சிறுகுடி

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

சிறுகுடி

1. பேரளத்தையடுத்துள்ள பூந்தோட்டம் வந்து, அரசலாற்றுப் பாலத்தைக்கடந்து, வலப்புறமாகப் பிரியும் கும்பகோணம். நாச்சியார் கோயில் சாலையில் சென்று, கடகம்பாடி என்னும் ஊரையடைந்து, அங்கிருந்து வலப்புறமாகப் பிரிந்து சிறுகுடிக்குச் செல்லும் சாலையில் 3 A.e உள்ளே சென்றால் ஊரையடையலாம். ஊர்க்கோடியில் கோயில் உள்ளது. இப்பிரிவுச் சாலையில் சைக்கிளில் (அ) நடந்து செல்லலாம். பஸ் போகாது, சிறிய சிறிய வளைவுகள் கொண்ட சரளைக் கல் பாதை. எனவே பஸ்ஸில் போக முயற்சிக்கத் தேவையில்லை.

2. தனியே வருவோர் கடகம்பாடியில் வாடகை சைக்கிள் பெற்றுக் கொண்டு செல்லலாம்.

கோயிலும், பக்கத்தில் குருக்கள் வீடும் ஊர்க்கோடியில் தனியே உள்ளன, வழிகேட்டுச் செல்ல வேண்டும். ஊர்ப்பெயர் 'சிறுகுடி'யானாலும், கோயில் நன்கு பொலிவோடு திகழ்கிறது. சங்க இலக்கியத்தில் புகழப்படும் தனக்கென வாழாப்பிறர்க்குரியாளனாம். 'பண்ணன்' என்னும் கொடை வள்ளல் இத்தலத்தில் வாழ்ந்தவன், அம்பிகை, கைப்பிடியளவு மணலால் பிடித்துவைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட தலம். சிறுபிடி - என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று என்பர். நன்னிலம் வட்டத்தில் சிறுகுடி என்னும் பெயரில் பல ஊர்களிருப்பதால் அவற்றினின்றும் வேறுபாடறிய இத்தலம் திருச்சிறுகுடி என்றழைக்கப்படுகிறது. சூட்சமபுரி என்பதும் இதன் பெயர். கருடன், செவ்வாய், கந்தர்வர் ஆகியோர் வழிபட்டது.

இறைவன் - சூக்ஷ்மபுரீஸ்வரர், மங்களநாதர், சிறுகுடியீசர்.

இறைவி - மங்களநாயகி, மங்களாம்பிகை.

தலமரம் - வில்வம்.

தீர்த்தம் - மங்கள தீர்த்தம் (கோயிலின் எதிரில் உள்ளது)

தலவிநாயகர் - மங்கள விநாயகர்.

சம்பந்தர் பாடல் பெற்றது. (இத்தலத்துப் பதிகம் 'திருமுக்கால்' யாப்பில் அமைந்துள்ளது. மங்கள தீர்த்தத்தில் செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க் கிழமை காலை மாலை வந்து நீராடி, கோயிலுக்கு வந்து வழிபட்டுத் திருநீறு பெற்றுச் செல்வதை இன்றும் காணலாம். இஸ்லாமியர் முதலிய வேற்றுமதத்தவர்களும் வந்து நீராடி வழிபட்டுத் திருநீறு பெற்றுச் செல்கின்றனர். செவ்வாய் தோஷமுடிடயவர்கள் திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அங்காரகதோஷம் நிவர்த்தியாகிறது. என்பது இங்கு பிரசித்தம் - செவ்வாய் வழிபாடு விசேஷமானது.

மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கியது. உள்ளே சென்றால் விசாலமான இடம். பிராகாரத்தில் மங்களவிநாயகர் சுப்பிரமணியர் சந்நிதிகள். முண்மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி. நவக்கிரகங்களில் சனீஸ்வரனுக்கு கீழே சனைச்சரன் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இதுவே சரியான பெயர். இதற்கு மெதுவாக ஊர்ந்து செல்பவன் என்று பொருள். இதுவே மருவி சனீச்வரன் என்றாயிற்று. இங்குள்ள குருக்கள் தமிழறிந்தவராதலால் அழகாகத் தமிழில் சனைச்சரன் என்று எழுதியிருப்பது காணும்போது தமிழ் நெஞ்சங்கள் அடையும் ஆநந்தத்திற்கு அளவேது!அதன்பக்கத்தில் சுவர் ஓரமாக ஞானசம்பந்தர் - பெரிய மூலத் திருமேனி, இடுப்பில் அரைஞாண். கயிறு கழுத்து மாலை பொலிய அழகாகக் கயிறு கழுத்து மாலை பொலிய அழகாகக் காட்சியளிக்கிறது. பக்கத்தில் ஆதிகணபித, சனீஸ்வரர், பைரவர் ஆகியோர் உளர். வலப்பால் அம்பாள் சந்நிதி. அபயவரதத்துடன் நின்ற திருக்கோலம் - பெயருக்கேற்ற முகவிலாசம்.

நேரே மூலவர் சந்நிதி. சுயம்புத் திருமேனி. நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. எப்போதும் குவளை சார்த்தியே வைக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது. அம்பாளுக்கு உண்டு. கடினமான பாணம். சாம்பிராணித் தைலம் சார்த்தப்படுகிறது. "சூதனமலர் பொழிலணி சிறுகுடி" - என்னும் ஞான சம்பந்தர் வாக்குக்கேற்பச் - சுவாமிக்கு முன்னால், முன் மண்டபத்தில் வலப்புறத்தில் சுவர் ஓரத்தில் தேனடை உள்ளது. சாளரம் அமைத்து அதன்வழியே வெளியிலிருந்து தேனீக்கள் வந்து போகுமாறு செய்து, மண்டபத்தின் உட்புறத்தில் இரும்புவலை போட்டுப் பாதுகாத்துள்ளனர். கோஷ்டமூர்த்தங்கள் முறையாக உள்ளன.

இங்குள்ள உற்சவ மூர்த்தங்களுள் சந்திரசேகர் அழகாகவுள்ளது. இததலத்திற்குரிய சிறப்பு மூர்ததமாகிய "சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி" மிகமிகச் சிறப்பானது. அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து அம்பாளை ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள்மீது கை போட்டுக்கொண்டு காட்சிதரும் அழகு - கண்டு அநுபவித்தால் உணர முடியும்.

மாசியில் ஏகதின உற்சவம். இம்மாதத்தில் நான்கு செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள். மார்கழி ஆதிரையும் பிரசித்தி. நாடொறும் நான்கு கால வழிபாடுகள். இத்தலத்தின் கிழக்கில் திருப்பாம்புரமும், தெற்கில் திருவீரிமிழலையும், மேற்கில் அன்னியூரும், வடக்கில் தேரழுந்தூரும் உள்ளன.


"செந்நெல வயலணி சிறுகுடி மேவிய

ஒன்னலர்புரம் எரித்தீரே

ஒன்னலர் புரம் எரித்தீர்உமை உள்குவார்

சொன்னலமுடையவர் தொண்டே." (சம்பந்தர்)


-ஆம்புவனந்

"துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலஞ் செய்துவகை

மன்னுஞ்சிறுகுடி யான்மார்த்தமே." (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. சூட்சமபுரீசுவரர் திருக்கோயில்.

திருச்சிறுகுடி

சரபோஜிராஜபுரம் அஞ்சல் - 609 503.

(வழி) பூந்தோட்டம் - குடவாசல் வட்டம்

திருவாரூர் மாவட்டம்.




































 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருப்பாம்புரம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவீழிமிழலை
Next