திருநள்ளாறு

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருநள்ளாறு

1) காரைக்கால் - கும்பகோணம் சாலையில் காரைக்காலிலிருந்து 5 A.e. தொலைவில் உள்ளது. பேரளம், காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் முதலிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன.

சிவத்தலமாயினும் இங்குள்ள சனிபகவான் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. சனிபெயர்ச்சிக்கு இங்கு வந்து கூடும் மக்கள் ஆயிரக்கணக்காவர். நிடத நாட்டுமன்னனான நளன், விதர்ப்ப நாட்டு வீரசேனன் மகள் தயந்தியைச் சுயம்வரத்தின் மூலமாக மணந்து கொண்டான். தேவர்களைப் புறக்கணித்து நளனைத் தமயந்தி மணந்தது கேட்டு சனிபகவான் நளன்மேல் கோபம் கொண்டார். நளனிடம் ஏதும் குறைகாணாது 12ஆண்டுகள் காத்திருந்து, காலில் நீர்பட்டும் படாமலும் கழுவிச் சென்ற குற்றங்கண்டு அவனைப்பற்றினார். இதனால் நளன் பட்ட துன்பங்களை நாடறியும். துன்பங்கள் தீர்ந்து நாடாளத் தொடங்கியும் சநியின் வேகந்தணியாமையின் தீர்த்தயாத்திரையை நாரதர் உபதேசப்படி மேற்கொண்டான். திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலத்தில்) அவனைச் சந்தித்த பரத்வாஜ முனிவர், திருநள்ளாறு சென்று வழிபடுமாறு அறிவுரை கூறினார். அவ்வாறே நளன், திருநள்ளாறடைந்து, தீர்த்தம் உண்டாக்கி, நீராடி, இறைவனை வழிபட, திருநள்ளாற்று ஆலயத்துள் நுழைந்தான். அவனைப் பற்றியிருந்த 'சனி' உள்ளே நுழைய அஞ்சி அங்கேயே தங்கிவிட்டார். இதனால் இத்தலத்தில் சனிபகவான் சந்நிதி மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகின்றது.

இத்தலம் சப்த விடங்கத்தலங்களுள் ஒன்று ஏனையவை -

1. திருவாரூர் 2. நாகப்பட்டினம் 3. திருமறைக்காடு 4. திருக்காறாயில் 5. திருவாய்மூர் 6. திருக்கோளிலி என்பன. இங்குள்ள தியாகராஜர் - நகவிடங்கத் தியாகர் என்று அழைக்கப்படுகின்றனர். நடனம் - உன்மத்த நடனம். திருஞானசம்பந்தர் அனல் வாதத்தில் எழுதியிட்ட 'போகமார்த்த பூண்முலையாள்' என்னும் பதிகம் - பச்சைத் திருப்பதிகம் - இத்தலத்திற்குரிய பாடலேயாகும். 'சனி' யைப் பற்றிய வரலாறாவது-

"சூரியனுக்குச் 'சஞ்ஞிகை' என்றொரு மனைவியிருந்தாள். அவள் துவட்டா என்பவனின் மகள். அவள் சூரியனுடன் கூடிவாழ்ந்து 'வைவஸ்தமனு'வையும் யமனையும், யமுனை என்னும் பெண்ணையும், பெற்றாள். பின்பு, சூரியனுடைய வெப்பத்தைத் தாங்க முடியாமல், தன் நிழலையே 'சாயாதேவி' எனப் படைத்து கணவனை நீங்காமல் இருக்குமாறு கூறித் தந்தை வீடு சென்றாள். தந்தை கடிந்த கொள்ளவே, கணவனிடம் வர அஞ்சி வடதுருவம் சென்று குதிரை வடிவுடன் சூரியனை நோக்கித் தவம் செய்திருந்தாள்.

சாயாதேவி சூரியனடன் வாழ்ந்து, 'சாவர்ணி' என்ற மனுவையும், 'சனி'யையும், 'பத்திரை' என்ற பெண்ணையும் பெற்றாள். மூத்தாள் பிள்ளைகளைச் சாயாதேவி கொடுமைப்படுத்தினாள். யமன் அவளைக் காலால் உதைக்க முன்வர, அவளும் 'அவன்கால்முறியுமாறு' சாபமிட்டான். சூரியன் இதை அறிந்து, குணமுடைய வரமளித்து, சாயாதேவியிடம் சென்று, அவள் இன்னாள் என்பதை அறிந்து, 'சஞ்ஞிகை'யைத்தேடி சென்றான். தவத்தில் இருக்கும் அவளை அழைத்து வந்து இருமனைவியரோடும் இல்லறம் நடத்தினான். மனுவை மன்னனாகவும், யமனைக்காவலனாகவும், யமுனையை நதியாகவும், சனியைக் கிரகங்களுள் ஒன்றாகவும் இருக்குமாறு செய்தான். 'சனி'யும் காசி சென்று விசுவநாதரை வழிபட்டுத் தன், பதவிக்கு வேண்டிய வலிமையைப் பெற்றார்.

