிய நாட்டுத் தலம்

திருநெல்வேலி

திருநெல்வேலி, மாவட்டத் தலைநகரம். சென்னையிலிருந்து விரைவுப் பேருந்துகளும், புகைவண்டி வசதிகளும் உள்ளன. மதுரையிலிருந்தும், பிறவூர்களிலிருந்தும் மதுரை வழியாகவும் நெல்லைக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன.

வேதபட்டர், இறைவனுக்குத் திருவமுது ஆக்குவதற்கு உலரப்போட்டிருந்த நெல், மழையினால் நனையாதவாறு இறைவன் வேலியிட்டுக் காப்பாற்றியமையால் இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்று பெயர் ஏற்பட்டது. ஆகவே இத்தலம் நெல்வேலி (திருநெல்வேலி) எனப் பெயர் பெற்றது.

பாற்குடம் சுமந்து சென்ற அன்பனை (முழுதுங்கண்ட ராமக்கோன்) இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடறச் செய்து பாலைத்தன்மீது கவிழச்செய்து, அதனால் வெட்டுண்டு, காட்சி தந்தருளியதால் சுவாமிக்கு வேணுவனநாதர் என்றும் பெயர். இத்தலமும் வேணுவனம் என்று வழங்கலாயிற்று.

ஊர்ப்பெயர் - வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், பிரமவிருந்துபுரம், தாருகாவனம் என்பன. கோயில் கல்வெட்டுக்களில் இத்தலம் 'கீழ்வேம்பு நாட்டுக் குலசேகர சதுர்வேதி மங்கலம்' என்று காணப்படுகிறது.


இறைவன் - நெல்லையப்பர், வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலிநாதர், சாலிவாடீசர், வேணுவனேஸ்வரர், வேணுவன மகாலிங்கேஸ்வரர், மூலவர் சுயம்பு மூர்த்தி.


இறைவி - காந்திமதி அம்மை, வடிவுடையம்மை.


தலமரம் - மூங்கில் (வேணு, வேய்)


தீர்த்தம் - பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி) கருமாறித் தீர்த்தம்,

சிந்துபூந்துறை.


சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.

இக்கோயிலில் மிகப் பழமையான கல்வெட்டுக்கள் உள. இக்கோயில் 14 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. காமிக ஆகம முறைப்படி அமைந்து நாடி வருவோர்க்கு நலமருளும் இத்திருக்கோயில் திருநெல்வேலி நகரின் நடுவண் அமைந்துள்ளது.

கோயிலுள் பொற்றாமரைக் குளம் உள்ளது. நாற்புறமும் நல்ல படிகள். நடுவில் நீராழி மண்டபம் உள்ளது. இக்கோயிலில் உஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம் போன்ற மண்டபங்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன.

மூன்று தெப்பக் குளங்கள் இக்கோயிலில் உள்ளன. சுவாமிக்கு நான்கு ராஜகோபுரங்களும் அம்பாளுக்கு ஒரு கோபுமும் உள்ளன. சுவாமி, அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை. நந்தி பெரியது - சுதையாலானது சுவாமி. சந்நிதிக்குச் செல்லும் வழியில் இசைத்தூண்கள் உள்ளன. துவாரபாலகர்களைக் கடந்து மகா கணபதி, முருகன் சந்நிதிகளைத் தரிசித்து உட்புகுந்தால் சுவாமி மிகவும் விசாலமானது.

நெல்லையப்பர் - சிவலிங்கத் திருமேனி, மேற்புறம் வெட்டப்பட்ட அடையாளம் உள்ளது. இப்போதுள்ள 21 ஆவது ஆவுடையார் என்றும் 20 ஆவுடையார்கள் பூமியின் கீழ் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது. இம்மூர் ¢தி 'மிருத்யஞ்சமூர்த்தி' ஆவார்.

அன்வர்கான் என்ற இஸ்லாமியரின் மனைவிக்கு உண்டான வயிற்றுவலி நீங்காமையால் அவன் வழிபட்டுப் பேறு பெற்ற சிவலிங்கம் 'அனவரத லிங்கம்' என்று வழங்கப்படுகிறது. இதற்கு அவர் தந்துள்ள நகை முதலியவைகளும் உள்ளன.

நாள்தோறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. இவற்றுள் உச்சிக்காலத்தில் மட்டும் காந்திமதி அம்பிகையே - இறைவியே நேரில் வந்து சுவாமியை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். அகத்தியருக்கு இறைவன் கல்யாண காட்சியைக் காட்டி அருளிய தலமிதுவே. சுவாமிக்குப் பக்கத்தில் கோவிந்தராஜர் சந்நிதி உள்ளது.

