Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஈச்வராவதார ப்ரமாணங்கள்: வேத-இதிஹாச-புராணங்களில் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

சம்புவான பரமேச்வரன்தான் சங்கரராக அவதரித்தாரெண்டு சங்கர விஜயப் புஸ்தகங்களில் இருக்கிறதென்றால் ஒரு கேள்வி வரலாம். ‘சங்கர விஜயம் எழுதியவர்கள் சங்கராசாராருடைய பக்தர்களாகத்தான் இருப்பார்கள். அவருடைய ஸித்தாந்தத்தைத் தழுவியவர்களாகவும், அவரையே குருவாகக் கொண்டவர்களாகவுந்தான் இருப்பார்கள். இந்த மாதிரி நம்முடைய அன்புக்கும் பக்திக்கும் உரிய குரு புருஷர் என்று பொதுவாகச் சொல்வதற்கும் மேலே ‘ஸாக்ஷாத் அவதாரம்’ என்று கொண்டாடத் தோன்றுவது இயற்கை. அபிமானத்தின் பேரில் இப்படி ஸ்தோத்ரம் பண்ணுவது யதார்த்தமாக இருக்கவேண்டிய அவச்யமில்லை. ஆகையினால் ஆசார்யாள் ஈச்வராவதாரம் என்பதற்கு சங்கர விஜய புஸ்தகங்களைத் தவிர வேறே ஏதாவது எவிடென்ஸ் (சான்று) இருந்தால் சொல்லுங்கள். அதாவது அவருடைய மதத்தைத்தான் சேர்ந்தவர்கள் எழுதியதென்று சொல்வதற்கில்லாமல், பொதுப்படையாக உள்ள உத்தமமான வேறு நூல்களில் ஆதாரமிருந்தால் சொல்லுங்கள். பிரமானாமாக ஒப்புக்கொள்கிறோம்’ என்று சொல்லலாம்.

அப்படியும் அநேகம் இருக்கவே செய்கின்றன. எல்லாவற்றுக்கும் மேற்பட்ட ச்ருதி ப்ரமாணமேகூட இருக்கிறது. ‘வேத வாக்கோ’ என்று கேட்கிறோமே, அப்படிப்பட்ட வேத வாக்கே இருக்கிறது, ஆசார்யாள் அவதார புருஷர்தான் என்பதற்கு. உடைத்துச் சொல்லாமல், கொஞ்சம் கூடமாக (மறைமுகமாக)ச் சொல்லியிருக்கிறது. அப்படிச் சொல்லியிருப்பதை நாம் ஸ்பஷ்டமாக்கிக் கொண்டாலே, உடைத்துச் சொல்லியிருப்பத விடவுங்கூட ரஸமாக இருக்கிறது!

சம்பு, சங்கர என்று இரண்டு வார்த்தைகளைச் சொல்லி, முதலில் சம்புவாக இருந்தவர்தான் அப்புறம் சங்கரராகவந்தார் என்று சொன்னேனல்லவா? இதே இரண்டு பேர்களை இதே க்ரமத்தில் முதலில் சம்பு, அப்புறம் சங்கர என்று சொல்லி, அதற்கும் அப்புறம் பஞ்சாக்ஷரத்தை வேதத்தில் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறது. அது யஜுர் வேதத்தில், அதைச் சொல்வதற்கு முன்னாள் வேதங்களில் முதலாவதாக இருக்கப்பட்ட ரிக் வேதத்திலிருந்து ஒன்று (ஒரு சான்று) காட்டுகிறேன்.

உலகிலேயே ஆதி கிரந்தம் என்று சொல்லப்படும் ரிக் வேத ஸமாசாரத்தைச் சொல்வதற்கும் கி.பி. 17–18 நூற்றாண்டுகளில் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது!

பதினேழாம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டுக் கடைசி வரை 96 வயஸு ஒரு பெரியவர் இருந்தார். பாஸ்கரராயர் என்று பெயர்.1

குருமுகமாக அவர் பெற்றிருந்த தீக்ஷா நாமம் பாஸுரா நந்தநாதர் என்பது. பாஸ்கர நாமம் ஸுர்யனைக் குறிப்பது. ‘பாஸுர’ என்பது பிரகாசத்தைக் குறிப்பதுதான். இந்தப் பேர்களுக்கு ஏற்றமாதிரி அவர் அறிவொளி மிக்கவராக, வித்வத் ஸுர்யன் என்று சொல்லும்படியாக இருந்தார். குறிப்பாக அவர் மநத்ர சாஸ்திரத்திற்கு ப்ரமாண பூதராக இருந்தார். மந்த்ர சாஸ்த்ரத்தில் இப்போது நமக்குக் கிடைத்துள்ள அநேக விஷயங்கள் அவர் மூலம் ப்ரகாசமானவைதான். அவர் அம்பாளுடைய பரம பக்தர். ஸ்ரீ வித்யா பூஜா பத்ததிகளைப் பற்றி முக்யமான நூல்கள் எழுதியுள்ள அவர் லலிதா ஸஹஸ்ர நாமத்திற்குச் செய்துள்ள பாஷ்யம் ஸ்ரீ வித்யா உபாஸகர்களின் விசேஷமான கௌரவத்தைப் பெற்ற ‘அதாரிடி’யாக விளங்குகிறது.

அந்தப் பெரியவர் ஆசார்யாளைக் குறித்தும் ச்லோகங்கள் செய்திருக்கிறார். அவற்றில் ஒன்றிலிருந்துதான் நம்முடைய ஆசார்யாள் பரமசிவனின் அவதாரம் என்று ரிக் வேதத்திலேயே ஸுசனையாகச் சொல்லியிருப்பது தெரிய வருகிறது. அந்த ச்லோகத்தைச் சொல்கிறேன்:

ஸ்ரீராமம் பிரதி புஷ்கராதிப-மஹாயாக்ஷேண வேதத்ரய-
வ்யாக்யாநாவஸரே விசிஷ்யா கதிதம் ஸ்ரீவிஷ்ணு தர்மோத்தரே |
ஏதாம் தேநும்- உபஹ்வயாமி ஸுதுகாம்-இத்ய்ருக்-கதம்-சங்கரா-
சார்யம் சிஷ்ய- சதுஷடயேந ஸஹிதம் வந்தே குரூணாம் குரும் ||

“வந்தே குரூணாம் குரும் சங்கராசார்யம்” என்று நம் அசார்யாளை குருவுக்கெல்லாம் குருவாகச் சொல்லி நமஸ்காரம் தெரிவித்திருக்கிறது.

“ஸ்ரீராமம்” என்று ஆரம்பித்திருப்பதால் ராமரோடு ஆசார்யாளை ஸம்பந்தப்படுத்தியிருக்கிறது என்று புரியும். எப்படி சம்பந்தம்?

