Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திரிபுரம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

திரிபுரம்

திருவட்டபுயகரம்

அட்டபுயகரம் என்ற திவ்வியதேசம் சின்ன காஞ்சிபுரத்தில் இருக்கிறது. இங்கிருக்கும் பகவான் அட்டபுயகரத்தான். தம்மைத் தலைவியாகவும், பகவானைத் தலைவனாகவும் பாவித்துப் பாடுகிறார் ஆழ்வார்.


தலைவனது உருவை மனக்கண்ணால் கண்ட தலைவி

தோழிக்கும் தாயர்க்கும் கூறல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அட்டபுயகரத்தான் எனக்குக் காட்சி தந்தான்

1118. திரிபுர மூன்றெரித் தானும்மற்றை

மலர்மிசை மேலய னம்வியப்ப,

முரிதிரை மாகடல் போல்முழங்கி

மூவுல கும்முறை யால்வணங்க,

எரியன கேசர வாளெயிற்றோ

டிரணிய னாக மிரண்டுகூறா,

அரியுரு வாமிவ ரார்கொலென்ன

அட்ட புயகரத் தேனென்றாரோ.

புலவர் வணங்கும் புனிதரைக் கண்டேன்

1119. வெந்திறல் வீரரில் வீரரொப்பார்

வேத முரைத்திமை யோர்வணங்கும்,

செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்

தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன்,

வந்து குறளுரு வாய்நிமிர்ந்த

மாவலி வேள்வியில் மண்ணளந்த.

அந்தணர் போன்றிவ ரார்கொலென்ன

அட்டபுயகரத் தேனென்றாரே.

நான் கண்டவர் அட்டபுயகரத்தாரே

1120. செம்பொ னிலங்கு வலங்கைவாளி

திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள,

உம்ப ரிருசுட ராழியோடு

கேடக மொண்மலர் பற்றியெற்றே,

வெம்பு சினத்தடல் வேழம்வீழ

வெண்மருப் பொன்று பறித்து, இருண்ட

அம்புதம் போன்றிவ ரார்கொலென்ன

அட்ட புயகரத் தேனென்றாரே

பரஞ்சோதியாக இருப்பவரை நான் கண்டேன்

1121. மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி

மாமழை காத்தொரு மாயஆனை

அஞ்ச, அதன்மருப் பொன்றுவாங்கும்

ஆயர்கொல் மாய மறியமாட்டேன்,

வெஞ்சுட ராழியும் சங்குமேந்தி

வேதமு னோதுவர் நீதிவானத்து,

அஞ்சடர் போன்றிவ ரார்கொலென்ன

அட்ட புயகரத் தேனென்றாரே.

அலைகடல் போனற்வரை நான் கண்டேன்

1122. கலைகளும் வேதமும் நீதிநூலும்

கற்பமும் சொற்பொருள் தானும்,மற்றை

நிலைகளும் வானவர்க் கும்பிறர்க்கும்

நீர்மையி னாலருள் செய்து,நீண்ட

மலைகளும் மாமணி யும்மலர்மேல்

மங்கையும் சங்கமும் தங்குகின்ற

அலைகடல் போன்றிவ ரார்கொலென்ன

அட்ட புயகரத் தேனென்றாரே.

நீலமேகம் போன்றவரை நான் கண்டேன்

1123. எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில்

ஏது மறிகிலம், ஏந்திழையார்

சங்கும் மனமும் நிறைவுமெல்லாம்

தம்மன வாகப் புகுந்து, தாமும்

பொங்கு கருங்கடல் பூவைகாயாப்

போதவிழ் நீலம் புனைந்தமேகம்,

அங்ஙனம் போன்றிவ ரார்கொலென்ன

அட்ட புயகரத் தேனென்றாரே.

அழகிய ஓவியம் போன்றவரை நான் கண்டேன்

1124, முழுசிவண் டாடிய தண்டுழாயின்

மொய்ம்மலர்க் கண்ணியும்,மேனியஞ்சாந்

திழிசிய கோல மிருந்தவாறும்

எங்ஙனஞ் சொல்லுகேன் ஒவிநல்லார்,

எழுதிய தாமரை யன்னகண்ணும்

ஏந்தெழி லாகமும் தோளும்வாயும்,

அழகிய தாமிவ ரார்கொலென்ன

அட்ட புயகரத் தேனென்றாரே.

எனது உயிர்போல்பவரைக் கண்டேன்

1125. மேவியெப் பாலும்விண் ணோர்வணங்க

வேத முரைப்பர்முந் நீர்மடந்தை

தேவி,அப் பாலதிர் கங்கமிப்பால்

சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில்,

காவியப் பார்கட லேயுமொப்பார்

கண்ணும் வடிவும் நெடியராய்,என்

ஆவியப் பாரிவ ரார்கொலென்ன

அட்ட புயகரத் தேனென்றாரே.

யாரென்று அறியமுடியாதவதைக் கண்டேன்

1126. தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா

நெஞ்சமும் தம்மதே சிந்ததித்தேற்கு,

வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி

வாய்திறந் தொன்று பணித்ததுண்டு,

நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம்

நானிவர் தம்மை யறியமாட்டேன்.

அஞ்சுவன் மற்றிவ ரார்கொலென்ன

அட்ட புயகரத் தேனென்றாரே.

இவற்றைப் பாடுவோர்க்கு இடம் வைகுந்தம்தான்

1127. மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்

நீள்முடி மாலை வயிரமேகன்,

தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி

அட்ட புயகரத் தாதிதன்னை,

கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன்

காமரு சீர்க்கலி கன்றி,குன்றா

இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை

யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே.

அடிவரவு - திரிபுரம் வெந்திறல் செம்பொன் மஞ்சு கலை எங்ஙனும் முழுசி

மேவி தஞ்சம் மன்னவன் - சொல்லுவன்.
 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is திவளும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  சொல்லு
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it