Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஒருகுறளாய்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

ஒருகுறளாய்

காழிச்சீராம விண்ணகரம்

சீர்காழி என்னும் ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இவ்வூரைக் காழிச்சீராம விண்ணகரம் என்று ஆழ்வார் பெயரிட்டு அழைக்கிறார். இவ்வூரில்தான் திருஞானசம்பந்தர் என்னும் சைவ சமயப் பெரியாரும் வாழ்ந்து வந்தார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பக்தர்களே! சீகாழிப் பதி சேருங்கள்

1178. ஒருகுறளா யிருநிலம்மூ வடிமண் வேண்டி

உலகனைத்து மீரடியா லொடுக்கி,ஒன்றும்

தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த

தாடாளன் தாளைணைவீர், தக்க கீர்த்தி

அருமறையின் திரள்நான்கும் வேள்வி யைந்தும்

அங்கங்கள் அவையாறு மிசைக ளேழும்,

தெருவில்மலி விழாவளமும் சிறக்கும் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 1

திருமால் திருவடி அணைவீர்! காழிநகர் சேருங்கள்

1179. நான்முகனாள் மிகைத்தருக்கை யிருக்கு வாய்மை

நலமிகுசீ ருரோமசனால் நவிற்றி, நக்கன்

ஊன்முகமார் தலையோட்டூ ணொழித்தவெந்தை

ஒளிமலர்ச்சே வடியணைவீர், உழுசே யோடச்

சூன்முகமார் வளையளைவா யுகுத்த முத்தைத்

தொல்குருகு சினையென்னச் சூழ்ந்தி யங்க,

தேன்முகமார் கமலவயல் சேல்பாய் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 2

வாணாசுரனின் தோள்களை அறுத்தவன் இடம் காழி

1180. வையணைந்த நுதிக்கோட்டு வராக மொன்றாய்

மண்ணெல்லா மிடந்தெடுத்து மதங்கள் செய்து,

நெய்யணைந்த திகிரியினால் வாணன் திண்டோள்

நேர்ந்தவன்தா ளணைகிற்பீர், நெய்த லோடு

மையணைந்த குவளைகள்தங் கண்க ளென்றும்

மலர்க்குமுதம் வாயென்றும் கடைசி மார்கள்,

செய்யணைந்து களைகளையா தேறும் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3

ஏழு எருதுகளை அடக்கியவனின் காழி சேர்மின்

1181. பஞ்சியல்மெல் லடிப்பின்னை திறத்து முன்னாள்

பாய்விடைக ளேழடர்த்தும் பொன்னன் பைம்பூண்

நெஞ்கிடந்து குருதியுக வுகிர்வே லாண்ட

நின்மலன்தா ளணைகிற்பீர், நீல மாலைத்

தஞ்சுடைய விருள்தழைப்பத் தரள மாங்கே

தண்மதியின் நிலாக்காட்டப் பவளந் தன்னால்,

செஞ்சுடர வெயில்விரிக்கு மழகார் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 4

பரசுராமனாக அவதரித்தவனின் காழி சேர்க

1182. தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு

திருக்குலத்தி லிறந்தோர்க்குத் திருத்திசெய்து,

வெவ்வாய மாகீண்டு வேழ மட்ட

விண்ணவர்கோன் தாளணைவீர், விகிர்த மாதர்

அவ்வாய வாள்நெடுங்கண் குவளை காட்ட

அரவிந்தம் முகங்காட்ட அருகே யாம்பல்,

செவ்வாயின் திரள்காட்டும் வயல்சூழ் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 5

இராமபிரானுக்குரிய காழி சேருங்கள்

1183. பைங்கண்விறல் செம்முகத்து வாலி மாளப்

படர்வனத்துக் கவந்தனொடும் படையார் திண்கை,

வெங்கண்விறல் விராதனுக விற்கு னித்த

விண்ணவர்கோன் தாளணைவீர், வெற்புப்போலும்

துங்கமுக மாளிகைமே லாயங் கூறும்

துடியிடையார் முகக்கமலச் சோதி தன்னால்,

திங்கள்முகம் பனிபடைக்கு மழகார் கழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 6

சேர்தற்குரிய இடம் காழியே

1184. பொருவில்வலம் புரியரக்கன் முடிகள் பத்தும்

புற்றுமறிந் தனபோலப் புவிமேல் சிந்த,

செருவில்வலம் புரிசிலைக்க மலைத்தோள் வேந்தன்

திருவடிசேர்ந் துய்கிற்பீர், திரைநீர்த்தெள்கி

மருவிவலம் புரிகைதைக் கழியூ டாடி

வயல்நண்ணி மழைதருநீர் தவழ்கால் மன்னி

தெருவில்வலம் புரிதரள மீனும் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 7

வளம் நிறைந்த காழி சேர்க

1185. பட்டரவே ரகலல்குல் பவளச் செவ்வாய்

பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலா மின்சொல்,

மட்டவிழுங் குழலிக்கா வானோர் காவில்

மரங்கொணர்ந்தா மடியணைவீர், அணில்கள் தாவ

நெட்டிலைய கருங்கமுகின் செஙகாய் வீழ

நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு, பீனத்

தொட்டபழம் சிதைந்துமதுச் சொரியும் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 8

இலக்குமியை மார்பில் கொண்டவனது காழி சேர்மின்

1186. பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப்

பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து,

கறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில்

கலந்தவன்தா ளணைகிற்பீர், கழுநீர் கூடித்

துறைதங்கு கமலத்துத் துயின்று கைதைத்

தோடாரும் பொதிசோற்றுச் சுண்ணம் நண்ணி,

சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 9

இவற்றைப் படிப்போர் உலகத் தலைவர் ஆவர்

1187. செங்கமலத் தயனனைய மறையோர் காழிச்

சீராம விண்ணகரென் செங்கண் மாலை

அங்கமலத் தடவயல்சூ ழாலி நாடன்

அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீயம்

கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கை வேந்தன்

கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன

சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்

தடங்குடல்சூ ழுலகுக்குத் தலைவர் தாமே. 10

அடிவரவு: ஒருகுறள் நான்முகன் வை பஞ்சியல் தெய்வாய பைங்கண் பொரு பட்டு பிறை செங்கமலத்து -- வந்து.

 


 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is வாட மருதிடை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  வந்து
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it