மாணிக்கக்கிண்கிணி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

முதற் பத்து

மாணிக்கக்கிண்கிணி

கண்ணன் தன் திருமேனியைச் சிறிது அசைக்கிறான். இடுப்பில் கட்டிய சதங்கைகள் ஒலிக்கின்றன!தன் முத்துப் பற்களைக் காட்டிப் புன்முறுவல் செய்கிறான்.

பெருஞ் செயல்களைச் செய்த இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டுகிறான்!அரிய செயலைச் செய்து விட்டதாக நினைக்கிறான்!கைதட்டுவதால் ஏற்பட்ட ஓசையைக் கேட்டு மேலும் மகிழ்கிறான். இதைக் கண்டு பேரானந்தம் அடைகிறாள் யசோதை.

'கண்ணா!மீண்டும் ஒரு முறை சப்பாணி கொட்டு;உலகம் மகிழட்டும்'என்று வேண்டுகிறாள்.

சப்பாணிப் பருவம்
(கைகொட்டி விளையாடுதல்)

கலித்தாழிசை
பண்டு காணி கொண்ட கைகள்

75. மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின் மேல்,

ஆணிப்பொன் னாற்செய்த ஆய்பொன்னு டைமணி,

பேணிப் பவளவாய் முத்திலங் கப், பண்டு

காணிகொண்ட கைகளால் சப்பாணி

கருங்குழற் குட்டனே!சப் பாணி. 1

மாயவன் கண்ணன்

76. பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி,

தன்னரை யாடத் தனிச்சுட்டி தாழ்ந்தாட,

என்னரை மேல்நின் றிழிந்துங்க ளாயர்தம்,

மன்னரை மேல்கொட்டாய் சப்பாணி

மாயவ னே!கொட்டாய் சப்பாணி. 2

ஆழியங்கையன்

77. பன்மணி முத்தின் பவளம் பதித்தன்ன,

என்மணி வண்ணன் இலங்குபொற்றோட்டின்மேல்,

நின்மணி வாய்முத் திலங்கநின் னம்மைதன்,

அம்மணி மேற்கொட்டாய் சப்பாணி

ஆழியங் கையனே!சப்பாணி. 3

திருக்குடந்தை ஆராவமுது

78. தூநிலா முற்றத்தே போந்து விளையாட,

வானிலா வம்புலீ சந்திரா வாவென்று,

நீநிலா நின்புக ழாநின்ற ஆயர்தம்,

கோநிலா வக்கொட்டாய் சப்பாணி

குடந்தைக் கிடந்தானே!சப்பாணி. 4

பத்மநாபன்

79. புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து,

அட்டி யமுக்கி யகம்புக் கூறியாமே,

சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயுமுண்,

பட்டிக்கன் றே!கொட்டாய் சப்பாணி

பற்பநா பா!கொட்டாய் சப்பாணி. 5


தேவகி சிங்கம்

80. தாரித்து நூற்றுவர் தந்தைசொற் கொள்ளாது

போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாள,

பாரித்த மன்னர் படப்பஞ் சவர்க்கு,அன்று

தேருய்த்த கைகளால் சப்பாணி

தேவகி சிங்கமே!சப்பாணி. 6

திருக்குடந்தை சார்ங்கபாணி

81. பரந்திடடு நின்ற படுகடல், தன்னை

இரந்திட்ட கைம்மே லெறிதிரை மோத,

கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க,

சரந்தொட்ட கைகளால் சப்பாணி

சார்ங்கவிற் கையனே!சப்பாணி. 7

திருக்குடந்தை சக்ரபாணி

82. குரக்கின த் தாலே குரைகடல் தன்னை,

நெருக்கி யணைகட்டி ca ரிலங்கை

அரக்க ரவிய அடுகணை யாலே,

நெருக்கிய கைகளால் சப்பாணி

நேமியங் கையனே ! சப்பாணி. 8

சிங்கமதாகிய தேவன்

83. அளந்திட்ட தூணை யவன்தட்ட, ஆங்கே

வளர்ந்திட்டு வா ளுகிர்ச் சிங்க வுருவாய்,

உளந்தொட் டிரணிய னொண்மார் வகலம்,

பிறந்திட்ட, கைகளால் சப்பாணி

பேய்முலை யுண்டானே !சப்பாணி. 9

கடல் கடைந்த கார்முகில்

84. அடைந்திட் டமரர்கள் ஆழ்கடல தன்னை,

மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி,

வடம்சுற்றி வாசுகி வன்கயி றாக,

கடைந்திட்ட கைகளால் சப்பாணி

கார்முகில் வண்ணனே சப்பாணி. 10

தீவினை போகும்

85. ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தங் கோவினை,

நாட்கமழ் பூம்பொழில் வில்லிபுத் தூர்ப்பட்டன்,

வேட்கையாற் சொன்ன சப்பாணி யீரைந்தும்,

வேட்கையி னால்சொல்லு வார்வினை போமே. 11

அடிவரவு:மாணிக்கம் பொன் பன் தூநிலா புட்டியில் தாரித்து கரந்து குரக்கினம் அளந்து அடைந்து ஆட்கொள்ள - தொடர்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is உய்யவுலகு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  தொடர்சங்கிலிகை
Next