சம்-பு சம்-கரரானார் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அஜ்ஞா நாந்தர்- கஹந-பதிதாந்-ஆத்மவித்யோபதேசை:

த்ராதும் லோகாந் பவ-தவ-சிகா-தாப பாபச்யமாநாந் |

முக்த்வா மௌநம் வடவிடபிநோ-மூலதோ நிஷ்பதந்தீ

சம்போர்-மூர்த்தி: சரதி புவநே சங்கராசார்யா ரூபா || 1

ஆசார்யாளை நேரே பார்த்து அதிலே ஆனந்தம் பொங்கிச் சொன்ன வாக்காக (இந்த) ச்லோகம் இருக்கிறது. ‘சரதி புவநே’ – ‘உலகத்திலேயே நடமாடிக் கொண்டிருக்கிறார்’ – என்று நிகழ்காலமாக நேரே பார்த்தது பார்த்தபடிச் சொல்லியிருக்கிறது!

நடமாடுவது யார்? ‘சம்போர்-மூர்த்தி:’ – சம்புவின் மூர்த்தி; சம்பு என்கிற சிவனுடைய மூர்த்தி. பரமேஸ்வரனின் முக்யமான பெயர்களில் சம்பு என்பது ஒன்று. “சம்போ மஹாதேவா” என்றே சொல்வது வழக்கம். சிவ பக்தர்களை சைவர் என்பது போலவே சாம்பவர், பரம சாம்பவர் என்றும் சொல்வதுண்டு. ‘சம்பு’ என்ற பதத்தினடியாக உண்டானதே ‘சாம்பவ’ என்பது. சம்புபத்னியான அம்பாளை ‘சாம்பவி’ என்று சொல்வார்கள். பலவிதமான தீக்ஷைகளில் ‘சாம்பவி தீக்ஷை’ விசேஷமானது.

ஸரி, ‘சம்பு’ என்றால் என்ன? பரமசிவனுக்கு ஏன் அப்படிப் பெயர் ஏற்பட்டது?

‘சம்’ என்றால் நித்ய ஸுகம். ‘இன்பம்’ என்பது பொதுவாகச் சொல்கிற அர்த்தம். ருத்ர,சமகங்களில் ‘சம்’, ‘மயஸ்’ என்று இரண்டுவிதமாக இன்பங்களைச் சொல்லியிருக்கும். ஈஸ்வரனுக்கு ‘சம்பு’ என்பதோடு ‘மயோபு’ என்றும் ‘ருத்ர’த்தில் ஒரு பெயர் சொல்லியிருக்கிறது. சம், மயஸ் என்ற இரண்டும் இன்பம் என்ற அர்த்தம் கொடுப்பதால் (ருத்ர, சமக) பாஷ்யகாரர்கள், (இவற்றில்) ஒன்று லௌகிக ஸுகம் என்றும், மற்றது மோக்ஷ ஸுகம் என்றும் அர்த்தம் பண்ணியிருக்கிறார்கள். ‘சம்’ ஒன்றை மட்டும் சொல்கிறபோது அதுவேதான் மோக்ஷ ஸுகமாயுள்ள நித்ய ஸுகமாகும்.

‘சம்’முக்கு ‘பூ‘வாக இருப்பது ‘சம்பு’.

பூ என்றால் உற்பத்தியாகிற இடம். நாமெல்லாரும் உற்பத்தியாகிற இடமாக இந்த மண்ணுலகம் இருப்பதால் இதற்கு பூலோகம் என்று பெயர். நித்யானந்தமாகிற ‘சம்’ உற்பத்தியாகும் இடமே ‘சம்-பு’. பரமேஸ்வரன் அத்வைத ப்ரஹ்மமாக தக்ஷிணாமூர்த்தி ரூபத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது மோக்ஷானந்த உற்பத்தி ஸ்தானமாக இருப்பதால் அவருக்கு சம்பு என்று பெயர்.

