Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

அந்தஃகரணமும் ஹ்ருதயமும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அந்தஃகரணம் என்பதற்குப் பேரில் ‘அந்த’ [‘உள்’] என்று இருந்தாலும், அது அந்தர்முகப்படாமல் [உள் நாட்டமில்லாமல்] பஹிர்முகப்பட்டுக் கொண்டே [வெளிப்போக்கு உடையதாகவே] தான் இருப்பது. கை, கால், கண், மூக்கு மாதிரி வெளியில் ஸ்தூலமாகத் தெரியாமல் உள்ளே ஸூக்ஷ்மமாக இருப்பதாலேயே அதற்கு அந்தஃகரணம் என்று பேர். த்வைதம் – த்வைத ப்ரபஞ்சமும் த்வைதமான அநுபோகங்களுந்தான் – அதற்கு விஷயம். பொதுவாக ஜீவர்களுக்கெல்லாம் அப்படித்தான் இருக்கும். அப்போது அது தன்னை அநுபோக அழுக்கினால் கெட்டிப்படுத்திக் கொண்டு, தடித்துப்போய், பாத்திரத்தில் களிம்பு பிடித்த மாதிரி இருக்கும். இது அந்தஃகரண ஸமாசாரம்.

ஹ்ருதயம் என்றேனே, அது என்ன என்றால், நமக்கெல்லாம் தெரிந்தபடி மநுஷ்ய சரீரத்திலே மார்பில் இடது பக்கம் உள்ள ஹ்ருதயமில்லை நான் சொல்வது. [முதுகுத் தண்டுக்குள் ஒடும்] ஸுஷும்னா நாடியில், நட்ட நடு மார்புக்கு உள் பக்கத்தில் உள்ள அநாஹத சக்ரமும் இல்லை. இந்த ஹ்ருதயம் ஸாக்ஷாத் ஆத்மாவின் ஸ்தானம்.1

‘ஸ்தானம்’ என்று குறிப்பிட ஒரு இடமுமில்லாமல் ஸர்வ வியாபகமாக இருப்பதே ஆத்மா என்பது வாஸ்தவந்தான்; ‘ஸர்வம்’, ‘வியாபகம்’ என்கிறவற்றுக்கு ஆஸ்பதமான Space என்பதே அடிபட்டுப் போன விஷயந்தான் ஆத்மா என்று சொன்னால் அதுவும் வாஸ்தவமே. ஆனாலும் பொதுவாக த்வைதத்திலேயே போகிற சித்தத்தை [அந்தஃகரணத்தை] ஈச்வராநுக்ரஹத்தில் ஒருவன் அத்வைதமாகத் திருப்பி ஆத்மாவை த்யானம் பண்ண நினைக்கும்போது பாவனைக்கு ஏதோ ஒரு பிடிப்பு வேண்டியிருக்கும். அதற்காக ஆத்மாவுக்கு ரூபமோ குணமோ கல்பித்து முழு ஸகுணமாக, த்வைதமாகப் பண்ணினால் எப்படி ஸரிப்பட்டு வரும்? பின்னே எப்படிப் பிடிப்பு ஏற்படுத்தித் தருவது? அரூபமாக எங்கேயும் பரவியிருப்பது, அல்லது Space-க்கு அதீதமானது என்றால் கொஞ்சங்கூட பாவனைக்கே கொண்டு வர முடியாமலிருக்கிறதே! அதனால்தான் ஆத்மாவுக்கு வேறே ரூப, குணகல்பனைகள் ஏற்றாவிட்டாலும், இடத்திலே குறிப்பாக ஒரு ‘பாயின்ட்’ ஜீவ சரீரத்திற்குள்ளேயே இருக்கிறார்போலக் காட்டி அங்கே ஆத்ம தத்வத்தை பாவிக்கும்படிச் செய்யலாமென்று அப்படி இந்த ஹ்ருதய ஸ்தானத்தை வைத்திருப்பது. யார் வைத்தது என்றால் பராசக்திதான்! த்வைத மாயை அத்தனையும் பண்ணும் அவளே அத்வைதத்திலே ஒருத்தனைச் சேர்ப்பிக்க க்ருபை கொள்ளும்போது ஆத்ம ஸ்தானமாக ஓரிடத்தில் அவனுடைய அந்தஃகரணம் தோய்ந்து நிற்பதற்காக அந்தப் பாயின்டை வைத்திருக்கிறாள். தனியான ஜீவ பாவத்தை உண்டாக்கி பலப்படுத்தி வாழ வைப்பதான அந்தஃகரணமும், சரீரத்திற்கு உயிரைக் கொடுக்கிற மூச்சும் எந்த ஏக மூலத்தில் – ஒன்றேயான வேரில் – ஒன்றுசேர்ந்து ஒடுங்கிப் போகுமோ அந்த ஸ்தானம் அது. அப்படி ஒடுங்கியவுடன், ஆத்ம ஸ்புரணம் ஏற்படுவதும் [ஆத்மாநுபூதி துடிப்புடன் வெளிப்படத் தொடங்குவதும்] அந்த ஸ்தானத்தில்தான்.