ராமர் கதை முழுதும் ராமாயணத்தில் சொல்லியிருப்பதோடு முடிந்துவிடவில்லை. அதில் சொல்லாததைச் சொல்லும் இதர புஸ்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் ‘யோகவாஸிஷ்டம்’ அல்லது ‘ஞான வாஸிஷ்டம்’ என்பது ஒன்று. இன்னொன்று ‘விஷ்ணு தர்மோத்தரம்’. ச்லோகத்தில் (இரண்டாம் வரி முடிவில்) இந்தப் புஸ்தகத்தைத்தான் குறிப்பிட்டிருக்கிறது. ராமர் மநுஷ்யர் மாதிரியே நடந்து காட்டியதில் ப்ரவ்ருத்தி-நிவ்ருத்தி மார்க்கங்கள் இரண்டைப் பற்றியும் இரண்டு பேரிடமிருந்து உபதேசம் வாங்கிக்கொண்டார். வசிஷ்டரிடமிருந்து நிவ்ருத்தியின் பராகாஷ்டையாக (உச்ச எல்லையாக) அத்வைதமான ஞானோபதேசம் பெற்றுக்கொண்டார். அதுதான் ஞான வாஸிஷ்டம். வேதாந்தம் படிப்பவர்களுக்கெல்லாம் தெரிந்த புஸ்தகம். கர்ம (ப்ரவ்ருத்தி) மார்கத்தில் ராமர் பெற்ற உபதேசத்தைச் சொல்கிற நூல் இந்த அளவுக்கு ப்ரஸித்தி அடையவில்லை. அதுதான் விஷ்ணு தர்மோத்தரம், விஷ்ணு புராணத்திற்குப் பரிசிஷ்டமாக (பிர்சேர்க்கையாக) அந்தப் புஸ்தகத்தைச் சொல்வார்கள். அதை ராமருக்கு உபதேசம் பண்ணினது யாரென்றால் புஷ்கரன் என்ற யக்ஷன். “புஷ்கர-அபிதா-மஹாயக்ஷேண” என்று இதை (ச்லோகத்தில்) சொல்லியிருக்கிறது. ‘மஹா’ யக்ஷன் என்று அடைமொழி கொடுத்துச் சொல்லியிருப்பதால் அவனுடைய பெருமை தெரிகிறது. அவதாரமாகிய ராமரே தன்னிடம் உபதேசம் வாங்கிக்கொள்ளத்தக்க ஸ்தானத்திலிருந்தவன் என்றால் பெருமையுள்ளவனாகத்தானே இருக்கவேண்டும்? தேவ ஜாதிகளில் கின்னரர், கிம்புருஷர், கந்தர்வர் என்றெல்லாம் இருப்பது போல யக்ஷர் என்பதும் ஒன்று. யக்ஷர்களுக்கு ராஜா குபேரன். அந்த ஜாதியைச் சேர்ந்த புஷ்கரன் என்பவன்தான் ராமருக்கு ரிக்-யஜுஸ்-ஸாம வேதங்களின் கர்ம காண்டத்தை உபதேசம் பண்ணினவன்.

அதில் ரிக் வேத மந்த்ரங்களுக்கு அர்த்தம் சொல்லும் போதே ஒரு இடத்தில் ஆசார்யாளை பற்றிய ப்ரஸ்தாபம் வருகிறது.

ஏதாம் தேநும்-உபஹ்வயாமி ஸுதுகாம்

என்று ச்லோகத்தில் வருவது ரிக் வேத மந்த்ரம் ஒன்றையே குறிப்பிடுகிறது2. இது கன்றுக்கு பாலூட்டும் பசு போல ஈஸ்வரன் லோக ரக்ஷணம் பண்ணுவதைச் சொல்லும் ரிக் (வேத மந்த்ரம்). ‘விஷ்ணு தர்மோத்தர’த்தில் ராமருக்கு புஷ்கரன் இந்த மந்த்ரத்துக்கு அர்த்தம் சொல்லும்போது, பூலோகத்தில் அத்வைத தத்வம் மறந்துபோகும் ஒரு காலம் வரும்போது பரமசிவன் கன்றுக்கு பால் கொடுத்து ரக்ஷிக்கப் பசு வருவதுபோல லோகத்திற்கு ஞானப்பாலூட்டி அநுக்ரஹம் பண்ண சங்கராசார்ய ஸ்வாமிகளாக அவதரிக்கப் போகிறார்ரென்று இங்கே சூசனை செய்திருக்கிறது என்று சொல்கிறான்.

ஆசார்யாள் மட்டும் அவதரித்ததை சொல்லி இங்கே நிறுத்திவிடவில்லை. நான்கு சிஷ்யர்கள் புடைசூழ அவர் அவதரிக்கப் போவதாகவே சொல்லியிருக்கிறது. “…அவதீர்ணம் புவி சங்கராசார்யம் சிஷ்யைச் – சதுர்பிஸ் – ஸஹிதம்” என்று பாஸ்கராசார்யார் எடுத்துச் சொல்கிறார்.

பாஸ்கராசார்யார் போன்ற ஒரு பெரியவர் ஸ்வயமாக ஒரு விஷயம் சொன்னாலே அதற்கு நிரம்ப மதிப்பு உண்டு. விஷ்ணு தர்மோத்தரம் போன்ற ஒரு புராண க்ரந்தத்தில் வருகிற விஷயத்திற்கும் ஸ்வயமாகவே மதிப்புண்டு. வேதத்திலே ஒன்று சொல்லியிருக்கிறதென்றாலோ கேட்கவே வேண்டாம்! அதுவே போதும்! இங்கேயோ வேதத்தில் நம்முடைய பகவத்பாதாளைச் சொல்லியிருக்கிறதென்று புராணத்தில் ‘மஹா’யக்ஷன் எனப்படும் புஷ்கரன் சொல்வதை மஹானாகிய பாஸ்கராசார்யார் நமக்குச் சொல்கிறாரென்பது விஷயத்திற்கு மும்மடங்குச் சிறப்பு தருவதாக ஆகிறது.

யஜுர்வேத ரெஃபரன்ஸுக்கு வருகிறேன்.

நாலு வேதங்கள் என்று சொன்னாலும் நடைமுறையில் ஸகல கர்மாநுஷ்டானங்களுக்கும் ரிக்-யஜுஸ்-ஸாமம் என்றமூன்றுதான் முக்யமாக இருக்கின்றன. 40 ஸம்ஸ்காரங்களில் வரும் யக்ஞங்களில் உபயோகப்படும் வேதங்கள் இந்த மூன்றே. அதனால் நாலு என்று சொல்லாமல் மூன்று என்று பொருள் கொடுப்பதான ‘த்ரயீ’ என்றே வேதங்களைக் குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. மேலே பார்த்த (பாஸ்கரராயரின்) ச்லோகத்தில்கூட “வேத – த்ரய வியாக்யாந” என்றே வருகிறதல்லவா? இப்படி வேதங்கள் மூன்று என்கிறபோது, 1, 2, 3, என்பதில் 2 மத்தியில் உள்ளதுபோல், ரிக், யஜுஸ், ஸாமம் என்பதில் யஜுர் வேதம்தான்மத்தியில் இருக்கிறது. மத்தியிலுள்ள விஷயத்திற்கு அதிக மதிப்பு. கௌரவம். ‘நடு நாயகம்’ என்று சொல்வது அதனால்தான். கோயிலில் நடு மத்தியில்தான் மூலமூர்த்தியின் கர்ப்ப க்ருஹம் இருக்கும். இப்படி யஜூர்வேதம் த்ரயீயின் நடுநாயகமாக இருக்கிறது.

அந்த யஜுர் வேதத்தை எடுத்துக்கொண்டால் அதற்கு எது மத்தி? யஜுர் வேதம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. 1, 2, 3, 4, 5, 6, 7 என்பதில் 4 தானே மத்தியில் இருக்கிறது? அதனால் நான்காம் காண்டம்தான் (யஜுர் வேதத்தின்) மத்ய ஸ்தானம். அந்த நான்காம் காண்டத்தின் நடுவிலிருப்பது அதிலுள்ள ப்ரபாடகங்களில் (‘ஸெக்ஷன்’களில்) ஐந்தாவதாக உள்ள ‘ஸ்ரீ ருத்ரம்’. அதை ‘ஸ்ரீருத்ர ப்ரச்னம்’ என்றும் ‘சத ருத்ரீயம்’ என்றும் சொல்வார்கள். பரமசிவனின் ஸ்துதியாக இருப்பது அது.

ஸரி, அந்த ருத்ரத்தில் எது நடு மையத்திலிருக்கிறதென்று பார்த்தால், அதுதானே ஸகல வேதங்களுக்குமே மத்ய ஸ்தானமாக இருக்கும்? வேதங்கள் என்கிற பிரம்மாண்டமான கோவிலுக்கு நடுநாயமாக உள்ள மஹாலிங்க மூலமூர்த்தி அந்த வாக்கியம்தானே? அது என்ன? வேதத்தின் உயிர் மையமாக இருக்கப்பட்ட அது என்ன என்றால் —

அதுதான், ஸ்ரீருத்ரத்தின் எட்டாவது அநுவாகத்தில் (‘ஸப்-ஸெக்ஷ’னில்) நடுவிலே வரும் சிவா பஞ்சாக்ஷர மஹா மந்த்ரம்.