அதைத்தான் (தக்ஷிணாமூர்த்தி கோலத்தைத்தான்) ‘வடவிடபிநோ மூலதோ’ என்பதும், அதற்கு முந்தி வரும் ‘மௌனம்’ என்பதும் குறிப்பிடுகிறது. ‘வடவிடபி’ என்றால் வடவ்ருக்ஷம், (அதாவது) ஆலமரம். ஆலமரத்தின் அடியில், வேரில்தான் தக்ஷிணாமூர்த்தி உட்கார்ந்து கொண்டிருப்பார். அவர் ‘வட விடபி மூல ஸ்திதர்’. மூலம் என்றால் வேர். அவர் மௌனமாக இருப்பவர். ஏன் அப்படி? பேசுவது என்றால் பேச்சைக் கேட்க இன்னொருத்தர் இருக்கணும். தனியாக உள்ளபோது பேச்சுக்கு இடமில்லை. அவர் தன்னைத் தவிர வேறே எதுவும், எவரும் இல்லை என்றுதெரிந்துகொண்டிருப்பதான பிரம்மா ஞானத்தின் ஸ்வரூபமாக இருக்கிறவர். அதனால் மௌனியாக இருக்கிறார். பேசுவதற்கு விஷயம் வேண்டும். விஷயத்தை நினைக்க மனஸ் வேண்டும். இவரோ மனஸ் என்ற மாயா பதார்த்தம் அழிந்து போய்விட்ட ஸத்ய நிலையில் இருப்பவர். மனஸ், நினைப்பு எதுவுமில்லாதபோது வார்த்தை எப்படி எழும்ப முடியும்? அப்போது மௌனமாகத்தானே இருக்கவேண்டும்? ஆத்மானந்தம் என்ற நித்யஸுகமான ‘சம்’மின் உற்பத்தி ஸ்தானமாக, அதாவது ‘சம்பு’வாக, ஒரே மௌனமாக உட்கார்ந்துகொண்டிருப்பது அவருடைய ஸ்வபாவம்.

நதிகளுக்கெல்லாம் உற்பத்தி ஸ்தானம் என்று ஒன்று உண்டு, அந்த இடம் மலைகளில் உச்சியில் ஒரு சின்ன மடுமாதிரி இருக்கும். அதில் ஜலம் தேங்கியிருக்கும். கங்கோத்ரிக்குக் கொஞ்சம் வடக்கே இப்படித்தான் இருக்கிறது. அதிலிருந்து பசுவின் வாய்மாதிரியான ‘கோமுகி’ என்ற பாறை அமைப்புக்கள் வழியே கங்கை நதியாக விழுகிறது. காவேரியின் உற்பத்தி ஸ்தானம் கொடகு தேசத்தில் ஸஹ்யாத்ரி என்கிற மலைத் தொடரில் பிரம்மகிரி என்ற மலையில் தலைக்காவேரி என்றே சொல்லும் இடத்தில் ஒரு சின்ன மடு மாதிரிதான் இருக்கிறது.

அந்தந்த உற்பத்தி ஸ்தானங்களில் ஜலம் அது பாட்டுக்குச் சின்ன மடுவாகத் தேங்கியிருந்துவிட்டால் அதனால் லோகத்திற்கு என்ன பிரயோஜனம்? ரொம்பவும் கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு, மலை, காடு எல்லாம் தாண்டிப்போய் அந்த உற்பத்தி ஸ்தானத்தை அடையக்கூடிய வெகு சிலரைத் தவிர மற்ற எல்லாருக்கும் ஒரு பிரயோஜனமும் கிடைக்காது. ‘வாணாளைக் கொடுத்து வாண தீர்த்தம்’ என்பார்கள் – தாம்ரபர்ணியின் உற்பத்தி ஸ்தானமான பாண தீர்த்தத்தை அடைவது எத்தனை கஷ்டம் என்பதை இப்படிச் சொல்வார்கள். அலை அடிக்காமல், சத்தம் போடாமல், இருந்த இடத்திலேயே தேங்கியுள்ள மடு அந்த உற்பத்தி ஸ்தானத்தை விட்டுப் புறப்பட்டு அலை அடித்து சத்தம் போட்டுக்கொண்டு நதியாகப் பாய்ந்தால்தான் லோகத்திற்கு ப்ரயோஜனம்.

