அழகு என்றால் என்ன? : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இப்படிச் சொன்னால் மிகைப்படுத்திச் சொல்கிறேன், அதிசயோக்தி என்று தோன்றலாம். ”அழகாக ஒன்று இருக்கிறதென்று பார்த்தால் அப்போதைக்கு ஆனந்தமாயிருப்பது வாஸ்தவம்தான். ஆனால், ‘அம்பாளின் அழகுப் பிரவாஹத்தைப் பார்த்தோலே போதும்; நிறைந்த நிறைவாகி விடலாம். அதிலேயே ஊறி ஊறி அத்வைத மோக்ஷானந்தத்துக்குப் போய்விடலாம்’ என்றால் அதெப்படி? தாமரைப் புஷ்பத்தைப் பார்க்கிறோம், பூர்ண சந்திரனைப் பார்க்கிறோம், ஆனந்தமாகத்தான் இருக்கிறதென்றால் இதனாலேயே மோக்ஷம் என்கிற பேரானந்தம் வந்துவிடுமா என்ன?” என்று கேட்கலாம்.

தேறித் தெளிந்த ரஸாநுபவம் உள்ள கவிகள் அழகிலேயே தெய்வத்தைப் பார்ப்பதாக, பிரம்மானந்தத்தை அநுபவிப்பதாகத்தான் தெரிகிறது. அவர்கள் இயற்கை வர்ணனை செய்வதைப் பார்க்கும்போது, அதன் த்வாராவே அவர்கள் அகண்டானந்தம் அநுபவித்ததாகத் தெரிகிறது.

காவ்ய ரஸாநுபவம் என்பது என்ன? அழகை ரஸிப்பதில் ஏற்படுகிற ஆனந்தந்தான். இதுவே, நிரந்தரமாக இல்லாவிட்டாலும் தாற்காலிகமாகவாவது ப்ரம்மானந்தத்தையே தருமளவுக்குப் போய்விடும் என்று அலங்கார சாஸ்த்ரக்காரர்களான அபிநவகுப்தர், ஜகந்நாத பண்டிதர் ஆகியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அத்வைதத்துக்குக் கிட்டே கிட்டே வருகிற காஷ்மீரி சைவத்தின் அடிப்படையில் அபிநவகுப்தர் இப்படிச் சொல்லியிருக்கிறார். (அந்த சாஸ்த்ரம் பற்றி அப்புறம் இன்னும் சிலது சொல்கிறேன்.) காவ்ய ரஸாநுபவம் ப்ரம்மாநுபவம் வரை போகிறது என்று அத்வைத அடிப்படையிலேயே ஜகந்நாத பண்டிதர் சொல்லியிருக்கிறார்.

காவ்யம் என்பது என்ன? இயற்கை விசேஷசங்களையும், மநுஷ்ய இயற்கையான குணங்களையும் அழககாச் சொல்வதுதானே? இந்த இரண்டு இயற்கைகளையும் நாம் நித்யமுந்தான் பார்த்துக்கொண்டு, அவற்றுக்கு நடுவிலேயே சுழன்று கொண்டு வருகிறோமானாலும் நம் வாழ்க்கையில் இவற்றிலே அப்படியொன்றும் ரொம்பவும் ரஸித்து ஆனந்தம் பெறும்படியாக இருந்துவிடவில்லை. ஆனால் இதுகளையே காவ்ய நாடகாதிகளில் பார்க்கிறபோது ரஸாநுப ஆனந்தம் பெறுகிறோமென்றால் எதனால்? இதுகளை அவை அழகுபடுத்திக் காட்டுவதால்தானே? ஆகையால் காவ்யாநுபவம் என்கிறது ஸெளந்தர்ய அநுபவந்தான். அது மோக்ஷபர்யந்தம் கொண்டு சேர்க்கிறதென்று நான் சொன்ன பெரிய ஆலங்காரிகர்கள் [அலங்கார சாஸ்திரக்காரர்கள்] காட்டியிருக்கிறார்கள்.

