திருவாலங்காடு

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

திருவாலங்காடு

சென்னையிலிருந்து திருவள்ளுர் வழியாக அரக்கோணம் செல்லும் பேருந்துப் பாதையில் இத்தலம் உள்ளது. சென்னையிலிருந்து திருவள்ளூர் அரக்கோணம் வழியாகச் சோளிங்கர் செல்லும் பேருந்தும் இவ்வூர் வழியாகச் செல்கிறது.

காஞ்சியிலிருந்தும், அரக்கோணத்திலிருந்தும், திருவள்ளுரிலிருந்தும் இவ்வூர்க்குப் பேருந்துகள் உள்ளன.

ஆலங்காடு. இத்தலம் 'வடாரண்யம்' எனப் பெயர் பெற்றது. காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்து நடராசப் பெருமானின் திருவடிக் கீழிருந்து சிவானந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தலம். இறைவன் காளியுடன் நடனமாடிய தலம். இத்திருக்கோயில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்தது, நடராசப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவத் தலமாகவும், பஞ்ச சபைகளுள் இரத்தினசபையாகவும் சிறப்புற்றிலங்குவது இத்திருக்கோயில். கார்க்கோடகன், சுநந்த முனிவர் முதலியோர் வழிபட்ட தலம். சிறிய ஊர். பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் செல்லும்போது கோயிலுக்குரிய அழகிய சிற்ப வேலைப்பாடு அமைந்த பழமையான தேரைக் காணலாம். இத்திருக்கோயில் திருப்பணி நிறைவாகி 1983ல் குடமுழுக்கு செய்யப்பட்ட புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

இறைவன் - வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டு அப்பர் இறைவி - பிரம்மராளகாம்பாள், வண்டார்குழலி

தலமரம் - பலா, ஆலமரம் என்றும் சொல்லப்படுகிறது.

தீர்த்தம் - 'சென்றாடு தீர்த்தம்' ("செங்கச்ச உன்மத்ய மோக்ஷபுஷ்கரணி") முக்தி தீர்த்தம். மிகப் பெரிய குளம். கரையில் நடனமாடித் தோற்ற காளியின் உருவம் உள்ளது.

மூவர் பாடல் பெற்ற தலம்.

கோயிலின் முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. முகப்பு வாயிலில் வரசித்தி விநாயகரும், ஊர்த்துவ தாண்டவமும், ரிஷபாரூடரும், முருகனும், காளியும் உள்ள சுதை சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. உள் நுழைந்தால் நான்குகால் மண்டபம் உள்ளது. உள்கோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வலப்பால் சித்த வைத்திய சாலை நடைபெறும் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இம் மருத்துவச்சாலை தேவஸ்தானச் சார்பில் நடைபெறுகிறது. திங்கள், வியாழன் காலை வேளைகளில் மக்கள் வந்து மருத்துவம் பெற்றுச் செல்கின்றனர். இம் மண்டபத்தில் தான் நடராசர் அபிஷேகம் நடைபெறுகிறது.

கோபுர வாயிலில் வல்லபை விநயாகர் துதிக்கையுள்ளிட்ட பதினோரு கரங்களடன் காட்சி தருகின்றார். மறுபுறம் வள்ளி தெய்வயானையுடனாகிய ஆறுமுகர் சந்நிதி.

வெளிப் பிரகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. சந்தன மரங்கள் உள்ளன. கோபுரவாயில் நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம் உள்ளது. வலப்பால் துவஜாரோகண (கொடியேற்ற) மண்டபம், இடப்பால் சுக்கிரவார மண்டபம்.

அடுத்துள்ள ஊள் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. கோபுரத்தில் ஊர்த்துவ தாண்டவம், பிரம்மா, நந்தி மத்தளம் வாசித்தல், காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர், கஜசம்ஹாரமூர்த்தி, காரைக்காலம்மையார் வரலாறு முதலியவை சுதையில் சிற்பங்களாக அமைக்கப்பட்டள்ளன.

வலப்பால் திருக்கல்யாண மண்டபம் உள்ளது. உள்ளே நுழைந்தால் எதிரில் மதிற்சுவர்மீது பஞ்ச சபைகள் உரிய நடராச தாண்டவத்துடன் வண்ணத்தில் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

கோபுரத்தில் உள் பக்கத்தில் தசாவதாரச் சிற்பங்கள், கண்ணப்பர் கண்ணை அப்புவது, அரிவாட்டாய நாயனார் மனைவியுடன் செல்வது, முதலிய சிற்பங்கள் உள.

பிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம் - இரத்தினசபை வாயில் உள்ளது. சபைக்கு எதிரில் நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. வலமாக வரும்போது ஆலங்காடு என்னும் பெயருக்கு ஏற்ப மூலையில் பெரிய ஆலமரம் உள்ளது.

அடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது - தெற்கு நோக்கியது, நினற் திருக்கோலம். இக்கருவறையில் கோஷ்டமூர்த்தங்கள் இல்லை. சிற்பக் கழையழகு வாய்ந்த கல்தூண்கள் காண அழகுடையவை. உற்சவத் திருமேனிகள் பாதுகாக்கப்பட்டள்ளன. அவற்றுள் - பிட்சாடனர், விநாயகர், காரைக்காலம்மையார் (தாளமிட்டுப் பாடும் அமைப்பில்,) சுநந்த முனிவர், கார்க்கோடகன், நால்வர் முதலியவை சிறப்பானவை.

இரத்தின சபை அழகு வாய்ந்தது. நடராசப் பெருமானின் ஊர்த்துவதாண்டவச் சிறப்பு தரிசிக்கத் தக்கது. அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான் 'ரத்ன சபாபதி' என்று அழைக்கப்படுகிறார். சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் உள்ளன. பக்கத்தில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் (சபையில்) உள்ளன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகமுண்டு. திருமுறைப்பேழை உள்ளது. இரத்தினச் சபையை வலம் வரலாம். வலம் வரும்போது சாளரத்தில் சண்டேசுவரரின் உருவம் உள்ளது. சுந்தரர் பதிகம் கல்வெட்டில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்துக் கட்டளையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.

மூலவரைத் தரிசிக்க உள் பிராகாரத்தில் செல்லும்போது சூரியன், அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்காலம்மையார், கார்க்கோடகன், முஞ்சிகேசமுனிவர், உருவங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.

கருவறை நல்ல கற்கட்டமைப்புடையது. கோஷ்ட மூர்த்தமாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உளர். துர்க்கைக்குப் பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாகவுள்ளது. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது - பஞ்சபூதத்தலலிங்கங்கள் உள்ளன. சஹஸ்ரலிங்கம் தரிசிக்கத் தக்கது. சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வர லிங்கம் முதலிய சந்நிதிகளும் உள. உபதேச தக்ஷிணாமூர்த்தி உருவம் மிக்க அழகுடையது. பைரவர் வாகனமின்றி காட்சி தருகின்றார். ஆலயத்துள் அறுபத்து மூவர் சந்நிதிகள் இல்லை.

மூலவர் சந்நிதி வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர். நேரே மூலவர் காட்சி தருகிறார். வலப்பால் ஆனந்தத் தாண்டவ நடராஜர் திருமேனி - சப்பரத்திலுள்ளது. தெற்கு நோக்கியது. எதிரில் வாயிலுள்ளது. நடராசாவுக்குப் பக்கத்தில் மூலையில் சுரங்கப்பாதை உள்ளது. மூடியுள்ள கல்லைத்தூக்க இருவளையங்களையும் மேலே வைத்துள்ளார்கள். சுரங்கம் எங்குச் செல்கிறதோ? தெரியவில்லை. துவார பாலகர்களைத் தாண்டிச் சென்றால் மூலவர் தரிசனம். சுயம்பு மூர்த்தி. மூலவருக்கு மேல் உருத்திராக்க விதானம் - திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்துப்பணி உள்ளது.

மூலவரின் பக்கத்தில் போக சக்தி அம்மன் உற்சவத் திருமேனி உள்ளது. சிவலிங்கத் திருமேனியின் மீது கோடுகள் அமைந்துள்ளன. பங்குனி உத்திரத்தில் பெருவிழா நடைபெறுகிறது. ஊருக்குப் பக்கத்தில் காளிகோயில் உள்ளது. இத்தலத்திற்குத் தொடர்புடைய 'பழையனூர்' கிராமம், பக்கத்தில் 2 A.e. தொலைவில் உள்ளது. இறைவன், இறைவி சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள இறைவன் - அம்மையப்பர், இறைவி -ஆனந்தவல்லி. மேற்கு நோக்கிய சந்நிதி.

