Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

தாமுகக்கும்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாச்சியார் திருமொழி

தாமுகக்கும்

ஆண்டாள் பகவானை நினைத்து ஏங்குகிறாள். உடல் இளைக்கிறது. கைவளைகள் கழன்று விழுகின்றன. அப்போதும் அவன் அவ்விடம் வரவில்லை. ஆண்டாள் வருந்துகிறாள்; 'கண்ணனாகிய அரங்கன் தன் கையில் ஆசைப்பட்டு சங்கை வைத்திருக்கிறான். ஆனால் என் கையிலுள்ள சங்கு வளைகளைக் கீழை விழுமாறு செய்துவிட்டான். மூவடிமண் பெற மாவலியிடம் நடந்து சென்றானே? அவனையே விரும்பும் எனக்கு நடையழகைக் காட்டக் கூடாதோ? பெண்ணின் வருத்தமறிந்தவன் என்று இராமாவதாரத்தில் காட்டிக்கொண்டானே!என் விஷயத்தில்மட்டும் வேறுபடுவானேன்? தம்மை விரும்புகிறவரைத் தாமும் விரும்புவார் என்ற வார்த்தை பொய்யாகாமல் இருக்கவேண்டுமே'என்கிறாள்.

திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்

தரவு கொச்சகக் கலிப்பா

என் சங்கு வளைகளைத் திருவரங்கர் கவர்ந்துவிட்டாரே!

607. தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ,

யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்,

தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்,

ஆமுகத்தை நோக்காரால் அம்மனே!அம்மனே! 1

என் வளைகள் சுழல்கின்றனவே!

608. எழிலுடைய வம்மனைமீர்!என்னரங்கத் தின்னமுதர்,

குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில்

எழுகமலப் பூவழக ரெம்மானார், என்னுடைய

கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே. 2

என் இடரை அவர் தீர்ப்பாரா?

609. பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்,

அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்,

செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்,

எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே! 3

என் வளைமீது அவருக்கு என்ன ஆசை?

610. மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்,

பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற,

பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளை மேல்,

இச்சை யுடையரே லித்தெருவே போதாரே? 4

என் பொருள் அவருக்கு எதற்கு?

611. பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று,

எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்,

நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்,

இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே. 5

நான்மறையின் சொற்பொருளாய் நின்றவரன்றோ அவர்?

612. கைப்பொருள்கள் முன்னமே

கைக்கொண்டார், காவிரிநீர்

செய்ப்புரள வோடும்

திருவரங்கச் செல்வனார்,

எப்பொருட்கும் நின்றார்க்கு

மெய்தாது, நான்மறையின்

சொற்பொருளாய் நின்றாரென்

மெய்ப்பொருளும் கொண்டாரே. 6

தம் நன்மைகளையே அவர் எண்ணுகிறாரே!

613. உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து,

பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்,

திண்ணார் மதில்சூழ் திருவரங்கச் செல்வனார்,

எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே. 7

அவர் எவ்வளவெல்லாம் பேசினார்!

614. பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள்

மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்,

தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்,

பேசி யிருப்பனங்கள் பேர்க்கவும் பேராவே. 8

அவரது ஊர் அரங்கமே

615. கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்,

திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து,

அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த,

பெண்ணாளன் பேணுமூர் பேரு மரங்கமே. 9

அவர் சொல் பொய்க்காது

616. செம்மை யுடைய

திருவரங்கர் தாம்பணித்த,

மெய்யம்மைப் பெருவார்த்தை

விட்டுசித்தர் கேட்டிருப்பர்,

தம்மை யுகப்பாரைத்

தாமுகப்ப ரென்னும்சொல்,

தம்மிடையே பொய்யானால்

சாதிப்பா ராரினியே! 10

அடிவரவு:தாம் எழில் பொங்கு மச்சு பொல்லா கை உண்ணாது பாசி கண்ணாலம் செம்மை --- மற்று.
 

 


 


 Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கார்க்கோடல் பூக்காள்!
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  மற்றிருந்தீர்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it