திருவிற்கோலம் - கூவம்

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

திருவிற்கோலம் - கூவம்

தற்போது 'கூவம்' என்றழைக்கப்படுகிறது. 1. சென்னையில் இருந்து நேரே செல்லப் பேருந்து வசதி உள்ளது. 2. சென்னையில் இருந்து பெங்களூர், வேலூர், காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சுங்குவார் சத்திரம் வந்து, அங்கிருந்து பேரம்பாக்கம் வழியாகத் திருவள்ளுர் செல்லும் கிளைச் சாலையில் சென்று கூவம் கூட்ரோடில் இறங்கி 1A.e. (வலப்புறமாக) நடந்து ஊரையடையலாம். 3. காஞ்சியிலிருந்து சுங்குவார்சத்திரம் வழியாகத் திருவள்ளுர் செல்லும் பாதையிலும் சென்று கூவம் கூட்ராடில் இறங்கிச் செல்லாம், செல்லும் போது ஊருக்கு அண்மையில் இடப்புறமாக ஒரு கோயில் உள்ளது. இது தர்க்கமாதா என்னும் அம்மன் கோயிலாகும். திருவாலங்காட்டு நடராசப் பெருமானுடன் தர்க்கித்து நடனமாட, சிலம்பு முத்துக்கள் வீழ்ந்த இடம் இதுவென்றும், இதனால் அம்பாளுக்குத் 'தர்க்க மாதா' என்றும் பெயர் வந்ததென்றும் சொல்லப்படுகிறது. சிவாலயம் ஊரினுள் உள்ளது.

இறைவன், மேருமலையை வில்லாகக் கையில் பிடித்த கோலம் = திரு + வில் + கோலம் - தலத்தின் பெயராயிற்று

சுவாமி - திரிபுராந்தகேஸ்வரர், திருவிற்கோலநாதர்.

அம்பாள் - திரிபுராந்தகி, திரிபுரசுந்தரி,

தலமரம் - தனியாக ஏதுமில்லை. (இத்தலமே 'நைமிசாரண்ய க்ஷேத்திரம் எனப்படுகிறது.)

தீர்த்தம் - அக்கினி தீர்த்தம். இது கோயிலுக்கு எதிரில் உள்ளது.

சம்பந்தர் பாடல் பெற்றது.

இதற்கு 'அச்சிறுகேணி' என்றும், கூபாக்கினிதீர்த்தம் என்றும் பெயர்களுண்டு. இக்குளத்தில் தவளைகள் இல்லை. பிடித்து வந்து விட்டாலும் வெளியேறிவிடுமாம். இக் குளத்தில் மூழ்கி இறைவனை வழிபடுவோர்க்குப் புத்திரப்பேறு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. சித்திரைத் திங்களில் பத்து நாள்களுக்குப் பெரு விழா முறையாக நடைபெறுகின்றது.

கோயிலுக்கு ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது- தெற்கு நோக்கியது முகப்பு வாயிலின் முன்புறத்தில் ஒரு பக்கம் விநாயகரும் மறுபக்கம் முருகனும் காட்சி தருகின்றனர். விசாலமான உள்ளிடம், வெளிப்பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. வலமாக வந்து உள் நுழைந்தால் நேரே நடராசர் சந்நிதி, உள் பிராகாரத்தில் வலம் வரும்போது விநாயகர் சந்நிதி உள்ளது. மூன்று திருமேனிகள் உள்ளன - இவர் பெயர் 'அச்சிறுத்த விநாயகர்' கோஷ்டமூர்த்தமாக விநாயகர் உள்ளார். அடுத்துள்ள தட்சிணாமூர்த்தி அழகாக உள்ளார். கருவறையின் பின்புறத்தில் இலிங்கோற்பவர், அடுத்து பிரம்மா, துர்க்கை முதலிய சந்நிதிகள் உள. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. பிரகாரத்தில் முருகப்பெருமான் சந்நிதி உரிய இடத்தில் இல்லாமல் இடம் மாறி, இலிங்கோற்பவருக்கு நேரே உள்ளது. பக்கத்தில் பாலமுருகன் சந்நிதியும் அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதியும் உள்ளன. துர்க்கை சந்நிதிக்கு எதிரில் சந்தன மேடை உள்ளது, இதில் அரைத்த சந்தனம் சுவாமிக்குச் சார்த்தப்படுகிறது. பைரவர் சந்நிதி, தனிக் கோயிலாக விளங்குகிறது. பைரவர் சந்நிதியில் நாய் இல்லை. இதற்காகச் சொல்லப்படுகின்ற செவிவழிச் செய்தியாவது, திரிபுரசம்ஹார காலத்தில் பைரவர் சென்று தேவர்கள் அனைவரையும் அழைத்து வந்ததாகவும் அப்போது அவர் வாகனமாகிய நாய் வழி தவறிவிட்டதென்றும் ஒரு செய்தி செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறது. பைரவர் கோயில் விமானத்தில் 'நாய்' சிற்பங்கள் பல, சுதையால் அமைக்கப்பட்டுளள்ன. வலம் முடித்து உள்ளே செல்லும்போது எதிரில் நடராசர் காட்சி தருகின்றார். காளிக்கு இப்பெருமான் அருள்புரிந்ததால் இந்நடனம் 'ரக்ஷ£நடனம்' எனப்படுகின்றது. காளிக்கு அருள் புரிந்த நிகழ்ச்சி இன்றும் பெருவிழாவில் பத்தாம் நாளில் நடைபெறுகின்றதாம். ஆண்டில், உரிய 6 நாள்களிலும் நடராசவுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. திருவாதிரையிலும், பெருவிழாவில் பத்தாம் நாளிலும் ஆக ஆண்டுக்கு இருமுறை நடராஜா உலா வருகின்றார். நடராசப் பெருமானை வணங்கி உள் நுழைந்தால் நேரே மூலவர் காட்சி தருகின்றார். பக்கத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