வெள்ளைக்கார தேசங்களிலும் Nature Poets என்று இயற்கை அழகில் முழுகியே ஈச்வரத்வத்தைக் கண்டவர்கள் இருக்கிறார்கள். ரவீந்த்ரநாத் டாகூர் ஸெளந்தர்ய அநுபவத்தாலேயே ஸாக்ஷாத்காரம் என்கிற அபிப்ராயத்தில் எழுதியிருக்கிறார். ஸத்-சித்-ஆனந்தம் என்கிறபோது ஸத்யத்தோடு அபின்னமாக [பிரிவில்லாமல்] ஞானமும் ஆனந்தமும் இருக்கிறாற் போலவே நல்லதும் அழகானதுங் கூட ஸத்தயத்தோடு இரண்டறச் சேர்ந்திருக்கிற தத்வங்களாகும் என்பதே டாகூர் அபிமானித்த ப்ரம்ம ஸமாஜிகளின் கொள்கை. அதனால்தான் அவர்கள் ஸத்-சித்-ஆனந்தம் என்கிற மாதிரியே ஸத்யம்-சிவம்-ஸுந்தரம் என்றும் சேர்த்துச் சொல்வது. ‘சிவம்’ என்றால் இங்கே ‘நல்லது’. ‘ஸுந்தரம்’ அழகு என்று எல்லாருக்கும் தெரியும். அதாவது பரப்ரஹ்ம தத்வத்திலேயே அங்கமாக இருப்பது அழகு என்று தாத்பர்யம். ஆனபடியால் அழகை சரியானபடி, பூர்ணமாக அநுபவிப்பதே ப்ரஹ்மாநுபவ ஆனந்தத்தைத் தரும் என்பது தாத்பர்யம்.

ஆனால் அந்த ‘சரியானபடி’ என்னவென்றே நம்மில் ரொம்பப் பேருக்குத் தெரியவில்லை; நம் மனஸை அப்படியே பூர்ணமாக அழகுக்குக் கொடுத்து அநுபவிக்க நமக்குத் தெரியவில்லை. அழகிலேயே ஈச்வரத்வத்தை அநுபவிக்கும் பக்குவம் நம் எல்லாருக்கும் ஸித்திக்கக் கூடியதில்லை. ஏதோ அழகாயிருக்கிறது என்று கொஞ்ச நாழி ரஸித்து ஸந்தோஷப்படுவதற்கு அதிகமாக அதை மோக்ஷோபாயமான உபாஸனையாக ஆக்கிக்கொள்ள நம்மில் எல்லோராலும் முடியவில்லை.

நமக்கு எது அழகாகத் தெரிகிறது? எது நமக்கு ஆனந்தத்தைத் தருகிறதோ அதைத்தான் அழகு என்கிறோம். நாம் திரும்பத் திரும்ப விரும்பிப் பார்க்கும்படியாக ஒன்று இருந்தால் அது அழகு என்று அர்த்தம்…

இங்கே ஒரு முக்யமான qualifying clause (நிபந்தனை) . அதாவது நாம் அநுபவிக்கும் ஆனந்தம் மனோ விகாரத்தில் ஏற்படுகிற ஸந்தோஷமாக இல்லாமல் மனஸில் சுத்தமான, சாந்தமான இன்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறபோது தான் அதற்குக் காரணபூதமானது அழகாயிருக்கிறதென்று அர்த்தம். க்ரூரமான கார்யங்களையும், ஆபாஸமான ச்ருங்கார சேஷ்டைகளையும் ரொம்பவும் இஷ்டத்தோடு பார்த்து ஒருவன் ஆனந்தம் பெறுகிறானென்பதால் அவை அழகானவையாகிவிடாது. அழகை அநுபவிக்கிறவனின் மன நிலை நல்லபடி இருப்பது முக்யம்.

