Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஸ்ரீ ராமன் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

‘ராமன்’ என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீ ராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளேயே ஆனந்தமாகவே இருந்தான்.

சுக துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவது தான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வது தான். சொந்த விருப்பு வெறுப்புக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனஸின் சஞ்சலம் குறைந்து, அது தெளிய ஆரம்பிக்கும். இந்தத் தெளிவால் மனசு எப்போதும் ஆனந்தமாக, லேசாக இருக்கும். இந்த சித்த சுத்தி மோக்ஷத்திலேயே கொண்டு சேர்த்துவிடும்.

ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அநுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந் நாராயணனே ராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், ‘இது என் அபிப்பிராயம்’ என்று சொல்லவே மாட்டார். ‘ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது’ என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்படவேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ராமனாக வேஷம் போட்டுக் கொண்டு வாழ்ந்தான்.

“ராவணன் ஸீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ராமனுக்கு ஸீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?” என்று கேலி செய்து கேட்டவர்கள், எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ராமனாக இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மநுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.

ஒரு நாடகம் நடக்கிறது. ராமாயண நாடகம்தான். அதில் லவ குசர்களை வால்மீகி ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ராமராக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து ‘இந்தக் குழந்தைகள் யார்?’ என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே அடையாளம் தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, ‘இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள் தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!’ என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்? வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும். ஸ்ரீ ராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது, இப்படித்தான் மநுஷ்ய வேஷம் போட்டுக் கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக் கொண்டு வாழ்ந்தார்.

வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லியிருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைதான் கட்டிக் கொடுத்தாள். ‘ராகவா, நீ எந்த தர்மத்தை த்ருதியோடு, அதாவது தைரியத்தோடு, நியமத்தோடு அநுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள்.

நியமம், அதாவது தனது என்ற வெறுப்பு விருப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான். ‘அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக் கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா’ என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.

சாக்ஷாத் ஸ்ரீ ராமனை லட்சியமாகக் கொண்டு “ராம ராம” என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் சித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is கண்ணன் பிறந்த தினம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  ஸ்ரீராம நவமி
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it