இங்குள்ள உற்சவத் திருமேனி கையில் தாரை வார்த்துத் தரும் பாத்திரத்துடன் இருப்பதைக் காணலாம். திருமால் பார்வதியைத் தாரை வார்த்துத் தர இரைவன் மணந்து கொள்ளும் நிகழ்ச்சியை இது நினைவூட்டுகிறது. திருமாலின் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

இன்றும் ஐப்பசியில் நடைபெறும் திருக்கல்யாண விழாவில் ஒரு நாள் வைணவர் வந்து தாரை வார்த்துத் தர, சிவாசாரியார் பெற்றுக் கொள்ளும் ஐதீகம் நடைபெறுகின்றது. சுவாமி பிராகாரத்தில் கன்னி விநாயகர், நந்தி தேவர், பாண்டியராஜா சந்நிதிகள் உள்ளன. பிட்சாடனர், ரிஷிபத்தினியர் உருவங்கள் கல்லில் வண்ணந் தீட்டப்பட்டுள்ளன.

அகத்தியர் பிரதிஷ்டை செய்த சால்வடீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி சற்றுத் தாழ்வில் உள்ளது. இத்தலம், பஞ்ச சபைகளுள் தாமிரச் சபையாகும். இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராஜர் 'தாமிர சபாபதி' என்றழைக்கப்படுகிறார். சபைக்கு மேலே தாமிரத் தகடு வேயப்பட்டுள்ளது. பின்னால் உள்ள நடராஜர் - சிலாரூபம் - சந்தன சபாபதி என்றழைக்கப்படுகிறார்.

உள்ளே ருத்திர விஷ்ணு, பேதங்கள், ரிஷிகளின் உருவங்கள் உள்ளன. கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் ஆக்கப்பட்டு ஏழு அடுக்குகளைக் கொண்டு திகழும் இச்சபை சித்திர வேலைப்பாடுகளுடன் அருமையாகத் திகழ்கின்றது. சபைக்குப் பக்கத்தில் தலமரம் உள்ளது.

இக்கோயிலில் இரு துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. மகிஷாசுரமர்த்தினி சந்நிதி தெற்கு நோக்கியும், பண்டாசுரமர்த்தினி சந்நிதி வடக்கு பார்த்தும் உள்ளன.

ஆறுமுகர் சந்நிதி இங்கு மிகவும் விசேஷமானது. வள்ளி தெய்வயானையுடன் ஆறு முகங்களும் சுற்றிலும் திகழ, ஒவ்வொரு முகத்திற்கும் நேரே இரண்டிரண்டு திருக்கரங்கள் வீதம் சுற்றிலும் திகழ, அவ்வவற்றிற்குரிய ஆயுதங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்துள்ள பாங்கு அற்புதமானது. அமாவாசைப் பரதேசி என்பவர் ஒருவர் 120 வயது வரை வாழ்ந்திருந்து இச்சந்நிதியை விசேஷித்துக் காவடி எடுத்து இறுதியில் ஓர் அமாவாசையில் சித்தியடைந்தார். இவராலேயே இச்சந்நிதி மிக்க சிறப்பு பெற்றது. பாம்பன் சுவாமிகள் பதிகம் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் உள்ள 'சுரதேவர்' - 'ஜ்வரதேவர்' சந்நிதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும் என்னும் செய்தி மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.

பொல்லாப் பிள்ளையார் சந்நிதி இங்கு மிகவும் விசேஷமானது. புத்திரப்பேறில்லாதவர்கள் நாற்பத்தொரு நாள்கள் விரதமிருந்து, கருப்பமுற்று, குழந்தையைப் பெற்றெடுத்தபின் இச்சந்நிதிக்கு எடுத்து வந்து இங்கு சன்னல் போல் உள்ள பகுதியில் உட்புறமாகத் தந்து வெளிப்புறமாக வாங்கும் பழக்கம் உள்ளது. இதனால் இவருக்குப் 'பிள்ளைத் துண்ட விநாயகர்' என்றும் பெயர்.

அறுபத்துமூவர் மூலத் திருமேனிகளைத் தொடர்ந்து மேலே கயிலாய பர்வதக் காட்சி உள்ளது. இங்குப் பெருமான் இராவணனை அழுத்திய - நொடித்த பாவனை நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.