சனிபகவானக்கு 'மந்தன்', 'சனைச்சரன்' என்னும் பெயர்களுண்டு. சனைச்சரன் என்பதே 'சனீஸ்வரன்' என்றாயிற்று. யமன் தன் இரண்டாந்தாயின் மீது கொண்ட கோபத்தால் சனியை அடித்தான். அதனால் 'சனி'யின் கால் நொண்டியாயிற்று. தக்ஷயாகத்தில் 'சனி' ஒரு கண்ணையிழந்தார்.

'சனி' பகவான் 4 கரங்களுடையவர். வலக்கைகளில் வர, தானமுத்திரையும் பாம்புங்கொண்டவர். இடக்கைகளில் வில்லும் சூலமும் உடையவர். இவருக்கு கருநிறமுள்ள கழுகு வாகனமாகச் சொல்லப்பட்டிருந்தாலும் சில ஆகமங்களில்

இவருக்குக் 'காகம்' வாகனமாகச் சொல்லப்பட்டுள்ளது. இவர் மனைவியின் பெயர் 'ஜ்யேஷ்டாதேவி' இவருக்குத் தானியம் எள், சமித்து -வன்னி, மலர் - கருநீலம், சுவை - கசப்பு, நண்பர்கள் - புதன், குரு, சுக்கிரன் ஆகியோர். பகைவர் - சூரியன், சந்திரன், செவ்வாய்.

சனி பகவான் நவக்கிரகங்களில் ஒருவர். ஒவ்வொரு ஜாதகருக்கும் ஆயுள் காரகனாக விளங்குபவர். 'சனியைப்போலக் கொடுப்பவருமில்லை. கெடுப்பவருமில்லை' என்பது பழமொழி. ஆதலின் இவரை அனைவரும் பயபக்தியுடன் வழிபடுவர்.

இத்தலத்தில் சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக விளங்குகின்றார்.

இவருக்குத் தனியே அஷ்டோத்ரம், சஹஸ்ரநாம அர்ச்சனைகள் உண்டு. திருமால், பிரமன், இந்திரன், திசைப் பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம்.

"நள்ளாறா என நம் வினை நாசமே" என்பார் அப்பர்.

இறைவன் - தர்ப்பாரண்யேசுவரர், திருநள்ளாற்றீஸ்வரர்.

இறைவி - பிராணாம்பிகை, பிராணேஸ்வரி, போகமார்த்த பூண்முலையாள்.

தலமரம் - தர்ப்பை.

தீர்த்தம் - நள தீர்த்தம்.

தலவிநாயகர் - சொர்ணவிநாயகர்.

மூவர் பாடலும் பெற்ற தலம்.

நான்கு வீதிகளுக்கு நடுவில் கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலைகளோடு கூடிய ராஜகோபுரம். அதற்கு முன்புற்ற முற்றம் மண்டபமக்கப்பட்டுள்ளது. இங்கு வடபுறம் அலுவலகமும் தென்புறம் இடையனார் கோயிலும் உள்ளது. இக்கோயில் இடையன், அவள் மனைவி, கணக்கன் ஆகியோர் உருவங்கள் உள்ளன. இதுப்பற்றிச் சொல்லப்படும் தலவரலாற்றுச் செய்தியாவது -

"இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படிக் கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்து வந்தான். கணக்கன் அப்பாலைத் தன் வீடடுக்கு அனுப்பிப் பொய்க் கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான். செய்தியறிந்த மன்னன் கோபம் கொண்டான். அப்போது இறைவன், இடையனைக் காக்கவும் கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணித் தம் சூலத்தை ஏவினார். அச்சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலினள் பலிபீடம் சற்று விலகியுள்ளது. சூலம் கணக்கன் தலையைக் கொய்தது - இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள் புரிந்தார்."

விசாலமான பிராகாரம். உயர்ந்த சுற்றுமதில். சுவரில் நளன் வரலாறு வண்ண ஒவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபம் உள்ளது. கோபுரவாயிலின் வடபால் 'சனிபகவான்' சந்நிதி உள்ளது. மகர, கும்பராசிகளுக்குச் சனி, அதிபதியாதலின் முன்னால் மகர, கும்பராசிகளின் உருவங்கள் உள்ளன. இத்தலத்தில் பிரதானம் இப்பகவானுக்கே. சனிபகவானுக்குத் தங்கத்தாலான காகவாகனமும் தங்கக் கவசமும் உள்ளது. சனிதோஷமுள்ளவர்கள் நெய்தீபம் ஏற்றும் பிரார்த்தனை இங்கு விசேஷம். அதையடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம்.

உள் சுற்றில் சுந்தரர், அறுபத்துமூவர் மூல உருவங்கள் உள்ளன. வரிசை முடிவில் நளன் வழிபட் நளேஸ்வரர் சிவலிங்கமும் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், பிரமனும் துர்க்கையும் உள்ளனர்.

