Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருமாற்பேறு - திருமால்பூர்

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

திருமாற்பேறு - திருமால்பூர்

மக்கள் வழக்கில் 'திருமால்பூர்' என்று வழங்குகின்றது.

(1) சென்னையிலிருந்து நேரே பேருந்து செல்கிறது, ஆனால் அடிக்கடி இல்லை. நேரம் விசாரித்துச் செல்ல வேண்டும்.

(2) காஞ்சியிலிருந்து அடிக்கடி பேருந்து வசதியுள்ளது. இவ்வழியே எளிதானது.

(3) அரக்கோணம் - காஞ்சிபுரம் இருப்புப் பாதையில் இத்தலம் ஒரு இருப்புப்பாதை நிலையம். இப்பாதை தற்போது அகலப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. நிலையத்தில் இறங்கி மேற்கே 5A.e. உள்ளே சென்றால் ஊரையடையலாம். திருமால், இறைவனை வழிப்டடுப் பேறு பெற்ற தலம், எனவேதான் 'மாற்பேறு' என்னும் பெயர் பெற்றது. திருவீழிமிழலைக்குரிய வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகின்றது. அதாவது திருமால், நாடொறும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சித்து வழிபட்டாரென்றும், ஒரு நாள் மலர் ஓன்று குறைய, தம் கண்ணையே பறித்து மலராக இட்டு அர்ச்சித்து அருள் பெற்றார் என்பதும் வரலாறு. இவ்வாறு வழிபட்டுத் தம் சக்ராயுதமான 'சுதர்சனத்தை'த் திரும்பப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் திருமாலின் உற்சவத் திருமேனி ஒன்று, ஒரு கையில் தாமரை மலரும் மறு கையில் 'கண்'ணும் கொண்டு, நின்ற கோலத்தில் இருப்பதை இக்கோயிலில் காணலாம்.

கோயில் ஊர் நடுவே உள்ளது. கோயிலுக்கு நேர் எதிரில் வீதியின் மறுமுனையில் விநாயகர் கோயில் உள்ளது.

திருமால் வழிபட்டுச் சக்ராயுதம் பெற்ற தலமாதலின் இதற்கு 'ஹரிசக்ரபுரம்' என்றும் பெயர்.

சந்திரன் வழிபட்ட தலம்.

சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற தலம்.

இறைவன் - மணிகண்டேஸ்வரர், தயாநிதீஸ்வரர், பிரவாளேஸ்வரர், சாதரூபர், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், மால்வணங்கீசர், (மணிகண்டேஸ்வரர் என்னும் திருப்பெயரே வழக்கில் உள்ளது.)

இறைவி - அஞ்சனாட்சி, கருணாம்பிகை.

தலமரம் - வில்வம்

தீர்த்தம் - சக்கர தீர்த்தம. (கோயிலுக்கு வெளியில் பக்கத்தில் புதர்மண்டிப் பயனின்ற உள்ளது.)

ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது.

சிற்பங்களில்லை. சிற்பத் தூண்கள் அமைப்பில் உள்ளது. பழமையான கோபுரம். முகப்பில் வலம்புரி விநாயகர் உள்ளார். வயிற்றுப் பகுதி சற்றுப் பின்னமடைந்துள்ளது. பக்கத்தில் உள்ள தீர்த்தம் - சக்கரத் தீர்த்தம். பயன்படுத்தப்படும் நிலையில் இல்லை.

உள் சுற்றுப் பிராகாரம் செடிகளடர்ந்துள்ளது. உயரமான பீடத்தின்மீது பலிபீடம் கவசமிட்ட கொடிமரம், நந்தி முதலியவை தனித்தனியே உள்ளன. மேலே சிமெண்டு ஷீட்டுகள் வேயப்பட்ட கொட்டகை போடப்பட்டுள்ளது.

அடுத்து உள்ள உள்வாயில், மேற்புறம் பஞ்ச மூர்த்திகளின் சுதை வேலைப்பாடுகளுடன் காட்சி தருகின்றது.