அந்த மஹா மந்த்ரத்துக்கு அழைத்துக்கொண்டு போவதாக அதற்கு முந்தி வருகிற இரண்டு பெயர்கள்தான் ‘சம்பு’ என்பதும், ‘சங்கர’ என்பதும்! 3

முதலில் ‘சம்பு’ என்று சொல்லி, அப்புறம் ‘சங்கர’ என்று சொல்லி, அதற்கப்புறம் ‘சிவ’ ‘நாமாவை நமஸ்கார பூர்வமாகப் பஞ்சாக்ஷரமாக்கிச் சொல்லியிருக்கிறது. இப்படி சம்பு, சங்கர, பஞ்சாக்ஷரம் என்ற ஆர்டரில் சொல்லியிருப்பது நாம் பார்த்துக் கொண்டிருக்கிற விஷயத்திற்கு ரொம்பவும் ஆதரவாக இருக்கிறது. எப்படியென்றால், பஞ்சாக்ஷரத்தை ஆசார்யமுகமாக உபதேசம் வாங்கிக்கொண்டுதான் சொல்ல வேண்டும். ‘ஆசார்யாள்’ என்றாலே இவர்தான் என்னும்படி இருந்த சுகதாசார்யாள் நம்முடைய சங்கர பகவத்பாதர்கள்தான். இவர் இப்படி அவதாரமாக வருவதற்கு முன்னாள் எப்படியிருந்தார்? சம்புவாக இருந்தாரென்று பார்த்தோம். சம்புவாகப் பேசாமலிருந்த ரூபம், அப்புறம் அவர் சங்கர குருவாக எடுத்துக்கொண்ட பேசும் ரூபம், அதற்கப்புறம் குரு முகமாகப் பெறவேண்டிய பஞ்சாக்ஷர ரூபம் என்று வரிசை க்ரமமாகக் காட்டிக் கொடுப்பதுபோலவே “சம்பவே…, சங்கராய….,” அதற்கப்புறம் பஞ்சாக்ஷரம் என்று ஸ்ரீருத்ரம் சொல்லிக்கொண்டு போகிறது. சம்புவின் அவதாரம்தான் சங்கரர் என்பதற்கு இங்கேயும் ச்ருதி ப்ராமாண்யம் கிடைக்கிறது.

இது எனக்கு தோன்றியது. ஸ்ரீருத்ரத்துக்கு பாஷ்யம் செய்தவர்களில் ஒருவருக்கு4 இந்த ருத்ர ஸுக்தத்திலேயே இன்னோரிடத்தில் ஆசார்யாளை பரம சிவாதாராமாகச் சொல்லியிருப்பதாகத் தோன்றி அதற்குப் புஷ்டியான காரணம் காட்டி உறுதிபடுத்தியிருக்கிறார். அது என்ன வென்றால்……..

லோகத்திலுள்ள ஸகல தினுஸான ஜனங்கள், ப்ராணிகள், சேதன அசேதன வஸ்துக்கள் எல்லாமே ருத்ர ஸ்வரூபம்தான் என்று விவரிப்பதாக இந்த ஸுக்தத்தின் இரண்டாம் அநுவாகத்திலிருந்து எட்டு அநுவாகங்களில் மந்த்ரங்கள் இருக்கின்றன. இதில் ஸரியாக முன்னூறு மந்திரங்கள் இருப்பதால் இதையே “ருத்ர த்ரிசதி” என்று நாமாவளியாக்கி முன்னூறு அர்ச்சனை பண்ணுகிறோம். தச்சர்கள், குயவர்கள், கம்மாளர்கள், வேடர்கள், குரவர்கள், திருடர்கள் எல்லாரும் கூட ருத்ரனாகிய பரமசிவன்தான் என்று அதில் வருகிறது. திருடர்களின் தலைவனான பக்காத் திருடன்கூட அவன்தான் என்று வருகிறது! “தச்கராணாம் பத்தி” என்று இப்படிஅதில் வருவதைத்தான் ஞானசம்பந்தரும் “உள்ளம் கவர் கள்வன்” என்று சொன்னது. வ்ருக்ஷமா, புல்லா, வெள்ளமா, அலையா, மழையா, காற்றா, – அதெல்லாம்கூட சிவா ஸ்வரூபம்தான்; ஒரு மாடாகட்டும், நாய்தானாகட்டும், அல்லது அந்த நாய் மாம்ஸத்தைத் தின்னும் சண்டாளனேயாகட்டும்- இதுவெல்லாமும் அவன்தான் என்றிப்படி ஸகல சராசர (சராசர என்றால் ‘சர, அசர’. ‘சர’ என்பது அசையும் வஸ்துக்கள். ‘அசர’ என்பது அசையாத வஸ்துக்கள். அதாவது ஜீவ ப்ரபஞ்சம், ஜட ப்ரபஞ்சம் முழுதும் சேர்ந்தது ‘சராசரம்’. இப்படிப்பட்ட ஸகல சராசர) வஸ்துக்களிலும் ஏக பரமாத்மா ஸ்வரூபத்தைத் தெரிவிப்பது ஸ்ரீருத்ர ப்ரச்னம்.

இப்படி லோகத்திலுள்ள பல வஸ்துக்களாக’ இல்லாமல் பரமேஸ்வரனாக நாம் தெரிந்துகொண்டுள்ள ரூபத்தில் அவனோருத்தனுக்கு மட்டுமே இருக்கும் நாமாக்களும் நடுநடுவே வருகின்றன. இவற்றை ‘அஸாதாராண நாமா’க்கள் என்பார்கள். நாம் ஸாதாரணம் என்றால் ஆர்டினரி என்றும், அஸாதாராணம் என்றால் ரொம்ப விசேஷமாக, அபூர்வமாக இருப்பது என்றும் அர்த்தம் பண்ணிகொள்கிறோம். வாஸ்தவத்தில் ஸாதாரணம் என்றால் பொது: common; அஸாதாரணம் என்றால் தனிப்பட்டது : specific, பரமசிவனை லோக வஸ்துக்களாகச் சொல்லும்போது பெரும்பாலும் பஹுவசனத்திலும் (பன்மையிலும்) பரமசிவ மூர்த்திக்கே உரிய அஸாதாரணப் பெயரைச் சொல்லும்போதும் ஏக வசனத்திலும் (ஒருமையிலும்) இருக்கும். ‘உட்கார்ந்துகொண்டிருப்பவர்களாக, சயனித்துக் கொண்டிருப்பவர்களாக, தூங்குகிறவர்களாக,நிற்கிறவர்களாக, ஓடுகிறவர்களாக – இப்படியெல்லாம் உள்ளவனுக்கு நமஸ்காரம்’ என்று சொல்லுபோது பஹுவசனத்திலேயே இருக்கிறது. இப்படிக் கடகடவென்று நிறையச் சொல்லிக்கொண்டே போனபிறகு, சிவனுக்கே உரிய பெயர்களை, ‘பவனுக்கு, ருத்ரனுக்கு, சரவணுக்கு, பசுபதிக்கு, நீலகண்டனுக்கு, சிதிகண்டனுக்கு (அதாவது அந்த நீலமே விபூதியால் வெளுத்துக் காண்கிற கழுத்துக்காரனுக்கு) என்று ஏகவசனத்தில் கொடுத்துக்கொண்டு போயிருக்கிறது. சிதிகண்டனுக்கு என்று சொன்னதை அடுத்து ‘கபர்திக்கு’ ‘வ்யுப்தகேசனுக்கு’ என்று இரண்டு நாமாக்களைக் கூறி நமஸ்காரம் தெரிவித்துவிட்டு, ‘ஸஹஸ்ராக்ஷனுக்கு’ (அதாவது, எண்ணிமுடியாத நேத்ரங்கள் கொண்டவனுக்கு), ‘சததன்வனுக்கு’ (அதாவது, எண்ணி முடியாத ஆயுதங்களை உடையவனுக்கு), ‘கிரிசனுக்கு’ என்றெல்லாம் மேலே நமஸ்காரம் தெரிவித்துக்கொண்டு போகிறது. கிரிசன், கிரீசன் என்ற இரண்டுமே பரமேஸ்வரனுக்கே உரிய அஸாதாரண நாமாக்கள். கிரீசன் என்றால் கைலாஸபதி. கிரிசன் என்றால் கைலாஸ வாஸன். இப்படி பரமேஸ்வரனுக்கே உரிய அஸாதாரணமான நாமாக்களைச் சொல்லிக்கொண்டு போகும்போதே நடுவில் ‘கபர்தி’, ‘வ்யுப்தகேசன்’ என்ற இரண்டு பேர்களையும் சொல்லியிருப்பதால் அவையும் அவனொருத்தனுக்கு உரியவை என்றாகிறது.