அது ஒரு ‘பாயின்ட்’. துளியூண்டு புள்ளி, த்வாரமாயிருக்கிற புள்ளி. ‘நீவார சூகவத்’, [அதாவது] கூர்ப்பாக முடிகிற ஒரு செந்நெல்லுடைய அந்த கூர்நுனி மாதிரி – அவ்வளவு சிறிய புள்ளி என்று சொல்லியிருக்கிறது. தலை கீழான தாமரை மொக்கு மாதிரியான ஹ்ருதயத்திற்குள்ளே ஒரு ஸூக்ஷ்மமான த்வாரம்; அதிலிருந்து தேஹம் பூராப் பரவும் சூடான, உயிர்ச் சக்தியான அக்னி; அந்த அக்னியின் மத்தியிலே அணுமாத்ரமான ஜ்வாலை – மின்னல் கொடியான ப்ராணாக்னி – ‘நீவார சூகவத்’தாக அது முடிவதே ஆத்ம ஸ்தானம் என்று இருக்கிறது.2

ஹ்ருதயத்திற்குள்ளே ஆத்ம ஸ்தானமான த்வாரப் புள்ளி என்றதால் அந்தச் சின்னப் புள்ளியைச் சுற்றிலும் ஹ்ருதயம் இருக்கிறது என்று அர்த்தம். அதுவும் ஒரு சின்ன ஸ்தானம்தான். தஹரம், தஹ்ரம் என்று உபநிஷத் பாஷையில் இரண்டு வார்த்தைகள். இரண்டுக்கும் அர்த்தம் சின்னது என்பதே. பிற்காலத்தில் ‘தஹ்ரம்’ என்று ‘தப்ரம்’ என்று வந்தது. ஹ்ருதயத்தையும் அதற்குள் உள்ள ஆத்ம ஸ்தானத்தையும் ‘தஹரத்திற்குள்ளே இருக்கும் தஹரம்’ என்றும், ‘தஹ்ரத்திற்குள்ளே இருக்கும் தஹ்ரம்’ என்று உபநிஷத்துக்களில் சொல்லியிருக்கிறது.3 அத்தனை சின்னதில்தான் ஆகாசமாக விரிந்துள்ள ஸத்யம் [பிரம்மம்] இருக்கிறது.