சோமாஸ்கந்தர், ஆறுமுகர், சந்திரசேகர், விநாயகர், பள்ளியறை மூர்த்தி, சுக்கிரவார அம்பாள், பிரதோஷ நாயகர், பிட்சாடனர், பூதகணம், மான், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, நால்வர் முதலிய திருமேனிகள் தொழத்தக்க அரிய அழகுடையவை. பக்கத்தில் நால்வர், பிரதிஷ்டை உள்ளது. சூரியன் திருவுருவம் உள்ளது.

மூலவர் அற்புதமான மூர்த்தி, சுயம்பு - தீண்டாத் திருமேனி. மேலே செப்பு மண்டபம் - மத்தியில் உருத்திராக்க விமானம். சுற்றிலும் உள்ள பத்து ஊர்களுக்கு இம்மூர்த்தியே குல தெய்வம்.

வாயிலில் இரு துவாரபாலகர்கள், திரிபுராதிகள் மூவருள் இருவர் இவர்கள் என்று சொல்லப்படுகிறது.

மணல் லிங்கம். இங்கு மூர்த்தியைப் பாலாலயம் செய்யும் வழக்கமில்லையாம். பதினாறு முழ வேஷ்டிதான் சுவாமிக்குச் சார்த்தப்படுகின்றது.

அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும், போர் நிகழ்வதாயின் செம்மை படரும் என்றும் சொல்லப்படுகின்றது. இது பற்றியே ஞானசம்பந்தர் தம் பாடலில் 'ஐயன் நல் அதிசயன்' என்று குறிப்பிடுகின்றார். இவ்வண்ண மாற்றம் தற்போது காணப்படவில்லையாம். மூலவர் - திரிபுரம் எரித்த மூர்த்தி. அபிஷேகங்கள் செய்வதால் உண்டாகும் மேற்புறப் படிவுகள் தானாகவே பெயர்ந்து விழுந்து திருமேனி சுத்தமாகி விடுமாம். சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதி. கஜப்பிரஷ்ட விமான அமைப்பு.

கோயிலிருந்து 2 A.e. தொலைவில் உள்ள 'திருமஞ்சனமேடை' என்று சொல்லப்படும் (கூவம் ஆற்றின் கரையில் உள்ள) இடத்திலிருந்துதான் தீர்த்தம் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கென ஒருவர் நியமிக்ப்பட்டு இவ்வாறு தினந்தோறும் நான்கு காலங்களுக்கும் அவ்வப்போது கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு கொண்டு வருவதில் தவறு நிகழ்ந்து - அதாவது கொண்டு வருபவர் அத்தீர்த்தத்திற்குப் பதில் - செல்ல வேண்டிய தொலைவுக்குப் பதிலாக வேறு தீர்த்தத்தைக் கொண்டு வந்து விட்டால், அதை அபிஷேகம் செய்துவிட்டால் சுவாமி மீது சிற்றெரும்புகள் படரும் என்றும் அதைக் கொண்டு அத்தவற்றைக் கண்டு கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது. இப்பெருமானுக்கு உச்சிக்கால அபிஷேகம் நடைபெறுவது பற்றிய அரிய செய்தி வருமாறு -

