Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

மற்றிருந்தீர்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாச்சியார் திருமொழி

மற்றிருந்தீர்

'உறவினர்களே!நான் பகவத் விஷய ஆசையின் மேல் நிலையில் இருக்கிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் பயனில்லை. அது என் காதில் விழாது;பதிலும் கூறமாட்டேன். என்னைக் காப்பாற்ற நினைத்தால் இவ்வாறு செய்யுங்கள்:கண்ணன் தன் வீரத்தைக் காட்டி மகிழ்வித்த வட மதுரைக்குக் கொண்டு போய் விடுங்கள். என் விரக நோயை நீங்கள் தீர்க்கமுடியாது. திருவாய்ப்பாடிக்கு அழைத்துச் செல்லுங்கள். அவனைச் சேவித்தால்தான் நோய் தீரும்'என்கிறாள் ஆண்டாள்.

'சீதரனிருந்துழிச் செலுத்துவீர் எனை'எனக் கோதை தமர்க்குக் கூறிய துணிபு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மதுரைப்புறத்து என்னை அழைத்துச் செல்லுங்கள்

617. மற்றிருந் தீர்கட் கறியலாகா

மாதவ னென்பதோ ரன்புதன்னை,

உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம்

ஊமைய ரோடு செவிடர்வார்த்தை,

பெற்றிருந் தாளை யழியவேபோய்ப்

பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி,

மற்பொருந் தாமற் களமடைந்த

மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின். 1

மாயனின் ஆய்ப்பாடிக்கே என்னை அனுப்புங்கள்

618. நாணி யினியோர் கருமமில்லை

நாலய லாரும் அறிந்தொழிந்தார்,

பாணியா தென்னை மருந்துசெய்து

பண்டுபண் டாக்க வுறுதிராகில்,

மாணி யுருவா யுலகளந்த

மாயனைக் காணில் தலைமறியும்,

ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில்

ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின். 2

நந்தகோபாலன் இருக்கைக்கு என்னை உய்த்திடுமின்

619. 'தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத்

தின்வழி போயினாள்!'என்னும்சொல்லு,

வந்தபின் னைப்பழி காப்பரிது

மாயவன் வந்துருக் காட்டுகின்றான்,

கொந்தள மாக்கிப் பரக்கழித்தக்

குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற,

நந்தகோ பாலன் கடைத்தலைக்கே

நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின். 3

யமுனைக் கரைக்கே என்னைச் செலுத்துங்கள்

620. அங்கைத் தலத்திடை யாழிகொண்டான்

அவன்முகத் தன்றி விழியேனென்று,

செங்கச்சுக் கொண்டுகண் னாடையார்த்துச்

சிறுமா னிடவரைக் காணில்நாணும்,

கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர்

கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா,

இங்குத்தை வாழ்வை யழியவேபோய்

யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 4

காளியனுச்சியில் நடமாடிய பொய்கைக்கு என்னை உய்த்திடுமின்

621. ஆர்க்குமென் நோயி தறியலாகா

தம்மணை மீர்!துழ திப்படாதே,

கார்க்கடல் வண்ணனென் பானொருவன்

கைகண்ட யோகம் கடவத்தீரும்,

நீர்க்கரை நின்ற கடம்பையேறிக்

காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து,

போர்க்கள மாக நிருத்தஞ்செய்த

பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 5

கண்ணன் பக்கல் என்னை அனுப்புங்கள்

622. கார்த்தண் முகிலும் கருவிளையும்

காயா மலரும் கமலப்பூவும்,

ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட்

டிருடீகே சன்பக்கல் போகேயென்று,

வேர்த்துப் பசித்து வயிறசைந்து

வேண்டடி சிலுண்ணும் போது,ஈதென்று

பார்த்திருந் துநெடு நோக்குக்கொள்ளும்

பத்தவி லோசநத் துய்த்திடுமின். 6

திருத்துழாய் மாலையை எனக்குச் சூட்டுங்கள்

623. வண்ணம் திரிவும் மனங்குழைவும்

மானமி லாமையும் வாய்வெளுப்பும்,

உண்ண லுறாமையு முள்மெலிவும்

ஓதநீர் வண்ணனென் பானொருவன்,

தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு

சூட்டத் தணியும், பிலம்பன்றன்னைப்

பண்ணழி யப்பல தேவன்வென்ற

பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின். 7

கோவர்த்தனத்திற்கு என்னை உய்த்திடுமின்

624. சுற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்

காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்,

பற்றி யுரலிடை யாப்புமுண்டான்

பாவிகாள்!உங்களுக் கேச்சுக்கொலோ,

கற்றன பேசி வசையுணாதே

காலிக ளுய்ய மழைதடுத்த,

கொற்றக் குடையாக வேந்திநின்ற

கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின். 8

துவராபதிக்கு என்னைச் செல்ல விடுங்கள்

625. கூட்டி லிருந்து கிளியெப்போதும்

'கோவிந்தா!கோவிந்தா!'என்றழைக்கும்,

ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்

'உலகளந் தான்!'என் றுயரக்கூவும்,

நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்

நன்மை யிழந்து தலையிடாதே,

சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்

துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின். 9

இவற்றைப் பாடுவோர் வைகுந்தப்பதவி அடைவர்

626. மன்னு மதுரை தொடக்கமாக

வண்துவ ராபதி தன்னளவும்,

தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித்

தாழ்குழ லாள்துணிந் ததுணிவை,

பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும்

புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,

இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை

ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. 10

அடிவரவு:மற்று நாணி தந்தை அங்கை ஆர்க்கும் கார்த்தண் வண்ணம் கற்றினம்

கூட்டில் மன்னு ---- கண்ணன்.

 

 


 


 Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is தாமுகக்கும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கண்ணனென்னும்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it