லோகம் முழுவதையும் விராட் புருஷன் என்கிற போது அந்தப் புருஷனுக்கு ஹ்ருதயமாக இருக்கப்பட்ட சிதம்பரத்தில் சித்ஸபைதான் அந்தப் பாயின்ட். ‘அது ஒரு த்வாரமாக இருக்கிறது. அங்கே ஆகாசம் இருக்கிறது, அது ரஹஸ்யம் என்பதாக இருக்கிறது. பஞ்ச பூத க்ஷேத்ரங்களில் சிதம்பரந்தான் ஆகாச க்ஷேத்ரம்’ என்றெல்லாம் சொல்வதன் தாத்பர்யம் இதுதான். சித்ஸபை என்பதையே ‘தப்ரஸபா’ என்றும் சொல்வார்கள். அதன் நேர் தமிழ் வார்த்தைதான் ‘சிற்றம்பலம்’ (சிறிய அம்பலம்) என்பது. ஆனபடியால், ‘சிதம்பரம்’ என்ற வார்த்தைதான் ‘சிற்றம்பலம்’ ஆச்சு, அல்லது ‘சிற்றம்பலம்’ தான் ‘சிதம்பரம்’ ஆச்சு என்பது ஸரியில்லை. ‘சித் அம்பரம்’ என்றால் ஞான ஆகாசம். ‘அம்பரம்’ என்ற [ஸம்ஸ்கிருத] வார்த்தைக்கு ‘ஆகாசம்’ என்றும் (நம் விஷயத்திற்கு ஸம்பந்தமில்லாததாக, ‘வஸ்திரம்’ என்றுந்தான்) அர்த்தமே தவிர ‘ஸபை’ என்ற அர்த்தம் கிடையாது. [ஸம்ஸ்கிருத] ‘அம்பர’த்திலிருந்து வந்திருக்கக்கூடிய தமிழ் ‘அம்பல’த்திற்குத்தான் ஆகாசம், ஸபை என்ற இரண்டு அர்த்தங்கள் இருப்பது. ஆகாச அம்பலமாக இருக்கிற தத்வமே நாட்யஸபையான அம்பலத்தில் நடராஜாவாயிருப்பது.

அது விராட் புருஷ விஷயமென்றால், நம் ஒவ்வொருவர் ஹ்ருதயத்திலேயும் சின்னூண்டு ஆகாசம் த்வாரமாகப் புள்ளியளவுக்கு இருக்கிறது.

ஜீவபாவம் அதற்குள்ளே போய்த் தேய்ந்து தேய்ந்து முடிவாக ஒடுங்குகிறதாகச் சொன்னேன். இது ஜீவன் சிவனாகிறபோது [நடப்பது]. Involution என்று அழகாகச் சொல்கிறார்கள்; விரிந்து வெளிப்படுகிற ஒன்று மறுபடி குவிந்து உள்ளே போய் ஒடுங்குகிற கார்யம். மறுபக்கத்தில் ஸத்தாமாத்ரமான சிவன் – அதாவது, பரமாத்மா – ஜீவனாக தேஹம், இந்த்ரியம், அந்தஃகரணம் எல்லாம் போட்டுக் கொண்டு விரிகிற evolution-ல் இந்த ஹ்ருதயத்துக்குள்ளேயேதான், ‘நான் ஒரு தனி ஜீவன்’ என்பதான ‘அஹங்காரம்’ என்பது முளைக்கிறது. ‘அஹங்காரம்’ என்னவென்று அப்புறம் சொல்கிறேனென்றேனே அந்த ஸமாசாரம்! ப்ரஹ்மத்திற்கு வேறாகத் தான் தனி ஆஸாமி என்று ‘நான்’ போட்டுக் கொண்டு நினைக்கிற நினைப்புத்தான் அஹங்காரம். அதுதான் சிவன் ஜீவனாக evolve ஆவதில் பிள்ளையார் சுழி!

Evolution-கு ‘ஸ்ருஷ்டி க்ரமம்’ என்றும் involution-கு ‘லய க்ரமம்’ என்றும் பெயர். லயத்தை ‘ஸம்ஹாரம்’ என்பது. அந்த வார்த்தையைச் சொன்னால் பயப்படப் போகிறீர்களே என்று பாலிஷ் பண்ணி லயம் என்றேன். அதற்கு [ஸம்ஹாரம் என்ற வார்த்தைக்கு] பயப்படுத்துகிற அர்த்தமேயில்லை! ‘ஹர’ என்றால் எடுத்துக் கொள்வது; வலிந்து அப்படிப் பண்ணுவது – அதாவது பிடுங்கிக் கொள்கிறாற்போல! ‘ஸம்-ஹாரம்’ என்றால் நன்றாக, பூர்ணமாக நம்மை பரமாத்மா தனக்குள்ளேயே எடுத்துக் கொண்டு விடுவதுதான்!

