Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

வாட மருதிடை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

வாட மருதிடை

திருச்சித்திரகூடம்: 2

சிதம்பரத்தில் கோவிந்தராஜர் எழுந்தருளியிருக்கும் இடத்திற்குச் சித்திரகூடம் என்று பெயர். இராமன் சித்திரகூட மலையில் மிகவும் மகிழ்வோடு எழுந்தருளியிருந்தார். இந்தத் திவ்விய தேசத்திலும் அவ்வாறே எழுந்தருளியிருக்கிறார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆநிரை காத்தவன் இருப்பிடம் சித்திரகூடம்

1168. வாடமருதிடை போகி

மல்லரைக் கொன்றொக்க வித்திட்டு,

ஆடல்நல் மாவுடைத் தாயர்

ஆநிரைக் கன்றிடர் தீர்ப்பான்,

கூடிய மாமழை காத்த

கூத்த னெனவரு கின்றான்,

சேடுயர் பூம்பொழில் தில்லைச்

சித்திர கூடத்துள் ளானே. 1

பூமகள் நாயகன் பொலியுமிடம் இது

1169. பேய்மகள் கொங்கைநஞ் சுண்ட

பிள்ளை பரிசிது வென்றால்,

மாநில மாமகள் மாதர்

கேள்வ னிவனென்றும், வண்டுண்

பூமகள் நாயக னென்றும்

புலங்கெழு கோவியர் பாடி,

தேமலர் தூவ வருவான்

சித்திர கூடத்துள் ளானே. 2

மருதமரங்களை முறித்தவன் வாழும் இடம் இது

1170. பண்டிவன் வெண்ணெயுண் டானென்

றாய்ச்சியர் கூடி யிழிப்ப

எண்டிசை யோரும்வ ணங்க

இணைமரு தூடு நடந்திட்டு,

அண்டரும் வானத் தவரு

மாயிர நாமங்க ளோடு,

திண்டிறல் பாட வருவான்

சித்திர கூடத்துள் ளானே. 3

காளியன்மேல் நடமாடியவன் தங்கும் இடம் இது

1171. வளைக்கை நெடுங்கண் மடவா

ராய்ச்சிய ரஞ்சி யழைப்ப,

தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத்

தண்டடம் புக்கண்டர் காண,

முளைத்த எயிற்றழல் நாகத்

துச்சியில் நின்றது வாட,

திளைத்தமர் செய்து வருவான்

சித்திர கூடத்துள் ளானே. 4

கண்ணனே சித்திரகூடத்தில் உள்ளான்

1172. பருவக் குருமுகி லொத்து

முத்துடை மாகட லொத்து,

அருவித் திரள்திகழ் கின்ற

வாயிரம் பொன்மலை யத்து,

உருவக் கருங்குழ லாய்ச்சி

திறத்தின மால்விடை செற்று,

தெருவில் திளைத்து வருவான்

சித்திர கூடத்துள் ளானே. 5

கருடவாகனன் சித்திரகூடத்தில் உள்ளான்

1173. எய்யச் சிதைந்த திலங்கை

மலங்க வருமழை காப்பான்,

உய்யப் பருவரை தாங்கி

யாநிரை காத்தானென் றேத்தி,

வையத் தெவரும் வணங்க

அணங்கெழு மாமலை போலே,

தெய்வப்புள் ளேறி வருவான்

சித்திர கூடத்துள் ளானே. 6

குவலயாபீடம் வீழ்த்தியவன் இடம் இது

1174. ஆவ ரிவைசெய் தறிவார்?

அஞ்சன மாமலை போலே,

மேவு சினத்தடல் வேழம்

வீழ முனிந்து,அழ காய

காவி மலர்நெடுங் கண்ணார்

கைதொழ iF வருவான்,

தேவர் வணங்குதண் தில்லைச்

சித்திர கூடத்துள் ளானே. 7

நரசிங்கன் தங்கும் இடம் இது

1175. பொங்கி யமரி லொருகால்

பொன்பெய ரோனை வெருவ,

அங்கவ னாக மளைந்திட்

டாயிரந் தோளெழுந் தாட,

பைங்க ணிரண்டெரி கான்ற

நீண்ட எயிற்றொடு பேழ்வாய்,

சிங்க வுருவில் வருவான்

சித்திர கூடத்துள் ளானே. 8

நிலமகள், திருமகள் நாயகன் இடம்

1176. கருமுகில் போல்வதோர் மேனி

கையன வாழியும் சங்கும்,

பெருவிறல் வானவர் சூழ

ஏழுல கும்தொழு தேத்த,

ஒருமக ளாயர் மடந்தை

யருத்தி நிலமகள், மற்றைத்

திருமக ளோடும் வருவான்

சித்திர கூடத்துள் ளானே. 9

தீவினைகள் சாரா

1177. தேனமர் பூம்பொழில் தில்லைச்

சித்திர கூட மமர்ந்த,

வானவர் தங்கள் பிரானை

மங்கையர் கோன்மரு வார்தம்,

ஊனமர் வேல்கலி கன்றி

யண்டமி ழொன்பதோ டொன்றும்,

தானிவை கற்றுவல் லார்மேல்

சாரகில் லாவினை தாமே. 10

அடிவரவு: வாட பேய் பண்டு வளை பருவம் எய்ய ஆவர் பொங்கி கருமுகில் தேனமர் -- ஒருகுறள்.


 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is ஊன் வாட
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  ஒருகுறளாய்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it