Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

கைச்சினம்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

கைச்சினம்

கச்சனம்

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பேருந்து மார்க்கத்தில் உள்ள தலம். பேருந்து வசதி உள்ளது. திருக்கைச்சின்னம் என்னும் இத்தலத்தின் பெயர் மக்கள் வழக்கில் தற்போது 'கச்சனம்' என்று வழங்கப்படுகிறது.


இறைவன் - கைச்சினேஸ்வரர், கரச்சினேஸ்வரர்.

இறைவி - சுவேதவளை நாயகி, வெள்வளைநாயகி.


தலமரம் - கோங்கு இலவு (இதன் அடியில் உள்ள லிங்கம் கோங்கிலவு வனநாதேஸ்வரர்) .


தீர்த்தம் - வச்சிரதீர்த்தம், இந்திர தீர்த்தம், அகத்திய தீர்த்தம்.


சம்பந்தர் பாடல் பெற்றது.

திருணபிந்து முனிவர் வழிபட்ட தலம். இந்திரன், அகத்தியர் முதலியோரும் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.

இந்திரன் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட்டு, அதை எடுத்து வைக்கும்போது அவன் கை அடையாளம் சுவாமிமீது படிந்தது. எனவே கைச்சின்னம் என்ற பெயர் பெற்றது. இது தற்போது வழக்கில் கச்சனம் என்றாயிற்று சுவாமி மீது விரல்கள் பட்ட அடையாளம் உள்ளது.

முற்காலத்தில் இப்பகுதியில் கோங்கு மரங்கள் அடர்ந்திருந்தமையால் கோங்குவனம், கர்ணிகாரவனமென்றும் பெயர்கள் உண்டு. இத்தலத்திற்குக் கிழக்கில் 'கோளிலி'யும், தெற்கில் 'திருத்துறைப்பூண்டி'யும், மேற்கில் 'நெல்லிககர்வும்', வடக்கில் 'திருக்காறாயிலும்' உள்ளன. மதுரை திருஞான சம்பந்தர் ஆதீனத்திற்குச் சொந்தமான கோயில். முகப்பில் மூன்று நிலைகளையுடைய இராஜகோபுரம் காட்சி தருகிறது.

இக்கோயில் மாடக்கோயில் என்னும் அமைப்பைச் சார்ந்தது. கோயிலுக்குள் ஒரு பிராகாரமும் மதிலை அடுத்து ஒரு பிராகாரமும், வெளிவீதியில் உள்ளன. உள் பிரகாரத்தில் மேற்கில் விநாயகர் அஷ்டவசுக்களில் ஒருவனான விதூமன் வழிபட்ட விதூமலிங்கம், சுப்பிரமணியர், அம்பாள் சந்நிதிகளும் உள்ளன. கிழக்கில் நடராஜ மண்டபம் உள்ளது.

மதிலுக்கு வடப்புறம் இந்திரதீர்த்தமும் தென்புறம் வச்சிரத் தீர்த்தமும் உள்ளது. இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான நஞ்நையில் வெட்டும் பொழுது கிடைத்த சங்கு சக்கரபாணியாகத் திகழும் பெருமாள்சிலை, உள்பிராகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்திரன் சாபம் விலகியதும் தியாகராஜர் காட்சி தந்ததும், அகத்தியரின் பிரமகத்தி விலகியதுமாகிய சிறப்புடைய தலம். யானை ஏறாதபடி கட்டப்பட்ட மாடக் கோயிலாகத் திகழும் இக்கோயில் மிகவும் பழமையானது. திருநாவுக்கரசர் தாம் பாடிய க்ஷேத்திரக் கோவையில் இடம் பெற்றுள்ள இக்கோயில் மாடக் கோயிலாதலின் உயர்ந்த மேடையுடன் அமைந்துள்ளது.

இக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி - ரிஷபாரூட தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தருவது சிறப்பாக உள்ளது. (பின்புறத்தில் நந்தி உள்ளது தெரிகிறது) நடனச்சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வர வடிவமும் அழகாக உள்ளன. இத்திருக்கோயிலில பதினொரு கல்வெட்டுக்கள் காணப்பெற்றுள்ளன. அவைகளில் இக்கோயிலுக்கும் பிறவுக்கும் அளிக்கப்பட்ட நிபந்தங்கள் - நிலபுலன்கள் குறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுக்களில் இறைவனுக்கு, 'கோங்கு இலவுவனேஸ்வரசுவாமி, திருக்கைச்சின்னம் உடைய நாயனார், கரச்சின்னேஸ்வரர்' முதலிய பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. பூஜைகள், வழிபாடுகள் முதலியவை செம்மையாக நடைபெறுகின்றன. விசேஷ நாள்களில் சுவாமிக்கு வெள்ளி நாகாபரணமும், அம்பாளுக்கு வெள்ளி அங்கியும் சார்த்தப் பெறுகின்றன.

வைகாசி விசாகத்தில் கோயிற் பெருவிழா பத்துநாள்களுக்கு நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சனம், கார்த்திகை ஞாயிறு நாள்கள், மார்கழித் திருவாதிரை, மாசிமகம், பங்குனி உத்திரம் முதலிய விசேஷ காலங்களிலும், பிரதோஷ காலங்களிலும் சுவாமி புறப்பாடு நடை பெறுகின்றது. கச்தசஷ்டிவிழா சிறப்பாக நடத்தப்பெறுகிறது. பேய் பிடித்தல் போன்ற தோஷங்கள் இத்தலத்தில் நீங்குவதாக வரலாறு சொல்லப்படுகிறது.


"தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்

மையலாமணி மிடற்றான் மறைவிளங்கு பாடலான்

நெய்யுலா மூவிலைவேல் ஏந்தி நிவந்தொளிசேர்

கையுடையான் மேவியுறை கோயில் கைச்சின்னமே." (சம்பந்தர்)


-நையுமன

மைச் சினத்தை விட்டோர் மனத்திற் சுவை கொடுத்தக்

கச்சினத்தினுட் கரையாக் கற்கண்டே". (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில்

கச்சனம் - அஞ்சல் 610201

திருவாரூர் வட்டம் - மாவட்டம்
Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is வலிவலம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கோளிலி
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it