Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

வன்தாளினிணை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெருமாள் திருமொழி

வன்தாளினிணை

இராமன் வனவாசம் செய்யச் சென்றான். தசரதன் இராமனைப் பிரிந்து வருந்தினான்;மனமிரங்கிப் புலம்பினான். அவன் புலம்பியவாற்றை ஆழ்வார் ஈண்டுப்பாடுகிறார்.

தனயன் கான்புகத் தசரதன் புலம்பல்

அறுசீர்க் கடிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன்!

730. வன்தாளி னிணைவணங்கி வளநகரம்

தொழுதேத்த மன்ன னாவான்

நின்றாயை, அரியணைமே லிருந்தாயை

'நெடுங்கானம் படரப் போகு'

என்றாள்,எம் இராமாவோ!உனைப்பயந்த

கைகேசி தன்சொற் கேட்டு,

நன்றாக நானிலத்தை யாள்வித்தேன்

நன்மகனே!உன்னை நானே. 1

இராமா!வனத்தில் c எவ்வாறு நடந்தனையோ!

731. வெவ்வாயேன் வெவ்வுரைகேட் டிருநிலத்தை

வேண்டாதே விரைந்து, வென்றி

மைவாய களிறொழிந்து தேரொழிந்து

மாவொழிந்து வனமே மேவி,

நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும்

இளங்கோவும் பின்பு போக,

எவ்வாறு நடந்தனையெம் இராமாவோ!

எம்பெருமான்!என்செய் கேனே! 2

கல் அணைமேல் துயில எப்போது கற்றாய்?

732. கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன்

குலமதலாய்!குனிவில் லேந்தும்,

மல்லணைந்த வரைத்தோளா!வல்வினையேன்

மனமுருக்கும் வகையே கற்றாய்,

மெல்லணைமேல் முன்துயின்றாய் இன் றினிப்போய்

வியன்கான மரத்தின் நிழல்

கல்லணைமேல் கண்டுயிலக் கற்றனையோ

காகுத்தா!கரிய கோவே! 3

என் நெஞ்சம் பிளக்கவில்லையே!

733. வாபோகு வாஇன்னம் வந்தொருகால்

கண்டுபோ மலராள் கூந்தல்,

வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா

விடையோன்றன் வில்லைச் செற்றாய்,

மாபோகு நெடுங்கானம் வல்வினையேன்

மனமுருக்கும் மகனே, இன்று

நீபோக என்னெஞ்ச மிருபிளவாய்ப்

போகாதே நிற்கு மாறே! 4

பாவி சொல் கேட்டேனே!

734. பொருந்தார்கை வேல்நுதிபோல் பரல்பாய

மெல்லடிகள் குருதி சோர,

விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப

வெம்பசிநோய் கூர, இன்று

பெரும்பாவி யேன்மகனே!போகின்றாய்

கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற,

அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன்

என்செய்கேன் அந்தோ யானே! 5

உயிரோடு உன்னை இழந்தேனே!

735. அம்மாவென் றுகந்தழைக்கு மாவச்சொல்

கேளாதே அணிசேர் மார்வம்,

என்மார்வத் திடையழுந்தத் தழுவாதே

முழுசாதே மோவா துச்சி,

கைம்மாவின் நடையன்ன மென்னடையும்

கமலம்போல் முகமும் காணாது,

எம்மானை யென்மகனை யிழந்திட்ட

இழிதகையே னிருக்கின் றேனே! 6

என் மகன் வனம் செல்லுதல் தகுமோ?

736. பூமருவு நறுங்குஞ்சி புன்சடையாய்ப்

புனைந்துபூந் துகில்சே ரல்குல்,

காமரெழில் விழலுடுத்துக் கலனணியா

தங்கங்க ளழகு மாறி,

ஏமருதோ ளென்புதல்வன் யானின்று

செலத்தக்க வனந்தான் சேர்தல்,

தூமறையீர்!இதுதகவோ? சுமந்திரனே!

வசிட்டனே!சொல்லீர் நீரே. 7

கைகேசீ!உனக்கு இதயமே இல்லையா?

737. பொன்பெற்றா ரெழில்வேதப் புதல்வனையும்

தம்பியையும் பூவை போலும்,

மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென்

மருகியையும் வனத்தில் போக்கி,

நின்பற்றா நின்மகன்மேல் பழிவிளைத்திட்

டென்னையும்நீள் வானில் போக்க,

என்பெற்றாய் கைகேசீ!இருநிலத்தில்

இனிதாக விருக்கின் றாயே! 8

ஏழ்பிறப்பிலும் நின்னையே மகனாகப் பெறுவேன்

738. முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி

அவன்தவத்தை முற்றும் செற்றாய்,

உன்னையுமுன் னருமையையு முன்மோயின்

வருத்தமுமொன் றாகக் கொள்ளாது,

என்னையும்என் மெய்யுரையும் மெய்யாகக்

கொண்டுவனம் புக்க எந்தாய்,

நின்னையே மகனாகப் பெறப்பெறுவேன்

ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே! 9

யான் இறக்கப் போகின்றேன்

739. தேன்நகுமா மலர்க்கூந்தல் கௌசலையும்

சுமித்திரையும் சிந்தை நோவ,

கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட

கொடியவள்தன் சொற்கொண்டு, இன்று

கானகமே மிகவிரும்பி நீதுறந்த

வளநகரைத் துறந்து, நானும்

வானகமே மிகவிரும்பிப் போகின்றேன்

மனுகுலத்தார் தங்கள் கோவே. 10

தீய நெறியில் செல்லமாட்டார்கள்

740. ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய்

வனம்புக்க அதனுக் காற்றா,

தாரார்ந்த தடவரைத்தோள் தயரதன்றான்

புலம்பியஅப் புலம்பல் தன்னை,

கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன்

குடைக்குலசே கரன்சொற் செய்த,

சீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார்

ரீநெறிக்கண் செல்லார் தாமே. 11

அடிவரவு:வன்தாள் வெவ்வாயேன் கொல்லணை வாபோகு பொருந்தார் அம்மா பூ பொன் முன் தேன் ஏரார்ந்த -- அங்கண்.

 

 

 


 


 Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is மன்னுபுகழ்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  அங்கணெடுமதிள்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it