திருப்பாம்புரம்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருப்பாம்புரம்

திருமீயச்சூருக்குப் பக்கத்தில் உள்ளது.

காரைக்கால் - கும்பகோணம் (வழி) பேரளம் - சாலையில் கற்கத்தி வந்து அங்கிருந்து திரும்பி 2 A.e. அச்சாலையில் வந்தால் ஊரையடையலாம். கோயில் வரை வண்டிகள் வரும்.

நாகராஜன் (ஆதிசேஷன்) வழிபட்டதலம். பாம்பு + புரம் - பாம்புரம் என்று மருவியது. சம்பந்தர் தம் பாடலில் பாம்புர நன்னகர் என்று பாடுகிறார். இதன் வேறு பெயர்கள் (1) உரகவுரம் 92) சேஷபுரி என்பன. நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு

வாய்க்கவும், ராகு கேது போன்ற சர்ப்ப தோஷங்கள் விலகவும் இத்தலம் சிறந்த பிரார்த்தனையிடமாக விளங்குகிறது. இத்தலத்தில் பாம்பு கடித்து இறப்பவர்கள் இல்லையாம். வீடுகளில் பாம்பு வந்தாலும் சாதாரணமாகப் போய்விடும் - கடிப்பதில்லையாம். ஆதிசேஷன் உலகைத் தாங்கும் சோர்வு நீங்கி நல்ல விலமை பெற இறைவனருளை வேண்டி, உலகிற்கு வந்து, மஹா சிவராத்திரி நாளில் முதற்காலத்தில் குடந்தை நாகேஸ்வரரையும், இரண்டாங் காலத்தில் திருநாகேச்சுரம் நாகநாதரையும், மூன்றாங் காலத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும், நான்காங் காலத்தில் நாகூர் நாகேஸ்வரரையும் வழிபட்டு உடல் வளம் பெற்றான் என்பது தலவரலாறு. இத்தலத்தில் நாகராஜனுக்கு மூல, உற்சவ விக்ரஹங்கள் உள்ளன.

இறைவன் - பாம்புரேஸ்வரர், சேஷபுரீஸ்வரர், பாம்பீசர், பாம்புரநாரதர்.

இறைவி - பிரமராம்பிகை, வண்டார்குழலி

தலமரம் - வன்னி.

தீர்த்தம் - ஆதிசேஷ தீர்த்தம் (கோயிலுக்கு எதிரில் குட்டை போலுள்ளது)

சம்பந்தர் பாடல் பெற்றது.

ராஜகோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே சந்நிதி தெரிகிறது. இடப்பால் திருமலையீசுவரர் சந்நிதி உயரத்தில் தனிக்கோயிலாகவுள்ளது.இக்கோயிலின் கன்னி மூலையில் நின்று பார்த்தால் திருவீழிமிழமலை விமானம் தெரியும் எனப்படுகிறது. தற்போது மரங்கள் மறைக்கின்றன.

சட்டநாதர் சந்நிதி விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர், பிராகாரத்தில் தலமரமாகிய வன்னியையும் அதன் பக்கத்தில் வன்னீசுவரர் காட்சியையும் காணலாம். அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது. ஒரு கையில் தாமரையும் ஒருகையில் உருத்திராக்க மாலையையும் கொண்டு அம்பிகை வரத அபயமொடு அற்புதமாகக் காட்சி தருகின்றாள்.

அடுத்துள்ள மண்டபத்தில் பைரவர், சூரியன், மகாவிஷ்ணு, பிரம்மா, மாணிக்கவாசகர், சுந்தரர், அப்பர், சம்பந்தர், ஆதிசேஷன், சனீஸ்வரன் முதலிய மூல உருவங்கள் வரிசையாகக் காட்சியளிக்கின்றன. மூலவர் நோக்கிச் செல்லும்போது வலப்பால் உற்சவ மூர்த்தங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நேரே மூலவர் தரிசனம்.

பாம்பு வழிபட்ட தலமாதலின் மூலத்தானத்தில் எப்போதேனும் ஒரொரு காலங்களில் இன்றும் பாம்பினுடைய நடமாட்டம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி நாள்களில் மல்லிகை, தாழம்பூ வாசனை கோயிலுக்குள் ஓரிடத்தில் உலாவிக் கொண்டிருக்கும் என்பது பொருளாம்.

உற்சவத் திருமேனிகளுள் சுப்பிரமணியர் மூர்த்தம் மிகவும் விசேஷமானது.

வள்ளி தெய்வயானையுடன், வச்சிரம், வேல்தாங்கி இடக்காலால் மயிலை மிதித்துக்

காட்சி தருகிறார்.

மாசிமகத்தில் நடைபெறுமூ பஞ்சமூர்த்தி அபிஷேகமும் சிவராத்திரி உற்சவமும் இங்கு விசேஷம். மகாசிவராத்திரியில் ஆதிசேஷன் புறப்பாடு ஐதீகத் திருவிழாவாக நடைபெறுகிறது. மகா சிவராத்திரியில் ஆதிசேஷன் இறைவனை வழிபட சிற்றம்பல விநாயகர் துணையுடன் ஏற்படுத்திய குளம், வடக்கு வீதியில் சிற்றம்பலக் குட்டை என்னும் பெயரில் உள்ளது.

நாடொறும் நான்கு கால வழிபாடுகள். இராஜராஜன், இராஜேந்திரன், சுந்தரபாண்டியன், சரபோஜி மன்னன் முதலியோர் காலத்திய 15 கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. இக்கல்வெட்டுக்களில் இறைவன் "பாம்புரம உடையார்" என்றும், விநாயகர் "ராஜராஜப் பிள்ளையார்" என்றும் இறைவி "மாமலையாட்டி" என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். சரபோஜி மன்னனின் பிரதிநிதி சுபேதரர் ரகுபண்டிதராயன் என்பவனால் வசந்த மண்டபமொன்று கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இத்தலத்திற்கருகில் திருவீழிமிழலையும், சிறுகுடியும், வன்னியூரும் உள்ளன.

"ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யருவர்

ஒளிதிகழ் உருவஞ் சேர் ஒருவர்

மாதினை யிடமா வைத்த எம் வள்ளல்

மான்மறி யேந்திய மைந்தர்

ஆதி c அருள் என்று அமரர்கள் பணிய

அலைகடல் கடைய வன்றெழுந்த

பாதி வெண் பிறை சடை வைத்த எம்பரமர்

பாம்புர நன்னகராரே." (சம்பந்தர்)

-"ஆடுமயில்

காம்புரங்கொள் தோளியர் பொற்காவிற் பயில்கின்ற

பாம்புரங் கொண் உண்மைப் பரம்பொருளே." (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. பாம்புரேஸ்வரர் திருக்கோயில்.

திருப்பாம்புரம் - சுரைக்காயூர் அஞ்சல் 612 203

(வழி) பாலையூர் S.O.

குடவாசல் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.



































 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திலதைப்பதி
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  சிறுகுடி
Next