அம்பாள் : அழகு – அன்புகளின் முழுமை : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அம்பாள் எப்படிப்பட்டவள்?

அவள் அழகே உருவானவள் என்பதுபோல அன்பே உருவானவளும்! அன்பே அழகாக ஆகி உருவானவள். எந்த பக்ஷணமானாலும் அதற்குத் தித்திப்பைத் தருவது சர்க்கரை என்கிறமாதிரி, நாம் எங்கெங்கே எந்தெந்த அழகைக் கண்டாலும் அதையெல்லாம் அழகாக்கும் தாய்ச் சரக்கு அவள்தான்! பிரம்ம சக்தியான அவளுடைய பூர்ண அழகின் துளித்துளிதான் மற்ற அழகுகளிலெல்லாம் தெறித்திருக்கிறது. இப்படியே நாம் பார்க்கிற அத்தனை அன்புகளுக்கும் மூலமாயிருப்பதும் அவள்தான்.

அவளுடைய அருள் உள்ளமேதான் அழகு வெள்ளமான ரூபமாக ஆகியிருக்கிறது.

அன்பு என்பது ரூபமில்லாத தத்வம். நாம் பார்க்கிற லோகத்திலே அன்போடு இருப்பது வெளி ரூபத்தில் அழகில்லாமலும் இருக்கிறது; அன்பு இல்லாமலிருப்பது வெளி ரூபத்தில் அழகாகவும் இருக்கிறது. ஆனாலும் அன்பு வந்துவிட்டால் எந்த ரூபத்திலும் அது அவயவ லக்ஷணத்தை மீறி ஒரு ஸெளந்தர்ய சோபையைக் கொடுத்து விடுகிறது. அதாவது அரூபமான அன்பு எப்படியோ ரூபத்திலேயே பிரதிபலித்துவிடுகிறது. இப்படி ரூபத்தில் பிரதிபலிக்க மட்டும் செய்யாமல் அன்பே ரூபமாக, அன்பே அவயவங்களாக ஆனதுதான் அம்பாள். அரூப அன்பே அவளுடைய ஸ்வரூப ஸெளந்தர்யமாயிருக்கிறது. அவளிடம் அன்பின் முழுமை அழகின் முழுமையாக ரூபம் கொண்டிருக்கிறது.

அரூபமாக இருக்கிற தன்னைக் குழந்தைகள் புரிந்து கொள்ள முடியவில்லையே என்பதற்காகத்தானே பரப்ரஹ்ம சக்தியானது அம்பாள் என்ற ரூபமே எடுத்துக் கொண்டிருப்பது? இப்படி அன்பு எண்ணத்தின் மேலேயே எடுத்துக் கொண்டதால் அந்த ரூபமே ப்ரேமஸ்வரூபம் தானே? பார்ப்பதற்குப் பரம ஸெளந்தர்யமான ரூபமாக இருந்தால்தான் பாமர ஜனங்களிலிருந்து, கொஞ்சங்கூடப் பக்குவமில்லாதவர்களிலிருந்து, எல்லாரும் இந்த லோகத்தின் சின்ன அழகுகளை விட்டுத் தன்னிடம் திரும்புவார்கள் என்பதால்தான் அவள் பரம லாவண்யமான சரீரத்தை எடுத்துக் கொண்டாள். அவளுடைய காருண்யத்தினாலேயே உண்டான லாவண்யம் அது! காருண்யத்தின் லாவண்யமே அம்பாளுடைய சரீரம். மநுஷ்யர்கள் விஷயத்தில் உள்ளன்பும் வெளி அங்க லக்ஷணமும் ஸம்பந்தப்படாமாதிரி இல்லாமல் உள்ளன்பே வெளி அவயவ அழகாக ஆன உருவந்தான் அம்பிகை; குறிப்பாக ஸ்ரீவித்யா அதிதேவதையான த்ரிபுரஸுந்தரியாயிருக்கும் அம்பாளின் ரூபம். திரிலோகத்திலும் அவள்தான் மஹா அழகு என்பதால்தான் த்ரிபுரஸுந்தரி என்று பேர். அதற்கு வேறே தத்வார்த்தங்களும் உண்டு. அது இருக்கட்டும்….