ஸரி, கபர்தி என்றால் என்ன? ‘வ்யுப்தகேசன்’ என்றால் என்ன?

கபர்தி என்றால் ஜடாதாரி, சடைமுடியோன்.

வ்யுப்தகேசன் என்றால் வபனம் (க்ஷௌரம்; ‘க்ஷவரம்’ என்று சொல்வது) செய்யப்பட்ட கேசத்தை உடையவன். அதாவது [சிரித்து] மொட்டைத் தலைக்காரன்!

ஈஸ்வரனுக்கு அடுத்தடுத்து நேரெதிரான தன்மைகளை உடைய பெயர்களை ஸ்ரீ ருத்த்ரத்தில் அங்கங்கே கொடுத்துக் கொண்டு போயிருக்கிறது. ஜ்யேஷ்டன் (மூத்தவன்) அவன்தான், கனிஷ்டன் (இளையவன்) அவன்தான்; பூர்வஜன் (ஆதியில் தோன்றியவன்) அவன்தான், அபரஜன் (அந்தத்தில் தோன்றுபவன்) அவன்தான் — என்றெல்லாம் அடுத்தடுத்து எதிரான குணங்களைச் சொல்லியிருக்கும் அவ்விதத்தில்தான் இங்கே ஜடாதாரியும் அவனே, முண்டனும் அவனே (சிகையை மழித்திருபவனும் அவனே) என்று சொல்லியிருக்கிறது.

கபர்தி (ஜடாதாரி) என்பதைக் பற்றிக் குறிப்பாக ஒரு விசேஷம் உண்டு.

‘கபர்தம்’ என்றால் ஜடாமுடி. ஆனால் எல்லாருடைய ஜடாமுடியும் அல்ல. பரமசிவன் ஒருத்தருடைய ஜடாமுடிக்கே ‘கபர்தம்’ என்று பெயர். மகாவிஷ்ணு, ப்ரஹ்மா, இந்த்ரன் முதலான ஸகல தேவர்களும் ராஜாக்கள் மாதிரியான சிகாலங்காரத்தோடு ஸ்வர்ண கிரீடம் தரித்துக் கொண்டிருக்க, யோகியான சிவன் ஒருத்தர்தானே ஜடாஜூடராக இருப்பது? “பனித்த சடையும், பவளம் போல் மேனியும்” என்றெல்லாம் அந்த ஜடையைத்தானே கொண்டாடுகிறோம்? கங்கை, சந்த்ரன், நாகம், கபாலம், ஊமத்தம்பூ, கொன்றைப் பூ முதலானவைகளை தரித்துக்கொண்டு விசேஷச் சிறப்புடன் விளங்கும் அப்படிப்பட்ட பரமேஸ்வரனின் ஜடாமகுடத்திற்குத் தான் ‘கபர்தம்’ என்று தனிப்பெயர் கொடுத்திருக்கிறது. அதனால் கபர்தி என்பதும் பரமசிவனொருத்தனையே நேராகக் குறிக்கும் அஸாதாரண நாமா என்பது மேலும் உறுதிப்படுகிறது.

அதனால் அடுத்தாற்போல் வருகிற வ்யுப்தகேசன் என்ற பெயரும் நேராகப் பரமசிவ மூர்த்தியையே குறிப்பாகத்தான் இருக்க வேண்டும். லோகத்திலுள்ள எல்லாத் தச்சர்கள், குயவர்கள், செம்படவர்கள், புலையர்கள், திருடர்கள் முதலியவர்களாகக்கூட ஈஸ்வரனே இருப்பதைச் சொல்லும் நாமாக்களில் ஒன்றாக இல்லாமல் லோகாதீதனாக, லோகதீசனாக அவன் ஈஸ்வரன் என்ற ஒரே ஒருத்தனாக இருக்கிற நிலையில் அவனுக்கு மட்டுமே ஏற்பட்ட நாமக்களுக்கு நடுவிலேயே வ்யுப்தகேசன் என்பது காணப்படுகிறது. ‘ஜடாமுடியுடையவர்களாக இருப்பவனுக்கு’, ‘மொட்டைத் தலையர்களாக இருப்பவனுக்கு’ என்று சொல்லாமல் ஒரே ஒரு கபர்த்தியாகவும், ஒரே ஒரு வ்யுப்தகேசனாகவுமெ ஈஸ்வரனைச் சொல்லியிருக்கிறது. ‘கபர்தி’ என்பது அவனுக்கேயான அஸாதாரணப் பேர் என்றும் தெரிந்துகொண்டோம். அப்படியானால், வ்யுப்தகேசன் என்பதும் அப்படிதானே இருக்க வேண்டும்? இது நாம் கவனிக்க வேண்டிய முக்யமான விஷயம்.

‘தச்சர்களாக உள்ளவனுக்கு’, ‘குயவர்களாக உள்ளவனுக்கு’ என்று பஹுவசனத்தில் சொல்லி, இப்படி லோகத்திலுள்ள ஜீவர்களுக்குள்ளேயும் அந்தர்யாமியாகவும், ஆத்மா ஸ்வரூபியாகவும் பரமேச்வரன் இருப்பதைக் காட்டாமல், அவன் அவனாகவே இருக்கும்போது அவனொருத்தனுக்கு மாத்திரமே ஏற்பட்ட பெயர்களை ஏக வசனத்தில், ‘பவனுக்கு, ருத்ரனுக்கு, சர்வனுக்கு, பசுபதிக்கு, நீலகண்டனுக்கு, சிதிகண்டனுக்கு, கபர்திக்கு, ஸஹஸ்ராக்ஷனுக்கு, சததன்வாவுக்கு’ என்று அடுக்கிக்கொண்டு போகிறபோது ‘கபர்தி’ என்பதை அடுத்து ‘வ்யுப்தகேசன்’ என்று சொன்னால் அது பரமசிவனுக்கு மாத்திரமே உரித்தான ஒரு முண்டிதமான ஸந்நியாஸ ரூபத்தைத்தான் குறிப்பிடுகிறது என்று ஸந்தேஹத்திற்கு இடமில்லாமல் தெரிகிறதல்லவா? நம்முடைய ஆசார்யாளைத் தவிர இப்படி கேசத்தை வபனம் பண்ணிக்கொண்டவாராகக் காட்டுவதற்கு எந்த மூர்த்தி ஈஸ்வரனுக்கு இருக்கிறது? நடராஜாவாகட்டும், தக்ஷிணாமூர்த்தியாகட்டும், காமாரி, த்ரிபுராரி என்றெல்லாம் சிவபெருமானுக்கு இருக்கப்பட்ட அநேக மூர்தங்களாகட்டும், எல்லாமே ஜடாதாரியாகத்தானே இருக்கிறது? நடராஜா என்றால் “விரித்த செஞ்சடை”, தக்ஷிணாமூர்த்தி என்றால் சாந்தாமாகத் “தாழ்சடை”, பைரவாதி ரூபங்களில் அக்னி ஜ்வாலையாகவீசுகிற ஜடை என்றிப்படித்தானே பார்க்கிறோம்? இப்படியுள்ளபோது வ்யுப்தகேசன் என்ற தனிப்பட்ட ஒரு வியக்தியாக சிகையைக் களைந்த ஒரு மூர்த்தியைப் பரமசிவனுக்கு வேதம் ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கிறதென்றால், அது எதிர்காலத்தில் ஏற்படப்போகும் சங்கராவதாரத்தை ஞானத்ருஷ்டியில் சொன்னதுதான். இப்படி அந்த பாஷ்யகாரர் (ஸ்ரீ ருத்ர பாஷ்யம் இயற்றிய அபிநவசங்கரர்) தெளிவுபடுத்தியிருக்கிறார்.

