Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருவழுந்தூர்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருவழுந்தூர் (
தேரழுந்தூர்)

மக்கள் வழக்கில் தேரழுந்தூர், தேரழந்தூர் என்றெல்லாம் வழங்குகிறது. நகரப்பேருந்தும் 'தேரழந்தூர்' என்ற பெயர் தாங்கியே செல்கிறது.

1) மயிலாடுதுறை, கும்பகோணம் சாலையில் வந்து, 'கோமல்' ரோடில் திரும்பிச் சென்றால் மூவலூரையடுத்துத் திருஅழுந்தூர் வருகிறது.

2) கும்பகோணம், மயிலாடுதுறையிலிருந்து நகரப்பேருந்து செல்கிறது. கோயிலிலேயே இறங்கலாம்.

3) குத்தாலத்திலிருந்தும் வரலாம், பேருந்துகள் உள்ளன. இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப் பாதையில் உள்ள நிலையம். ஊரின் தொடக்கத்திலேயே - 'கம்பர் நினைவாலயம்' என்னும் பெயர்ப்பலகையுள்ள இடத்தில் இடப்பக்கமாகத் திரும்பினால் வீதியின் கோடியில் திருக்கோயில் உள்ளது. வலப்புறமாகத் திரும்பிச் சென்றால் அவ்வீதியின் கோடியில் ஆமரவியப்பன் ஆலயமும் அதற்கு முன்பாகவே கம்பர் நினைவு மண்டபமும் உள்ளன. (கம்பர் கோட்டம்) இத்தலம் சைவம் வைணவம் இரண்டிற்கும் சிறப்புடையது.

கம்பர் அவதரித்த ஊர். அவர் வாழ்ந்த இடம் 'கம்பர்மேடு' என்று வழங்கப்படுகிறது. இவ்விடம் தொல் பொருள் ஆய்வுத்துறையின் கண்காணிப்பில் உள்ளது. அகத்தியர் இங்கு இறைவனை வழிபடுங்கால் அஃதையறியாத மன்னன் ஒருவன் வானவெளியில் செலுத்திச் சென்ற தேரானது, இவ்விடத்தில் அழுந்திய காரணத்தால் இத்தலம் தேர் - அழுந்தூர் - தேரழுந்தூர் என்று பெயர் பெற்றதாகச் சொல்கின்றனர்.

தமிழ்ச் சான்றோரான இரும்பிடர்த் தலையார் வாழ்ந்த தலம். வேதங்கள், தேவர்கள், திசைப்பாலகர்கள் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது. 'சந்தனவனம்' என்றும இதற்குப் பெயர்.

இறைவன் - வேதபுரீஸ்வரர், அத்யாபகேசர்.

இறைவி - சௌந்தரநாயகி.

தலமரம் - சந்தனம்.

தீர்த்தம் - வேதாமிர்த் தீர்த்தம்.

விநாயகர் - ஞானசம்பந்த விநாயகர்.

சம்பந்தர் பொடல் பெற்றது.

கோயில் அழகாகவுள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் பொலிவோடு விளங்குகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி. உள்ளே சென்றால் விசாலமான இடம். இடப்பால் ஸ்ரீ மடேஸ்வரர் ஆலயம். வலப்பால் அம்பாள் சந்நிதி. அம்பாள் சுவாமி நோக்கியவாறு தரிசனம் தருகின்றாள். உட்பிராகாரத்தில் சுப்பிரமணியர், நவக்கிரகம் க்ஷேத்ர லிங்கம், கடம்பவனேஸ்வரர், முதலாகவுள்ள சிவலிங்க மூர்த்தங்கள், வலஞ்சுழி விநாயகர், சந்நிதிகள் உள்ளன. வலம் முடித்து உள்மண்டபத்துள் சென்றால் தலப்பதிகக் கல்வெட்டுள்ளது. மண்டபத்தின் மேற்புறத்தில் திசைப்பாலகர்களின் வண்ண ஓவியங்கள் உள்ளன. சுதையாலான துவார பாலகர்கள், நேரே மூலவர் தரிசனம்.

சித்திரையில் பெருவிழா. ஏனைய சிறப்பு விழாக்கள் - ஆனித்திரு மஞ்சனம், நவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகைச் சோம வாரங்கள், ஆருத்ரா முதலியன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தென்முகக்கடவுள், லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். நாடொறும் நான்குகால வழிபாடு. காவிரித்தாய்க்கும் அகத்தியருக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன. மாசியில் நடைபெறும் புனர்வசு விழா மூவலூர் (வைப்புத்தலம்) முதலியன. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

இக்கல்வெட்டுக்களில் இத்தலம் "ஜயங்கொண்ட சோழவள நாட்டுத் திருவழுந்தூர்" என்றும், இறைவனின் திருப்பெயர் "திருவழுந்தூர் உடையார்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டிலிருந்து சுவாமிக்கு நாடொறும் காவிரியிலிருந்து திருமஞ்சனத்திற்கு நீர்கொண்டு வருவதற்குக் கட்டளை வைத்துள்ள செய்தி தெரிய வருகின்றது. 23.6.1999ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இங்குள்ள சௌந்தரநாயகி வழிபாட்டு மன்றம் செய்து சிறந்த பணிகளைச் செய்து வருகிறது.

"தொழுமாறு வல்லார் துயர் தீர நினைந் (து)

எழுமாறு வல்லால் இசைபாட விம்மி

அழுமாறு வல்லார் அழுந்தை மறையோர்

வழிபாடு செய்மாமட மன்னினையே". (சம்பந்தர்)

"கம்பன் பிறந்தஊர் காவேரி தங்கும் ஊர்

கும்பமுனி சாபம் குலைந்தவூர் - செம்பதுமத்

தாதகத்து நான்முகனும் தந்தையும் தேடிக்காணா

ஓதகத்தார் வாழும் அழுந்தூர்". (தனிப்பாடல்)


-வருத்துமயல்

நாளுமழுநதர்ர் நவையறுக்குமூ அன்பருள்ளம்

நீளுமழுந்துழர் நிறைதடமே". (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. வேதபுரீஸ்வரர் திருக்கோயில்

தேரிழந்தூர் - அஞ்சல்

மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம் - 609 808. 


 


 

 
 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருத்துருத்தி
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  மயிலாடுதுறை
Next