Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

வலிவலம்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

வலிவலம்

1) திருவாரூர் - திருத்துறைப்பூண்டி (வழி கீவளூர்) சாலையில் உள்ள தலம். சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.

2) திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர், வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம். இரண்டுமே நல்ல பாதைகள். திருவாரூரிலிருந்து 10 A.e. கொன்றைவனம், வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்றுமங்கலம் முதலியன இப்பதியின் வேறு பெயர்கள். சூரியன், கரிக்குருவி (வலியன்) பூஜித்த தலம். கோயில் பொலிவோடு காட்சி தருகின்றது.


இறைவன் - இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்.

இறைவி - வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி.


தலமரம் - புன்னை.


தீர்த்தம் - சங்கரதீர்த்தம்.


மூவர் பாடல் பெற்ற தலம்.

கோச் செங்கணான் கட்டிய மாடக்கோயில், சுவாமி செங்குன்றின் மீது (கட்டுமலை மேல்) காட்சி தருகிறார். தேவாரப் பாடல்களை ஓதத்தொடங்கும்போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் 'பிடியதன் உருஉமைகொள' என்னும் பாடல் இத்தலத்திற்குரியதேயாம்.

வலியன் (கரிக்குருவி) வழிபட்டதால் வலிவலம் என்ற பெயர் வந்தது. காரணமாமுனிவர் வழிபட்ட பதி. நுழைவு வாயிலில் கணபதி தரிசனம், பிராகாரத்தில் வலம்புரி விநாயகர்

சுப்பிரமணியர், இலக்குமி, காசிவிசுவநாதர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. அறுபத்துமூவர் சந்நிதி உள்ளது. ஈசானிய மூலையில் பிடாரி கோயில் உள்ளது.

இவ்வூர் இறைவனை, இறைவியைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் 'வலிவலமும்மணிக்கோவை' என்னும் நூலொன்று, "தமிழ்த்தாத்தா" திரு. உ.வே.

சாமிநாத ஐயர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பாடியவர் பெயர் தெரியவில்லை. அண்மையில் உள்ள தலங்கள் (1) கச்சனம் 2) கன்றாப்பூர் 3) சாட்டியக்குடி என்பன.

இக்கோயிலில் சோழர் காலத்திய ஒன்பது கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் சித்திரையில் பெருவிழா நடைபெறுகிறது. கந்த சஷ்டித் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.


"பிடியதன் உரு உமை கொளமிகு கரியது

வடிகொடுதனதடி வழிபடும் அவரிடர்

கடிகணபதிவர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே" (சம்பந்தர்)


"தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்

ஆயுநின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றதுள்ளம்

ஆயமாய காயந்தன்னுள் ஐயர் நின்றறொன்றலொட்டார்

மாயமே என்றஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே" (சம்பந்தர்)


"நல்லன்காண் நான் மளைகளாயினான்காண்

நம்பன்காண் நணுகாதார் புரமூன்றெய்த

வில்லான்காண் விண்ணவர்க்கும் மேலானான்காண்

மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்

சொல்லான்காண் சுடர் மூன்றுமாயினான்காண்

தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான்ஈய

வல்லான்காண் வானவர்கள் வணங்கியேத்தும்

வலிவலத்தான்காண் அவன் என்மனத்துளானே." (அப்பர்)


"நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்

கரசரும் பாடிய நற்றமிழ் மாலை

சொல்லியவே சொல்லி ஏத்துகப் பானைத்

தொண்டனேன் அறியாமை அறிந்து

கல்லியல் மனத்தைக் கசிவித்துக்

கழலடிகாட்டி என்களைகளையறுக்கும்

வல்லியல் வானவர் வணங்கநின்றானை

வலிவலந்தனில் வந்து கண்டேனே." (சுந்தரர்)


-துன்றாசை

வெய்யவலிவலத் தைவிட்டி அன்பர்க் கின்னருள்செய்

துய்ய வலிவலத்துச் சொன்முடிபே. (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. இருதயகமலநாதேஸ்வரர் திருக்கோயில்

வலிவலம் - அஞ்சல் 610 207

திருக்குவளை வட்டம் - திருவாரூர் மாவட்டம்.


Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is கன்றாப்பூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  கைச்சினம்
Next