‘குறிப்பாக ஒரு முண்டித கேசரை ஸ்ரீருத்ரத்தில் சிவா ஸ்வரூபமாகச் சொல்லியிருக்கிறதென்றால், அது ஆசார்யாள்தான் என்று தாம் சொல்லிவிட்டால் போதுமா? வேறே ஆதாரம் காட்டினால்தானே ஸரியாயிருக்கும்’ என்று அந்த பாஷ்யக்காரர் புராணங்களைத் தேடிப் பார்த்தார். புராண – இதிஹாஸங்களைக் கொண்டே வேதத்திற்கு அர்த்தம் காண வேண்டுமென்பது பெரியோர் கண்டமுறை.

இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸமுபப்ருஹ்மயேத் |
பிபேத் – யல்பக்ருதாத் – வேதோ மாம் – அயம் ப்ரதரிஷ்யதி ||

முதல் வரிக்கு அர்த்தம், இதிஹாஸ – புராணங்கள் வேதத்துக்கு உபப்ருஹ்மணம் எனப்படும் விரிவான விளக்கம் என்பது. இப்படி இதிஹாஸ, புராணங்களையும் வேதத்தோடு கற்றறிந்தவன் நிறைந்த வித்வத்துடன் கூடிய ‘பஹுச்ருதன்’. இதிகாச – புராண ஞானமில்லாமல் வேதத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு அர்த்தம் செய்கிறவன் சிற்றறிவே படைத்த ‘அல்பச்ருதன்’. இவனைக் கண்டாலே வேதம் நடுங்குகிறதாம்! “பிபேதி அல்ப ச்ருதாத் வேத:” – அல்ப ச்ருதனிடம் வேதம் பயப்படுகிறது. பிபேதி என்றால் பயப்படுகிறது. எதனால் பயப்படுகிறது? “மாம் அயம் ப்ரதரிஷ்யதி” என்று பயப்படுகிறது – அதாவது ‘இவன் என்னைத் தன்னிஷ்டப்படி கண்ட இடத்துக்கு இழுப்பான். மனம் போனபடி மந்த்ரங்களுக்கு அர்த்தம் சொல்லி வஞ்சனை பண்ணுவான்’ என்றே பயப்படுகிறதாம்! வேதத்தில் வெளிப்படையாகத் தெரியாத விஷயங்களுக்குப் புராண – இதிஹாஸங்களின் துணை கொண்டுதான் அர்த்தம் காண வேண்டுமேயன்றி தன்னிஷ்டப்படிப் பண்ணக்கூடாது. இதனால் அந்த பாஷ்யகாரர் புராணங்களைப் பார்த்து சிவமூர்த்தியான வ்யுப்தகேசன் யார் என்று ஆராய்கிறபோது ‘வாயுபுராண’த்தில் பளிச்சென்று இன்னார்தான் என்று கண்டுபிடித்துவிட்டார். அந்தப் புராணத்தில்,

சதுர்பி: ஸஹ சிஷ்யைஸ்து சங்கரோ (அ)வதரிஷ்யதி என்று இருப்பதைப் பார்த்தார். ‘நான்கு சிஷ்யர்களோடு கூடியவராக சங்கரபகவத்பாதர் அவதரிக்கப் போகிறார்’ என்ற இந்த வாக்கியத்தைப் பார்த்ததும் அவருக்கு ஸ்ரீருத்ரம் சொல்லும் வ்யுப்தகேசன் ஆசார்யாள்தான் என்று நிஸ்ஸந்தேஹமாகப் புரிந்துவிட்டது. ‘சிவரஹஸ்ய’ இதிஹாஸத்திலும் இப்படியே சான்று கண்டுபிடித்து உறுதிப்படுத்திக்கொண்டார் – ‘வ்யுப்தகேசன் என்பது சங்கராவதாரம்தான்’ என்று பாஷ்யத்தில் எழுதிவிட்டார்.

சங்கர பகவத்பாதர்கள் அவதார புருஷர் என்பதற்கு ச்ருதி ப்ரமாணம் பார்த்தாகிவிட்டது. இதிஹாஸ, புராண ப்ரமாணங்கள் கொஞ்சம் பார்க்கலாம். ச்ருதியிலிருப்பவற்றை விஷ்ணு புராணத்தின் பரிசிஷ்டமான விஷ்ணு தர்மொத்தரமும் வாயுபுரானமும் ‘கன்ஃபர்ம்’ பண்ணியிருப்பதையும் நடுவில் பார்த்தோம். இன்னும் சில பார்க்கலாம்.

“சிவரஹஸ்யம்” என்று ஒரு இதிஹாஸம் என்றேனே, அதைப் பார்ப்போம். புராணங்களை விடவும் ப்ராமாண்யம் (‘அதாரிட்டி’) உடையவையாகக் கருதப்படும் தெய்விகக் கதைகளுக்கு ‘இதிஹாஸம்’ என்று பெயர். ராமாயணம், பாரதம் இரண்டும் இதிஹாஸங்களே. அப்படி சிவ ஸம்பந்தமாக உள்ள இதிஹாஸம் ‘சிவ ரஹஸ்யம்’. பாரதம் மாதிரியே ஐம்பதாயிரத்திற்கு அதிகமான க்ரந்தம் (ச்லோகங்கள்) கொண்ட பெரிய புஸ்தகம்5. ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி ஜைகீஷவ்யர் என்ற ரிஷிக்கு அதை உபதேசித்தார். ஜைகீஷவ்யர் ஸுத மஹா பௌராநிகருக்கு உபதேசிக்க, ஸுதர் மூலமாக அது நைமிசாரண்யா முனிவர்களுக்கு உபந்நியசிக்கப்பட்டு லோகத்திற்கு ப்ரசாரமாயிற்று. அதனால் ஜைகீஷவ்யர் செய்ததாகவே அதைச் சொல்வது வழக்கம். ஸுப்ரஹ்மண்யரும் தாமாக இதை (ஜைகீஷவ்யருக்கு) உபதேசித்ததாகச் சொல்லிக் கொள்ளவில்லை. பூர்வத்தில் தம்முடைய பிதாவான பரமேச்வரர் அம்பாளுக்குச் சொன்ன இதிஹாஸத்தையே இப்போது தாம் சொல்வதாகத்தான் சொன்னார்.

ராமாயணத்தில் ஏழு காண்டம் என்றும், பாரதத்தில் பதினெட்டு பர்வம் என்றும் பிரித்திருப்பதுபோல், சிவா ரஹஸ்யத்தைப் பன்னிரண்டு அம்சங்களாகப் பிரித்திருக்கிறது. அவை முழுக்க ஈஸ்வர ஸம்பந்தமான விஷயங்களையே சொல்லும். அவற்றில் ஒன்பதாவது அம்சத்தில் சிவ பக்தர்களுடைய சரித்ரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நம்முடைய அறுபத்திமூன்று நாயன்மார்கள் சரித்ரங்கள்கூட இவற்றில் வந்துவிடுகின்றன. மாயவரத்திற்குப் பத்து மைலிலுள்ள கஞ்சனூர் என்ற ஊரில் வைஷ்ணவராகப் பிறந்து அப்புறம் பல திவ்ய அற்புதங்கள் நடந்து பரம சைவராக ஆகி ஹ்ரதத்த சிவாசார்யார் என்றே பெயர்பெற்ற ஒரு பெரியவர் உண்டு. அவருடைய கதைகூட இதில் (சிவரஹஸ்யத்தின் ஒன்பதாவது அம்சத்தில்) வந்துவிடுகிறது. இம்மாதிரி இன்னொரு விருத்தாந்தமாகவே அங்கு நம் பகவத்பாதாளின் சரித்ரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் நடக்கப்போகிற இந்த சரித்ரங்களை ஞானத்ருஷ்டியில்பார்த்துச் சொல்லும் முறையில் விவரித்திருக்கிறது.