தக்ஷிணாமூர்த்தி, சம்புவாக இருந்த இடத்திலேயே சத்தமில்லாமல் மௌனமாக ஒரு மடு மாதிரி, ஊற்றின் உற்பத்தி ஸ்தானம் மாதிரி இருப்பது வழக்கம். ரொம்பக் கஷ்டப்பட்டே ஒரு நதியின் உற்பத்தி ஸ்தானத்திற்குச் சில பேர் மட்டும் போய் அந்தத் தீர்த்தத்தினால் ப்ரயோஜனம் அடைகிறதுபோல, கஷ்டமான ஸாதனைகளெல்லாம் பண்ணி முடித்த பெரியவர்களான ஸநகாதி மஹரிஷிகள் போன்றவர்கள் மட்டுமே அவரிடம் போய் ஆத்மார்த்தமான ப்ரயோஜனம் அடையமுடிந்தது. அப்படிப்பட்ட மஹரிஷிகளிடமிருந்து மற்றும் அநேக மஹான்களிடமிருந்தும் லோகம் ப்ரயோஜனம் அடைந்து வந்தது. நேராக லோக ஜனங்களால் அத்தனை ஸாதனை செய்து தக்ஷிணாமூர்த்தியிடம் போகமுடியாது.

இப்போது (அதாவது சுமார் 2500 வருஷத்திற்கு முன்) லோக ஜனங்கள் மஹர்ஷிகளின் உபதேசங்களைத் தள்ளிவிட்டுத் தப்பான உபதேசங்களையே எடுத்துக் கொண்டிருந்தார்கள். சரியான வழியைவிட்டு அடர்ந்த காட்டுக்குள்ளே போய் அகப்பட்டுக்கொண்ட மாதிரி ஆகிவிட்டார்கள். அதைத்தான் அஜ்ஞாநாந்தர்-கஹந-பதிதாந் என்று ச்லோக ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறது. “அஞ்ஞானம் என்கிற அடர்ந்த காட்டின் நடுவில் மாட்டிக் கொண்ட ஜனங்களை” என்று அர்த்தம்.

காட்டு மத்தியில் மாட்டிக்கொண்டாலே கஷ்டம். அதோடு அந்தக் காடு தீப்பற்றிக்கொண்டு வேறு எரிய ஆரம்பித்து விட்டால் இன்னும் எத்தனை பெரிய கஷ்டமாகும்? அஞ்ஞானம் என்ற காட்டு மத்தியில் போனால் மோக்ஷத்தின் வழிக்கு ரொம்பவும் தள்ளிப் போய்விட்டதாகும். மோக்ஷ வழிக்கு நேர்மாறானது அது. அப்படியென்றால் என்ன அர்த்தம்? பந்த – மோக்ஷம் என்பவற்றை எதிரெதிர் விஷயங்களாகச் சொல்கிறோம். பந்தம் என்றால் தளை. விலங்கு போட்டுக் காட்டி வைத்திருக்கிற ஜனன மரணச் சுழலான ஸம்ஸார பந்தத்தை அது குறிக்கிறது. மோக்ஷம் என்றால் தளை போய்விட்ட கட்டற்ற ஸ்வதந்த்ர நிலை. தானே பரமாத்மா என்ற அத்வாதாநுபவத்தைத் தரும் ஞானம்தான் அப்படிப்பட்ட மோக்ஷத்தைத் தரும் ராஜபாட்டை. அஞ்ஞானம் என்பது காட்டு மத்தி. அதில் ஸம்ஸாரம் என்ற காட்டுத் தீ பிடித்துக்கொண்டு, ஜனங்கள் அதன் ஜ்வாலையில் வெந்து வறுபட்டுக் கொண்டிருந்தார்கள். பவ-தவ-சிகா-தாப பாபச்யமாநாந் என்று இதைத்தான் சொல்லியிருக்கிறது. “பவ-தவ-சிகா” என்றால் “ஸம்ஸாரமாகிய காட்டுத் தீ.”

