இலக்கணத்தின் பெருமை : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வேதபுருஷனுக்கு இரண்டாவது அங்கமாக வரும் வ்யாகரணம் முகம். முகம் என்றால் இங்கே வாய். வ்யாகரணம் என்பதே இலக்கணம். பாஷையின் ‘லக்ஷண’த்தைச் சொல்வதால் ‘இலக்கணம்’. லக்ஷ்மணன் என்பது இலக்குமணன் என்றாவது போல, லக்ஷணம் என்பது இலக்கணமாகிறது. பாஷைக்கு வாய்தானே முக்கியம்?

வியாகரணங்கள் பல இருக்கின்றன. முக்கியமாகப் பிரசாரத்தில் இருப்பது பாணினி மஹரிஷி செய்த வியாகரணம். அந்த வியாகரண ஸூத்திரங்களுக்கு ஒரு வார்த்திகம் (விரிவுரை மாதிரியானது) இருக்கிறது. அதைச் செய்தவர் வரருசி. வியாகரணத்திற்கு பாஷ்யம் செய்தவர் பதஞ்சலி. இந்த மூன்றும் முக்கியமான வியாகரண சாஸ்திரங்கள்.

மற்ற சாஸ்திரங்களுக்கும் வியாகரணத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்றவைகளில் பாஷ்யத்தைவிட ஸூத்திரங்களுக்குத்தான் கௌரவம் அதிகம். வியாகரணத்தில் அப்படியில்லை. ஸூத்திரத்தைவிட வார்த்திகத்திற்கு மதிப்பு அதிகம். அதைவிட பாஷ்யத்திற்கு அதிக மதிப்பு.

ஆறு சாஸ்திரங்கள் என்று ஒரு பிரிவு உண்டு. அந்தப் பிரிவில் வியாகரணமும் ஒன்று. நான்கு சாஸ்திரங்கள் மிக்க பிரஸித்தி உடையவை. அவை தர்க்கம், மீமாம்ஸை, வியாகரணம், வேதாந்தம் என்பவை. அவைகளிலும் வியாகரணம் ஒன்றாக இருக்கிறது. வேத ஷடங்கமான ஆறு அங்கங்களிலும் ஒன்றாக இருக்கிறது.

பாணினியின் வியாகரணம் ஸூத்திர ரூபமாக இருக்கிறது. சிறு சிறு வார்த்தைகளால் சுருக்கமாகச் செய்யப்பட்டது ஸூத்ரம்.

ஸூசனாத் ஸூத்ரம் |

விரித்துச் சொல்லாமல் சூசனையாகவே புரிந்து கொள்ளும்படி சுருக்கிச் சொல்வதே ஸூத்ரம்.

ஒவ்வொரு சாஸ்திரத்துக்கும் பாஷ்யம் உண்டு. அவைகளை எல்லாம் இன்ன இன்ன பாஷ்யம் என்று குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. வியாகரண பாஷ்யத்தை மட்டும் மஹா பாஷ்யமென்று சொல்வார்கள். அதனாலேயே அதனுடைய பெருமை தெரிய வருகின்றது. அந்த பாஷ்யம் மஹரிஷி பதஞ்சலியால் இயற்றப்பட்டது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is சிக்ஷ£ சாஸ்திரத்தின் மற்ற சிறப்புகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஸ¨சனாத் ஸ¨த்ரம் |
Next