சிவ ரஹஸ்யம் சிவபக்தியை விசேஷித்துச் சொல்வதற்காக ஏற்பட்ட நூல். நம்முடைய ஆசார்யாளுக்கு முக்யமாக இருக்கிற அத்வைத ஞானமார்க்கம் அந்தப் புஸ்தகத்துக்கு முக்யமான விஷயமில்லை, ஆனாலும் ஆசார்யாள் ஞானாவதாரம் போலவே பக்தாவதாரமாகவும் இருந்தவர். அதிலும் அவருக்கே ப்ரத்யேக மான ப்ரக்யாதி கூறும்படியாக ஈஸ்வரன், விஷ்ணு, அம்பாள், ஸுப்ரஹ்மண்யர் என்றிப்படி ஒவ்வொரு தெய்வத்துக்கும் பரம பக்தர் என்று சொல்லும்படியான ஸகல – தேவதா – பக்தாவதாரமாக இருந்தவர். அவரே தெய்வமாயிருந்த போதிலும், ஞானஸ்வரூபமான பரப்ஹ்மாகவே இருந்த போதிலும், ஜனங்களுக்கெல்லாம் ஞானத்துக்குப் பூர்வாங்கமாகவே பக்தி ஊட்டவேண்டுமென்றே அவதார லக்ஷ்யத்திற்காகத் தாமும் பக்தராக நடித்துக் காட்டினார். க்ஷேத்ரம் க்ஷேத்ரமாக யாத்ரை பண்ணுவது, ஸ்தோத்ரம் பண்ணுவது, பூஜை முதலான அனுஷ்டானங்கள் பண்ணுவதென்று காட்டி பக்தராக நடித்தார்.

இதில் அம்பாள் பக்தராக ‘சௌந்தர்ய லஹரி’ முதலானதுகள் பண்ணியும், ஸ்ரீ சக்ர பூஜை, அநேக ஆலயங்களில் ஸ்ரீ யந்த்ர பிரதிஷ்டை செய்தும் இருக்கிறார். “பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்” என்று தேசம் பூர பஜனை பண்ணிக்கொண்டு போயும், விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யாதிகள் எழுதியும் விஷ்ணு பக்தராக விளங்கியிருக்கிறார். இப்பிடி ஒவ்வொரு தெய்வத்தின் பக்தராகவும் தம்மை காட்டிக் கொண்டதில் உத்தமமான சிவா பக்தராகவும் அநேகம் செய்திருக்கிறார். அவருடைய மடங்களில் முக்ய மூர்த்தியாக சந்த்ரமௌலீச்வரனைதான் வைத்திருக்கிறார். அவர் விபூதி, ருத்ராக்ஷதாரியாக இருந்திருக்கிறார். ‘சிவானந்தாலஹரி’ முதலான சைவமான ஸ்தோத்ரங்களும் அநுக்ரஹித்திருக்கிறார். இப்படி சிவ பக்தி வளர்வதற்கு அவர் உபகாரம் செய்திருக்கிறார் என்ற ரீதியிலேயே அவருடைய சரித்ரத்திற்கும் சிவ ரஹஸ்யத்தில் இடம் கொடுத்திருக்கிறது.

காலடியில் பிறந்ததிலிருந்து காஞ்சியில் முக்தி அடைகிற வரை ஆசார்ய சரித்ரத்தைச் சொல்லும் அந்த சைவமான நூல் ஆசார்யாளின் வாழ்க்கையில் முக்யமான ஸம்பவமாகச் சொல்வது, கைலாஸத்திற்கு ஆசார்யாள் சரீரத்தோடேயே போய்ப் பரமேச்வரனை தர்சனம் செய்ததையும், பரமேச்வரன் அவருக்கு பஞ்சலிங்கங்கள் என்னும் ஐந்து ஸ்படிக லிங்கங்களை அனுக்ரஹித்து, “மூன்று காலத்திலும் இந்த லிங்கங்களுக்கு பில்வத்தால் அர்ச்சனை பண்ணு” என்று ஆஜ்ஞாபித்ததையும்தான். ஆசார்யாள் அத்வைத பரமாக பாஷ்ய நூல்கள் செய்து, அவற்றை தேசம் முழுதிலும் உள்ள வித்வத் ஸமூஹங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக ப்ரசாரம் பண்ணி அத்வைத ப்ரதிஷ்டாபனாசார்யாள் என்று பெயர் பெற்றதே அவருடைய ஜீவிதத்தில் சிகரமான கார்யமானாலும், அது சிவரஹஸ்யத்திற்கு முக்கிமில்லை. ஆசார்யாளால் ஐந்து இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டு ஆராதிக்கப்படும் பஞ்ச லிங்கங்களை அவர் ஈஸ்வரனிடமிருந்தே பெற்றுக் கொண்டதற்குத்தான் இதில் முக்யத்வம் கொடுத்திருக்கிறது.

சிவரஹஸ்யத்தின் கொள்கை சிவ பக்தியை ஸாதனமாகக் கொண்டு சிவா ஸாயுஜ்யம் பெறுவதே மோக்ஷம் என்பது. ஆசார்யாளோ பக்தியை — எந்த ஒரு தெய்வமானாலும் அதனிடம் பக்தி வைப்பதை — ஞானத்திற்குப் பூர்வாங்கமாகச் சொல்லி, அப்புறம் ஞான விசாரம் என்ற ஸாதனத்தினால் ஆத்மா ஸாக்ஷாத்காரம்பெறுவதுதான் மோக்ஷம் என்று சொன்னவர். சிவபக்தி, சிவஸாயுஜ்யம் ஆகியவற்றுக்கே முழு முக்யத்வம் தந்த அறுபத்துமூவர், ஹரதத்தர் போன்றவர்களின் கணக்கில் ஆசார்யாளைச் சேர்ப்பதற்கில்லை. ஆகையால் சிவோத்கர்ஷத்தையே (சிவனின் உயர்வையே) ஸ்தாபிப்பதற்காக ஏற்பட்ட சிவரஹஸ்யத்தில், சிவபக்தர்களாகவே முற்றிலும் இருந்த மற்றவர்களைப் போற்றிச் சொல்லியுள்ள அளவுக்கு சிவ பக்தராகவும் இருந்தவர் என்ற ரீதியிலேயே இடம்பெற்ற ஆசார்யாளைப் பற்றிச் சொல்லாமலிருந்திருந்தால் அது எதிர்பார்க்கக்கூடியதே. ஆனால் அப்படியில்லாமல் அந்தப் புஸ்தகத்தில் அவரை ஈஸ்வராவதாரமாகவே சொல்லியிருக்கிறது! இது ஒரு சிறப்பு வாய்ந்த பிரமாணமாகும்.

ஒன்பதாவது அம்சம் பதினாறாவது அத்யாயம் முழுக்க அதில் ஆசார்ய சரித்ரம் சொல்லியிருக்கிறது. அதில் பரமேச்வரன் அம்பாளிடம், “சங்கரர் என்ற பெயருடன் என் அம்சத்தில் தோன்றியவராக ஒரு ப்ராம்மணோத்தமர் மலையாள தேசத்தில் சகலம் என்னும் காலடியில் ஒரு உத்தமமான ப்ராம்மண ஸ்த்ரீக்குப் பிறக்கப் போகிறார்” என்று சொல்வதாக ஆரம்பித்திருக்கிறது:

கேரளே சசலக்ராமே விப்ரபத்ந்யாம் மதம்சஜ: |
பவிஷ்யதி மகாதேவி சங்கராக்யோ த்விஜோத்தம: ||

‘மதம்சஜ:’ – ‘மத் அம்ச ஜ:’ – என்னுடைய அம்சத்தில் பிறந்தவர்; என் அம்சமாகப் பிறந்தவர் – இப்படிப் பரமசிவன் அம்பாளை “மஹாதேவி” என்று கூப்பிட்டுச் சொல்கிறார்.

கூர்ம புராணத்திலும் ஈஸ்வரனே ஆசார்யாளாக அவதரித்ததைச் சொல்லியிருக்கிறது.