பழையனூருக்குச் செல்லும் வழியில், திருவாலங்காட்டிலிருந்து ஒரு கி.மீ.ல் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து செட்டிப்பிள்ளைக்குத்ந்த வாக்குறுதியைக் காத்த 'தீப்பாய்ந்த மண்டபம்' உள்ளது, திருவாலங்காட்டுப் பேருந்து நிலையத்திலிருந்து பார்த்தாலே மண்டபம் தெரிகின்றது. இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில் இவர்களுடைய உருவங்கள் செதுக்கப்பட்டள்ளன. யாகம் வளர்த்து இறங்குவது போனற் சிற்பம் உள்ளது. இதன் எதிரில் கிழக்கு நோக்கிய சந்நிதியாகச் 'சாட்சி பூதேஸ்வரர்' காட்சியளிக்கின்றார். எதிரில் தீப்பாய்ந்த இடம் உள்ளது.

தீப்பாய்ந்த வேளாளர்களின் மரபில் பழையனூரில் தற்போதுள்ளவர்கள் நாடொறும் திருவாலங்காடு வந்து இறைவனைத் தரிசித்துச் செல்லும் மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். சதாகாலமும் சேவைக்கு வந்து செல்லும் இவர்கள், இம்மரபைத் பிற்காலத்தோரும் அறியும் வகையில் "கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை" என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோயிலின் முன் வாயிலில், உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற்படியாக வைத்துள்ளனர்.

இம்மரபினரின் கோத்திரமே 'கூழாண்டார்கோத்திரம்'. அதாவது தாங்கள் கூழ் உணவை உண்டு, விளைந்த நெல்லை இறைவனுக்குச் சமர்ப்பித்தவர்கள் என்பது பொருளாம். சிவப்பற்றினை உணர்த்தும் இச்செய்தி நெஞ்சை நெகிழவைக்கின்றது.

கல்வெட்டில் நடராசப்பெருமானின் பெயர் 'அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார்' என்று குறிக்கப்பட்டுள்ளது.

"கேடும்பிறவியும் ஆக்கினாரும் கேடிலா

வீடுமாநெறி விளம்பினார்எம் விகிர்தனார்

காடுஞ்சுடலையும் கைக்கொண்டு அல்லில்கணப்பேயோ (டு)

ஆடும் பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே."

(சம்பந்தர்)

"ஒன்றா உலகனைத்தும் ஆனார்தாமே

ஊழிதோறூழி உயர்ந்தார் தாமே

நின்றாகி எங்கு (ம்) நிமிர்ந்தார் தாமே

நீர் வளிதீ ஆகாசம் ஆனார்தாமே

கொன்றாடுங் கூற்றை உதைத்தார் தாமே

கோலப் பழனையுடையார் தாமே

சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்தாமே

திருஆலங்காடுறையும் செல்வர் தாமே."

(அப்பர்)

"முத்தாமுத்திதரவல்ல முகிழ்மென்முலையாள் உமைபங்கா

சித்தாசித்தித் திற்காட்டுஞ் சிவனே தேவர்சிங்கமே

பத்தாபத்தர் பலர்போற்றும்பரமா பழையனூர்மேய

அத்தா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே."

(சுந்தரர்)

-"சொற்போரில்

ஓலங்காட்டும் பழையனூர் நீலிவாதடக்கும்

ஆலங்காட்டிற் சூழ்அருள்மயமே"

(அருட்பா)

திருப்புகழ்

வடிவது நீலங்காட்டி முடிவுளகாலன்கூட்டி

வரவிடு தூதன் கோட்டி -விடுபாசம்

மகனொடுமா மன்பாட்டிமு தலுறவோருங்கேட்டு

மதிகெட மாயந்தீட்டி -யுயிர்போமுன்

படிமிசை தாளுங்காட்டியுடலுறு நோய் பண்டேற்ற

பழவினை பாவம் தீர்த்து -னடியேனைப்

பரிவோடு நாளுங்காத்து விரிதமிழாலங்கூர்த்த

பரபுகழ் பாடென்றாட்கொ -டருள்வாயே

முடிமிசைசோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில்

முதிர் நடமாடுங் கூத்தர் -புதல்வோனே

முருகவிழ்தாருஞ் சூட்டி யருதனி வேழங்காட்டி

முதல் மறமானின் சேர்க்கை -மயல்கூர்வாய்

இடியென வேகங்சாட்டி நெடிதரு சூலந்தீட்டி

யெதிர் பொருசூரன் தாக்க -வரஏகி

இலகிய வேல் கொண்டார்த்து உடலிருகூறன்றாக்கி

யிமையவரேதந் தீர்த்த -பெருமாளே.

அஞ்சல் முகவரி -

அ.மி. வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்

திருவாலங்காடு - அஞ்சல் -631 210

(வழி) அரக்கோணம் திருத்தணி வட்டம் - திருவள்ளுர் மாவட்டம்

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவிற்கோலம் - கூவம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருப்பாசூர்
Next