நடராஜர் சந்நிதி மற்றொன்று தனியே உள்ளது. இப்பெருமான் அக்கினி சபாபதி என்றழைகக்ப்படுகிறார். சிவகாமி உடன் நிற்க, காரைக்காலம்மையார் கையில் தாளமிட்டுப் பாட, சிரித்த முகத்துடன் ஆடும், அம்பலக்வத்தன் அழகைக் காணக்கண் ஆயிரம் வேண்டும்.

காந்திமதி அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. கிழக்கு நோக்கியது. நின்ற திருக்கோலம், வியாழன் தோறும் அம்பாளுக்குத் தங்கப் பாவாடை சார்த்தப்படுகிறது. அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உள்ள இரு தூண்கள் இசைத் தூண்களாக விளங்குகின்றன.

இத்தலத்திற்குத் தல புராணம் உள்ளது. 'காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்' சிறப்புடைய நூலாகும்.

ஆனியில் 41 நாள்களுக்குப் பெருவிழா, மண்டலாபிஷேகத்துடன் சேர்ந்து நடத்தப்படுகின்றது.

ஆடிப்பூர உற்சவம் அம்பாளுக்குப் பத்து நாள்களுக்குச் சிறப்பாக நடைபெறுகின்றது. ஐப்பசியில் கல்யாண உற்சவம் 10 நாள்களுக்கு நடைபெறுகின்றது.

கார்த்திகை மாதத்தில் காலை 4 மணிக்கெல்லாம் கோயில் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். நான்கு சோம வாரங்களும் சிறப்பானவை.

மார்கழித் திருவாதிரை உற்சவம், தைப்பூச உற்சவம், பங்குனி உத்திரத்தில் செங்கோல் உற்சவம் முதலியவை ஒவ்வொன்றும் பத்து நாள்களுக்குச் சிறப்பாக நடைபெறுகின்றன. மாசி மகத்தில் அப்பர் தெப்பம் சிறப்பு. வைகாசி விசாகத்தில் சங்காபிஷேகம் விசேஷமானது.

இத்திருக்கோயிலின் சார்பில், தேவாப் பாடசாலை நடைபெறுகின்றது. சமய நூலகம் உள்ளது. (காந்திமதி) அம்பாள் மகளிர் மேல் நிலைப்பள்ளி 2) நெல்லையப்பர் ஆதாரப் பள்ளி 3) ஞானசம்பந்தர் பாலர் பள்ளி முதலியவை நடைபெறுகின்றன.

"மருந்தவை மந்திர மறுமை நன்னெறியவை மற்றுமெல்லாம்

அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே

பொருந்து தண் புறவினிற் கொன்றை பொன் சொரிதரத்துன்றுபைம்பூ

செருந்தி செம்பொன்மலர் திருநெல்வேலியுறை செல்வர்தாமே


"வெடிதரு தலையினர் வேனல் வெள்ளேற்றினர் விரிசடையர்

பொடியணி மார்பினர் புலியதளாடையார் பொங்கரவர்"

வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரைமையல் செய்வார்

செடிபடு பொழிலணி திருநெல்வேலியுறை செல்வர்தாமே". (சம்பந்தர்)


உட்டிரு விளக்கான அகரமுகரம் மகரம்

ஒளிர்விந்து நாதவடிவாய்

உயர்மந்த்ர பதவன்ன புவன தத்துவ கலைகள்

ஓராறி னுக்குமுதலா

மட்டில் குடிலைப்பொரு ணிறைமுறையுஞ் சொல்ல

மாட்டாத படியினாலே

மனத்தெழு மகந்தையா னானென்னும் வறுமைதனை

மாற்றியருள் வாழ்வு தரவே

எட்டிருங் கைக்கமல னைக்குட்டி யேபின்

இருஞ்சிறையிலிட்டு வைத்தே

இருநூ றெனுங்கணக் கோடுநா லாறா

மெனும் புவன மண்டகோடி

சிட்டியுஞ் செய்துபின் அயன்சிறை விடுத்தவா

செங்கீரை யாடியருளே

செல்வந்த தழைத்து வளர் நெல்வேலி வாழ்செட்டி

செங்கீரை யாடியருளே (க்ஷேத்திரக்கோவை பிள்ளைத் தமிழ்)


-"பொற்றாம

நல்வேலி சூழ்ந்து நலன்பெறுமொண் செஞ்சாலி

நெல்வேலி யுண்மை நிலயமே" (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. நெல்லையப்பர் திருக்கோயில்

திருநெல்வேலி 627 001.
 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்குற்றாலம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  (திருப்புக்கொளியூர்) அவிநாசி
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it