கரிஷ்யத்-யவதாரம் ஸ்வம் சங்கரோ நீலலோஹித: |
ச்ரௌத்- ஸ்மார்த்த- ப்ரதிஷ்டார்த்தம் பூதாநாம் ஹித-காம்யயா ||

என்பதாக பரம கருணையினால் ஈஸ்வரன் ஜனங்களுக்கு ஹிதம் செய்யவே ஆசார்யாளாக வந்ததைச் சொல்லியிருக்கிறது. ஈஸ்வரன் செய்ய ஆசைப்பட்டது லோக ஹிதம் (உலக நலன்): “பூதாநாம் ஹிதம்”. இப்படி ஹிதம் செய்ய விரும்பிய அவனோ நீலலோஹிதன்! நீலம் என்றால் நீர்வர்ணம்தான். லோஹிதம் என்றால் சிவப்பு. சிவனைச் சிவப்பு நிறம் என்றும் சுத்த ஸ்படிக நிறம் என்றும் இரண்டு விதமாகச் சொல்வதுண்டு. ஸாதாரணமாக, வடதேசத்தில், ஸம்ஸ்க்ருத நூல்களில் சுத்த வெளுப்பு, ஸ்படிக வர்ணம் என்றும், தெற்கே தமிழ் நூல்களில் ‘பவளம் போல் மேனி’, ‘செம்மேனி அம்மான்’ என்றும் சொல்லியிருக்கும். ஆனாலும் வேதத்திலேயே — ‘ஸ்ரீருத்ர’த்திலேயே — தாம்ர வர்ணமாய், அருண வர்ணமாய், ‘விலோஹிதன்’ என்றே சொல்லும்படி நல்ல லோஹித வர்ணமாய் பரமசிவன் இருப்பதையும் சொல்லியிருக்கிறது. அந்தச் சிவப்பு சிவனே இடது பாகத்தில் நீலமான அம்பாளை வைத்துக்கொண்டு அர்த்தநாரீச்வரனாகவோ, அல்லது மகாவிஷ்ணுவை வைத்துக்கொண்டு ஹரிஹர மூர்த்தியாகவோ இருக்கும்போது ‘நீலலோஹிதன்’ எனப்படுவார். ஸந்த்யாவந்தன உபஸ்தான திக்-வந்தனத்தில் மேற்குப் பார்த்துச் சொல்லும் ஹரஹர மந்த்ரத்தில் இதையே ‘க்ருஷ்ண-பிங்களம்’ என்று சொல்லியிருக்கிறது. ‘க்ருஷ்ண’ என்பது ச்யாமளமான விஷ்ணு; ‘பிங்கள’ என்பது சிவந்த பரமசிவன். கூர்ம புராணத்தில் சக்தி ஸஹிதரான பரமேச்வரன் தாமே சங்கராசார்யராக அவதரிக்கப் போவதைத்தான்.

“கரிஷ்யத் – யவதாரம் ஸ்வம் சங்கரோ நீலலோஹித:”

என்று சொல்லியிருக்கிறது. ஜனங்களுக்குப் பரம ஹிதம் செய்ய விரும்பி ஈச்வரன் ‘ச்ரௌதம்’ என்னும் வேத வழக்குகளையும், ‘ஸ்மார்த்தம்’ என்னும் தர்ம சாஸ்த்ர அநுஷ்டானங்களையும் மறுபடியும் நன்கு நிலைநாட்டுவதற்காகவே இந்த அவதாரம் ஏடுத்தான் என்பதை, ச்ரௌத – ஸ்மார்த்த – ப்ரதிஷ்டார்த்தம் பூதாநாம் ஹித காம்யயா என்று சொல்லியிருக்கிறது.

லிங்க புராணத்திலும் இப்படியே, ” வேத விதைகளும், வேத கர்மாக்களும் கலியுகத்தில் ரொம்பவும் நிந்தனைக்கு ஆளாகும் ஸமயத்தில் நீலலோஹிதன் என்கிறருத்ரனாகிய மஹாதேவன் சங்கரராக வந்து தர்மங்களையெல்லாம் பிரகாசப்படுத்தி, கலிதோஷத்தை முறியடித்து வெற்றி கொண்டு அப்புறம் தம்முடைய பரம பதத்திற்குத் திரும்பப் போகிறார்” என்று சொல்லியிருக்கிறது:

நிந்தந்தி வேதவித்யாம்ச்ச த்விஜா: கர்மாணி வை கலௌ |
கலௌ ருத்ரோ மஹாதேவ: சங்கரோ நீலலோஹித: ||
ப்ரகாசதே ப்ரதிஷ்டார்த்தம் தர்மச்ச விக்ருதாக்ருதி: |
ஏதம் விப்ராநிஷேவந்தே ஏநகேநாபி சங்காரம் ||
களிதோஷாந் விநிர்ஜித்ய ப்ரயாந்தி பரமம் பதம் ||

‘பவிஷ்யோத்தர புராணம்’ என்பதாக வருங்காலத்தை சொல்லும் புராணம், “கலி பிறந்து இரண்டாவது ஆயிரம் முடியும்போது லோகாநுக்ரஹம் செய்யவேண்டும் என்ற ஆசையினால் நாலு சிஷ்யர்களோடு சங்கரர்அவதரிக்கப் போகிறார்” என்று சொல்கிறது:

கல்யாதௌ த்விஸஹஸ்றானதே லோகாநுக்ரஹ- காம்யயா |
சதுர்பி: ஸஹ சிஷ்யைஸ்து சங்கரோ (அ)வதரிஷ்யதி||

இதிலே இரண்டாவது வரி அப்படியே வாயு புராணத்திலும் இருப்பதைத்தான் ஸ்ரீருத்ர பாஷ்யக்காரர் மேற்கோள் காட்டினாரென்று பார்த்தோம். ‘பூதாநாம் ஹித காம்யயா’ என்று கூர்ம புராணம் சொல்வதையே இங்கு ‘லோகாநுக்ரஹ காம்யயா’ என்று சொல்லியிருக்கிறது.

ப்ரஹ்மாண்ட புராணம் என்று ஒரு புராணம். லலிதா ஸஹஸ்ரநாமம், லலிதாம்பிகையின் கதை முழுவதையும் கூறுவதான லலிதோபாக்யானம் ஆகியன அதன் உத்தரபாகத்தில்தான் வருகின்றன. அந்தப் புராணத்தின் ஒரு பிரிவு மார்க்கண்டேய ஸம்ஹிதை6 என்பது. அதில் மூன்றாவது பரிஸ்கந்தத்தில் (அத்யாயத்தில்) ஆசார்யாளின் அவதார விசேஷம் சொல்லப்பட்டிருக்கிறது.

லோகானுக்ரஹத்திலேயே சிந்தையாய் இருந்ததால் ஈச்வரன் இப்படி அவதாரம் பண்ணினான். அவனுக்காகவேஅந்த எண்ணம் இருந்தபோதிலும், ப்ரம்மாதி தேவர்கள் பெடிஷன் கொடுத்தபின் அவதாரம் எடுத்தான். நாஸ்திகமான சார்வாகாதி மதங்களை அழிப்பதற்காகக் காலடியிலிருந்த சிவகுரு என்று ப்ராம்மணோத்தமரின் பத்னிக்கு சங்கரர் என்ற பெயரையுடைய பிள்ளையாகப் பிறந்தான் என்று அதில் சொல்லியிருக்கிறது.

லோகானுக்ரஹ-தத்பர: பரமசிவ:ஸம்ப்ரார்த்திதோ ப்ரஹ்மணா |
சார்வாகாதி மத ப்ரபேத நிபுணாம் புத்திம் ஸதாதாராயந் ||
காலட்யாக்ய புரோத்தமே சிவகுரூர் வித்யாதி நாதச்ச ய: |
தத்-பத்ந்யாம் சிவதாரகாம்ச முதித: ஸ்ரீசங்கராக்யாம் வஹந் ||

ஸௌர புராணம் என்று ஸூர்யனையே பரமாத்வாகச் சொல்லும் ஒரு புராணம் இருக்கிறது. ஸூர்யனுக்கு ஸவிதா என்று ஒரு பெயர். ‘ஸாவித்ரி’ என்பது இந்த ‘ஸவிதா’வின் தொடர்பாக ஏற்பட்ட பெயர்தான். தாயாக உயிரை உண்டாக்கிப் போஷிப்பதால் ஸவிதா என்று பெயர். ‘ப்ரஸவம்‘ என்று ஒரு உயிர் பிரப்பதைச் சொல்கிறோமல்லவா? ஸவ – ஸவிதா. காயத்ரி மஹாமந்த்ரத்தில் ஸவிதா என்ற பெயரே குறிப்பிடப்படுகிறது. அந்த ஸவிதாதான் சங்கரராகப் பிறந்து வ்யாஸாசார்யாளின் ப்ரஹ்ம ஸுத்ரத்தின் ஸரியான அர்த்தத்தை விளக்கிச் சொல்லி, வேதத்தின் பரமதாத்பர்யத்தையே தர்க்க ரீதியில் ஸ்தாபித்தவர் என்று சௌர புராணத்தில் சொல்லியிருக்கிறது.