நதியின் ஆரம்ப ஸ்தானமான ஊற்றுமாதிரி சம்புவான தக்ஷிணாமூர்த்தி கைலாஸ லோகத்தில் வட வ்ருக்ஷத்தடியில், இருந்த இடத்தைவிட்டு அசையாமல் உட்கார்ந்துகொண்டிருப்பதாகச் சொன்னேன். அது என்ன ஊற்று? ‘சம்’ என்று வேதம் சொல்லும் ‘நித்ய ஸுக’மாகிற தீர்த்தம் ஊறுகிற ஊற்று. ‘நித்ய ஸுகம்’ என்னவென்றால் ஞானமயமான அத்வைத மோக்ஷம்தான். அது தவிர பாக்கி எல்லா இன்பங்களும் அநித்ய ஸுகங்களே! அந்த “சம்”மின் உற்பத்தி ஸ்தானமான “பூ“வாக இருப்பவர்தான் “சம்பு”. சம்பு என்றால் ஸம்ஸாரத்திலிருந்து விடுவிக்கும் ஞானமாகிய நித்ய ஸுக தீர்த்தத்தின் உற்பத்தி ஸ்தானமாகிய ஊற்று.

இப்போது இரண்டையும் இணைத்துப் பார்க்கலாம். இங்கே ஜனங்களானால் அஞ்ஞானக் காட்டில் ஸம்ஸாராக்னியின் தாபத்தில் வெந்துகொண்டிருக்கிறார்கள். அங்கே தக்ஷிணாமூர்த்தியோ ஞான தீர்த்தமாகிய மோக்ஷ ஸுகத்தின் ஊற்றாக ஜில்லென்று இருக்கிறார். இந்த நெருப்பை அணைக்க வேண்டுமானால் அந்தத் தீர்த்தத்தைக் கொண்டுதானே பண்ணமுடியும்.

ஆனால் அந்த “சம்பு ஊற்று” ஏதோ உச்சி ஸ்தானத்தில் ஸனகர் போன்றவர்களால் மட்டுமே அடையக்கூடியதாக அல்லவா இருக்கிறது? அதைஎப்படி இந்த உலக மட்டத்திற்கு, அஞ்ஞான ஜீவஸமூஹத்தின் மட்டத்திற்குக் கொண்டு வருவது?

பகீரதன் ஆகாசத்திலிருந்து கங்கையை பூமிக்குக் கொண்டுவந்த மாதிரி சம்புவை யாரும் கொண்டுவர முடியாது. கங்கையின் சக்தியையும் தாங்கிக்கொண்டு, அளவாகக் கட்டுபடுத்தி பூமிக்கு அனுப்பிய அவரையே இறக்கிக் கொண்டு வர யாருக்கு சக்தி உண்டு? வெளி மநுஷ்யர்கள் யாருக்கும் அந்த சக்தி கிடையாது. ஏனென்றால் அவர் தமக்கு வெளியாக, வேறாக எதுவுமே இல்லாத அத்வைத ஸமாதியிலேயே இருந்து கொண்டிருப்பவர். அந்த ஸமாதியிலிருந்து அவரை யாரும் அசைக்க முடியாது.

அப்படியானால் இங்கே அஞ்ஞானக் காட்டில் ஸம்ஸாரத் தீ பற்றி எரியும்போதுஞான மோக்ஷ ஊற்றாக அவர் இருந்துங்கூட அந்தத் தீர்த்தத்தால் இந்த அக்னியை அணைப்பதற்கில்லாமல் இதில் ஜனங்கள் வெந்து மடிய வேண்டியதுதானா?