ஸ்ருஷ்டியின் போது ‘தான் ஒரு தனி வ்யக்தி’ என்று ஜீவன் பிரிகிற அஹங்கார ஸ்தானமான ஹ்ருதயமேதான் ஸம்ஹாரத்தின் போது (பரமாத்மாவிடம் மீளவும் லயிக்கும் போது; தாற்காலிகமான ‘லய’மாக இல்லாமல் சாச்வதமான ‘ஐக்ய’மாக ஒன்றுசேரும்போது) அப்படிச் சேர்வதற்கு நெருக்கமான நிலையில் அந்தஃகரணம் குவிந்து நிற்கிற ஸ்தானமாயும் இருக்கிறது. அப்புறம் இது இன்னமும் குவிந்து அந்த ஹ்ருதயத்திலும் மையமாக உள்ள கூர் பாயின்டில் நிற்கிற போதே ஆத்ம ஸ்புரணம். அது இருக்கட்டும். [பரமாத்மாவிலிருந்து] வேறுபட்டு ஜீவாத்மாவாக வெளியிலே வருவது, மறுபடி பரமாத்மாவாக ஒன்றுபட்டு உள்ளே போவது இரண்டிக்கும் ஸ்தானமே நான் சொன்ன ஹ்ருதயம். ஒரு வாசல் இருக்கிறதென்றால் அதன் வழியாகத்தானே உள்ள இருப்பவர் வெளியில் போவது, வெளியிலிருப்பவர் உள்ளே நுழைவது இரண்டும்? அப்படி!

அந்தஃகரணத்தில் சித்தம், மனஸ், புத்தி, அஹங்காரம் என்று நாலு விஷயங்கள் இருப்பதில் பொதுவாக மனஸின் ஸ்தானம் கழுத்து. அஹங்காரத்தின் ஸ்தானம் ஹ்ருதயம் என்றேன். புத்தியின் ஸ்தானம் முகம். சித்தம் என்பது ‘தாரணம்’ என்னும் ஞாபக சக்தியாகவே குறிப்பாகச் சொல்லப்படும். அப்படி [ஞாபக சக்தியாக] இருக்கும்போது அதன் ஸ்தானம் நாபி. ஆனால் வாஸ்தவத்தில் மனஸ், புத்தி, அஹங்காரம் ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படைச் சரக்கான ‘எண்ணம்’ என்பதையே சித்தந்தான் உற்பத்தி செய்கிறது. அதனால் அதற்குத் தனியாக ஸ்தானம் கொடுக்க வேண்டியதில்லை. இப்படியா அப்படியா என்று மனஸினால் குழப்படி பண்ணிக் கொள்ளும்போது சித்தம் கழுத்தில் இருக்கும். ‘இப்படித்தான்’ என்று புத்தியினால் தீர்ப்பு பண்ணும் போது அது முகத்திலிருக்கும். ‘நான்’ என்று நம்மை ஜீவனாகவே நிலை நாட்டிக் கொள்ளும்போது அஹங்காரத்தின் ஸ்தானமான ஹ்ருதயத்திலேயே சித்தமும் இருக்கும்.4


1 ஆத்ம ‘ஸ்தான’மாக ஒரு ஜீவனின் வலது மார்பகத்துள் ஹ்ருதயம் இருப்பதாக ஸ்ரீ ரமணர் கூறுவார்.

2 நாராயண ஸூக்தம்.

3 சாந்தோக்யோபநிஷத் VIII. 1; தைத்திரீய ஆரண்யகம் XII. 16

4 இவ்விஷயங்கள் ஆசார்யாளின் “ஆத்மாநாத்ம விவேகம்” என்ற ப்ரகரணத்தில் காணலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அன்பு என்பது என்ன ?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ' அஹங்கார ' மும் அன்பும்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it