வ்யகுர்வந் வ்யாஸ ஸூத்ரார்த்தம் ச்ருதேரர்த்தம் யதோசிவாந் |
ச்ருதேர்-ந்யாய்ய: ஸ ஏவார்த்த: சங்கர: ஸவிதாநநா ||

(“ஸவிதாநநா” என்பது “ஸவிதா ந நா” என்று மூன்று பதங்கலாகப் பிரிய வேண்டும். இது குறித்து ஸ்ரீசரணர்களின் விளக்கம்: “ஆசார்யாள் தெய்வமான் ஸவிதாவே; அதாவது ஸுர்யனே: ஸாதாரண மனுஷ்யரில்லை என்று ச்லோகம் சொல்கிறது. ‘ந நா’ என்றால் மனுஷ்யர் இல்லை. ‘பித்ரு’ என்பது ‘பிதா’ என்று வருகிறது. ‘ஸவித்ரு’ என்பது ‘ஸவிதா’வாகிறது. ‘நர’ என்பதை ‘ந்ரு’ என்றும் சொல்வதுண்டு. ‘நரஸிம்ஹ’த்தை ‘ந்ருஸிம்ஹம்’ என்றும் சொல்கிறோமல்லவா” ‘பித்ரு-பிதா’, ‘ஸவித்ரு-ஸவிதா’ மாதிரி ‘ந்ரு – நா’. அதாவது ‘நா’ என்றாலே நாம் நரர், மநுஷ்யர் என்று சொல்வது. “ந நா” என்றால் ‘மநுஷ்யரில்லை’ என்று அர்த்தம்”).

சிவாவதாரம் என்று மற்ற புராணங்கள் சொல்லும் போதும் அந்த சிவனைப் பரமாத்மாவாகக் கருதியே அப்படிச் சொல்லியிருக்கிறது. இங்கே ஸுர்யனைப் பரமாத்வாகக் கருதும் புராணத்தில் ஸுர்ய மூத்திதான் அவ்வாறு அவதரித்தது என்று சொன்னால் இதுவும் அதே அபிப்ராயத்தைத்தான் கொடுக்கிறது.

ஆசார்யாளை ஸூர்ய மூர்த்தியாகச் சொல்வதிலும் ஒரு தனிப் பொருத்தம் இருக்கிறது. அஞ்ஞானத்தைத் தமஸாகவும் (இருட்டாகவும்) ஞானம் தருபவரைத் தமஸைப் போக்கி ப்ரகாசத்தைக் கொடுக்கும் ஸூர்யனாகவும் சொல்வது வழக்கத்தில் உள்ளதுதான். “ஞான பாஸ்கரன்” என்று மஹாமதியாக இருக்கப்பட்டவர்களைச் சொல்வதுண்டு. குறிப்பாக நமக்கு இவ்விஷயத்தில்என்ன குதூஹலம் அளிக்கிறதென்றால் ஆசார்யாளின் நேர் சிஷ்யர்களாக இருந்த இரண்டு பேர் — மஹா பெரியவர்கள் — அவரை இப்படி ஸூர்யனாகச் சொல்லியிருப்பதுதான்.

ஆசார்யாளைப் பற்றிய ஸ்தோத்ரங்களில் முதல் ஸ்தானம் பெற்றிருப்பது “தோடகாஷ்டகம்”7. நேர் சிஷ்யரான தோடகர் அவரை ஸ்துதித்துப் பண்ணிய அஷ்டகம். அதில், ஆசார்யாளின் ஸந்நிதானத்தில் நேரே நின்றுகொண்டு, அவரைப் பார்த்து, ஒரேயடியாய் ஆனந்தபாஷ்பம் சொறிந்துகொண்டு,

அஹிமாம்சு- ரிவாத்ர விபாஸி!”

என்கிறார். “ஸூர்யனாக இங்கே ஜ்வலித்துக் கொண்டிருக்கிறீர்களே!” என்று அர்த்தம். ஹிமம் என்றால் பணி. ஹிமாம்சு என்றால் பனியைத் தான் கிரணங்களால் பெருகவிடும் சந்திரன். முதலில் ‘அ’ செய்தது அஹிமாம்சு என்றால் பணியை வற்ற அடித்துவிடுகிற ஸுர்யன். அப்படிப்பட்ட ஸுர்யனாக ஆசார்யாள் இருக்கிறாராம்!

அவருடைய நான்கு பிரதானமான சிஷ்யர்களில் இன்னொருவர் ஸுரேச்வராசார்யாள். அவர் ஆசார்யாளின் ப்ருஹதாரண்யகோபநிஷத் பாஷ்யத்திற்கு வார்த்திகம் (விரிவுரை) செய்திருக்கிறார். அதில், உதயகிரியிலிருந்து அஸ்தமனமாகிற மலைவாசல் வரையில் ஆசார்யாளான ஞான ஸுர்யன் தம்முடைய கீர்த்திக் கிரணங்களாக உள்ள சிஷ்யர்களால் வ்யபித்துக்கொண்டு லோகத்தின் அஞ்ஞானஅந்தகாரம் முழுவதையும் போக்கடிக்கிறார்8 என்று சொல்லியிருக்கிறது.

இப்படியாக, சங்கர விஜயங்களில் மட்டுமில்லாமல் ரிக் வேத ரிக், ஸ்ரீருத்ரம், சிவ ரஹஸ்யம், மார்க்கண்டேய ஸம்ஹிதை, விஷ்ணு தர்மோத்தரம், வாயு புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்யோத்தர புராணம், ஸௌர புராணம் ஆகியவற்றிலும் ஸ்ரீ சங்கர பகவத் பாதாள் மநுஷ்யரில்லை, அவதார மூர்த்திஎன்று சொல்லியிருக்கிறது. .


1பாஸ்கரராயர் பற்றிய ஸ்ரீசரணர்களின் விரிவான உரை இனி வரவிருக்கும் நம் நூற் பகுதிகளில் ஒன்றில் வெளியாகலாம்.

2 ரிக் வேதம் : முதல் மண்டலம், 164-வது ஸுக்தம்,26-வது மந்த்ரம்

3 நம: சம்பவே ச மயோபவே ச நம: சங்கராய ச மயஸ்கராய ச நம: சிவா ச….. (ஸ்ரீருத்ரம், 8,1)

4 அபிநவ சங்கரர். (இவர் காஞ்சி ஸ்ரீமடத்தின் 38–வது பீடதிபதிகளான அபிநவ சங்கரர் அல்ல. இவர் அதே பெயர் கொண்ட வேறொருவர்.)

5 ‘நிர்ணய ஸிந்து’ என்ற புகழ்பெற்ற தர்மசாஸ்திர நூல் ‘சிவரஹஸ்ய’த்தை ஒரு பிரமாண நூலாகத் தெரிவித்திருப்பதாக ஸ்ரீ சரணர்கள் கூறியிருக்கிறார்கள்.

6 நூறு ‘கண்டங்கள்’ என்ற பிரிவுகள் கொண்டது. ஒவ்வொரு கண்டத்திலும் ‘பரிஸ்பந்தங்கள்’ என்ற உட்பிரிவுகள் உள்ளன. அதன் 72-ம் கண்டத்திலுள்ள 7-8 பரிஸ்பந்தங்கள் ஸ்ரீசங்கரரின் சரிதையைக் கூறுகின்றன.

7 தோடகாஷ்டகம் பிறந்த கதை பின்னால் விரியும்.

8ஆசைலத்- உடையாத்-ததா(அ)ஸ்தகிறித்தோ பாஸ்வத்-யசோரச்மிபி: வ்யாப்தம் விச்வம்-அநந்தகாரம்-அபவத்-யஸ்ய ஸ்ம சிஷ்யைரிதம்

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is சம்-பு-சம்-கரரானார்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  நேர் சிஷ்யர்களில் தரும் சான்று
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it