அழகும் அன்பும் ஒன்றுதானென்பதைப் பல வார்த்தைகள் காட்டுகின்றன. ‘ஸு’ என்கிற அடைச்சொல்லுக்கு நல்லது, அழகானது என்று இரண்டு அர்த்தமும் இருக்கிறது. ஸுகுணம் என்றால் நல்ல குணம்; ஸுரூபம் என்றால் அழகான ரூபம். நல்லது, நல்லது என்றால் எது நல்லது? அன்புதான் மிகவும் நல்லது. ‘அன்பே சிவம்’ என்கிறோம். சிவம் என்றாலும் சுபம் என்றாலும் ஒன்றுதான். சுபம் என்றால் நன்மை. நல்லதுகளில் உயர்ந்த நன்மை எது? அன்புதானே? ஆகையால் சுபம் என்றால் அன்பு. ‘சுப’த்திலிருந்துதான் ‘சோபை’ என்ற வார்த்தை வந்திருக்கிறது. ‘சுப சோபனம்’ என்று சேர்த்துக் சொல்வது வழக்கம். ‘சோபை’ என்றால் ‘அழகு’. ‘சுப’த்திலிருந்து ‘சோபை’ என்கிறபோது அன்பிலிருந்தே அழகு வருகிறதென்றாகிவிடுகிறது! சுப நிகழ்ச்சிகளில் கல்யாணம் என்பதை முக்யமாகச் சொல்கிறோம். ‘சுப முஹுர்த்தப் பத்ரிகை’ என்று இன்விடேஷனில் போடுகிறோம். ‘கல்யாணம்’ என்ற வார்த்தைக்கு உள்ள அநேக அர்த்தங்களில் ஒன்று ‘நல்லது’, அதாவது ‘அன்பு’; இன்னொன்று ‘அழகு’! ‘சிவம்-ஸுந்தரம்’ என்று சொல்வது இப்படித்தான் ஏற்பட்டது. சிவத்துக்கே ஸுந்தரேச்வரன் என்றும் பேர் இருக்கிறது உள்ளத்தின் அன்பே உருவத்தில் ஸுந்தரமாகி ஏற்பட்ட மூர்த்தி!

அம்பாள் இப்படி அன்பே அழகானவளானதால் தான் அவளுடைய அழகு வெள்ளத்தில் ஊறியிருப்பதே அன்பு வெள்ளத்தில் கரைவதாகவும் ஆகிறது! அது அப்படியே அவளுடைய உள் நிலையான அத்வைதத்துக்கு, ஆத்மானந்தத்துக்கு அழைத்துக்கொண்டு போய்விடுகிறது! அன்புக்கு வேறேயாக அழகு இருந்தால் அது தாற்காலிக ஆனந்தத்தோடு முடிகிறது. அன்பே அழகாகிவிட்டால்? பராசக்தியின் அன்பு அல்லது அருளைவிட சாச்வதப் பேரானந்தமான மோக்ஷத்துக்கு என்ன உபாயமிருக்கிறது? இந்த அன்பையே நாம் அழகாக அநுபவிப்பதால்தான் அது மோக்ஷோபாயமாகிறது.

அன்பே சிவமாவ(து) ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே (-திருமந்திரம்)

என்றபடி, இந்த அன்பில் நன்றாக உருகிக் கரைந்தபின் அதுவாகவே, அவளாகவே, அத்வைதமாகி விடலாம். ”பவாநித்வம்” [ச்லோ. 22], ”ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா” [ச்லோ. 99] ஆகிய ச்லோகங்களில் இந்த அகண்ட பரிபூர்ண நிலையைத்தான் சொல்லியிருக்கிறது.

ஆகையால் அழகு வழியாக மோக்ஷமே பெறலாம் என்பது அதிசயோக்தியே இல்லை.