கடம்பத்தூர் புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ள 'பிஞ்சிவாக்கம்' கிராமத்திலிருந்து வேளாளர்கள் தர, ஆயர் ஒருவர் நாடொறும் சுவாமிக்கு உச்சிக்கால அபிஷகேத்திற்குப் பால் கொண்டு வருகின்றார். அவர் அப்பாலை, வரும் வழியில் கீழே வைக்காமல், பயபக்தியுடன் கொண்டு வருகின்றார். அவருக்கு அதற்காக அவ்வூரில் நிலம் மான்யமாக தரப்பட்டுள்ளது. கோயிலிலும் நாடொறும் அவருக்கு சுவாமிக்குப் படைத்த பிரசாதம் (அன்னம்) தரப்படுகிறது. இந்தப் பால் அன்றாடம் வந்த பிறகே 'உச்சிக்கால அபிஷேகம் ' கோயிலில் செய்யப்படுகிறது. தொன்றுதொட்டு இன்றுவரை ஒரு நாளும் தடங்கலின்றி இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

சுவாமிக்கு வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. இந்த அம்பாள் 'ஆதி தம்பதி' என்று விசேஷமாகச் சொல்லப்படுகிறது. கிழக்கு நோக்கிய சந்நிதி. நின்ற நிலை. இம்மண்டபத்தில் பள்ளியறையும், நவக்கிரக சந்நிதியும் உள்ளன. பள்ளியறை அமுதுபடிக்கெனத் தனியே கட்டளைகள் உள்ளனவாம்.

சுவாமி, அம்பாளுக்கு முன்னால் தனித்தனியே செப்புக்கவசமிட்ட கொடிமரங்கள் உள்ளன. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் துவஜாரோகண (நான்கு கால்) மண்டபம் உள்ளது.

ஆலயத்தில் நான்கு கால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன.

இக்கோயிலில் சுவாமிக்குச் செய்யப்படும் அபிஷேக நடைமுறைகள் அனைத்தும் மிகவும் ஆசாரமான முறையில் செய்யப்படுகிறது. அவ்வாறே செய்யவேண்டுமென்றும், அதில் தவறு நேரின் தண்டிக்கப்படுவர் என்னும் நம்பிக்கையும் உள்ளது.

இவ்வூருக்குக் 'கூபாக்னபுரி' என்றும் பெயர் சொல்லப்படுகிறது. கோயிலுக்கு எதிரில் உள்ள நிலங்களும் 'குமார வட்டம்' என்று முருகன் பெயரால் வழங்கப்படுகின்றன.

கோயிலுக்கு வெளியே - திரிபுர சம்ஹார காலத்தில் தேர் அச்சு முறிந்திட, உடனே பெருமானை விடையாக இருந்து தாஙகியதாகச் சொல்லப்படும் - கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தில் இக்கோயிலின் சுவாமி அம்பாள் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. திருக்கூவப்புராணம் - தலபுராணம் உள்ளது. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இத்தலபுராணத்தைப் பாடியுள்ளார்.

"உருவினார் உமையடும் ஒன்றிநின்ற தோர்

திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்

வெருவி வானவர் தொழ வெகுண்டு நோக்கிய

செருவினான் உறைவிடம் திருவிற்கோலமே."

"திரிதரு புரம் எரிசெய்த சேவகன்

வரிஅரவொடு மதிசடையில் வைத்தவன்

அரியடு பிரமனதாற்றலால் உருத்

தெரியவன் உறைவிடம் திருவிற் கோலமே."

"நீர்கொண்ட சடையடு நம்பெருங்

காமத் தழலவிப்ப நிற்கின்றானைக்

கூர்கொண்ட கனல் மழுமான் ஆண்மையும்

பெண்மையுமாய கூற்றிற் கேற்பச்

சீர் கொண்ட வலனிடங்கொள் நாயகனைப்

புகலியிறைச் செந்தமிழ்ப்பூந்

தார் கொண்ட திருவிற்கோலப் பெருமான்தனை

இதயத் தவிசின் வைப்பாம்."

(தலபுராணம் - கூவப்புராணம்)

-'தீதுடைய

பொற்கோல மாமெயிற்குப் போர்க் கோலங் கொண்டதிரு

விற்கோலம் மேவுபர மேட்டிமையே.'

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில்

கூவம் கிராமம்,

கடம்பத்தூர் அஞ்சல் - (திருவள்ளுர் (வழி)

திருவள்ளுவர் மாவட்டம் - 631 203.

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is இலம்பையங் கோட்டூர் - எலுமியன் கோட்டூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவாலங்காடு
Next