இல்லை. ஏனென்றால் வெளியிலிருந்துதான் அவரை யாரும் எதுவும் பண்ணமுடியாதே தவிர அவருக்குள்ளேயே சுரந்துகொண்டிருக்கும் கருணை அவரை எழுப்பி இறக்கிக் கொண்டுவர முடியும். அந்தக் கருணையைத்தான் சிவா பின்னமான (சிவனிடமிருந்து பிரிக்கவொண்ணாததான) சக்தி என்றும், அம்பாள் என்றும் சொல்வது. லோக நாடகத்தில் ஒரு அளவு வரை ஜனங்கள் அஞ்ஞானத்தில் அகப்பட்டுக்கொண்டு திண்டாடும்போதும் அவர் பாட்டுக்குப் பேசாமலே உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தாலும், அப்புறம் காடு பற்றிக்கொண்டு ஜனங்கள் ஸம்ஸார தாபத்தில் வேக ஆரம்பித்து விடுகிறார்களென்றால், அப்போது அவருடைய கருணை அவரைச் சும்மா உட்கார்ந்திருக்க விடாது.

அப்படித்தான் இப்போது ஆயிற்று.

அஞ்ஞானக் காட்டு மத்தியில் ஸம்ஸாரத் தீயில் வெந்து கொண்டிருக்கும் ஜனங்களை ரக்ஷிக்கவேண்டுமென்று சம்புவுக்குத் தோன்றிவிட்டது. த்ராதும் லோகாந் : “லோகத்திலுள்ள ஜனங்களை ரக்ஷிக்கவேண்டுமென்று”.

இப்படித் தோன்றினவுடனே அவர் மௌனமாகத் தான் பாட்டுக்கு ஏகாந்தமாக உட்கார்ந்துகொண்டிருக்கும் வழக்கத்தை விட்டுவிட்டார். “முக்த்வா மௌநம்” : மௌனத்தை விட்டுவிட்டு.

ஆலமரத்தடியில் ஒரு சின்ன ஊற்றாக இருந்தவர், உடனே அப்படி அங்கே மட்டும் தேங்கியிருப்பதை விட்டு, அங்கேயிருந்து, எப்படி ஒரு நதியின் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து ஊற்று பெருகி ஆறாகி மலை, காடு, கிராமம், நகரம் எல்லாவற்றின் வழியாகவும் விஸ்தாரமாகப் பாய ஆரம்பிக்கிறதோ அப்படி ஒரு ஞானகங்கையாக ஜனங்கள் இருக்கிற இடத்தைத் தேடிக்கொண்டு தேசம் பூராவும் ஓடுபவராக ஆனால் – முக்த்வா மௌநம் வடவிடபிநோ மூலதோ நிஷ்பதந்தீ.

ஒரு கார்யமுமில்லாத ஊற்றின் உற்பத்தி ஸ்தானமான சம்–பூவாக இருந்தவர் அந்த நித்யஸுகத்தை லோக ஜனங்களுக்கெல்லாம் கொடுக்கிற காரித்தைச் செய்யும் சம்–கரர் ஆகிவிட்டார்! மௌனமாக இருந்தவர் ஏகப்பட்ட வாதம் செய்பவாராகவும், உபதேசம் செய்பவராகவும் ஆகிவிட்டார். வடவ்ருக்ஷத்தில் அடியில் அடித்த சிலையாக உட்கார்ந்து கொண்டேயிருந்தவர் பாரத வர்ஷத்தின் நாலு பக்கமும் இந்தக் கோடிக்கு அந்தக் கோடி மூன்று தரம் சுற்றி வருபவராக ஆகிவிட்டார்.

சுருக்கமாகச் சொன்னால், அசலமான சம்பு என்ற தட்சிணாமூர்த்தி ஸதாவும் ஸஞ்சரிக்கிற சங்கராசார்ய மூர்த்தியாகிவிட்டார்.

சம்போர்-மூர்த்தி: சரதி புவநே சங்கராசார்ய ரூபா.

சம்புவின் மூலஸ்தான மூர்த்தியாக, இருந்த இடத்தை விட்டு அசையாத தட்சிணாமூர்த்திக்கு உத்ஸவ மூர்த்தியாக லோகம் பூராவும் சுற்ற சங்கராசார்ய மூர்த்தியின் அவதாரம் ஏற்பட்டுவிட்டது!