ஸாக்ஷாத் அம்பாள் எப்படியிருப்பாள் என்பதை நாம் எப்படி ரூபப்படுத்திப் பார்ப்பது? பச்சையாயிருப்பாளா, சிகப்பாயிருப்பாளா, கறுப்பாயிருப்பாளா? இந்த எல்லாக் கலரிலும்தான் அவளுக்கு ரூப பேதங்கள் சொல்லியிருக்கிறது. பிரம்மாவுக்கு நாலு தலை, சிவனுக்கு ஐந்து தலை, ஸுப்ரஹ்மண்யருக்கு ஆறு தலை என்கிற மாதிரி அவளுக்கு எத்தனை தலை என்று வைத்துக்கொள்வது? விச்வரூபத்தில், விராட் ரூபத்தில் ஆயிரம் தலை – ”ஸஹஸ்ர சீர்ஷம்” – என்று வேதம் சொல்கிறதென்றால் அந்த மாதிரிக் கணக்குப் போட்டுக் கண்ணுக்குள் கொள்கிற விதத்தில் நினைக்கவே முடியவில்லையே! இரண்டு கை மீநாக்ஷியிலிருந்து பதினெட்டுக்கை மஹிஷாஸுரமர்த்தினி வரை அவளுக்குப் பல ரூபம், அந்தந்த ரிஷிகள் கண்ட விதத்தில், சொல்லியிருப்பதால் எத்தனை கை என்று கல்பித்துப் பார்ப்பது? சடைவிரி கோலமாக இருக்கிறாள் – அழகாகக் கிரீடம் வைத்துக் கொண்டிருக்கிறாள்; ஸர்வாபரண பூஷிதையாக இருக்கிறாள் – துணியே கட்டிக்கொள்ளாமல் ரத்தத்தைப் பூசிக்கொண்டு கபாலமாலையோடு திரிகிறாள் என்றெல்லாம் வித்யாஸமாகச் சொன்னால் எப்படி அவள் ரூபத்தை பாவிப்பது?

இப்படிக் கேட்டால்-

“எந்த ரூபமானாலும் அன்புதான் அப்பா, முக்கியம். அதனால் பரம அன்புருவாகக் கல்பித்துப் பார்”.

”பரம அன்பு என்றால் எப்படியிருக்கும், தெரியல்லியே!”

“எங்கேயாவது ஒரு நல்ல ஆத்மா ஒரு பிரதிப் பிரயோஜனமும் எதிர்பார்க்காமல் மனஸார அன்னதானம் பண்ணினால் அங்கே போய் நின்று அவன் முகத்தைப் பார். தானம் வாங்கிக் கொள்கிறவர்களைவிட, போடுகிற அவனுக்கு எத்தனை ஆனந்தம் உண்டாகிறது, பார்! அதைப் பார்த்தால் உன் மனஸ்கூடக் கொஞ்சம் உருகுகிறதல்லவா? இப்படி ஒரு வேளை, இரண்டு வேளை நூறுபேருக்கு, ஆயிரம் பேருக்குப் போடுகிறவன் முகத்தில் இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கிறதென்றால் லோகத்திலுள்ள கோடாநுகோடி ஜீவன்களுக்கும் – மஹாபாவங்களைச் செய்கிற – காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினாலாவது நினைக்கிற – நம் அத்தனை பேருக்கும் கல்பகோடி காலமாக வேளாவேளை சோறு போடுகிறவளின் அன்பும் ஆனந்தமும் எப்படியிருக்கும் என்று multiply பண்ணி (பெருக்கி)ப் பார்த்துக்கொள்! அதுதான் அப்பா, அம்பாள் ரூபம்!

