சிக்ஷா சாஸ்திரத்தின் மற்ற சிறப்புகள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வேத சப்தத்தை மாற்றக்கூடாது, ஸ்வரத்தை மாற்றக் கூடாது என்றாலும், சாகா பேதத்தை உத்தேசித்துச் சப்தத்தைக் கொஞ்சம் கொஞ்சம் மாற்றவும் சிக்ஷா விதிகள் உள்ளன என்று இதுவரை சொன்னேன். இதே போல், ஸ்வரத்திலும் ஸ்வல்ப மாறுதலை அநுமதித்திருக்கிறது. மற்ற வேதங்களின் ‘ஆ’காரம் ‘ஏ’ காரம் போன்ற சப்தங்களைச் சில இடங்களில் ரிக்வேதிகள் மேலும் நீட்டி அழுத்தி ‘ஆ-ஆ’, ‘ஏ-ஏ’ என்று சொல்லுகிறார்கள். சில சாகைகளில் ‘ம்’ என்று வருவது. வேறு சிலவற்றில் ‘க்ம்’ (gm) என்று வரும். இதை ‘அநுஸ்வாரம்’ என்பார்கள். இதுவும் அக்ஷர பேதத்தைவிட அழுத்தத்திலுள்ள பேதத்தால் — அதாவது ஸ்வர பேதத்தால் — ஏற்படுவதே எனலாம்.

வேத அத்யயனத்தில் ஸம்ஹிதா, பதம், க்ரமம் என்று பல இருப்பதாக முன்னே சொன்னேனல்லவா? இப்படி ஸம்ஹிதா பாடத்தை பதம், க்ரமம் முதலான மற்ற அத்யயன முறைகளில் மாற்றிக் கொடுப்பதற்கும், சிக்ஷா சாஸ்திரத்தைச் சேர்ந்த ப்ராதிசாக்யங்கள்தான் உதவி புரிகின்றன.

ஏதோ சப்தந்தானே என்று அலட்சியம் பண்ணுவதிற்கில்லை. சப்தத்தில்தான் அத்தனையும் இருக்கிறது. அதனால் சிக்ஷா சாஸ்திரம் வேத புருஷனுக்கு மூச்சு விடுகிற நாஸியாகிறது. வேத சப்தத்திலிருந்து வந்ததுதான் ஸம்ஸ்கிருதத்தின் ஐம்பது அக்ஷரங்கள். “ஜ்ஞ” என்ற எழுத்தைத் தனியாகக் கொண்டால் ஐம்பத்தியொன்று அக்ஷரங்கள். அவற்றுக்கு ‘ மாத்ருகா ‘ என்று பெயர். இதற்குப் பல அர்த்தம் சொல்லலாம். முக்கியமாக, ‘ மாத்ரு ‘, ‘ மாதா ‘ என்றால் ஜகன்மாதாவாக இருக்கப்பட்ட அம்பாள், அந்தப் பராசக்தியின் ஸ்வரூபமே இந்த 51 அக்ஷரங்கள். பராசக்தியால்தான் ஸகலப் பிரபஞ்சங்களும் உண்டாயின என்றும் சொல்லி, சப்தத்தால்தான் ஜகத்ஸ்ருஷ்டி உண்டாயிற்று என்பதாகவும் சொன்னால், அந்த அம்பாள் 51 அக்ஷர ஸ்வரூபிணியாகத்தானே இருக்க வேண்டும்? சாக்த தந்திரங்களில் இந்த 51 அக்ஷரங்களுமே அம்பாளுடைய தேகத்தின் அவயங்கள் என்றும், எந்த அக்ஷரத்துக்கு எந்த அவயவம் என்றும் சொல்லியிருக்கிறது. நம் தேசத்தில் அந்த அவயவ சம்பந்தமுள்ள க்ஷேத்ரங்கள்தான் 51 சக்தி பீடங்களாக ஆகியிருக்கின்றன.

வேத புருஷனுக்கு நாசி என்ற ஒரு அங்கமாக சிக்ஷா சாஸ்திரம் சொல்லப்படுவது அதற்குப் பெருமை என்றால், அதிலே விளக்கப்படுகிற அக்ஷரங்கள் சேர்ந்தே அம்பாளின் பூர்ண ஸ்வரூபம் என்று சொல்வது அதற்கு மேலும் பெருமை தருவதாக இருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is மாதப் பெயர்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  இலக்கணத்தின் பெருமை
Next