இன்னொன்று, ஒன்று அழகாய் தெரிகிறதென்பது நமக்கு பயம் தராததாக, துக்கம் உண்டாக்காததாக, கோப மூட்டாததாக அது இருப்பதைப் பொறுத்தேயிருக்கிறது. ஒரு பெரிய மலைப் பள்ளத்தாக்கு பச்சைப் பசேலென்று விஸ்தாரமாயிருக்கிறது. அல்லது ஒரு அருவி பெரிசாக நாலு தென்ன மர உசரத்திலிருந்து தடாலென்று கொட்டுகிறது என்றால் அவற்றைத் தள்ளி நின்று பார்க்கும்போதுதான் நமக்கு ஸெளந்தர்ய ரஸானுபாவானந்தம் உண்டாகிறது. கிட்டே, அந்தப் பள்ளத்தின் விளிம்புக்கே, அல்லது அருவி கொட்டுகிற இடத்துக்கே போனால், எங்கே விளிம்பிலிருந்து வழுக்கி விழுந்துவிடுவோமோ, அருவி அடித்துக் கொண்டு போய்விடுமோ என்றுதான் உள்ளுக்குள்ளே அடித்துக் கொள்கிறது! பயம்! அப்போது ரஸிக்கத் தோன்றவில்லை! ஒரு பாம்பைப் பார்த்தால் வழவழவென்று, தேர்ந்த சைத்ரிகன் எவனோ வர்ண குழைத்துப் போட்ட மாதிரி வரி வரியாகப் போட்டுக்கொண்டு, பளபளவென்று அழகாக நெளிந்து நெளிந்து போகிறது. ஆனாலும் இத்தனை அழகான அந்த ஜந்துவைப் பார்த்து ரஸித்துக்கொண்டு நிற்கத் தோன்றுகிறதோ? உளறியடித்துக் கொண்டு இந்தண்டை ஓடி வந்துவிடுகிறோம்! ஒரு வரிப் புலி அல்லது சிறுத்தையை எடுத்துக் கொண்டாலும் அதன் சர்மத்தின் ‘டெக்ஸ்சர்’, அதில் போட்டிருக்கிற ‘டிஸைன்’ ஆகியவற்றின் அழகுக்குக் குறைவேயில்லை. ஆனாலும் நமக்கா, அது மட்டும் கூண்டிலில்லாமல் திரியட்டும், வயிற்றைத்தான் கலக்குகிறது! உசந்த அபய நிலைக்குப்போன ஒரு ஸித்தரால்தான் ஸந்தோஷமாக ‘ஆடு பாம்பே!’ பாட முடிகிறது; மஹா கவியானால் புலியையும் ரஸித்து வர்ணித்துப் ‘பொயட்ரி’ எழுதி ஆனந்தப்பட முடிகிறது1. நம்மால் முடியாது. பயத்தை உண்டு பண்ணாததாக, எந்தவித ஆபத்திற்கும் இடமில்லாததாக ஒரு வஸ்து இருக்கும்போதுதான் அதன் அழகு நமக்கு அழகாகத் தெரிவது. ஒரு தாமரைப் பூ, ஒரு பூர்ண சந்திரன் இப்படியிருந்தால் வர்ணம், குளிர்ச்சி, மார்தவம் [மென்மை], ரூப அமைப்பு, வாஸனை இதுகளின் அழகை ரஸிக்கிறோம். மல்லிப் பூ எத்தனை அழகாயிருக்கட்டும், அந்தப் பந்தலில் சுப்பராயன் (பாம்பு) இருக்கிறாரென்றால் ரஸிக்கத் தோன்றுகிறதா? ஓட்டம் பிடித்துவிடுகிறோம்!

இன்னும், மநுஷ்ய வர்க்கத்தை எடுத்துக்கொண்டால் அங்கே அன்பு இருக்கிற இடத்தில்தான் நமக்கு ஸெளந்தர்ய ரஸானந்தம் ஜாஸ்தி ஏற்படுகிறது. ஒரு ப்ரபு, முதலாளி ரொம்ப அழகாக இருக்கிறான். ஆனால் அவன் நம்மிடம் கோபமாகத் கத்துகிறான், ஏதாவது ‘விக்டிமைஸ்’ பண்ணிக் கொண்டேயிருக்கிறானென்றால் அவனுடைய அழகை ரஸித்து ஆனந்தப்பட முடிகிறதா?

ஜட வஸ்துவாகப் புஷ்பம், ஸந்த்யா மேகம், பொன் மணி என்றிப்படி இல்லாமல் ஜீவ ப்ராணிகளாக உள்ளவற்றின் விஷயத்தில், அன்பு என்பதை அந்த அழகான பிராணி – மநுஷ்யனோ, மிருகமோ, பக்ஷியோ – காட்டி உறவாடுகிற போதுதான் அழகைப் பூர்ணமாக நம்மால் ரஸிக்க முடிவதாகத் தெரிகிறது. அன்பாக இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை. விரோதமாக, பயப்படுத்துவதாக, அல்லது சோகமாக இல்லாத வரையில் மநுஷ்யர்களின் அழகை ஓரளவு ரஸிக்கவே செய்கிறோம். ஆனாலும் அவர்களே நம்மிடம் அன்பாகவும் இருந்துவிட்டாலோ ஜாஸ்தி ரஸித்து ஸந்தோஷப்படுகிறோம்.