காருண்யம் தானப்பா லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒரு அழகல்ல. கொஞ்சம் கோபம் வரட்டும், அழுகை வரட்டும். அப்போது கண்ணாடியில் நம் மூஞ்சி தட்டுப் பட்டால் நமக்கே பார்க்கப் பிடிக்கவில்லை. துளி ஜ்வரம் வந்தால் சரீர அழகு போய்விடுகிறது. கோபம், அழுகை, நோய், நொடி எதுவுமில்லாமல் அன்பே உருவாயிருக்கிற அம்பாளுடைய சரீரமொன்றுதான் நிஜ அழகு. ஆனதால் நம் கல்பனையில் அன்பை எத்தனை உத்க்ருஷ்டமாக [உயர்வாக] உருவமாக்கிப் பார்க்கமுடிகிறதோ அப்படிப் பாரப்பா! அதுதான் அம்பாள் ரூபம் என்று வைத்துக்கொள்.

”சாந்தமாக இருக்கிற பிரம்மத்தின் அத்தனை சக்தியும்தான் அம்பாள் என்று சொல்லிவிட்டு, அதை அன்பு என்று மட்டும் ஏன் விசேஷித்துச் சொல்ல வேண்டும்! லோகத்தில் கஷ்டம், த்வேஷம், பயம் எல்லாம் இருக்கிறதென்றால் இதெல்லாமும் பரமாத்ம சக்தியிலிருந்து வருவதுதானே? பின்னே அதை – அவளை – அன்பாக மட்டும் எப்படிச் சொல்வது?”

அது ஸரி, ஆனால் லோகத்தில் தாயன்பு, ஸஹோதர பாசம், ஸ்நேஹிதர்களின் மைத்ரி (நட்பு), புருஷன் பெண்டாட்டியின் பிரேமை, அடியார்களின் பக்தி, மஹான்களின் கருணை என்று பல ரூபங்களில் அன்பும் இருக்கோ இல்லியோ? இது எல்லாமும் பராசக்தியிடமிருந்து, அவளுடைய அன்பிலிருந்து வந்ததுதானே? அதனால் இப்படித் தியானம் பண்ணு. எல்லாமாக – கோபமாக, பயமாகக்கூட – அவள் இருந்தாலும் உனக்கு அப்படியெல்லாம் பாவனை பண்ணினால் மனஸுக்கு சாந்தி ஸெளக்யங்கள் ஏற்படவில்லையே! இப்படி அன்புருவாக பாவித்தால்தானே உன் மனஸுக்கு ஹிதமாக, பிரியமாக, ஸந்தோஷமாக இருக்கிறது? அதனால் உன் லிமிடேஷனால், உனக்கு ஏற்க, லிமிட் இல்லாத பராசக்தியை அன்பு என்று லிமிட் பண்ணு. ஆனால் அந்த அன்பு லிமிட் இல்லாதது, எல்லையில்லாதது என்று தியானம் பண்ணு. கோமுகியிலிருந்து கங்கா ஸாகரம் வரை அவ்வளவு தூரமும் கங்கை கங்கைதான். ஆனால் அது ஹிமோத்கிரியில் மேட்டில் பள்ளத்தில் ”ஹா ஹு” என்று விழுகிற இடங்களில் உன்னால் ஸ்நானம் பண்ணமுடியுமா? ஸமநிலமாக அது பாய்கிற இடங்களில்கூட ரொம்ப ஆழமில்லாத இடத்தில், சுழல் இல்லாத இடத்தில் முதலை இல்லாத இடமாகப் பார்த்துத்தானே ஸ்நானம் பண்ணுகிறாய்? எல்லாம் கங்கையானாலும் உன்னால் அதை எங்கே ஸெளக்யமாய் அநுபவிக்க முடிகிறதோ அங்கேதானே இறங்குகிறாய்? அந்த மாதிரி பராசக்தி நல்லது கெட்டது எல்லா குணங்களும் என்றாலும், உனக்கு ஸெளக்யமாக ஆராதிக்க வேண்டுமானால் அவளை ரொம்ப நல்லவள், அன்பானவள் என்றே தியானம் பண்ணு. பெரியோர்களெல்லாம் இதனால்தான் அவளை முக்யமாகப் பரமாத்மாவின் க்ருபா சக்தி என்றே வைத்திருக்கிறார்கள்.

