Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

மயிலாடுதுறை

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

மயிலாடுதுறை

சென்னை திருச்சி - இராமேஸ்வரம் மெயின்லைன் இருப்புப் பாதையில் உள்ள சந்திப்பு நிலையம். சென்னை, கடலூர், தஞ்சை, விழுப்புரம் முதலான பல ஊர்களிலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் ஏராளமாகவுள்ளன. இத்தலத்தின் ஒரு பகுதியாகிய தருமபுரத்தில்தான் தருமையாதீனம் உள்ளது. ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா? (மாயூரம் - மயிலாடுதுறை) என்னும் முதுமொழி இதன் சிறப்பை விளக்கும். காசிக்குச் சமமான ஆறுதலங்களுள் இதுவுமொன்று.

அம்பாள் மயில்வடிவில் வழிபட்ட தலம். அம்மை மயில் வடிவங்கொண்டு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும். இத்தலம் இதனால் கௌரி மாயூரம் என்றும் பெயர் பெறும். சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாம். இந்திரன், பிரமன், வியாழபகவான், அகத்தியர், சப்தமாதாக்கள், உமாதேவி ஆகியோர் வழிபட்ட தலம்.

இறைவன் - மயூரநாதர்.

இறைவி - அபயாம்பிகை.

தலமரம் - மா,வன்னி

தீர்த்தம் - பிரமதீர்த்தம், காவிரி, ரிஷபதீர்த்தம்.

ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

(ஆவடுதுறையில் உலவாக்கிழி பெற்ற ஞானசம்பந்தர் அங்கிருந்துமூ போந்து வழிபட்ட தலங்களுள் இஃதும் ஒன்று. திருத்துருத்தி வழிபட்டுப் பின்பு இங்குவந்து தொழுது, திருவிளநகர் சென்றார். கோலக்கா வரை வந்து ஞானசம்பந்தர் வழியனுப்ப அப்பர் சோழநாட்டுத் தலயாத்திரையைத் தொடங்கியபோது திருச்செம்பொன்பள்ளி தொழுத பின்பு இங்கு வந்தார்.

இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது. இங்கு உள்ள முருகன் சந்நிதி - குமரக்கட்டளை மட்டும் தருமையாதீனத்திற்குரியது. மிகப்பெரிய கோயில். ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடனும், அழகான சிற்பங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. உட் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. ராஜகோபுரத்துள் நுழைந்ததும் இடப்பால் திருக்குளம். வலப்பால் குமரக்கட்டளை அலுவலகம்.

பிராகாரத்தில் இடப்பால் குமரக்கட்டளைக்குரிய (தருமையாதீனத்திற்குரியதான) ஆஸ்தான மண்டபம் உள்ளது. மண்டபத்தில் இருபுறமும் விநாயகர் சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. மண்டபத்தில் இரு கொடிமரங்கள் உள. நேரே பார்த்தால் சுவாமி சந்நிதி தெரிகிறது. வாயிலை தாண்டிச் சென்றால் உட்சுற்றில் இடப்பால் சந்திரன், மயிலம்மை சந்நிதிகளும், வலப்பால் உற்சவ மூர்த்தங்களின் பாதுகாப்பறையும், இடப்பால் நால்வர், சப்த மாதாக்களைத் தொடர்ந்து அறுபத்துமூவர் உற்சவத் திருமேனிகளும், இந்திரன் அக்கினி எமன் நிருதி ஆகியோர் வழிபட்ட இலிங்கங்களும், மகாவிஷ்ணுவும், வருணன் வாயு வழிபட்ட லிங்கங்களும், மகாலட்சுமியும், அஷ்டலட்சுமியும் நமக்குக் காட்சி தருகின்றனர். திருமுறைக்கோயில் தனிச் சந்நிதியாகவுள்ளது. நடராச சபையில் உள்ள அம்பலவர் திருமேனி மிகவும் கம்பீரமாகக் காட்சி தருகிறது. அருணாசலேஸ்வரர், நவக்கிரக சந்நிதி, சனிபகவான், சூரியன் ஆகியோரை வழிபட்டு மேலே சென்று துவார பாலகரைத் தொழுது உட்சென்றால் மூலவர் தரிசனம்.

கோஷ்டத்தில் நர்த்தனகணபதி, ஜ்வரதேவர், ஆலிங்கன சந்திரசேகரர், தட்சிணாமூர்த்தி, பிரமன், பிட்சாடனர், கங்காவிசர்சனர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. அம்பாள் சந்நிதி தனியாகவுள்ளது. அபயாம்பிகை சதகப் பாடற் கல்வெட்டு உள்ளது. உள் மண்டபத்தில் அனவித்யாம்பிகை சந்நிதியில் சிவலிங்கம் உளது. இத்திருமேனிக்குப்புடவை சார்த்தப்பட்டுள்ளது. ஆடிப்பூர அம்மன் தரிசனம். அபயாம்பிகைக் கீர்த்தனைகளும் கல்லிற் பதிக்கப்பட்டுள்ளன.