அன்பு ஜாஸ்தியாக ஆக, ரூப அழகைப் பார்ப்பது கூடக் குறைத்து கொண்டே வர ஆரம்பிக்கிறது. அன்பே உருவானவர்களை, அவர்களுடைய ரூபம் எப்படியிருந்தாலும், திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் என்றால், அப்போது அன்புதான் அழகு என்று ஆகிவிடுகிறது! கன்னங்கரேலென்று, பல்லும் பவிஷுமாக ஒரு தாயார்க்காரி இருந்தால்கூட, அவளுடைய குழந்தை அவளை விட்டு யாரிடமும் போக மாட்டேன் என்று பிடித்துக் கொள்கிறது. அசலார் யாராவது ரொம்ப அழகானவர்கள் தூக்க வந்தால் அவர்களிடம் பயந்துகொண்டு வந்து, குரூபமான அம்மாவைத்தான் கட்டிக்கொள்கிறது. காரணம் என்ன? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை அது தெரிந்து கொண்டிருக்கிறது! அஷ்டாவக்ரர் எட்டுக் கோணலாக, மஹா குரூபமாக இருந்தார்; அவரை வித்வான்கள் தேடித் தேடிப் போய் தரிசனம் பண்ணினார்கள். இன்னும் எத்தனையோ மஹான்கள், ஞானிகள், ஸித்தபுருஷர்கள் ரூபத்தைப் பார்த்தால் விகாரமாக அசடு மாதிரி, பயப்படுகிற மாதிரியெல்லாம் இருக்கும். ஆனாலும் தர்சனம், தர்சனம் என்று அவர்களை ஜனங்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்; திரும்பத் திரும்பப் பார்க்கிறார்கள்; வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள் ஏன்? அவர்களுடைய அன்புள்ளம், அருளுடைமைதான் காரணம். ”நாம் திரும்பித் திரும்பிப் விரும்பிப் பார்க்கும் படியாக இருப்பதுதான் அழகு” என்ற definition படி இவர்கள்தான் அழகு என்று சொல்லவேண்டும். ”அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்று, இவர்களுடைய உள்ளத்திலிருக்கிற அன்பு சரீரத்தின் அவலக்ஷணங்களையும் மீறி ஏதோ ஒரு அழகை அள்ளிப் பூசிவிடுகிறது என்று அர்த்தம்.

மொத்தத்தில் என்ன ஏற்படுகிறதென்றால், ‘உயிருள்ள ரூபமாக இருக்கிற ஒன்றின் அழகு அது அன்பாக இருக்க இருக்க ஜாஸ்தியாகிறது; அன்பு ரொம்பவும் முதிர்ச்சி அடைந்திருக்கிற நிலையில் ரூப அழகே எடுபட்டுப்போய் அன்புதான் அழகாகத் தெரிகிறது’ என்று ஆகிறது.

நமக்குப் ஒன்றைப் பார்ப்பதில் ஆனந்தம் ஏற்படுவதால்தான் திரும்பத் திரும்பப் பார்க்கிறோம். ஆனந்தத்தை அளிக்கவல்லதில் தலை சிறந்தது அன்புதான். அன்பு தருகிற ஆனந்தத்துக்கு ஸமமாக எதுவும் இல்லை. இதனால் ஆனந்தத்தைத் தரும் அன்பே அழகாகிவிடுகிறது; திரும்பத் திரும்ப ஆசையோடு பார்க்கப் பண்ணுகிறது.


1ப்ளேக் (Blake) எழுதிய ‘தெ டைகர்’ என்ற கவிதையை ஸ்ரீசரணர்கள் மனத்தில் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அழகு ரஸனையே அதற்குப் பலனும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  அம்பள்:அழகு - அன்புகளின் முழுமை
Next