“சம்போர்–மூர்த்தி:”- சம்புவின் அசல் மூர்த்தி; “சங்கராசார்ய ரூபா” — சங்கராசார்யராக ரூபம் எடுத்துக்கொண்டு: “புவநே” — லோகத்தில்; “சரதி”, — ஸஞ்சாரம் பண்ணுகிறது.

லோகம் பூராவுக்கும் ஹ்ருதய ஸ்தானமாக உள்ள நம்முடைய தேசம் முழுவதும் அவர் ஸஞ்சாரம் செய்ததே புவனம் முழுவதும் சஞ்சரித்த மாதிரிதான்.

“சரதி” – நடமாடிக் கொண்டிருக்கிறார். நிகழ்காலத்தில் சொல்லியிருக்கிறது. என்றைக்கோ ஆசார்யாள் நடமாடி விட்டுப் போய்விட்டதாகச் சொல்லாமல் இப்போதும் நமக்கு மத்தியில் ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டிருப்பதாகச் “சரதி” என்று நிகழ்காலத்தில் போட்டிருக்கிறது.

இந்த ச்லோகம் “மாதவீய சங்கர விஜயம்” என்பதில் ஆசார்யாளின் சரித்ரத்தைச் சொல்லிக்கொண்டு போகும்போது அங்கங்கே அவரை ஸ்துதித்து வர்ணிக்கும் ச்லோகங்களில் ஒன்றாக வருவது2. அதனால் நிகழ்காலத்தில் இருக்கிறது. ச்லோகத்தின் அழகினாலும் அர்த்த புஷ்டியினாலும் இது மாத்திரம் தனி ச்லோகமாகவே ஆசார்யாளின் பிரார்த்தனா ஸ்துதியாக பிரஸித்தியடைந்திருக்கிறது. இப்படிச் சொல்லும்பொது இன்றைக்கும் ஆசார்யாள் நமக்கு மத்தியில் நடமாடிக் கொண்டிருப்பதுபோல் “சரதி” என்று சொல்வது நமக்கெல்லாம் அலாதியான ஆஹ்லாதம் (உவகை) தருகிறது.

ராமன், க்ருஷ்ணன், நம் ஆசார்யாள் போன்ற அவதார புருஷர்களின் சரீரம் இந்த லோகத்தைவிட்டுப் போனதோடு அவர்களுடைய அனுக்ரஹ சக்தியும் போய்விடவில்லை. அவர்களுடைய சரீரம் என்பது என்ன? லோகாநுக்ரஹ சிந்தையில் பரமாத்மாவே எடுத்துக்கொண்ட ரூபம்தான். அந்த அநுக்ரஹ சிந்தை லோகமுள்ள வரையும் பரமாத்மாவை விட்டு நீங்காமல் அமரமாக இருப்பது. ஆகையால் அதன் மூர்த்தியாக வந்தவர்களும் அமரமாக லோக ரக்ஷணம் பண்ணிக்கொண்டே இருப்பவர்கள்தான். ராம-க்ருஷ்ணாதிகளும், ஆசார்யாள் போன்றவர்களும் சரீரத்தைவிட்ட பின்பும் எத்தனையோ ஆயிரம் வருஷமாக எத்தனையோ பேருக்கும் பக்தாநுக்ரஹம் செய்துகொண்டுதானே இருக்கிறார்கள்? அது எப்படி? அநுக்ரஹ ரூபமாக – அருளுருவமாக- அவர்கள் என்றென்றைக்கும் இருந்துகொண்டேயிருப்பதால்தான்! பக்தர்களின் பக்தி பாவம் ஓங்குகிறபோது அநுக்ரஹ ரூபம் என்பது ஸ்தூல ரூபமாகவே ஆகி இப்போதுகூட அந்தப் புண்ய மூர்த்திகளின் தர்சனமும் கிடைக்கிறது. இன்றைக்கும் நம்முடைய ஆசார்யாள் ஸுக்ஷ்மமான அநுக்ரஹ சக்தியாக நமக்கு மத்தியில் ஸஞ்சரித்துக் கொண்டுதான் இருக்கிறார் – “சரதி புவநே சங்கராசார்யா ரூபா”.