அம்பாள் நின்ற திருமேனி - அழகான திருக்கோலம். இத்தலத்துக் காவிரித் துறையில் (ஐப்பசி) துலா நீராடுதல் மிகவும் விசேஷமானது அங்கு காசி விசுவநாதர், விசாலாட்சி கோயிலுள்ளது. உத்தரமாயூரம் எனப்படும் வள்ளலார் கோயில் காவிரிக்கு வடகரையில் உள்ளது. இங்கு மோதட்சிணாமூர்த்தி, ரிஷபதேவருக்கு உபதேசிக்கும் மூர்த்தியாக (யோகாசனத்தில் அமர்ந்து ஞான முத்திரையுடன்) எழுந்தருளியுள்ளார். கடைமுழுக்கு நாளன்று (ஐப்பசி இறுதி நாள்) இங்குளூள எல்லாக் கோயில்களிலுமுள்ள மூர்த்திகளும் உலாவாக எழுந்தருளி வந்து மயூரநாதரோடு தீர்த்தம் கொடுக்கும் சிறப்பு, மிகவும் விசேஷமான திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசிப் பெருவிழாவில் மயிலம்மை வழிபாட்டு ஐதீகமும் வைகாசியில் சஷ்டி விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றனஇ நாடொறும் ஆறுகால வழிபாடுகள். கந்தபுரணாத்தில் வழிநடைப்படலத்தில் இத்தலம் பற்றிய குறிப்பு வந்துள்ளது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் தலபுராணமும், அபயாம்பிகை மாலையும், அபயாம்பிகை அந்தாதியும் பாடியுள்ளார். நல்லத்துக்குடி கிருஷ்ணய்யர் என்பவரும் அபயாம்பிகை சதகம் பாடியுள்ளார். கல்வெட்டில் இத்தலத்திறைவன் 'மயிலாடுதுறை உடையார்' என்று குறிக்கப்பெறுகின்றார்.

'ஊனத்திருள் நீங்கிடவேண்டில்

ஞானப்பொருள் கொண்டடியேனும்

தேனொத்தினியான மருஞ்சேர்

வானம் மயிலாடுதுறையே' (சம்பந்தர்)

'குறைவிலோம் கொடு மானுட வாழ்க்கையால்

கறைநிலாவயி கண்டன் எண்தோளினன்

மறைவலான் மயிலாடுதுறை யுறை

இறைவன் நீள்கழல் ஏத்தியிருக்கிலே.' (அப்பர்)

ஷேத்திரக்கோவை பிள்ளைத்தமிழ்

ஐந்தரு வெனுங்கற்ப கச்சோலை வருகஅறி

வானந்த வெள்ளம்வருக

அனந்தகல் யாணமே ருகிரி வருகவே

அங்கையா மலகம்வருக

சிந்தையில் மகோதயஞ் செய்திருளை நீக்கிடும்

சிவஞான பானுவருக

செனனவெப் பந்தணிக் குங்கோடி மதிவருக

தித்திக்கு மமுதம்வருக

எந்தையே வருகஎனை ஈன்றதா யேவருக

என்கண்மணி வருகவருக

எண்ணனந் தங்கோடி மன்மதா காரமாம்

என்றுமிளை யோன்வருகவே

மைந்தனே வருகமணி யேவருக வள்ளலே

வருகவைப் பேவருகவே

மாயூர நகர்மேவு கேயூர மணிபுய

மயூரவா கனன்வருகவே. (சிதம்பரநாத முனிவர்)

அபயாம்பிகை சதகம்

கனிந்து கனிந்துன் றனைப்பாடிக்

கசிந்தே இருகண் புனல்பெருகக்

காது உபயம் உனதருளாம்

கதையைக் கேட்க உனதடியார்

இனந்தான் உறவாய் மனம்புதைய

எந்த நாளும் அவர் இருந்த

இடத்தை இருதாள் சுற்றிவர

இரவும் பகலும் நினதருளை

நினைந்த படியே சிந்தைசெயும்

நெறியை உதவி எனைக்காப்பாய்

நித்யா னந்தப் பழம் பொருளே

நிமலி அமலை புகழ்விமலி

வனைந்த சடலத் தொழில்உனது

அடிக்கே இதமாய் அருள்புரிவாய்

மயிலா புரியில் வளரீசன்

வாழ்வே அபயாம் பிகைத்தாயே.

(நல்லத்துக்குடி கிருஷ்ணசாமி ஐயர்)

-வேளிமையோர்

வாயூரத்தேமா மலர்சொரிந்து வாழ்த்துகின்ற

மாயூரத் தன்பர் மனோரதமே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. மயூரநாதசுவாமி திருக்கோயில்

மயிலாடுதுறை - அஞ்சல் 609 001

மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம். 


 


 

 
 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவழுந்தூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவிளநகர்
Next