பரமாத்மா-பராசக்தி என்கிற ஸர்வலோக ராஜா-ராணிகளை தாய் தந்தையாக சிவன்-அம்பாள் என்றும், விஷ்ணு-லக்ஷ்மி என்றும் வழிபடும்போது ஸித்தாந்த சைவத்தில் அம்பாளை முக்கியமாக சிவத்தின் அருளாற்றல், ”அருளது சக்தியாகும் அரன் தனக்கு” என்றே சொல்லியிருக்கிறது. வைஷ்ணவ சாஸ்திரங்களிலும் மஹா விஷ்ணுவைக் கருணை பண்ணும்படியாகத் தூண்டிவிடும் ‘புருஷகாரம்’ லக்ஷ்மியே என்று சொல்லியிருக்கிறது. ‘ஸ்ரீவைஷ்ணவம்’ என்பதாக ஸ்ரீயான லக்ஷ்மியின் கருணையை முதலில் வைத்தே மதத்துக்குப் பேர் கொடுத்திருக்கிறார்கள்.

பராசக்தியின் அநேக குணங்களில் ஒன்றுதான் அன்பு என்பதுகூட ஸரியில்லை. அதுதான் பிரதானமான குணம். இந்த அன்பைக் கறுப்பு வெல்வெட்டில் வைத்த வைரம் மாதிரிப் பளிச்சென்று எடுத்துக்காட்டுவதற்கேதான் மற்ற குணங்களைக் கொண்டிருக்கிறாள். ஆகையால்தான் கோர ரூபங்களில் வந்தாலும் அன்பு வெள்ளமாக, அழகு வெள்ளமாக இருக்கிறாள். இல்லாவிட்டால் பெங்காலிலும், மலையாளத்திலும் இப்படி ஸகல ஜனங்களும் காளி போன்ற ரூபங்களை ”மா! மா!”, ”பகவதி!” என்று பக்திபண்ணிக் கொண்டிருப்பார்களா? அப்படிபட்டவள் ஸெளந்தர்ய ரூபத்திலேயே வந்துவிட்டால் கேட்பானேன்?

நம்முடைய காம க்ரோதாதி அழுக்குகள், அழுகை, பயம் – எல்லா பயங்களிலும் பெரிய ஸம்ஸார பயம் – ஆகியவற்றை அடித்துக் கொண்டு போய்விடும் ஸெளந்தர்ய வெள்ளமாக அம்பிகை இருக்கிறாள். [அந்த] அழகே நமக்கு ஸகல ஸெளபாக்யங்களையும் அளித்துவிடுகிறது. ‘பகம்’ என்பதிலிருந்து ‘பாக்யம்’ வந்திருக்கிறது. ‘பகம்’ என்றால் சிறப்பானது, excellence என்று அர்த்தம். எல்லா பகங்களும் எவரிடம் நிறைந்திருக்கிறதோ அவரே ‘பகவான்’; பெண் பாலானால், ‘பகவதி’. ‘பாக்ய’த்தை மேலும் மங்களமாகத் தெரிவிப்பதற்காக ‘ஸெளபாக்யம்’ என்பது. ‘ஸு’ என்றால் நல்லது. ‘ஸு’விலிருந்து வருவது ‘ஸெள’. ஸுகம்-ஸெளக்யம் என்கிறோமல்லவா? ஸெளபாக்யங்கள் யாவும் ஸெளந்தர்ய ரூபத்தில் ஒன்று கூடியிருக்கிற மூர்த்தியே த்ரிபுரஸுந்தரியான அம்பாள். ஆகையினால் அவளுடைய ஸ்வரூபத்தை ஸ்மரிப்பதாலேயே ஸகல ஸெளபாக்யங்களும் – க்ஷேமங்களும் – நமக்குக் கிடைத்துவிடும் ”தநோது க்ஷேமம் ந:தவ வதந ஸெளந்தர்ய லஹரீ” என்றே ஆசார்யாள் சொல்கிறார். [ச்லோ. 44] ”உன் முகத்திலிருந்து பொங்கி வழியும் அழகு வெள்ளம் எங்களுக்கு க்ஷேமங்களை உண்டாக்கட்டும், அம்மா!” என்கிறார். க்ஷேமங்களை உண்டாக்குவது என்பதால் அவளுடைய ஸெளந்தர்யமே ஸெளபாக்ய ப்ரதம் [நற்பேறுகளை நல்க வல்லது] என்று தெரிகிறது.