வெளியில் வலப்பால் அம்பாள் ஆலயமும், அடுத்து யாக சாலையும் உள்ளன. உள் வாயிலுக்கு இரும்புக் கதவு போடப்பட்டுள்ளது. வாயிலின் வெளித் தூண்களில் பசுவொன்று சிவலிங்கத்திருமேனிக்கு பால்சுரந்து வழிபடும் சிற்பமும், மறுபுறம் தண்டபாணி சிற்பமும் உள்ளன. (வாயிலுக்கு வெளியில்) வலப்பால்

நவக்கிரக சந்நிதி உள்ளது. வாயிலைக் கடக்கும்போது இடப்பால் நந்தி தேவர் நின்ற கோலத்தில் காட்சி தருவதைத் தரிசிக்கலாம்.

உள் பிராகார வலத்தில் சூரியன், நால்வர், சோளீஸ்வரர், பஞ்ச மாதாக்கள், பாலகணபதி, உச்சிஷ்ட கணபதி, சிதம்பரேஸ்வரர், கஜலட்சுமி, வள்ளி தெய்வயானை முருகன் ஆகிய சந்நிதிகள் உள்ளன. (ஐப்பசியில் அன்னாபிஷேகம் சிதம்பரேஸ்வரருக்குத்தான் சிறப்பாக நடைபெறுகின்றது.) அடுத்துப் பள்ளியறை உள்ளது. தனியறையா இல்லை. இரும்புத்தடுப்பு மட்டுமே உள்ளது. ஊஞ்சல் உள்ளது. அடுத்து வீரபத்திரர், பைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன.

பிரகார வலம் முடித்து மேலேறும்போது வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். ஒருபுறம் வல்லபை விநாயகர் பத்துக் கரங்களுடன் காட்சி தருகின்றார். இது அபூர்வ அமைப்பாகும். மறுபுறம் சண்முகர் உள்ளார்.

நடுவில் மூலவரை பார்த்தவாறு மகா விஷ்ணு, கூப்பிய கரங்களுடன் காட்சி தருகின்றார்.மேலே விமானம் உள்ளது. அவருக்கு முன் நந்தி உள்ளது. சந்நிதி வாயிலைக் கடந்து மண்டபத்தை அடைகிறோம். கட்டமைப்புடைய மண்டபம். இங்குள்ள தூண்களில் தக்ஷிணாமூர்த்தி, சூரியன், மகாவிஷ்ணு, பாலசுப்பிரமணியர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், விநாயகர், முருகன், நான்கு முகங்களும் நன்கு தெரிய பிரம்மா, அம்பாள் வில்வடியில் பெருமானை வழிபடுவது, காளிங்கநர்த்தனம், காமதேனு, பைரவர், வீரபத்திரர், ஓற்றைக் காலில் நின்று தவம் செய்தல், பலவகையான சிம்மங்கள் முதலான பல அரிய சிற்பங்கள் உள்ளன. நடராசர் தெற்கு நோக்கியுள்ளார். எதிரில் வாயில் உள்ளது. மணிவாசகரும் சிவகாமியும் உடன் எழுந்தருளியுள்ளனர். நேரே மூலவர் தரிசனம். சிவலிங்கத்திருமேனி - தீண்டாத திருமேனி. குவளை (கவசம்) சார்த்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது. அவ்வப்போது புனுகுசட்டம் சார்த்தப்படுகிறது. திருமேனி கூம்பு வடிவில் உள்ளது. அழகான மூர்த்தம், கோஷ்ட மூர்த்தங்களாகத் தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உளர். துர்க்கை உருவம் மிகவும் அழகு வாய்ந்தது -

அஷ்டபுஜங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி அழகாகக் காட்சி தருகின்ற திருமேனி. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. உற்சவத் திருமேனிகளாகச் சந்திரசேகரர், பிரதோஷநாயகர், பள்ளியறைநாதர், விநாயகர், சுப்பிரமணியர், நால்வர், தலஜதீகத்துக்குரீய முறையில் ஒரு கையில் தாமரையும் மறுகையில் 'கண்'ணும் கொண்டிலங்கும் மகாவிஷ்ணு முதலிய திருமேனிகள் உள்ளன.

