Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திவளும்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

திவளும்

திருவிடவெந்தை

திருக்கடல்மல்லைக்கு அருகில் இருக்கும் திவ்வியதேசம் திருவிடவெந்தை. இவ்வூரை இப்போது திருவிடந்தை என்றே கூறுகிறார்கள். இங்கிருக்கும் வராகப் பெருமாள் இடப்பக்கத்தே பூதேவியைத் தாங்கி நிற்கிறார். உத்ஸவருக்கு நித்யகல்யாணப் பெருமாள் என்று திருநாமம். பகவானின் கல்யாண குணங்களில் ஈடுபட்ட ஆழ்வார், தாமே தாயாகவும்

மகளாகவும் இருந்துகொண்டு, தாய் தன் மகளின் நிலையைப் பகவானிடம் கூறுவதுபோல் இங்கே கூறி அனுபவிக்கிறார்.


தலைவியின் ஆற்றாமையைக் கண்டு தாய் இரங்குதல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பிரானே என் மகள் நின்னையே விரும்புகிறாள்

1108. திவளும்வெண் மதிபோல் திருமுகத் தரிவை

செழுங்கட லமுதினிற் பிறந்த

அவளும்,நின் னாகத் திருப்பது மறிந்தும்

ஆகிலு மாசைவி டாளால்,

குவளையங் கண்ணி கொல்லியம் பாவை

சொல்லுநின் தாள்நயந் தீருந்த

இவளை,உன் மனத்தா லென்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே

பிரானே என் மகள் உன்னை நினைந்தே ஏங்குகின்றாள்

1109. துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள்

துணைமுலை சாந்துசொண் டணியாள்.

குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள்

கோலநன் மலர்குழற் கணியாள்.

வளம்படு முந்நீர் வையமுன் னளந்த,

மாலென்னும் மாலின மொழியாள்,

இளம்படி யிவளுக் கெண்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே

பிரானெ என் மகள் உன் நினைவால் இளைத்தாள்

1110. சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்

தடமுலைக் கணியிலும் தழலாம்,

போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும்

பொருகடல் புலம்பிலும் புலம்பும்,

மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம்

வளைகளும் இறைநில்லா, என்றன்

ஏந்திழை யிவளுக் கென்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே

பிரானே உன்னை நினைத்து புலம்புகிறாள் என்மகள்

1111. 'ஊழியில் பெரிதால் நாழிகை' என்னும்

'ஒண்சுடர் துயின்றதால்' என்னும்,

'ஆழியும் புலம்பும் அன்றிலு முறங்கா

தென்றலும் தீயினிற் கொடிதாம்,

தோழியோ' என்னும் 'துணைமுலை யரக்கும்

சொல்லுமி னென்செய்கேன்?' என்னும்,

ஏழையென் பொன்னுக் கென்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே

பிரானே உன்னை நினைந்து உருகுகிறாள் என் மகள்

1112. ஓதிலும் உன்பே ரன்றிமற் றேதாள்

உருகும்நின் திருவுரு நினைந்து,

காதன்மை பெரிது கையற வுடையள்

கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்,

பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது

தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்,

ஏதலர் முன்னா என்னினைந் திருந்தாய்

இடவெந்தை யந்தை பிரானே

பிரானே என் மகள் திறத்தே என்ன செய்ய்போகிறாய்

1113. தன்குடிக் கேதும் தக்கவா நினையாள்

தடங்கடல் நுடங்கெயி லிலங்கை,

வன்குட மடங்க வாளமர் தொலைத்த

வார்த்தைகேட் டின்புறும் மயங்கும்,

மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி

மென்முலை பொன்பயந் திருந்த,

என்கொடி யிவளுக் கென்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே

பிரானே உன் புகழே பேசுவாள் என் மகள்

1114. உளங்கனிந் திருக்கும் உன்னையே பிதற்றும்

உனக்கன்றி யெனக்கன்பொன் றிலளால்,

'வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலை

மாயனே' என்றுவாய் வெருவும்

களங்கனி முறுவல் காரிகை பெரிது

கவலையோ டவலம்சேர்ந் திருந்த,

இளங்கனி யிவளுக் கென்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே

பிரானே நின்னிடம் மயங்குகிறாள் என் மகள்

1115. 'அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற்

கழியுமா லென்னுள்ளம்' என்னும்,

புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்

'போதுமோ நீர்மலைக் கெ'ன்னும்,

குலங்கெழு கொல்லி கோமள வல்லிக்

கொடியிடை நெடுமழைக் கண்ணி,

இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே

உனது நினைவால் என் மகளின் உருவம் மாறியது

1116, பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்

பொருகயல் கண்துயில் மறந்தாள்,

அன்பினா லுன்மே லாதரம் பெரிதுஎன்

அணங்கினுக் குற்றநோ யறியோன்,

மின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி

வீங்கிய வனமுலை யாளுக்கு,

என்கொலாம் குறிப்பி லென்னினைந் திருந்தாய்

இடவெந்தை யெந்தை பிரானே

இவற்றைப் பாடுவோர் பழவினை நீங்கும்

1117. அன்னமும் மீனும் ஆமையும் அரியும்

ஆயஎம் மாயனே அருளாய்,'

என்னுமின் தொண்டர்க் கின்னருள் புரியும்

இடவெந்தை யெந்தை பிரானை,

மன்னுமா மாட மங்கையர் தலைவன்

மானவேல் கலியன்வா யலிகள்,

பன்னிய பனுவல் பாடுவார் நாளும்

பழவினை பற்றறுப் பாரே.

அடிவரவு - திவளும் துளம் சாந்தம் ஊழி ஓதிலும் தன் உளம் அலம் பொன்

அன்னம் - திரிபுரம் 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is நண்ணாத
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  திரிபுரம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it