Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஸ்ரீராம நவமி : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”

(கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14)

ஸ்ரீ ராமநவமியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் கம்பராமாயணத்தில் ஸ்ரீ ராமாவதார கட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பாக்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

வேய்புனர் பூசமும் விண்ணுளோர்களும்

தூயகற் கடகமும் எழுந்து துள்ளவே

சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்

வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும்

நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத்

தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஓங்கவே.

ஒருபகல் உலகெலாம் உதரத்துட் பொதிந்

தருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக்

கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்

திருவுறப் பயந்தனள் திறங்ககொள் கோசலை.

(கம்ப ராமாயணம் : பாலகாண்டம் – திரு அவதாரப் படலம்)

இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நிதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ஸ்ரீராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, “ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்” என்னும் பதின்மூன்று அக்ஷரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றி வந்து, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிஷம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.

மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, ஸ்ரீ ராமாவதாரத்தில் (கம்ப ராமாயணத்தில்) ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக உள்ள கீழ்க்காணும் பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிஷம் பஜனை செய்து, ஊர்ப் பொதுச் செலவில் ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.

மங்கள கீதம் பாட

மறையொலி முழங்க வல்வாய்ச்

சங்கினம் குமுறப் பாண்டில்

தண்ணுமை யொப்பத் தாவில்

பொங்குபல் லியங்கள் ஆர்ப்பப்

பூமழை பொழிய விண்ணோர்

எங்கள் நாயகனை வெவ்வேறு

எதிர் அபிடேகஞ் செய்தார்.

மாதவர் மறைவ வாளர்

மந்திரக் கிழவர் முற்று

மூதறி வாளர் உள்ளஞ்

சான்றவர் முதனீ ராட்டச்

சோதியான மகனு மற்றைத்

துணைவரும் அனுமன் தானும்

தீதிலா இலங்கை வேந்தும் – பின்

அபிடேகஞ் செய்தார்.

சித்தமொத் தனன்என் றோதுந்

திருநகர்ச் செல்வ மென்ன

உத்தமத் தொருவன் சென்னி

விளங்கிய உயர்பொன் மௌலி

ஒத்துமெய்க் குவமை கூர

ஒங்குமூ வுலகத் தோர்க்குந்

தத்தம் உச்சியின்மேல் வைத்தது

ஒத்தெனத் தளர்வு தீர்ந்தார்

(கம்ப ராமாயணம் : யுத்த காண்டம் திரு அபிடேகப் படலம்)

‘ராம பிரானின் சிரத்தின் மேல் பொன்கிரீடம் விளங்கியது கண்டு, மூவுலகிலும் உள்ள மக்களும் தத்தம் சிரமேல் பொற்கிரீடம் வைக்கப்பட்டது போலவே எண்ணி மகிழ்ந்தார்கள் என்பது கடைசிச் செய்யுளின் கருத்து.

நாட்டில் உள்ள எல்லா மக்களிடையேயும் தெய்வ பக்தியும், நன்னடத்தையும் வேரூன்றி வளரவேண்டும் என்று எல்லோரும் ஸ்ரீ ராமநவமியன்றும், மறுநாள் புனர் பூஜையிலும், ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பிரார்த்தித்து கொள்ள வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is ஸ்ரீ ராமன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  ஐயப்பன்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it