மூலவருக்கு எதிரில் உள்ள மகாவிஷ்ணுவுக்குத் தீபாராதனை முடிந்த பின்பு சடாரி சார்த்தி தீர்த்தம் தரும் மரபு உள்ளது.

அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. தெற்கு நோக்கியது. துவாரபாலகியர் உளர். அம்பாள் நின்ற கோலம். அபயவரத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள்.

சந்நிதியில் மேற்புறத்தில் கல்லில் மீன் உருவமும் கைகூப்பிய உருவமொன்றும், பக்கத்தில் யானையும், பெண் ஒருத்தியும் நிற்கும் அமைப்பில் சிற்பம் உள்ளது.

நாடொறும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. மாசி மகத்தில் பத்து நாள்களுக்குப் பெருவிழா நடைபெறுகின்றன. இது தவிர, கிருத்திகை, ஆடிவெள்ளி, ஆடிப்பூரம், கார்த்திகை தீபம், ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா, கருடசேவை முதலிய சிறப்பு விழாக்களும் நடைபெறுகின்றன.

நகரத்தார் திருப்பணியில் 26-4-1937-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பெற்ற இத்திருக்கோயிலில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன் விழாத் திட்டத்தின் கீழ் சுவாமி அம்பாள் விமானங்கள் திருப்பணி செய்யப்பட்டு அவர்களின் ஆதரவாலேயே விபவ ஆண்டு ஆவணி 22 ஆம் நாள் (7-9-89) அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

ஊர் சிறியது. வெளியூரிலிருந்து செல்லும் பயணிகளுக்கு உணவு தங்கும் வசதிகள் இங்குக் கிடைக்காது. காஞ்சிபுரத்திற்கே வரவேண்டும்.

இத்தலத்திற்குப் பக்கத்தில் 'கோவிந்தவாடி' என்னும் ஊர் உள்ளது. இங்குள்ள

தட்சிணாமூர்த்தி மிக்க அழகும் சிறப்பும் உடையதாகும். கட்டாயம் தரிசிக்க வேண்டும்.

"ஊறியார் தருநஞ்சினை உண்டு உமை

நீறுசேர் திருமேனியர்

சேறுசேர் வயல் தென்திரு மாற்பேற்றின்

மாறிலா மணி கண்டரே."

"குருந்தவன் குருகவன் கூர்மையவன்

பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்

கருந் தடமலர்க் கண்ணி காதல் செய்யும்

மருந்தவன் வளநகர் மாற்பேறே."

(சம்பந்தர்)

"துணி வண்ணச் சுடராழி கொள்வான் எண்ணி

அணி வண்ணத்து அலர்கொண்டு அடி அர்ச்சித்த

மணி வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு

பணி வண்ணத்தவர்க்கு இல்லையாம் பாவமே,"

"ஐயனே அரனே என்று அரற்றினால்

உய்யலாம் உலகத்தவர் பேணுவர்

செய்யபாதம் இரண்டும் நினையவே

வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே."

(அப்பர்)

"சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி

நலமுடைய நாரணற்கு அன்று அருளியவாறு என்னேடீ

நலமுடைய நாரணன்தன் நயனம் இடந்து அரனடிக்கீழ்

அலரக இட ஆழி அருளினன்காண் சாழலோ."

(திருச்சாழல் - மாணிக்கவாசகர்)

பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூக் குறையக்

தம் கண் இடந்து அரன் சேவடிமேற் சாத்தலுமே

சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்கு அருளியவா (று)

எங்கும் பரவி நாம் தோணோக்கம் ஆடாமோ."

(தோணோக்கம் - மாணிக்கவாசகர்)

-'சொல்வரிக்குக்'

காற்பேறு கச்சியின் முக்காற்பேறு இவன் என்னும்

மாற்பேற்றின் அன்பர் மனோ பலமே.

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. மணிகண்டேஸ்வரர் திருக்கோயில்

திருமால்பூர் -அஞ்சல் - 631 053

அரக்கோணம் வட்டம்

வேலூர் மாவட்டம்.


 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவல்லம் - திருவலம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவூறல் - தக்கோலம்
Next