Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருவூறல் - தக்கோலம்

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

திருவூறல் - தக்கோலம்

மக்கள் வழக்கில் தக்கோலம் என்று வழங்கப்படுகிறது.

சென்னையிலிருந்தும் காஞ்சிபுரத்திலிருந்தும் நேர்ப் பேருந்து வசதி உள்ளது. காஞ்சியிலிருந்து 30 A.e இருப்புபர்தை நிலையம். ஊருக்குப் பக்கத்தில் கல்லாறு ஓடுகிறது. தக்கன் தலையைக் கொய்ததலம் என்பர். தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு ஓலமிட்டதால் 'தக்கன் - ஓலம்' - இப்பதி 'தக்கோலம்' என்று பெயர் பெற்றதாக உள்ளூர்ச் செய்தி அறிவிக்கின்றது. இதற்கு அரண் செய்வதுபோல தேரடிக்கு அருகில் வீரபத்திரர் கோயில் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்றது.

இறைவன் - ஜலநாதேஸ்வரர், உமாபதீசர்

இறைவி - கிரிராஜ கன்னிகை, மோகனவல்லி

தீர்த்தம் - நந்தி தீர்த்தம், பக்கத்தில் கல்லாறு ஓடுகிறது.

கோயில் ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கோபுரத்தில் பலவகைச் சிறபங்கள் உள்ளன. இவற்றுள் மார்க்கண்டேயருக்காக இறைவன் இயமனை உதைத்தருளும் காட்சியும் சிற்பமாகவுள்ளது -காணத்தக்கது.

கோபுரவாயில் நுழைந்ததும் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. பக்கத்தில் தீர்த்தக்குளம் உள்ளது. செம்மையான நிலையில் இல்லை.

சுவாமி சந்நிதி எதிரில் சாளரம் உள்ளது. வெளியில் கொடிமரம் நந்தி பலிபீடங்கள் உள்ளன. பக்கவாயில் வழியாக நுழைந்து துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கிச்சென்றால் ஒரு புறத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது. அடுத்துள்ள மண்டபத்தில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனர் முதலிய உற்சவத் திருமேனிகளும், நடராச சபையும் உள்ளன.

வாயில் நுழைந்து செல்லின் துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். நடனக் கோலத்தில் மேற்கையை உயர்த்தி உரிய முத்திரையோடு திகழ்கின்ற அருமையான அமைப்பு. நேரே மூலவர் தரிசனம். சிவலிங்கத் திருமேனி பிருதிவி (மணல்) லிங்கம். தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம். பழமையான மூர்த்தி.

சந்நிதிக்கு எதிரில் ஓரத்தில் சுரங்கப்பாதை உள்ளது. கல்லால் மூடப்பட்டுள்ளது. உள் பிரகாரத்தில் சுப்பிரமணிர். சம்பந்தர், வல்லபை விநாயகர், ஆறுமுக சுவாமி, முதலிய சந்நிதிகள் உள்ளன.

கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை முதலிய மூர்த்ங்கள் உள்ளன. இவற்றுள் துர்க்கை நீங்கலாக உள்ள மற்ற மூர்த்தங்கள் அனைத்தும் அமர்ந்த நிலையிலேயே உள்ளன. தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்க விட்டு, இடக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபயமாகக் கொண்டு, இடக்கையைத் தொடைமீது வைத்துள்ளார். பிரம்மாவும் அமர்ந்த நிலை விஷ்ணு துர்க்கை அமைப்பு நின்ற நிலையினதாயினம் அழகான வேலைப்பாடு - இரு திருவடிகளுள் ஒன்றை பாத அளவில் மடித்து ஒன்றால் கீழேயுள்ள மகிடத்தை ஊன்றி, (குழலூதும் கண்ணன் நிற்கும் அமைப்பில்) நிற்கும் அற்புதமான திருக்கோலம்.

பைரவர் சந்நிதி உள்ளது. வாயிலின் இருபுறமும் சூரிய சந்திரர்கள் உளர். அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம், அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள்.

இச்சந்நிதிக்குப் பக்கத்தில் தனியே உள்ள மண்டபத்தில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி கம்பீரமாக உள்ளது.

சித்திரை மாதத்தில் பத்து நாள்களுக்குப் பெருவிழா நடைபெறுகிறது. இது தவிர, ஆருத்ரா, சஷ்டி, நவராத்திரி முதலிய விழாக்களும் நடைபெறுகின்றன.

கல்லாற்றின் கரையில் உள்ள கோயில் - ஜலகண்டேஸ்வரர் (கங்காதரேஸ்வரர்) கோயில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. பூஜைகளில்லை. இதன் மேற்கில் உள்ளது சத்திய கங்கை தீர்த்தம். கிழக்கில் உள்ள நந்தி வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்து கொண்டிருந்தது. தற்போது நின்றுவிட்டது. நந்தி வாயிலிருந்து விழும் நீர், சிவலிங்கத்தைச் சுற்றிச் சென்று வெளியில் வந்து, மீண்டும் மற்றொரு நந்தி வாயிலிருந்து விழுந்து, குளத்தில் நிரம்பி பின்னர் ஆற்றில் ஓடும் அமைப்பில் இது அமைந்துள்ளது. இப்போதும் ஆற்றில் நீர்ப்பெருக்கு உண்டாயின் அப்போது நந்தி வாயில் நீர் விழும் என்று சொல்கிறார்கள்.

இக்கோயிலில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன் விழாத் திட்டத்தின் கீழ் திருப்பணிகள் நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடந்துள்ளது. சித்தாந்த சரபம் அஷ்டாவதானம் பூவை கல்யாண சுந்தர முதலியார் இத்தலத்திற்குத் தலபுராணம் பாடியுள்ளார்.

"மாறில் அவுணர் அரணம் அவைமாய ஓர் வெங்கணையாலன்று

நீறெழ எய்த எங்கள் நிமலனிடம் வினவில்

தேறலிரும் பொழிலுந் திகழ் செங்கயலும்பாய் வயலுஞ்சூழ்ந்த

ஊறல் அமர்ந்த பிரான் ஒலியார் கழல் உள்குதுமே."

"கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன் வந்தெய்துதலுங் கலங்கி

மறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில்

செறுத்து எழு வாள்அரக்கன் சிரந்தோளும் மெய்யுந்நெரிய அன்று

ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை உள்குதுமே."

(சம்பந்தர்)

- ஏற்புடையாய்

ஊறல் அடியார் உறத் தொழுது மேவு திரு

வூறல் அழியா உவகையே.

- அருட்பா

அஞ்சல் முகவரி -

அ.மி. ஜலநாதேஸ்வரர் திருக்கோயில்

தக்கோலம் - அஞ்சல் -631 151

அரக்கோணம் வட்டம்,

வேலூர் மாவட்டம்.

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருமாற்பேறு - திருமால்பூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  இலம்பையங் கோட்டூர் - எலுமியன் கோட்டூர்
Next