Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

தொடர்சங்கிலிகை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

முதற் பத்து

தொடர்சங்கிலிகை

நடக்கத் தெரியாத குழந்தையை நடக்கச் செய்வதும், அது தடுமாறிக் கொண்டு நடந்து வருவதைக் கண்டு மகிழ்வதும் தாயின் செயல்! "கண்ணா, c யல்லனோ நடையழகன். உன்னைச் சதுர்கதி:என்று எல்லோரும் கூறுகிறார்களே!அந்த நடையழகை எனக்குக் காட்டமாட்டாயா? உன் மெல்லடித் தாமரைகளைத் தரைமீது மெல்ல வைத்து 'யானைக்குட்டி போல்'நடந்து வா!"என்கிறாள் யசோதை. இப்பாடல்களை ஆர்வத்தோடு பாடுவோர் கண்ணனைப் போன்று புகழ்மிக்க மகனைப் பெறுவார்கள்.

தளர் நடைப் பருவம்

(தளர் நடை நடத்தல்)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாரணம் கண்ணன்

86. தொடர்சங் கிலிகை சலார்பிலா ரென்னத்

தூங்குபொன் மணியலிப்ப,

படுமும் மதப்புனல் சோர வாரணம்

பையநின் றூர்வதுபோல்,

உடன்கூடிக் கிண்கிணி யாரவா ரிப்ப

உடைமணி பறைகறங்க,

தடந்தா ளிணைகொண்டு சார்ங்க பாணி

தளர்நடை நடவானோ. 1

அனந்த சயனன்

87. செக்க ரிடைநுனிக் கொம்பில் தோன்றும்

சிறுபிறை முளை போல,

நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே

நளிர்வெண்பல் முளியிலக,

அக்கு வடமுடுத் தாமைத் தாலிபூண்ட

அனந்த சயனன்,

தக்க மாமணி வண்ணன் வாசுதேவன்

தளர்நடை நடவானோ. 2

இருடீகேசன்

88. மின்னுக் கொடியுமோர் வெண்திங் களும்சூழ்

பரிவே டமுமாய்,

பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச்

சிற்றாடை யோடும்,

மின்னல் பொலிந்த தோர்கார் முகில்போலக்

கழுத்தினிற் காறையடும்,

தன்னில் பொலிந்த இருடீ கேசன்

தளர்நடை நடவானோ. 3

என் திரு மார்வன்

89. கன்னற் குடம்திறந் தாலொத் தூறிக்

கணகண சிரித்துவந்து,

முன்வந்து நின்று முத்தந் தருமென்

முகில்வண்ணன் திருமார்வன்,

தன்னைப் பெற்றேற்குத் தன்வா யமுதம்தந்

தென்னைத் தளிப்ப்பிக்கின்றனான்,

தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே

தளர்நடை நடவானோ. 4

கருமலைக் குட்டன்

90. முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்

மொடுமொடு விரைந்தோட,

பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன்

பெயர்ந்தடி யிடுவதுபோல்,

பன்னி யுலகம் பரவியோ வாப்புகழ்ப்

பலதேவ னென்னும்,

தன்நம்பி யோடப் பின்கூடச் செல்வான்

தளர்நடை நடவானோ. 5

காமன் தந்தை

91. ஒருகா லிற்சங் கொருகாலிற் சக்கரம்

உள்ளடி பொறித்தமைந்த,

இருகா லுங்கொண் டங்கங் கெழுதினாற்போல்

இலச்சினை படநடந்து,

பெருகா நின்ற இன்பவெள் ளத்தின்மேல்

பின்னையும் பெய்துபெய்து,

கருகார்க் கடல்வண்ணன் காமர் தாதை

தளர்நடை நடவானோ. 6

தடந்தாளிணையான்

92. படர்பங் கயமலர் வாய்நெகி ழப்பனி

படுசிறு துளிபோல,

இடங்கொண்ட செவ்வா யூறி யூறி

யிற்றிற்று வீழநின்று,

கடுஞ்சேக் கழுத்தின் மணிக்குரல் போலு

டைமணி கணகணென,

தடந்தா ளிணைகொண்டு சார்ங்க பாணி

தளர்நடை நடவானோ. 7

மணிவண்ணன் வாசுதேவன்

93. பக்கங் கருஞ்சிறுப் பாறை மீதே

அருவிகள் பகர்ந்தனைய,

அக்கு வடமிழிந் தேறித் தாழ

அணியல்குல் புடைபெயர,

மக்க ளுலகினில் பெய்தறி யாத

மணிக்குழ வியுருவின்,

தக்க மாமணி வண்ணன் வாசுதேவன்

தளர்நடை நடவானோ. 8

திருவிக்கிரமன் வேழக்கன்று

94. வெண்புழுதி மேற்பெய்து கொண்ட ளைந்ததோர்

வேழத்தின் கருங்கன் றுபோல்,

தெண்புழுதி யாடித் திரிவிக் கிரமன்

சிறுபுகர் படவியர்த்து,

ஒண்போ தலர்கம லச்சிறுக் காலுறைத்

தொன்றும் நோவாமே,

தண்போது கொண்ட தவிசின் மீதே

தளர்நடை நடவனோ. 9

செங்கண்மால் கேசவன்

95. திரைநீர்ச் சந்திர மண்ட லம்போல்

செங்கண்மால் கேசவன்,தன்

திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி

திகழ்ந்தெங்கும் புடைபெயர,

பெருநீர்த் திரையெழு கங்கை யிலும்பெ

ரியதோர் தீர்த்தபலம்

தருநீர், சிறுச்சண்ணம் துள்ளம் சோரத்

தளர்நடை நடவானோ. 10

பக்தி மிக்க மக்களைப் பெறுவர்

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய

அஞ்சன வண்ணன்றன்னை,

தாயர் மகிழ வொன்னார் தளரத்

தளர்நடை நடந்ததனை,

வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால்

விரித்தன வுரைக்கவல்லார்

மாயன் மணிவண் ணன்தாள் பணியும்

மக்களைப் பெறுவார்களே. 11

(இந்த 11 பாசுரங்களையும் பாராயணம் செய்து ஆத்திகத்தில் அக்கறை கொண்ட குழந்தைகளைப் பெறுங்கள்)

அடிவரவு:தொடர் செக்கர் மின்னுக் கன்னல் முன்னல் ஒரு-காலில் படர் பக்கம் வெண் திரை ஆயர்-பொன்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is மாணிக்கக்கிண்கிணி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  பொன்னியற்கிண்கிணி
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it