மறுபடி சொல்கிறேன், சம்பு மூர்த்தி சங்கர மூர்த்தியாக அவதாரம் பண்ணிய விஷயம்: ‘சம்’ என்பது நித்ய ஸுகம்; அத்வைத ஸ்திதி என்கிற ஆத்மானந்தம். ‘பூ’ என்றால் உற்பத்தியாகிற இடம். பரமேச்வரன் நித்ய ஸுகம்உற்பத்தியாகும் ஊற்றாக இருக்கும்போது “சம்பு” எனப்படுகிறார். அப்போது அத்வைதானந்தஸ்வரூபமகக் காரியமில்லாமல்இருப்பார் – தட்சிணாமூர்த்தியாக அசையாமல் உட்கார்ந்து கொண்டிருப்பார். உச்சமான ஸ்தானத்தில்அந்த நித்யானந்த ஊற்று இருக்கிறது. அந்த உச்சத்துக்குப் போக முடிந்த ரொம்பக் கொஞ்சம் பேர்தான்அதன் ஞான தீர்த்தத்தை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டு தாங்களும் ஞானிகளாகி நித்யானந்தத்தைப் பெறமுடியும். ஊற்று இருந்த இடத்திலேயே இருக்கிறது. இந்த ஒரு சில தீவிர ஸாதர்களே அதைத் தேடிக்கொண்டு அதனிடம் போய் ப்ரயோஜனம் அடைகிறார்கள். மற்ற எல்லோரும் அஞ்ஞானக் காட்டு மத்தியில் ஸம்ஸாரத் தீயில் வெந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தீயை அணைப்பதற்கான ஞானானந்த தீர்த்தத்தைத் தரும் ஒரு ஊற்று – சம்பு என்கிற ஊற்று – இருப்பதே அவர்களில் ரொம்பப் பேருக்கு தெரியாது. தெரிந்தவர்களுக்கும் மலையுச்சிக்கு ஏறுவதுபோன்ற தீவிரமான ஸாதனை பண்ணி ஊற்றி அடைவதற்குச் சக்தி போதாது. இப்படியிருக்கிறதே என்று பரமேச்வரன் பரிதாபப்பட்டு, ‘அவர்கள் நம்மிடம்வரமுடியவில்லையென்று விட்டுவிடவேண்டாம். நாமே அவர்களிடம் பொய்க் காட்டுத் தீயை அணைத்து அவர்களைக் காப்பாற்றுவோம். இருந்த இடத்திலேயே இருக்கும் ஊற்று, ஒரு நாழிகூட நின்ற இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் நதியாக லோகத்தில் பாயட்டும். ஸர்வ ஜனங்களின் ஸம்ஸாராக்னி தாபத்தையும் தணிக்கட்டும். ஜனங்களுக்கு நித்யானந்தத்தைச் செய்யட்டும்’ என்று தீர்மானித்தார். அப்படி ஆனந்தத்தைச் செய்தவர்தான் சம் – கரர். ‘சம்புவாக இருந்தால் இந்த யுகத்திற்குப் போதாது. இருந்த இடத்தில் இருப்பதை ப்ரயோஜனம் பண்ணிக்கொள்ள ஜனங்களுக்குத் தெரியவில்லை. ஆனபடியால், ‘சம்’மாக இருந்துகொண்டு மட்டும் இல்லாமல், ‘சம்’மின் உற்பத்தி ஸ்தானமாக மாத்திரம் இருக்காமல், ‘சம்’மை ஸகல ஜனங்களுக்கும் செய்யும் சம்கர (சங்கர) நதியாக லோகத்தில் ஓடுவோம்’ என்று முடிவு பண்ணினார். இப்படி, உட்கார்ந்த மூர்த்தி சுற்றும் மூர்த்தியானதுதான் சம்பு சங்கரரானது.

