அன்பு என்பது என்ன ? : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அன்பு என்பது என்ன? ஒரே பரமாத்மாதான் எல்லா உயிர்களுமாக ஆகியிருக்கிறது. பல உயிர்களாகும்போது ஒன்றையொன்று வேறுபடுத்தி வைத்து மாய ப்ரபஞ்ச நாடகம் நடக்கிறது. இதிலேயே எதிர் டைரக்ஷனில், ரொம்பவும் உத்தமமான அம்சமாக, வேறுபட்டவற்றை ஒன்றாக ஐக்யப்பட வைக்கவும் பரமாத்மா அநுக்ரஹித்திருக்கிற force தான் அன்பு. பொதுவாக மற்றவரிடமிருந்து நமக்கு ஒன்றைப் பெற்று லாபமடைவதாகவே மநுஷ்ய மனப்பான்மை இருக்கும். அதற்கு எதிர் மருந்தாக நம்மை இன்னொருவருக்குக் கொடுத்து அதில் நிறைவு பெறச் செய்வது அன்பு. ஆசைக்கும் அன்புக்கும் இதுதான் வித்யாஸம்: நாம் ஒன்றிடம் ஆசையாயிருக்கிறோமென்றால் நமக்கு அதனிடமிருந்து ஸந்தோஷம் தேடிக் கொள்கிறோம்; அன்பாயிருக்கும்போது நம்மால் அதற்கு ஸந்தோஷம் உண்டாக்குகிறோம். ஆசை என்பது வாங்கல்; அன்பு – கொடுக்கல். ‘நமக்கு’ ஸந்தோஷம் என்பது அந்த உயிரிடம் ரூப ஸம்பத்து, குண ஸம்பத்து – திரவிய ஸம்பத்து கூடத்தான் – இவை, அல்லது இந்த மாதிரி வேறு எதை நாம் அதனிடமிருந்து பெற்றால் நமக்கு ஸந்தோஷம் உண்டாகுமோ அவை இருந்தால்தான் ஏற்படும். இவற்றுக்காகவே அதனிடம் நமக்கு உண்டாகிற பற்றுதான் ஆசை. தப்பாக அதை அன்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அன்பு என்பது அந்தஃகரணம் உசந்த நிலையில் உள்ளபோது உண்டாவது. அப்போது மனஸும் புத்தியும் அஹங்காரத்திற்குள்ளே இழுக்கப்பட்டு, அந்தஃகரணம் ஹ்ருதயத்திற்கு இடம் மாறி அங்கேயிருந்து வேலை செய்யும்1. அம்பாள் அன்பு மயமானவளாகையால் அவளுடைய ஸ்ருஷ்டியிலே ரொம்பவும் க்ரூரமான ஜீவராசிகளுக்குங்கூட ஒவ்வொரு ஸமயத்திலாவது அன்பு உண்டாகுமாறு அநுக்ரஹித்திருக்கிறாள். ஸாதனையால் மனஸும் புத்தியும் பண்பட்டவர்களுக்கோ எப்போதுமே அன்பு சுரக்கக்கூடிய நிலை வாய்க்கிறது. அந்தஃகரணத்தின் பெர்மனென்ட் ஸ்தானமாகவே அப்போது ஹ்ருதயம் ஆகிவிடும்.


1 தொகுப்பாசிரியர் அறிந்த அளவில் இக் கருத்தும், இதனடியாகத் தொடர்ந்து வரும் சில கருத்துக்களும் புதியனவாக உள்ளன. இச்சந்தர்ப்பம் தவிர வேறேப்போதும் ஸ்ரீசரணர்களுங்கூட இவ்விஷயங்கள் கூறியதாகத் தெரியவில்லை. இவை குறித்துச் சில மேல் விவரங்கள் அவர்களிடம் வினவியபோதும் “அன்னிக்குச் சொன்னது தான்!” என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is பக்தி என்றால் என்ன ?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  அந்தஃகரணமும் ஹ்ருதயமும்
Next