சொர்ண கணபதி சந்நிதி தலவிநாயகர் சந்நிதியாகும். சப்தவிடக்த் தலசிவலிங்கத் திருமேனிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும், ஆதிசேஷன், நளநாராயணப் பெருமாள், மகாலட்சுமி, பைரவர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. நடராசா அழகு. படிகளேறிச் செல்லும்போது பலிபீடம் சற்று விலகியிருப்பதைக் காணலாம். உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

மூலவர் - சிவலிங்கத் திருமேனி - சுயம்பு. (மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்புமூர்த்தி. சிவலிங்கத்தின் மீது முளைத்த தழும்புள்ளது) பக்கத்தில் உன்மத்த நடன தியாகேசர் தரிசனம். (நகவிடங்கத் தியாகர்) தேவி நீலோத்பலாம்பாள். இச்சந்நிதியில் செய்யப்படும் மரகதலிங்க வழிபாட்டுச் சிறப்பைக் காணப் பூர்வ புண்ணியம் செய்திருக்கவேண்டும்.

நாடொறும் ஆறுகால வழிபாடுகளும் செம்மையாக நடைபெறும் இத்திருக்கோயிலில் தருமையாதீனத்தின் அருளாட்சிக்குட்பட்டதாகுமூ. வைகாசியில் பெருவிழா நடைபெறுகிறது.

நளதீர்த்தம் கோயிலுக்குச் சற்று தள்ளி உள்ளது. இத்தலத்திற்கு வரும் மக்கள் எண்ணெய் தேய்த்து இதில் நீராடுகின்றனர். இத்தீர்த்தத்திற்குச் செல்லும் வழி தெளிவாக வளைவின் மூலம் காட்டப்பட்டுள்ளது. இதில் நவக்கிரகங்களுக்கும் தனித் தனிக் கிணறுகள் உள்ளன. நளன் தோஷம் நீங்க வழிபட்ட தலம். நவக்கிரக சந்நிதி இல்லை. கோயிலுக்கு எதிரில் சந்நிதி வீதியில் தேவஸ்தானச் சுற்றுலா விடுதி உள்ளது. ஆதீன மடாலயம் தெற்கு வீதியில் உள்ளது.

கோயிலுள்ளும் பொது மண்டபம் உள்ளது. யாத்திரிகர்கள் இரவு தங்கிச் செல்லாம். தக்கபாதுகாப்பு உள்ளது. இத்தலபுராணம் சுப்பிரமணியக் கவிராயரால் பாடப்பட்டுள்ளது. இத்தலத்திற்குப் பக்கத்தில் 2 A.e தொலைவில் 'தக்களுர்' என்னும் வைப்புத்தலம் உள்ளது.

"போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன்னகல்ம்

பாகமார்த்த பைங் கண் வெள்ளேற்றண்ணல் பரமேட்டி

ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல்

நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே." (சம்பந்தர்)

"குலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக்

குலவரையின் மடப்பாவை இடப் பாலானை

மலங் கொடத்து மாதீர்த்தம் ஆட்டிக்கொண்ட

மறையவனைப் பிறைதவழ் செஞ்சடையினானைச்

சலங் கொடுத்துத் தயாமூல தன்ம மென்னுந்

தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க்கெல்லாம்

நலங் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை

நானடியேன் நினைக்கப்பெற்றுய்ந்த வாறே" (அப்பர்)

"மாதினுக்கு உடம்பு இடங் கொடுத்தானை

மணியினைப் பணிவார் வினை கெடுக்கும்

வேதனை வேதவேள் வியர் வணங்கும்

விமலனை அடியேற்கு எளி வந்த

தூதனைத் தன்னைத் தோழமையருளித்

தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்

நாதனை நள்ளாறனை அமுதை

நாயினேன் மறந்தென் நினைக்கேனே." (சுந்தரர்)

சனிபகவான் துதி

"பெருவாச நளனொடு வந்தவன் தீர்த்தமாடுதலாற் பெற்றபேற்றால்

ஒருவா வந்தெம் பெரமானருள் பெற்று மிகவுமனம் உவகைபூப்பக்

கருவாசல் புக்கார்போல் புகுந்தொளிரு நள்ளாற்றுக் கனக வச்ரத்

திருவாசலிடனிற் "மந்தன்" இரு செந்தளிர்த்தாள் சிந்தை செய்வாம்."

(தலபுராணம்)

-"இருமையினும்

எள்ளாற்றின் மேவாத வேற்புடையோர் சூழ்ந்திறைஞ்சும்

நள்ளாற்றின் மேவிய என் நற்றுணையே." (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்

திருநள்ளாறு - அஞ்சல் - 609 607

(வழி) மயிலாடுதுறை. காரைக்கால்.






























 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is தருமபுரம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  கோட்டாறு
Next