”க்ஷேமங்களை எங்களுக்கு உண்டாக்கட்டும்”என்கிறார். ”ந:” என்றால் ‘எங்களுக்கு’. ஆசார்யாள் தனக்கு மட்டும் க்ஷேமத்தைக் கேட்கவில்லை. நம் எல்லோருக்கும் கேட்கிறார். எல்லோருக்கும், தரிசனம் பண்ணமுடியாதவர்களுக்கும், ‘எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்பது போல க்ஷேமம் உண்டாகட்டும் என்று ஸர்வ பூத தயையினால் பிரார்த்திக்கிறார். காயத்ரீ மந்திரத்திலேயே இப்படித்தான் எல்லாருக்கும் புத்தி நல்லதில் தூண்டிவிடப்படவேண்டும் என்று பிரார்த்தனை வருகிறது.

குயுக்திக்காரன் ஒருத்தன் இருந்தானாம். ”எல்லோருமாகச் சேர்த்துத்தானே பிரார்த்தனை இருக்கிறது? அதனால் எவனாவது ஒருத்தன் காயத்ரீ பண்ணிவிட்டால் போதுமே! நான் ஏன் பண்ணணும்?” என்றானாம்.

அது ஸரியில்லை [சிரித்து] அந்த எவனோ ஒருத்தன் இன்னொருத்தனாக இருக்கட்டுமே என்று அத்தனை பேருமே நினைத்துவிட்டால்?

”எல்லோருக்கும்” என்று ஏன் சொல்லியிருக்கிறதென்றால் காயத்ரீ ஜபிக்க அதிகாரமில்லாத பல பேர் இருக்கிறார்கள். ஸ்திரீகள், குழந்தைகள், ரொம்பவும் நோய் வாய்ப்பட்டிருப்பவர்கள், பிணத் தீட்டிலிருப்பவர்கள் காயத்ரீ பண்ணுவதற்கில்லை. இப்படிப்பட்டவர்களை உத்தேசித்துத்தான் ”எங்களுடைய புத்தியை” என்று இருப்பது. அதிகாரமிருந்தும், வேறே எந்தவிதமான தவிர்க்க முடியாத தடையும் இல்லாதபோது, ”ந:” என்றிருப்பதைக் காட்டி யுக்தி பண்ணி ஜபிக்காமலிருந்தால், ஸ்வாமியும் அதற்குமேலே யுக்தி பண்ணி ”நஹி” [அநுக்ரஹமில்லை] என்று இருந்துவிடுவார்!…..

”எங்களுக்கு, அதாவது ஸமஸ்த ஜனங்களுக்கும், உன் வதன ஸெளந்தர்யம் க்ஷேமத்தை உண்டுபண்ணட்டும்” என்று அம்பாளிடம் ஆசார்யாள் வேண்டிக் கொண்டதைச் சொன்னேன். கண்ணுக்கு நன்றாக இருப்பதே க்ஷேமகரமாகவும் இருக்கிறதென்றால் அழுகும் அருளும் ஒன்றாயிருக்கிறதென்று தெரிகிறது. ஜனங்களுக்கெல்லாம் க்ஷேமம் உண்டாக்கணும் என்ற அம்பாளின் கருணை ஹ்ருதயமே அவளுடைய ஸெளந்தர்ய ரூபமாய் இருக்கிறது – அருள் உள்ளமே அழகு வெள்ளமாயிருக்கிறது – என்று நிச்சயமாகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அழகு என்றால் என்ன?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  அம்பிகையின் வடிவேயான துதி
Next