“சம் பாவயதி, உத்பாதயதி, இதி சம்பு:” என்பதாக சம்பு என்ற வார்த்தைக்கு ‘டெஃபனிஷன்’ (இலக்கணம்) சொல்வார்கள். அதாவது, ‘சம்’மை எவர் உற்பத்தி செய்கிறாரோ அவர் சம்பு” என்று அர்த்தம். உற்பத்தி production செய்வதோடு ஸரி. அதை விநியோகம் distribution செய்கிறவரில்லை. அநேக ஆலைகளில் உற்பத்தி மட்டும் செய்கிறார்கள். தாங்களே நேராக அந்தப் பண்டத்தை விற்பனை செய்து எல்லாஇடத்திலும் விநியோகமாகப் பண்ணுவதில்லை. சில ஏஜென்டுகள் மாத்திரம் உற்பத்தி சாலையிலிருந்து வாங்கி அப்புறம் வெளியில் எல்லாருக்கும் விற்பனை செய்கிறார்கள். ஏஜென்ட் வாங்க வராவிட்டால் உற்பத்தியான சரக்கு ஆலையிலேயேதான் கிடக்கும். யாருக்கும் ப்ரயோஜனமில்லாமல் தேங்கிக் கிடக்கும். ஆகையால் ‘சம்’மின் உற்பத்தியாளராக மாத்திரமிருந்து உபயோகமில்லை. பின்னே என்னவாக வேண்டும்? ‘சம்’மைக் கொண்டு போய் எல்லார் கையிலும் சேர்க்கிற விநியோகஸ்தராக வேண்டும். ‘சம்’ இவரிடம் மட்டும் தேங்கிக் கிடக்காமல் எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும். அப்படிச் செய்கிறவர்தான் சங்கரர். “சம் கரோதி இதி சங்கர:”.

ஸுகத்தின் உற்பத்தி ஸ்தானம் சம்பு என்றால் நாம் போய் அதை அடைய வேண்டும். ‘சம் கரோதி’ (ஸுகத்தைச் செய்கிற வஸ்துவாகியிருக்கிறார்) என்கிறபொழுது அது ஸ்வஸ்தானத்தை விட்டுப் புறப்பட்டு பல இடங்களுக்கும் வந்து நமக்கெல்லாம் ஸுக ப்ராப்தியை அருள்கிறது என்று ஏற்படுகிறது. ஊற்றுக்கு நாம் போய் ஜலம் கொண்டு வரணும். நதியோ, அதுவே ஊர் ஊராகத் தேடி வந்து நமக்கு ஜலம் தருகிறது. [சிரித்து] இன்னம், இப்போதெல்லாம் நதி ஊர் ஊராக மட்டுமின்றி வீடுவீடாகவே நகரஸபைக் குழாய் வழியாக வந்து விடுகிறது! எங்கேயோ எட்டாக் கையில் கங்கோத்திரி தாண்டி இருக்கும் ஊற்று கங்கா நதியாகிக் கல்கத்தாவில் ஒவ்வொரு வீட்டுக் குழாயிலும் கொட்டுகிறது.

இப்படி, எட்டாக்கையில் (நினைப்பு, வாக்கு எதுவுமே அவரை எட்டமுடியாது; அப்படிப்பட்ட நிலையில்)இருந்து கொண்டிருந்த தட்சிணாமூர்த்தி, ஸகல ஜனங்களையும் தேடித் தேடி வந்து, அவர்கள் ஒதுங்கிப் போனால்கூடத் தான் எட்டிப்பிடித்து அவர்களுக்குப் பரம ஞானத்தை அநுக்ரஹிப்பதற்காகப் பரம காருண்யத்தோடு எடுத்த அவதாரம்தான் நம்முடைய பகவத்பாதர்கள்.


1 ‘மாதவீய சங்கர விஜயம்’ IV.60 “அஜ்ஞாநாந்தர்” ச்லோகம் குறித்ததாகும்

2 ‘மாதவீய சங்கர விஜயம்’ IV.60

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is காரியமின்மையைச் சொல்லவே ஓயாக்காரிய அவதாரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஈச்வராவதார ப்ரமாணங்கள்:வேத - இதிஹாஸ - புராணங்களில்
Next